Friday, 18 October 2013

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
     கல்வியைக் காப்போம்
           பிரச்சாரப் பயணப் பாடல்கள்
       பாடியவர்கள் : என்.நளினி, எஸ்.நாட்ராயன், அங்குசாமி, ஏ.ஓ.நாராயணசாமி
                    இசை: கோபி.ஜே.பி.தியாகராஜன்
                பாடல்கள், உரைவீச்சு, இயக்கம்
---------------------செ.நடேசன் -----------------------------------

பாடல் 1                 பாடியோர்:எஸ்.நாட்ராயன்,என்.நளினி,அங்குசாமி+குழுவினர்

பயணம் இது பயணம்!
பிரச்சாரப்    பயணம்!
கல்விக்கு வந்துள்ள ஆபத் துக்களைக்
கடமை உணர்வுடன் மக்களுக்குச் சொல்லும்
                                        ( பயணம்....)

ஆறு குழுக்களாய்த் தமிழகம் முழுதும்
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
ஆறு  முனைகளில் துவக்கிய பயணம்.
ஆப்த்தி லிருந்து  கல்வியைக் காக்க
                                         ( பயணம்....)

கல்வி அளிக்கின்ற அரசியல் சாசனக்
கடமைகளி லிருந்து நழுவிச் செல்லுகிற
மத்திய  மாநில   அரசின் கொள்கைகளை
மக்களிடம் சொல்லிக் கல்வியைக் காத்திடும்
                                          ( பயணம்...)

ஏழை  எளியவர்க்குக் கல்விஇனி இல்லையென
ஏமாற்றும் அரசின்    கொள்கைகளை மாற்றி
வாழையடி  வாழையென வளரும் தலைமுறைக்கு
வற்றாத    கல்வியினை எந்நாளும் வழங்கிட
                                          ( பயணம்... )

உரைவீச்சு

பேரன்புகொண்ட பெற்றோர்களே! மதிப்பிற்குரிய பெரியோர்களே!!
தமிழ்நாட்டின் கல்விநலனில் பெரிதும் அக்கறைகொண்டுள்ள
கல்வியாளர்களே! வணக்கம்!
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனான மகாகவி பாரதி,
‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
 தேன்வந்து பாயுது காதினிலே என்றான். ஏன்தெரியுமா? –இது
‘கல்வி சிறந்த தமிழ்நாடு! புகழ்கம்பன் பிறந்த தமிழ் நாடு!
 பல்விதமான சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு!
இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நுழைவாயிலிலே இன்று அந்தத் தமிழ்நாட்டின் கல்விக்கே ஆபத்து ஏற்பட்டுவருகிறது. குறிப்பாகக் கிராமப்புற ஏழைக்குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் தமிழ்நாட்டின் கல்வியைக் காத்திடவும், கல்வித்தரத்தை மேலும் உயர்த்திடவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெRuறுகின்ற ‘கல்விப்பாதுகாப்புப் பிரச்சாரப் பயணத்தில் உங்களை நாங்கள் சந்திக்க வந்துள்ளோம். ஆரம்பக்கல்வியைக் காத்திட உங்கள் ஆதரவைத் தேடிவந்துள்ளோம்.

பாடல் 2                                   பாடியோர்:எஸ்.நாட்ராயன், என்.நளினி

கூட்டணி
ஆசிரியர் கூட்டணி
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி
                                 ( கூட்டணி... )

தமிழ்நாட்டின் கல்வியைக் காக்க,
கல்வியின் தரத்தை மேலும்உயர்த்த
இயக்கநிறுவனர் மாஸ்டர் இராமுண்ணி
இலட்சியப் பாதையில் பயணம்செல்லும்
                                  ( கூட்டணி... )

எல்லாரும் கல்வி பெற்றிட
ஏழை எளியோர் வாழ்வுமலர்ந்திட
இல்லாமை இல்லாத சமுதாயம் உருவாக்கும்
இலட்சியப் பாதையில் பயணம்செல்லும்
                                  ( கூட்டணி... )

கல்வி சிறந்த தமிழ்நாடு
கம்பன் பிறந்த தமிழ்நாடு
எல்லா வளமும் எல்லா நலமும்
என்றும்பெற்றிடும் இலட்சியம் கொண்ட
                                     ( கூட்டணி... )

உரைவீச்சு

தமிழ்நாட்டின் ஆசிரியப்பேரினமே!
கல்விநலனும், ஆசிரியர்நலனும் ஒன்றோடுஒன்று பின்னிப்பிணைந்தவை.கல்வி இல்லாவிட்டால் ஆசிரியர்களும் இல்லை. இதை நன்கு உணர்ந்தவர்கள் நாம்.கடந்த காலங்களில் கல்விக்கு ஆபத்து ஏற்பட்டபோதும், ஆசிரியர் நலன்கள் பாதிக்கப்பட்ட போதும் நமது ஒன்றுபட்ட சக்தியின் மூலமாக அவற்றை முறியடித்து வரலாறு படைத்தவர்கள் நாம். இதுவரை நாம்பெற்ற வெற்றிகளெல்லாம் எவருடைய கருணை யினாலும், தயவினாலும் அல்ல. நமது ஒற்றுமையால்... நமதுபோராட்டத்தால்... நமது தியாகங்களால்...! இன்று தமிழகஅரசின் நடவடிக்கைகளால் ஆரம்பக்கல்விக்கும், ஆசிரியர் நலன்களுக்கும் ஒருசேர ஆபத்துக்கள் உருவாகியுள்ளன.இந்த ஆபத்தான சூழ்நிலையில் இன்று நம்முன் உள்ளகடைமைகள் என்ன? இதோ நேற்றையவரலாறு:

பாடல் 3         பாடியோர்:எஸ்,நாட்ராயன்,என்.நளினி,ஏ.ஓ.நாராயணசாமி+குழுவினர்

பேரணி முழக்கம்:

ஒன்றுபடுவோம், போராடுவோம்
போராடுவோம்,  வெற்றிபெறுவோம்
வெற்றிகிட்டும்வரை போராடுவோம்
இறுதிவெற்றி நமதே!

