Tuesday, 7 April 2015

காணாமல் போன 5

காணாமல் போன

 இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
 டாக்டர்.ராமச்சந்திர குஹா
 தமிழில்: செ.நடேசன்
 முன்னாள் பொதுச்செயலாளர்
 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
                                                                ஐந்து
    2014 ஆம் ஆண்டின் இறுதியில் ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒருதிருப்புமுனையாக அமைந்ததைச் சற்று கவனிக்க முடிந்தது. இப்போது முதன்முறையாக பி.ஜே.பி. மாநிலசட்டமன்றங்களில் காங்கிரசைவிட அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 2014மேமுதல் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் பெரும்பானமைபலத்தைக் கொண்டுள்ளது. வெகுவிரைவில் அதன் கூட்டணிக்கட்சிகளின் உதவியோடு மாநிலங்களவையிலும் பெரும் பான்மைபலத்தைப் பெற்றுவிடும் என்று தெரிகிறது.

  பி.ஜே.பி.யின் ஆதிக்கம் இடைப்பட்ட காலத்திலும் தொடரும் என்று கூறலாம். அதன் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடாளுமன்றத்தேர்தலில் வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற்றது. அப்போதுமுதல் பலமாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்டிருக்கிறது. தற்போதைய தலைமையின்கீழ் அந்தக்கட்சி மீண்டுவருவது இயலாததாகவே தெரிகிறது. நேரு. குடுமபத்தின் அதிகாரத்தின்கீழ் இருந்துபழக்கப்பட்டுவிட்ட கட்சிஉறுப்பினர்கள் நேரு-காந்திகளை தூக்கியெறிந்துவிடுவார்கள் என்பதை அடுத்தநிலையில் உள்ள காங்கிரஸகாரர்கள்கூட விரும்ப வில்லை என்று தெரிகிறது. ஒருகாலத்தில் இங்கிலாந்தில்  ஆதிக்கம் செலுத்திய அரசியல் கட்சியான லிபரல்கட்சி தேசத்தின் அரசியல்நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்க பங்காற்ற இயலாத அளவுக்குப் பலம்குறைந்து விளங்குகிறது. காங்கிரஸும் அந்த வழியில் செல்லக்கூடும்.

   காங்கிரஸின்நிலை கொடுமையானது : கவலையளிக்க்கூடியது என்றால் கம்யூனிஸ்ட்களின் நிலையோ பேரிழப்பாக உள்ளது.சமீபகாலங்களில் குறிப்பிடத்தக்கவகையில் இருந்த இருபெரிய மாநிலங்களான மேற்குவங்கத்திலும், கேரளாவிலும் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்டார்கள். இருந்தபோதிலும், கேரளாவில் இன்றும் அவர்கள் ஒருசக்தியாக விளங்குகிறார்கள். மேற்குவங்கத்தில் அவர்களது செல்வாக்கு குறைந்துவருகிறது. கம்யூனிஸ்ட்கள் முன்பு  தொழில்நகரங்களான மும்பை, கான்பூர் போன்றவற்றில் பலத்துடன்இருந்தார்கள். இப்போது அந்த செல்வாக்கு மங்கிமறைந்துவிட்டது.

   ஒருகாலத்தில் இந்தியாவில் வடக்கிலும், கிழக்கிலும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்த சோசலிஸ்ட்கட்சிகளின் அரசியல் எதிர்காலச் சித்திரமும் வண்ணமிழந்து காணப்படுகிறது. லோகியா, மற்றும் நாராயண் கொள்கைகளால் தூண்டுதல்பெற்ற அந்தக்கட்சிகள், இப்போது  தனிமனிதர் அல்லது குடும்பப்பேராசைகளைச் சுமந்துசெல்லும் வாகனங்களாகிவிட்டன பீகாரிலும், உத்திரப்பிரதேசத்திலும் இப்போதுஅவர்கள் ஆட்சியிலிருந்தாலும் இந்தஜனதாபரிவார சோசலிஸ்ட் கட்சிகள் இந்தமாநிலங்களில் கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் மிகக்குறைவாகவே வெற்றிபெற்றுள்ளன. அடுத்துநடைபெறும் சட்டமன்றத்தேர்தல்களில் அதிகாரத்தைத்தக்க வைத்துக்கொள்ள அவர்கள் கடுமையாகப் போராடவேண்டியிருக்கும்.

