தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு!
செ. நடேசன்
ஒருநாட்டின்
சமூக, பொருளாதார, அரசியல் கலை, இலக்கியம், பண்பாட்டு நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளவும்,
அறிவியல் மனப்பான்மை பெறவும், ஜனநாயக்கடமைகளை ஆற்றவும் ஒருகுடிமகனை ஆற்றல் மிகுந்தவனாக்கு
வது கல்வி. கல்வியின் இத்தகைய முக்கியத்துவத்தை உணர்ந்துதான், ‘கற்கை நன்றே! கற்கை
நன்றே!! பிச்சைபுகினும் கற்கை நன்றே!’ என ஒளவையாரும், ‘உற்றுழி உதவியும், உறுபொருள்
கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனும்
தமிழ் இலக்கியஅறிஞர்களும் வலியுறுத்தினார்கள். பிறப்பில் உயர்வுதாழ்வு இல்லை இந்த உலகில்
பிறந்த அனைவரும் சமமானவர்கள் என்பதை ’பிறப்பொக்கும் எல்லாயிவுர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்’ என்றார் வள்ளுவர். இதுதான் தமிழ்மரபு.
ஆனால் ஆரிய மரபோ, பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு உண்டு என்கிறது.
பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள்,
தொடையில் பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் அதை இறைவனே படைத்தான் என்று கற்பித்தது. இந்தப்பழமைவாதத்தை,
வர்ணாசிரமக்கோட்பாட்டை பாதுகாக்கும் அரணாக கீதை இருந்தது. யாரும் சீந்துவாரற்றுக்கிடந்த
இந்தக் கீதையை1200 ஆண்டுகளுக்குமுன் சங்கராச்சாரியார் தூசுதட்டிஎடுத்து ‘இதுதான் இந்து
தர்மம்’ என பிரச்சாரம் செய்தார்.
கீதையை
இயற்றியதாக கூறப்படும் கண்ணன் கூறுகிறான்:
‘சாதுர்வர்ணம் மயா ஸ்ருஸ்டம் குண-கர்ம விபாசக:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்தயகர்த்தார- மவ்யயம்’(அத்-4 சுலோகம்
13)
நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டவை: அவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும்: அவற்றை மாற்றிச்செயல்பட வைக்க அந்த வர்ணதர்மத்தை தோற்று வித்தவனான என்னால்கூட முடியாது’
சூத்திரனுக்கு கல்விகற்கும் உரிமையோ அல்லது
கேட்கும் உரிமையோ இல்லை என்று வரையறுத்தார்கள்.
அதையும் மீறி கீழ்ச்சாதியை சார்ந்த ஒருவன் கல்வியறிவு பெற்றுவிட்டால், ‘எழுதப்படிக்கத்
தெரிந்த சூத்திரனின் நாக்கை அறுக்கவேண்டும்’ என்றும், வேதத்தை கேட்ட சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும்;
என்றும் ஏகலைவன் போன்ற ஏழை,எளியவர்களின் கல்வி
உரிமையை மறுத்தது ஆரிய மரபு.
ஆனால்,
தமிழ்மரபோ, அனைவருக்கும் கல்வி உரிமை உண்டு என்று கூறி, ’யாதானும் நாடாமாஅல், ஊராமாஅல்
என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு?’ எனக்கேட்கிறது. ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும், கீழ்ப்பாலொருவன்
கற்பின் மேற்பாலொருவனும் அவன்கண் படுமே’ (புறநானூறு 242) என்று ஆரியப்படைகடந்த பாண்டியன்
நெடுஞ்செழியனாக அறைகூவல் விடுக்கிறது. மக்களை பிறப்பிலிருந்தே பிளவுபடுத்தும் ஆரிய
வர்ணாசிரம தருமத்துக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தி சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும்
உயர்த்திப்பிடிக்கும் தமிழ்மரபின் மானுட நேயத்துக்கும் இடையேயான போராட்டம் காலம்காலமாக
பண்பாட்டு புலத்தில் நீடித்து நிலவிவருகிறது அந்தப்போராட்டம் காலக்கணக்கீட்டு முறையிலும்,
எது தமிழ்ப் புத்தாண்டு என்று நிலைநிறுத்துவதிலும் தொடர்ந்துவருகிறது.
