Saturday, 21 December 2019

திரு.அ.சாமிநாதன் என்னும் ஓர் ஆளுமை


திரு..சாமிநாதன் என்னும் ஓர் ஆளுமை

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

  செ. நடேசன்

   முன்னாள் பொதுச்செயலாளர்

   தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

எனது இனிய நண்பர், தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சிவகணபதி அவர்கள் அலைபேசியில்‘திரு,அ.சாமிநாதன் அவர்கள் மறைந்துவிட்டார்’ என்ற செய்தியைத் தெரிவித்தபோது நான் அதிர்ந்து போனேன்.. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டச்செயலாளராக அவர் இருந்தகாலத்திலிருந்து அவரோடு தொடர்புகொண்டிருந்த பல நினைவுகள் என்னுள் நிழலாடின தமிழக ஆசிரியர் கூட்டணியின் நிறுவனராகவும் பொதுச்செயலாளராகவும் உருவான அவர் கொஞ்சும் கொங்கு தமிழில் குட்டிக்கதைகள் கூறி ஆற்றிய பல உரைகள் ஆசிரியர்கள் மத்தியில் எழுச்சியூட்டிய பல நிகழ்வுகள் என்னுள் வலம் வந்தன. 

 1970களில் நான் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கூட்டணியின் ஊத்துக்குளி வட்டாரச்செயலாளராக, 1977ல் கோவை மாவட்டப்பொருளாளராக,1981ல் பெரியார் மாவட்டச்செயலாளராக, பின்னர் 2.8.10984 முதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெரியார் மாவட்டச்செயலாளராக, மாநில இணச்செயலாளராக 6.10.1990 முதல் பொதுச்செயலாளராக செயல்பட்ட காலங்களில் எல்லாம் சங்கவேறுபாடுகளுக்கு அப்பால் நட்புணர்வோடு என்ன அணுகிய ஆளுமை அவர்.

1984ல் மத்திய அமைச்சர் எஸ்.பி.சவாண் அவர்கள் தலைமையில் அமைந்த மத்திய அரசின் எட்டாவது நிதிக்குழு ”இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் பெறுபவர்கள் தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்தான்”  அவர்கள் அகில இந்திய சராசரி ஊதியமாவது பெற இப்போது பெற்றுவரும் ஊதியம் 25% உயர்த்தப்படவேண்டும், அதற்கு மத்திய அரசு அவர்களது ஊதியஉயர்வுக்காக ரூ.501.34 கோடியும், அகவிலைப்படிக்காக ரூ.294.80 கோடியும் தமிழகஅரசுக்கு அளித்திட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இதழ் 1984 செப்டம்பர் 3 திங்களன்று இந்தச்செய்தியை, “Finance Panel provides 500 cr for Pay Revision (TN Staff, the lowest paid) என விளக்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் நான்காவது ஊதியக்குழுவோ 7% ஊதிய உயர்வு மட்டுமே அளித்து 18%ஐ கொடுக்காமல் வஞ்சித்தது. இவ்வாறு வஞ்சிக்கப்பட்ட அறிவிப்பையும்கூட சிலஆசிரியர்-அரசு அலுவலர் சங்கங்கள் வரவேற்றுப் புளகாங்கிதம் அடைந்தன. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணியும், அரசுஊழியர் சங்கமும் ஊதியக்குழுவின் அறிவிப்பை,’ஏமாற்றம்’என எதிர்த்து விமர்சனம் செய்தன.  திரு.அ.சாமிநாதன் அவர்கள் ‘தென்மாநிலங்களின் சராசரி ஊதியமாவது அளிக்கப்படவேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் குரல் கொடுத்தது உற்சாகமளித்தது.  

 இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் என்ற அவல நிலையை மாற்றியமைக்க தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்கங்கள் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஆசிரியர் நலன்களுக்காக ஒன்றுசேர்ந்து போராடவேண்டிய தேவை உருவானது. அந்த நேரத்தில் குறைந்தபட்சமாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் ஒற்றுமையை உருவாக்க எங்கள் அமைப்பு முடிவெடுத்தபோது, அவிநாசி சென்று திரு.அ.சாமிநாதன் அவர்களை சந்திக்கும்குழுவின் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. எங்கள் குழுவினர் அவரை அவிநாசியில் அவரது இல்லத்தில் சந்திக்கச்சென்றபோது அன்புடன் வரவேற்று ஆசிரியர் இயக்கங்களை ஒரு கூட்டமைப்பின்கீழ் ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு முழு ஆதரவளித்தார்.. அவர் எங்களுடன் அவிநாசி தபால்தந்தி நிலையத்துக்கு வருகைதந்து மற்ற ஆசிரியர் இயக்கங்களுக்கும் தந்தி மூலம் ஒற்றுமைக்கான அழைப்பைவிடுத்தது ஆசிரியர்கள் நலனில் அவர் கொண்டிருந்த அக்கறையின் வெளிப்பாடாக அமைந்தது.

 இவ்வாறு அவிநாசியில்தான் நான்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ’ஜாக்டா’ உருவாக அடித்தளம் அமைக்கப்பட்டது, பின்னர்  திரு.அ.மயில்சாமி அவர்களை அமைப்பாளராகக்கொண்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரி ஆசிரியர் இயக்கங்களும் இணைந்த 48 சங்கங்களின் ‘ஜேக்டி’யும் உருவாயின. ஜேக்டி ஆட்சிக்குழு உறுப்பினராகவும், நிதிக்காப்பாளராகவும் திரு.அ.சாமிநாதன் அவர்கள் ஆற்றியபணி என்றும் நினைவுகூரத்தக்கது. 15,000 ஆசிரியச்சகோதரிகள் உள்ளிட்ட 65,000 ஆசிரியர்கள் தீபாவளித்திருநாளிலும் சிறையிருந்த ஜேக்டியின் மாபெரும் சிறைப்போராட்டமும். சேலம் சிறையில் இடைநிலை ஆசிரியர் திரு.கருப்பண்ணன் உயிர் நீத்த நிகழ்வும் நடைபெற்றன. இந்த மாபெரும் போராட்டத்திலும்கூட அகில இந்திய சராசரி ஊதியம் என்ற நாம் எதிர்பார்த்த பயன்களை நம்மால் பெறமுடியவில்லை. ஒரு நபர்குழுவின் மூலம் ஜேக்டியின் ஒற்றுமையை பிளவுபடுத்த அரசு சூழ்ச்சி செய்தது

 தமிழ்நாட்டில் நான்காம் ஊதியக்குழுவில் இடைநிலை உதவிஆசிரியர், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரும் சாதாரணநிலையில் 610-1075 ஊதியவிகிதம் பெற்றுவந்தார்கள்.  இந்தநேரத்தில்தான்  1986ல் மத்திய அரசு தனது நான்காம் ஊதியக்குழுவின் ஊதியவிகிதங்களை நடைமுறைப்படுத்தியது. அதில் இடைநிலை ஆசிரியருக்கு 1200-2040 ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு 1400-2600 நடு நிலைப்பள்ளி தலைமைஆசிரியருக்கு 1640-2900 ஊதியவிகிதங்கள் அளிக்கப்பட்டன. எனவே ஜேக்டி ‘அகில இந்திய சராசரி ஊதியம்’ என்ற கோரிக்கைக்குப்பதிலாக, “மத்திய அரசுக்கு இணையான ஊதியம்” என்ற கோரிக்கையை முன்வைக்கவேண்டும்: அரசு ஊழியர் இயக்கங்களையும் இணைத்துக்கொண்டு “ஜேக்டி-அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு” உருவாக்கப்படவேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி முன்வைத்ததை திரு.அ.சாமிநாதன் முழுமையாக ஆதரித்தார்.      ஜேக்டி-பேரமைப்பு உருவானது, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களிடம் மகத்தான எழுச்சியை உருவாக்க ஜேக்டி ஆட்சிக்குழு உறுப்பினர்களும், ஆசிரியர்-அரசு ஊழியர் இயக்கங்களின் தலைவர்களும் நடத்திய பிரச்சாரப்பயணங்களில் திரு.அ.சாமிநாதன் அவர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது.