  எனவே, இந்தியாவின் அரசியல்தளத்தில் மாற்றங்கள் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்தவை. நடுஇடதுசாரிகள்-இடதுசாரிகள் நிலைகுலைந்து நிற்கிறார்கள். வலதுசாரிகளோ முடிசூடிக் கொண்டிருக்கிறார்கள். இதுஇன்னும்சிறிதுகாலம் தொடரலாம். எப்படியிருந்தாலும், பி.ஜே.பி.யின் எழுச்சி என்பது வலதுசாரி அறிவுஜீவிகளின் அறிவார்ந்த தொடர்ஆய்வுகளின்மூலம் நடைபெற வேண்டிய அரசியல் வண்ணப்பூச்சுக்களோடு சேர்ந்து வளர்ந்ததல்ல.

   அறிவாளிகளின் இயற்கைச்சூழல் ஆதரவில்லாமல் ஒருவலதுசாரிப்பிரிவு அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நவீனகால வரலாற்றில் அறியப்படாத நிகழ்வு அல்ல. இது பரவிவருகிறது. எடுத்துக்காட்டாக சிலநாடுகளில் – போரில் சிக்கியிருந்த ஐரோப்பாவிலும், போருக்குப் பிந்தைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் , மிக அண்மைக்காலத்தில் இலங்கையில் பத்து ஆண்டுகள் நீடித்த மகிந்த ராஜபட்சே ஆட்சியும் உள்ளன.

   இந்தியர்களில் சிலர் நமதுநாடு அர்ஜெண்டைனாவின் ஜுவான் பேரோன் அல்லது இலங்கையின் ராஜபட்சே வழியில் செல்லவேண்டும் என்று விரும்பலாம். இவ்வாறு அடிக்கடி தெரிவிக்கப்படும் விருப்பங்கள் ஜெர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக்கட்சி அல்லது அமெரிக்காவின் குடியரசுக்கட்சியைப்போல, பி.ஜே.பி. என்ற இந்தப் பழமைவாதக்கட்சியை, மாறுதலை விரும்பாமல் பழமைக்குத் திரும்பும் பிற்போக்குக்கட்சியாக ஆகாமல் கொஞ்சம் விலக்கிவைக்க வேண்டும் என்ற நப்பாசையால்தான். பி.ஜே.பி.யை இவ்வாறு சாந்தப்படுத்துவது நிகழவேண்டுமானால் மேற்கு நாடுகளில் இதேபோன்ற கட்சிகளில் உள்ளதைப்போல்  பி.ஜே.பி.யும் ஆழ்ந்த சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும் கண்டறிந்து அவர்களைத் தனது வலதுபக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  இதுஎவ்வாறு நிகழும்? பழமைவாதஅறிவுஜீவிகள் இத்தகைய மறுமலர்ச்சியின் முன் நிபந்தனையாக இந்த நாட்டின் தன்மைப்பன்மையை, (First Person- Plural) நாங்கள் என்பதை மதம் ஒன்றை மட்டுமே அடிப்படையாக்க்கொண்டு கட்டமைக்கக்கூடாது. இந்தியச்சூழலுக்கு ஏற்றவாறு ஸ்கர்ட்டனின் சிந்தனைகளை ஏற்றுக்கொண்டு ‘மத அடிப்படையிலான “ நாங்கள்  என்பதற்குபதிலாக தேசிய அளவிலான “நாங்கள்என்பதைப் பழமைவாத அறிவுஜீவிகள் அங்கீகரிக்க வேண்டும். தாங்கள் விரும்பும் கடவுள் அல்லது கடவுள்களை வணங்குவதற்கும், இதில் அவர்கள் மாறுபட்டிருப்பதற்ம்  இந்துக்கள் அல்லாத மற்றவர்கள் உரிமை படைத்தவர்கள் என்பதை இந்துக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.   முஸ்லீம்கள். கிறிஸ்தவர்கள் அதுபோலவே சைவர்கள், நாத்திகர்கள் ஆகியோர் தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ளாமலேயே அல்லது ‘இந்து’, ’இந்துயிஸம்,இந்துத்துவாவின் முதன்மைத் தன்மையை அங்கீகரிக்காமலேயே முழு இந்தியக்குடியுரிமை பெறச் சமஉரிமை பெற்றவர்கள் என்பதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். இத்தகைய மதம்சாராத பழமைவாதத்தின் வளர்ச்சிக்குப் பெரும்தடையாக இருப்பது அரசியல் தளத்தில் பி.ஜே.பி.யின் மீது ஆர்.எஸ்.எஸ்.பெற்றுள்ள மகத்தான செல்வாக்குதான். இந்தஅமைப்போ எப்போதும் இந்துக்கள் அல்லாதவர்கள்மீது ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.-ன் கருத்தியலை முன்வைத்து இந்தப்பரிவாரங்களின் சர்சங் சாலக்–தலைவராக 1940முதல் 1973வரை இருந்த எம்.எஸ்.கோல்வால்கர், “முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்ட்கள் ஆகிய மூன்றுகுழுவினரின் ‘பாரதமாதா விசுவாசம்  சந்தேகத்துக்குரியது என்று தொடர்ந்துசொன்னவர். 1949-ல் டெல்லியில் தனதுபேச்சில், ‘இந்துஸ்தானத்தில் உள்ள முஸ்லீம்களை இந்த பூமியில் உள்ள எந்த சக்தியாலும் காப்பாற்ற முடியாது. அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும்என்றார். 9ஆண்டுகளுக்குப் பிறகு, ‘எதைஎதை நாம் நம்புகிறோமோ அவை அனைத்துக்கும் முஸ்லீம்கள் எதிராக உள்ளார்கள். நாம் கோவிலில் வழிபட்டால் அதை அவர்கள் இடிக்கிறார்கள். நாம் பசுவை வழிபட்டால் அதை அவன் உண்ணுகிறான். நாம் பெண்ணைப் புனிதமான தாய்மையின் அடையாளம் என்று போற்றினால் அவன் அவளைக் கற்பழிக்கிறான். மதம், கலாச்சாரம்,சமூகம் முதலான நமது வாழ்வியல்முறைகளின் எல்லா அம்சங்களிலும் தலைமுதல் கால்வரை எதிர்க்கிறான். அவன் இந்தப்பகைமை உணர்வை மிகவும் மையமாக உள்வாங்கியிருக்கிறான்என்று விஷம் கக்கினார்.