உலகில் காலக்கணக்கீட்டுமுறைகள்
கிரிகோரியன்
ஆண்டு –ஹிஜ்ரிஆண்டு, சீன ஆண்டு என உலகில் காலக் கணக்கீட்டுமுறைகள் உள்ளன. இவற்றில்
உலகின் பலநாடுகள் ஏற்றுக் கொண்ட ஆண்டுமுறை கிரிகோரியன் ஆண்டு இந்தியாவில் கலியுக ஆண்டு, சாலிவாகன ஆண்டு, விக்ரம ஆண்டு,
கொல்லம் ஆண்டு என சில காலக்கணக்கீட்டுமுறைகள் உள்ளன.
சந்திரனையும் சூரியனையும் கொண்டு இந்தியாவில்
காலம்கணக்கிடும் முறை:
சந்திரமான ஆண்டு
சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது அமாவாசை நாளுக்கு
மறுநாள்முதல் சந்திரன்பிறை சிறிதுசிறிதாக வளர்ந்து 15ஆம் நாளில் முழுநிலாநாள் –பௌர்ணமியாகிறது.
அதற்கு அடுத்த நாள் முதல் பிறை சிறிதுசிறிதாக நாள் தோறும் குறைந்து 13ஆம் நாளில் அமாவாசை
வருகிறது. இதற்குரிய கால அளவு தமிழ்க்கணக்கீட்டின்படி 29 நாள் 12 மணி 14 நிமிடம்
28 நொடிகளாகும்.
சௌமார ஆண்டு முறை: சூரியனின் செங்குத்து கதிர்வீச்சு பூமியின்மீது
பரவும் பகுதி நிலநடுக்கோட்டுக்கு தெற்கில்
28.3 பாகை மகரரேகைக்கும், (சுறவக்கோடு)
வடக்கில் 28.5 பாகை கடகரேகைக்கும் (கடகக்கோடு)
இடையில் அமைந்துள்ளது. இப்பகுதி புவியியலாளர்களால் வெப்பமண்டலப் பகுதி என அழைக்கப்படுகிறது.
சூரியனின் செங்குத்துக் கதிர்வீச்சு மகரரேகையில் தொடங்கி, வானமண்டல வட்டப்பாதையில்
வடக்கு நோக்கி நகர்ந்து கடகத்தை அடைந்து, திரும்பி மீண்டும் தெற்கில் மகர (சுறவ)கோட்டை
தொடுவதற்கு 365 நாள், 6 மணி, 6 நிமிடம், 9.6 நொடிகளே, சௌமார (ஞாயிற்று) ஆண்டுக்குரிய
காலமாகும், இம்முறையே பன்னெடுங் காலமாக தமிழாண்டு முறையாக உள்ளது. விண்மீன் கூட்டங்களின்
உருவ ஒப்புமைக்கேற்ப மாதங்களின் பெயர்கள் சுறவம்(மகரம்), கும்பம். மீனம், மேழம், விடை,
ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என இடப்பட்டன. இன்றைய விண்ணியலாளர்கள்
கருவிகொண்டு ஆராய்ந்து அறிந்து கூறும் பெயர்களுக்கு ஒப்பவே இப்பெயர்கள் அமைந்துள்ளன.
இப்பெயர்கள் தமிழாண்டின் மாதங்கள் பெயர்களாகவும் அமைந்துள்ளன. இந்த ஆண்டுமுறை தமிழகத்திலும்,
கேரளா விலும் பின்பற்றப்படுகின்றன
.
பிறப்பில்
உயர்வுதாழ்வு இல்லை இந்த உலகில் பிறந்த அனைவரும்
சமமானவர்கள் என்னும் தமிழ்மரபுக்குரியவர்கள் பண்டைய வானியல் மற்றும் இன்றைய விண்ணியலாளர்களின்
ஆய்வு முடிவுகளுக்கேற்ப தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு
நாள் எனப்பின்பற்றிவருகிறார்கள்.
.
ஆனால், பிறப்பிலிருந்தே மனிதர்களை நால்வகை எனப் பேதம் கற்பிப்பவர் களும், செய்தொழிலைக்கொண்டு
அவர்களை சாதிகளாகப் பிரித்தவர்களும், பிரவாதிக ஆண்டுமுறையை பின்பற்றுகிறார்கள்.