  ஜேக்டி-பேரமைப்பு 1988 ஜூன் 22 முதல்  நடத்திய காலவறையற்ற வேலை நிறுத்தப்போராட்டமும், ஜூலை 22ல் நடத்திய கோட்டை முற்றுகைப் போராட்டமும் ‘மத்திய அரசுக்கு இணையான ஊதியம்’ என்ற கோரிக்கையை கொள்கைபூர்வமாக ஆளுநர் ஆட்சியை ஏற்றுக்கொள்ளவும், அதை நடைமுறைப்படுத்த ஐந்தாம் ஊதியக்குழுவை நியமிக்கவும் வைத்தன. 1989ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞர் ஆட்சியில் 1.6.1988 முதல் தமிழகத்தில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற 40 ஆண்டு கனவு நடைமுறையானது. தமிழக ஆசிரியர்-அரசு ஊழியர்களின் முகத்தோற்றத்தையே மாற்றியமைத்த இந்த மகத்தான வெற்றியில் ஜேக்டி, ஜேக்டி-பேரமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர்களோடு திரு.அ.சாமிநாதன் ஆற்றியபணி மகத்தானது..

 ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் நலன்காக்க டிட்டோஜேக் உருவானதிலும், அதன் போராட்ட நடவடிக்கைகளால் ஆரம்பக்கல்விக்கு தனி இயக்ககம், நடு நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவித்தொடக்கல்வி அலுவலர்களாக நியமனம் பெற்றது முதலான வெற்றிகளை ஈட்டியதிலும் திரு.அ.சாமிநாதன் முக்கியப்பங்கு வகித்தார்.

 அவர் ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வுபெறவேண்டிய தருணம் வந்தபோது, ”முதலில் நான் தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகியபின்னரே, ஆசிரியர் பணியிலிருந்து விடுபடுவேன்” என்ற உறுதியான முடிவை அவர்கொண்டிருந்ததை அறிந்து வியந்தேன். ஒருமுறை பதவிக்கு வந்துவிட்டால், உயிர் உள்ளவரை அதைக்கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் மனிதர்களிடையே அவர் வித்தியாசமானவராக விளங்கினார்.
 ஓய்வுபெற்றபின் ஓய்வூதியர்களுக்காகவும், மூத்த குடிமக்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றிய ஓய்வறியாத மாமனிதர் திரு.அ.சாமிநாதன் அவர்கள். 1999 முதல் 2019 நவம்பர் முடிய 20 ஆண்டுகள் அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட ‘பென்சனர் கணனி’ ஒரு வரலாற்றுப்பெட்டகமாக ஓய்வூதியர்கள், மூத்த குடிமக்கள் அனைவருக்கும் வழிகாட்டிவந்துள்ளது. இதில் கல்வியாளர் டாக்டர்.ச.சீ இராசகோபாலன் அவர்களுடைய கல்விச்சிந்தனைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டுவந்தது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கருத்துவேறுபாடுகளுக்கிடையிலும், கண்ணியமான நட்புணர்வைப் பேணுவதிலும், மாற்று இயக்கத்தவர்களின் சாதனைகளை, அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுவதிலும் ஒரு மாபெரும் ஆளுமையாக விளங்கியவர் அமார் திரு.அ.சாமிநாதன் அவர்கள். இன்று மத்திய மாநில அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகளாலும் ஓய்வு பெற்றவர்களையும். மூத்த குடிமக்களையும் அலட்சியப்படுத்தும் போக்குகளாலும், 2003 முதல் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை நடை,முறைப்படுத்திவருவதாலும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதில் முனைப்பாக செயல்படுவதாலும் அவர்களது எதிர்காலம் ஆபத்துக்குள்ளாகி வருகிறது. ஓய்வுபெற்றவர்களுக்கு இனி ஓய்வூதியம் என்னாகுமோ என்ற ஐயம் அனைவரையும் அச்சத்துக்குள்ளாகி வருகிறது. இந்த ஆபத்துக்களிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் ஓய்வுபெற்றவர்களையும், மூத்த குடிமக்களையும் பாதுகாக்க நம்மை நாம் அர்ப்பணித்துக்கொள்:வதே   திரு.அ.சாமிநாதன் என்னும் ஓர் ஆளுமைக்கு  நாம் செலுத்தும் உண்மையான  அஞ்சலியாகும்.
              வாழ்க திரு.அ.சாமிநாதன் அவர்களின் புகழ்!