   சங் பிரச்சாரகராக இருந்து அழுகிப்போனவரான டி.ஆர்.கோயல் ஆர்.எஸ்.எஸ். பற்றிய ஒருபுத்தகத்தில் சங் அமைப்பின் கொள்கைகளை மிக அழகாகத் தொகுத்திருக்கிறார்:
  “நினைவுக்குவராத காலங்களிலிருந்தே இந்துக்கள் இந்தியாவில் வாழ்ந்துவந்திருக்கிறார்கள். இங்குள்ள கலாச்சாரங்கள், நாகரிகங்கள், வாழ்வு எல்லாமே அவர்கள் மட்டுமே உருவாக்கியவை. எனவே இந்துக்கள்தான் இந்த தேசம். இந்துக்கள் அல்லாதவர்கள் படையெடுப்பாளர்கள் அல்லது விருந்தினர்கள். அவர்கள் இந்துமரபுகள், கலாச்சாரம் முதலானவற்றை ஏற்றுக்கொள்ளாதவரை அவர்களைச் சமமாகக் கருதமுடியாது. இந்தியாவின் வரலாறு என்பது தங்கள் மதம் மற்றும் கலாச்சாரங்களின்மீது இந்த அன்னியர்கள் தொடுத்த கடும்தாக்குதல்களிலிருந்து காக்கவும், போற்றவும் இந்துக்கள் நடத்திய போராட்டங்களின் வரலாறு ஆகும். இந்த ஆபத்து இன்னும் தொடர்கிறது. ஏனெனில் இந்த நாட்டை இந்துதேசம் என்று நம்பாதவர்களின் கைகளில் ஆட்சியதிகாரம் இருக்கிறது. இவர்கள் தேசிய ஒற்றுமை என்பது இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து மக்களின் ஒற்றுமை என்று பேசுகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற சுயநலத்தில் இவ்வாறு பேசுகிறார்கள். அவர்கள் துரோகிகள். இந்துக்களின் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும்தான் இந்த நேரத்தின் அத்தியாவசியமானதேவை. ஏனெனில், எல்லாதிசைகளிலும் எதிரிகள் இந்துக்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, இந்துக்கள் மாபெரும் எதிர்த்தாக்குதலை மேற்கொள்வதற்கான ஆற்றலைப்பெற வேண்டும். தாக்குவதுதான் நல்ல பாதுகாப்பு. இந்துக்கள் அனுபவிக்கும் எல்லாச் சிரமங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது நம்மிடம் ஒற்றுமை இல்லாததுதான். அந்த ஒற்றுமையை உருவாக்குவதற்கான தெய்வீகப்பணிக்காகப் பிறந்ததுதான் ‘சங்’.