இது பிரபவ, விபவ ………அட்சய என்னும் 60 ஆண்டு
வடமொழிப்பெயர்களைக் கொண்டது.
இதன் 12 மாதபெயர்கள் அந்தந்த மாதத்தில் சந்திரன்
எந்த எந்தப்பகுதியில் உள்ளதோ அந்த விண்மீனின் வடமொழிப்பெயர்களைக்கொண்டு, சைத்ர, வைசாக, சேசட, ஆசாட, சிராவண, பூர்வஆசா,
ஆச்விக, கார்த்திக, மார்கசீரிச, புணர்தை(பூஜ்ய) மாசி, பால்குண என அழைக்கப்படுகின்றன,
இந்தப்பெயர்கள் தெலுங்கில் அம்மொழியின் முதல் வேற்றுமை உருபாகிய மு சேர்ந்து சைத்தாமு,
வைசாகமு……..பால்குணமு என வழங்கின்றன. கன்னடத்தில் மாதப்பெயர்களின் கடைசியில் ஈகார
ஈறு சேர்ந்து சைத்தார, வைசாகா…… பல்குணா
என்று வழங்குகின்றன.
புகழ்பெற்ற
வரலாற்றுஆய்வாளர் பேராசிரியர் இர்ஃபான்ஹபீப் ”கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் தனது
கல்வெட்டுக்களில் ரெக்னல் ஆண்டுகளைப் பயன்படுத்துவதற்கு முன் இந்தியாவில் ஆண்டு நாள்
குறிப்பிடும் முறை இருந்ததில்லை” என்று கூறுவதை நாம் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்
வேதப்பாடல்களில் (மந்திரங்களில் காலக்குறிப்புக்கள் அறவே இல்லை. ரிக்வேதத்தின் காலம்
கி.மு 2ஆம் நூற்றாண்டுக்குமுன் இருந்திருக்க முடியாது. ஆனால், பிராமணர்களும், அவர்களது
அகழ்வாராய்ச்சியாளருமான வி.எஸ்.வாகன்கர் ரிக்வேதகாலத்தை கி.மு 8,000 ல் வைக்கிறார்கள்!
காரணம் பிரபவ, விபாவ..அட்சய என்னும் 60 ஆண்டுசுழற்சியில் குழம்பிப்போனதுதான். காலமருட்சியும்,
வரலாற்றுப்பிழையும் இவர்களது காலக்கணக்கீட்டில் மலிந்து கிடக்கின்றன.
இவர்கள்
தங்கள் ஆரியமரபைப் பின்பற்றி சித்திரை முதல் நாள் தான் ஆண்டின்முதல் நாள் என்று கூறிக்கொள்வதில்
தமிழர்கள் எவருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால். இதுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று பெயரிட
அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
திருவள்ளுவர் ஆண்டு
பண்டைக்காலம்முதல்
கலிஆண்டு தமிழகத்தின்தொடர்ஆண்டாக நடைமுறையில் இருந்துள்ளது.தமிழக கல்வெட்டுக்களிலும்
கலிஆண்டு பயன் படுத்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் இப்போதும் கலிஆண்டைப் பயன்படுத்து
கிறார்கள். தி.மு.3070(கி,மு.3101)ல் ஏற்பட்ட மாபெரும் கடல்கோளுக்குப் பின்னர் தமிழர்களால்
கைக்கொள்ளப்பட்ட ஆண்டாக இந்த கலிஆண்டு இருந்திருக்க வேண்டும். பிரபவ, விபவ…..அட்சய என்னும் வடமொழிப்பெயர்கள்
கொண்ட 60 ஆண்டுகள் தமிழ் ஆண்டில் வந்து புகுந்துகொண்டதால் தமிழரின் தொடர் ஆண்டான
கலிஆண்டு (இப்போது 5120) வாழ்வியல் பயன்பாடற்ற ஆண்டாக ஐந்திரங்களில் (பஞ்சாங்கம்) மட்டும்
இன்றளவும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.
எனவே, தமிழறிஞர்கள் மறைமலை அடிகளார் தலைமையில்
1921ல் சென்னையில் கூடி கி.மு 31ல் தொடங்கும் திருவள்ளுவர் ஆண்டை உருவாக்கினார்கள்.
திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் ஞாயிற்றாண்டின்
முதல் நாளான சுறவம் (தை) முதல் நாளே என்று அறிவித்தார்கள்.