   1999-ல் இதை எழுதியபோது கோயல், “முரண்பாடுகள் பற்றிய அச்சம் ஏதுமில்லாமல் கடந்த 74 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.சாகாக்களில் இதைத்தான் சொல்லிவந்திருக்கிறோம். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை”  என்றார். கடந்த 15 ஆண்டுகளிலும் சாகாக்களில் இதற்குமேல் ஒன்றும் சொல்லப்படவில்லை. அர்.எஸ்.எஸ்-ன் இப்போதைய சர்சங் சாலக்= தலைவர் ‘இந்தியா ஒரு இந்துராஷ்ட்ரம்என்ற அறிக்கையில், “இந்துக்கள் அல்லாதவர்கள் தங்களுடைய மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்றுக்கொண்டே தீரவேண்டும். அல்லது இந்துக்களாக மதம் மாறிவிடுவது அதைவிட நல்லதுஎன்று கூறியுள்ளார். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் பற்றிய கோயலின் சுருக்கமான தொகுப்பு இன்றும் மாறாமல் பொருந்துகிறது என்பதை உறுதிப்படுகிறது

      இங்கு விரிந்தபார்வைகொண்ட பழமைவாத அறிவுஜீவிகள்முன் கடுமையான ஆனால் மிகவும் தேவையான கடமை ஒன்று உள்ளது. அது ஆர்.எஸ்.எஸ்.கொள்கைகளிலிருந்து தங்கள் சிந்தனைகளை விடுவித்துகொள்வது. ஏனெனில் சங் மற்றும் அதன் கருத்தாளர்கள் முன்வைப்பது பழமைவாத்த்தை அல்ல. ஆழ்ந்த வெறுப்புணர்வையும், பிற்போக்குத் தனத்தையுமே.
   முஸ்லீம்களுக்கும் ,பிறமத சிறுபான்மையினருக்கும் சம்மான குடியுரிமை அளிக்க ‘கலப்புக் கலாச்சாரம் என்ற சிந்தனையை ஒருவர் விலக்கிக்கொள்ள வேண்டியதில்லை.. ‘Ganga –Jamni tezeep. என்று உச்சரிப்பவர்கள் நம்புவதுபோல் எங்கும், எப்போதும் கலப்பற்ற சுத்தமான கடந்தகாலம் இருந்ததில்லை. 1947-க்குமுன் இந்து – முஸ்லீம் உறவுகள் சில இடங்களில் சிக்கலானதாகவும், சிலஇடங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகவும்.பல நேரங்களில் சமாதானமானதாகவும், சிலகாலகட்டங்களில் கசப்பானதாகவும், முரண்பாடுகளைக் கொண்டதாகவும்தான் இருந்திருக்கின்றன.

   1947-ல் பாகிஸ்தான் ஒரு முஸ்லீம்தாய்நாடாக அமைக்கப்பட்டபிறகு, இந்தியா தனது அரசியல்முறை ஒற்றைமதத்தை அடிப்படையாக்கொண்டதாக அமைவதைத் தேர்ந்தெடுக்க வில்லை. இந்தியாஒரு‘இந்துபாகிஸ்தானாகஇருக்கப்போவதில்லை என்பதால், முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் மற்றமதச்சிறுபான்மையினரும் குடிமக்களாவதற்குச் சமஉரிமை பெற்றார்கள். 1947 அக்டோபரில் ஜவஹர்லால் நேரு, “நாம் இங்கு பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம் சிறுபான்மையினரைக் கொண்டுள்ளோம்.அவர்கள் விரும்பினாலும்கூட அவர்களால் வேறு எங்கும் செல்லமுடியாது. இதுதான் அடிப்படை உண்மை என்பதால் இதன்மீது எந்த விவாதமும் இருக்கக்கூடாது. பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் அல்லாதவர்கள்மீது எத்தகைய எரிச்சலூட்டும் நடவடிக்கைகளும், அவமதிப்புக்களும் தூண்டிவிடப்பட்டாலும் நாம்இங்கு முஸ்லீம் சிறுபான்மையினரை நாகரிகமாக நடத்தவேண்டும். நாம் அவர்களுக்குப் பாதுகாப்பும், ஒருஜனநாயக நாட்டில் உள்ளதுபோல் குடியுரிமையையும் கட்டாயம் அளிக்கவேண்டும்.எனக் குறிப்பிட்டுக்கூறினார்.

   நேருவின் தீர்வு –அதில் தவிர்க்க முடியாமல் இரண்டு அர்த்தங்கள் இருந்தாலும் – மிகவும் சரியானது. இப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 20கோடி முஸ்லீம்கள் உள்ளார்கள். அதுபோலவே, 7 கோடிப்பேர் இந்துமதம் அல்லாத பிற நம்பிக்கை கொண்டவர்களும் இங்கு இருக்கிறார்கள்.கோல்வால்கர் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அவர்களை இரண்டாம் தரக்குடிமக்களாக – மத்தியகால முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களும், யூதர்களும் தலைகுனிந்து  நிற்கவைக்கப்பட்டதுபோல் – நடத்த விரும்புகிறது. இந்த அமைப்பு இன்னும் பிரிவினை காலக்கசப்புக்களைத் தன்னுள் கொண்டிருப்பதை சமூக ஊடகங்களில் ஒலிக்கும் வலதுசாரிக் குரல்களிலிருந்து காணமுடிகிறது.  அவர்களது சிந்தனைகளை நடைமுறை யதார்த்தங்களோடு இணைக்கப் பழமைவாத அறிவுஜீவிகள் முன்வரவேண்டும். அதற்குமாறாக, அரசியல் விவாதங்களை முந்தைய காலங்களுக்கோ, நூற்றாண்டுகளுக்கோ மீண்டும் கொண்டுசெல்லக்கூடாது. இந்தியக்குடியரசில் மக்கள் மதம், மொழி, இனங்களில் வேறுபட்டி ருப்பதை மாற்றமுடியாது. முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் நாட்டின்மீதான தங்கள் விசுவாசத்தைக் காலமுறை உறுதியேற்புகள்மூலம் உறுதிப்படுத்தவேண்டும் என்று கேட்பதன்மூலம் அமுக்கிவிட முடியாது.

   வெள்ளை ஆங்கிலேயரான ஸ்கர்ட்டனையும், ஆங்கில மனோபாவம்கொண்ட இந்தியரான நேருவையும் போற்றுவதை வலதுசாரியில் உள்ள நாட்டுப்பற்றாளர்கள் அவமதிப்பாக உணரக்கூடும். எனவே அவர்களுக்கு ஓர் உள்ளுர் உதாரணத்தைச் சுட்டிக்காட்டலாம். இந்தியப் பழமைவாதிகள் இந்தியவரலாற்றுக்குள்ளேயே ஒருமுன்மாதிரி தேவை என்று கருதினால், அவர்கள் சி.ராஜகோபாலாச்சாரியைப் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் தெற்குப்பகுதித் தளபதியாக இருந்த ‘ராஜாஜிசுதந்திர இந்தியாவில் மேற்கு வங்க ஆளுநர், கவர்னர் ஜெனரல், உள்துறை அமைச்சர், சென்னை மாகாண முதல்வர் எனப்பல அரசியல் பதவிகளை வகித்தவர். நேருவின் சோசலிசக்கொள்கைகளால் வெறுப்புற்று காங்கிரஸைவிட்டு வெளியேறியவர். 1959-ல் ‘சுதந்திராஎன்ற தனது சொந்தக்கட்சியைத் துவக்கியவர். அது பொருளாதாரத்தின்மீது  அரசின் கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் குறைக்க வேண்டும் என்பதையும், பிற சமூகப்பிரச்சனைகளையும் வலியுறுத்தியது.

   ராஜாஜி நேருவின்அரசை “லைசென்ஸ், பர்மிட், கோட்டா  ராஜ்என்று சித்தரித்தார். 1959-ல் ஒரு கட்டுரையில், ‘தற்போதைய வளர்ச்சித்திட்டக் கொள்கைகளில் ஒரு பைத்தியக்காரத்தனம் ஊடுருவியிருக்கிறதுஎன்று கடுமையாகத் தாக்கினார். “இப்போது இந்தியாவுக்குத் தேவை மிகப்பெரிய திட்டங்கள் அல்ல. பயன்தரக்கூடிய, பலனளிக்கும் திட்டங்களே. பெரிய அணைகளைக்கட்டுவது நல்லதுதான். ஆனால், அதைவிட முக்கியம் ஆயிரக்கணக்கான சிறிய திட்டங்கள். அவைகளை உள்ளூர் மக்களே உற்சாகத்தோடு செய்துமுடிப்பார்கள். ஏனெனில் அது நேரடியாகவும், விரைவாகவும் அவர்கள் வாழ்வை உயர்த்தும்.என்றார். மேலும் பொதுவாகப் பேசும்போது ‘பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டிவிடும் அளவுக்கு அரசின் பங்கு இருந்தால் போதும். தனி நபர்களையும், நிறுவனங்களையும் அதில் பங்கேற்கச் செய்யவேண்டும்என்றார்.

  ராஜ்ஜியின் பொருளாதரக்கொள்கைகள் காலத்துக்குப் பொருந்தாதவைஎன்றார் நேரு. அதை நிராகரித்தார். ஆனால், அவைதான் வருங்காலத்தின் போக்குகளாக எதிர்பார்க்கப்பட்டன. இதுஒரு காங்கிரஸ் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் தலைமையின்கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவர் ‘பெர்மிட் ராஜ்–ன் சில அம்சங்களை அகற்றினார். ஆனால் அது சுதந்திரச் சந்தையாளர்களின் நம்பிக்கைக்கேற்றவாறு அமையவில்லை. ராஜாஜியின் சிந்தனைகள் பெருமளவில் சரியானவை என்று நிரூபிக்கப்பட்டன. அவரது மற்ற சமூக சிந்தனைகள் மீட்டெடுக்கப்படவும், புதுப்பிக்கப்படவும் காத்திருக்கின்றன. அவர் ஆழமான மதஉணர்வுகொண்ட மனிதர். இராமாயணம், மஹாபாரதம் பற்றிப் புகழ்பெற்ற நூல்களை எழுதியவர். 1962-ல் “ நாம் விரும்பும் இந்தியா The India We Want”என்ற கட்டுரையில் “அரசு தனது எல்லைகளையும், செயல்பாடுகளையும் அடக்கத்துடன் புரிந்துகொள்ள வேண்டும். மக்களும் தங்களுக்குள்ளிருக்கும் உள்ளார்ந்த மரபுகளால் உணர்வுபூர்வமாக அதை நிறைவேற்ற வேண்டும்என்றார்.

  ராஜாஜி தனது சொந்த சாதி, மற்றும் நம்பிக்கைகளுக்கும் அப்பால் பார்க்க்க்கூடியவர். தீண்டாமைக்கெதிரான இயக்கங்களை முழுமையாகப் புரிந்துகொண்டு ஆதரவளித்த காந்தியின் சீடர் அவர் ஒருவர் மட்டுமே. தான் ஒரு ஐயங்கார் பிராமணராக இருந்தபோதிலும், 1924-ல் புகழ்பெற்ற ‘பஞ்சமர் வழக்கில்–அப்போது சென்னையில் தாழ்த்தப்பட்டவர்கள் இவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள் – வாதாடினார். அவர் ஒருகோவிலுக்கு வழிபடச்சென்றபோது கோவில் பூசாரிகளால் ‘புனிதமான இடத்தைத் தீட்டாக்கிவிட்டதாககூறி  சாதியிலிருந்து நீக்கிவைக்கப்பட்டார்.

   ராஜாஜி ‘மதங்களுக்கிடையிலான ஒற்றுமைஎன்ற காந்தியின் திட்டத்தை ஏற்றுக் கொண்டவர். 1947 செப்டம்பரில் அவர் மேற்குவங்க ஆளுநராக இருந்தபோது கல்கத்தாவில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது மத்திய அரசுக்கு ராஜாஜி அனுப்பிய ஒருகுறிப்பில் இந்தியா முழுவதும் பரவிவருகிற மதவெறியைப்பற்றி எச்சரித்தார்.1948-ல் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது ராஜாஜி:
  “ காந்தியின் காயங்களிலிருந்து வழிந்த இரத்தமும், அவரது மறைவைக்கேட்டு எல்லா இடங்களிலும் பெண்களின் கண்களில் பெருகிய கண்ணீரும் 1947-ன் சாபத்தைக் கழுவட்டும். அந்த ஆண்டின் கொடூரமான அந்தத்துயரச்சம்பவம், இன்றைய உணர்வுகளுக்கு வண்ணம் பூசாமல், வரலாற்றில் தூங்கட்டும்

    தனது குருவைப்போலவே ராஜாஜியும் இன்றைய அரசியல்சிந்தனைகளால் எளிதில் முத்திரை குத்தப்படமுடியாதவர்.  ‘லிபரலா?’, ’பழமைவாதியா?’, ‘சோசலிஸ்ட்டா? இதில் ஏதேனும் ஒன்றைத்தேர்வு செய்துதானாக வேண்டும் என்றால் ஒருவர் அவரைப் ‘பழமைவாதி’ (சிறிய எழுத்துக்களில்) என்று கூறலாம்.ஆனால் அவர் ஒருதனிவிதமான ப்ழமைவாதி. அவரை நன்கு அறிந்த ஆஸ்திரேலிய ராஜதந்திரியான வால்டர் குரூக்கர் அவரது ஆளுமைபற்றிய ஒருசிறுகுறிப்பில் தெரிவித்தார்:

  விதிவிலக்காக போலித்தனமில்லாத, ஒளிவுமறைவற்ற மிகவலிமையான விரைந்துமுடிவெ டுக்கும் அபூர்வ சிந்தனைமனமும் இணக்கமான உணர்வும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் கொண்டவர் அவர்.  அவரது இயல்பில் தற்பெருமை என்பதே இல்லை. இந்தியமரபுகளின்மீது அவர் பற்றுக்கொண்டிருந்தார். அதேவேளையில் மேற்கு உலகின் பாங்கையும் அறிந்தவர் அவர். பைபிள், பிளேட்டோ, ஆங்கில இதிகாசங்கள், அதுபோலவே சட்டம் மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழ்ந்த ஞானம் கொண்டவர். அவர் பொருளாதார வளர்ச்சிப்போக்குகள் பற்றி அறிந்தி ருந்தார். அவர் மதவாதியாகவும், பழமைவாதியாகவும் இருந்தாலும் அவர் எதையும் அனுசரிப்பவர் அல்ல. உண்மையான ப்ழமைவாதியின் குணங்களோடு ‘மனிதனால் உருவாக்கப்பட்டவை மனித இயல்புக்கும், தனிப்பட்ட அமைப்புக்கும் எத்தகைய கேடுகளை விளைவிக்கும்?என்பதைஅறிந்தவர்.இதைசோசலிஸ்ட்கள்சிலசமயங்களில் புள்ளிவிபரங்களோடு அணுகியிருக்கிறார்கள். அவரிடம் நகைச்சுவை உணர்வும் உண்டு- அது வாழ்வைப்புதுப்பிக்கும் அற்புதமான கொடை

   நேருவின் வாழ்வின் கடைசி மாதங்களில் ராஜாஜியின் சுதந்திரமான சிந்தனைமனம் தெரியவந்தது. 1962 சீனப்போருக்குப்பிறகு ‘இந்தியா பதட்டமான இரண்டு எல்லைப்பகுதிகளில் ஒரேநேரத்தில்போரிடமுடியாதுஎன்பதை நேரு உணர்ந்தார். தனது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், காஷ்மீர் பிரச்சனைக்குத்தீர்வு காணும் முயற்சியாக பாகிஸ்தானுடன் ஒருகௌரவமான உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ள 1964 ஏப்ரலில் காஷ்மீரின் புகழ்பெற்ற தலைவர் ஷேக் அப்துல்லாவை விடுதலை செய்தார். அவர் சில்லறைக்குற்றங்களின்பேரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.

   இந்த நடவடிக்கையை ஜனசங்கம் மிகவும் கசப்புடன் கண்டனம் செய்தது. ஆனால் ராஜாஜி இதை ஆதரித்தார். அப்துல்லாவை விடுதலை செய்வது காஷ்மீர் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்வதற்கான மனித உரிமையை வழங்க ஒருமுன்னுரையாக அமையும் என ராஜாஜி வாதிட்டார். 1964-ல் வார்த்தைகளில் எழுதியது 2015-ல் உண்மை என்று ஒலிக்கிறது. ராஜாஜி இதன்தேவைபற்றி எழுதினார்: “இபோதைய பிரச்சனையின் அடிப்படையை மீண்டும் சிந்திக்க முயற்சியுங்கள். பாகிஸ்தானுக்கு எதிரான குழுவினரின் பைத்தியக்கார உணர்வுகளுக்கு நாம் இடம்தர வேண்டுமா? இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டும், சந்தேகப்பட்டுக்கொண்டும், ஒருவரை எதிர்த்து ஒருவர் ஆயுதங்களைக் கடன்வாங்கிக்குவிப்பதும் ஏதாவது நம்பிக்கையைஏற்படுத்துகிறதா? நமது இரண்டுவீடுகளையும்  அன்னிய உதவ்களைப்பெற்று  மணலில் கட்டுவது  எதிர்காலக் குருஷேத்திரத்திற்கா? இப்படியே தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நாம் நம்மையே அழித்துக்கொள்வோம். இந்த ஆயுதப்போரைப் பழைய வக்கிரங்கள், அச்சங்கள், சந்தேகங்களை அடிப்படையாகக்கொண்டு தொடராமல், நம் எதிர்காலத்திலும் வளர்ச்சியிலும் நம்பிக்கை கொள்வோம்
   மறக்கப்பட்டுவிட்ட  ராஜாஜியின் இந்த அன்புமுயற்சி அவரது அறிவுக்கூர்மைக்கும், தைரியத்துக்கும் உறுதியான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.  மிகப்பெரிய இந்திய – பாகிஸ்தான் சிக்கலைத் தீர்ப்பதற்குக் குறுக்கே ஜனசங்கத்தையும், காங்கிரஸ் கட்சியின் பெரும்பகுதியையும் கௌவிப்பிடித்துள்ள துரதிர்ஷ்டமான வெறியுணர்வு டெல்லியில் நிலவுகிறது. நேருவின் பொருளாதாரக்கொள்கைகளை எதிர்த்தபோதிலும், மிகமிக முக்கியமான தேசியப்பிரச்சனையில் அவரோடு ஒன்றாகச் சேர்ந்து நின்றார். ‘இந்தியா பாகிஸ்தான் பொறாமை உணர்வைக் குறைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒப்பிடும்போது காஷ்மீரின் சுயநிர்ணய உரிமை மிகவும் சிறிய பிரச்சனை. ‘காஷ்மீர் போகட்டும்என்று விட்டுவிட்டால் அது எல்லா இடங்களிலும் பிரிவினையை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்பது ஆதாரமற்றதுஎன்று ராஜாஜி பார்த்தார்.

   டெல்லியில் நேருவைச் சந்தித்தபின் அப்துல்லா ராஜாஜியைச் சந்திக்கச் சென்னை வந்தார். அந்த காஷ்மீர் தலைவரிடம், “ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கட்டும். ஆசாத் காஷ்மீர் பாகிஸ்தானிடம் இருக்கட்டும். இரண்டையும் இணைக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ஐ.நா.வின் உதவியோடு இரண்டு நாடுகளின் நிர்வாகத்தில் இருக்கட்டும்”  என்ற ஒரு முன்மொழிவை அளித்தார்.  ‘ராஜாஜி பார்முலாஎன்ற அந்தத்திட்டத்தை ஷேக் அப்துல்லா நேருவிடம் எடுத்துச் சென்றார். அவரது ஒப்புதலைப் பெற்றபின் பாகிஸ்தான் தலைவர்களைச் சந்திக்க எல்லைக்கு அப்பால் சென்றார். அந்த விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே நேரு இறந்துவிட்டார். அவருடன் காஷ்மீர் பிரச்சனைக்கான நிரந்தரத்தீர்வும் மரணித்துவிட்ட்து.

  காஷ்மீர் மீதான ராஜாஜியின் நிலை இந்தியாவுக்கான அவரது பார்வையின் அடையாளமாக இருந்தது. எம்.எஸ்.கோல்வால்கர் போன்றவர்கள் கொண்டிருந்த மதவெறிக் கசப்புப் பார்வையைவிட விரிந்துபரந்த பார்வையாக இருந்தது. 1968-ல் சுதந்திரா கட்சியை உருவாக்கிய 10 ஆண்டுகளுக்குப்பின் அவர் குறிப்பிட்டார்: ஜனசங்கத்தில் ஓரிரு நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தேவை சகிப்புத்தன்மை அல்ல. பரந்த மனப்பான்மை. முசல்மான்களையும், கிறிஸ்தவர்களையும், பார்ஸிகளையும் மற்ற பிறரையும் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும்  இந்துக்களைப்போலவே கருதும் பரந்த மனப்பான்மை வேண்டும்.

  அரைநூற்றாண்டுக்குப்பிறகும் ஜனசங்கத்தின் இன்றைய வடிவமான பி.ஜே.பி.யும் அதனுடைய தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ம் ராஜாஜி நம்பிக்கையோடு எதிர்பார்த்த பரந்த மனப்பான்மையைப் பெறமுடியவில்லை. சங்பரிவாரங்களின் இயல்புநிலைக்கு வெளியே நம்பத்தகுந்த இந்தியாவின் பழமைவாத அறிவுஜீவிகள் மரபு அது உருவாகவேண்டும் – லிபரல்கள், சோசலிஸ்ட்களைக் குறிவைப்பதற்குப்பதிலாக எச்சரிகையோடும், மனச்சாட்சியோடும் இப்போது ஆட்டிப்படைக்கும் பிற்போக்காளர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும். இல்லாவிட்டால் முடிவு தவிர்க்க முடியாதது.  இந்தியா, 1920-களின் இத்தாலியைப்போலவோ, 1950-களின் அர்ஜெண்டைனாவைப்போலவோ அதன்வழியில் சென்று, வலதுசாரிக்கட்சியால் அரசியல் ஆளப்படுவதும், அதன் தலைவராக வலதுசாரிக் கும்பல் தலைவன் தேர்வுபெறுவதும் – பொதுவிவகாரங்கள் அறிஞர்களாலும், சிந்தனையாளர்களாலும் முடிவு செய்யப்படாமல் குண்டர்களாலும், அவர்களின் வெறுப்புணர்வுகளாலும் தீமானிக்கப்படுவதும் நடக்கும்.

நன்றி: பகழ்பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர். ராமச்சந்திர குஹா அவர்கள்
      அரசியல் மற்றும் கலாச்சார ஆங்கில மாத இதழ் ‘தி கேரவன்’ 2015 மார்ச்     
   .      


No comments:

Post a Comment