பாடல்

ஒன்று படுவோம் போரா டுவோம்
போரா டுவோம்  வெற்றி பெறுவோம்

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
அறை கூவலிது தோழர்களே!
வீரம் செறிந்த போராட்ட களத்தில்
வெற்றிக் கொடி நாட்ட வாருங்களே!
                                  ( ஒன்று படுவோம்... )

அனைத்து நிலையிலும் பிரிந்து பிரிந்துநாம்
அன்று சந்தித்த தென்னவோ?
நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைக்குமே
நேர்ந்த இழப்புக்கள் கொஞ்சமோ?
                                 ( ஒன்று படுவோம்... )

இந்தி யாவிலே குறைந்த ஊதியம்
என்ற அவலநிலை மாற்றினோம்
முன்னுரி மைப்படி வேலை வாய்ப்பெனப்
புதிய சரித்திரம் ஆக்கினோம்.
                                 ( ஒன்று படுவோம்... )

பெற்ற வெற்றிகள் பறிக்கப் படுவதை
மீண்டும் அனுமதிக்க லாகுமா?
உற்ற தோழனே கல்வி காத்திட
உரத்து முழங்கிநீ ஓடிவா!
                                 ( ஒன்று படுவோம்... )

உரைவீச்சு

ஒருசமுதாயத்தின் வாழ்வுக்கும், ஒருநாட்டின் முன்னேற்றத்திற்கும் கல்விதான் அடித்தளமாகும். தொழில்வளர்ச்சியும், உற்பத்திப்பெருக்கமும், வறுமைஒழிப்பும், சமத்துவஉணர்வும் கல்வியினால்தான் சாத்தியமாகும். ஒருநாட்டின் ஜனநாயகச் செயல்பாடுகள் அந்தநாட்டு மக்களின் கல்விஅறிவைப் பொருத்தே அமையும். அனைத்துமக்களின் நலன்களையும் காக்கும் ஜனநாயகச் செயல்பாடுகளில் மக்கள் அறிவார்ந்தமுறையிலே பங்கேற்கவும், அவரவர் உரிமையைக் காத்துக்கொள்ளவும், பொதுப்பணியாற்றவும் ஒவ்வொருவரும் பள்ளிக்கல்வியாவது பெற்றிருக்க வேண்டும். இது நிறைவேற வேண்டுமானால்....

பாடல் 4                                   பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி

கல்விவெள்ளம் தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடணும்
பள்ளியில்லா ஊர்களிங்கே இல்லைஎன்றே ஆகணும்
கர்மவீரர் காமராசர் திட்ட மிட்டாரே
ஊர்கள்தோறும் பள்ளிதிறக்க ஆணையிட்டாரே!
                                           (கல்விவெள்ளம்)

எழுதப்படிக்கத் தெரியாத ஏழைக் குழந்தைக
எல்லாரையும் பள்ளிகூடம் போக வைக்கவே
மதியஉணவுத் திட்டமிங்கே அறிமுக மாச்சு
கதியில்லாத் குழந்தைகளும் கல்வி பெறலாச்சு.
                                           (கல்விவெள்ளம்)

வதவதன்னு குழந்தைக ஒருவகுப்பி லிருந்தா
விதவிதமாப் பாடங்களப் படிக்க முடியுமா?
இருபது பேர்படிப்ப தற்கே ஓரா சிரியர்
இருப்பதுதா பொருத்தமின்னு விதிஉ ருவாச்சு
                                            (கல்விவெள்ளம்)

மாணவர்கள் இருபதுக்கே  ஓ ரா  சிரியர்
முப்பத்தாறு ஐம்பத்தாறு எழுபத் தாறுக்கோ
இரண்டு,மூன்று, நான்கெனவே தொண்ணூத் தாறுக்கு
ஆசிரியர் ஐந்துஎன நியமன மாச்சே!
                                            (கல்விவெள்ளம்)

அறுபதுகளில் துவங்குச்சம்மா கல்விப் புரட்சி
சுறுசுறுப்பாய் நிகழ்ந்ததம்மா கல்வி வளர்ச்சி
மறுமலர்ச்சி தமிழகத்தில் கல்வி யினாலே
உறுதியாக அடித்தளந்தான் உருவா கியதே!
                                            (கல்விவெள்ளம்)

உரைவீச்சு

இந்தியநாடு விடுதலை பெற்றபோது எண்ணற்ற கனவுகளை இதயங்களில் கொண்டி ருந்தோம். அந்தக் கனவுகள் நனவாகக் கல்விதான் நுழைவாயில். நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகள் இதற்கொரு வடிவம் தந்தார்கள். அரசியல்சாசனம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குள் ஆறுமுதல்பதினான்கு வயதுவரையுள்ள
அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்கல்வியை அளிப்பது மத்திய,மாநில
அரசுகளின் கடமை எனவரையறுத்தார்கள்.
  அரசியல் உறுதியோடு இதை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கைகளில் மத்தியஅரசு பத்து சதவீதமும், மாநிலஅரசு முப்பது சதவீதமும் கல்விக்காக நிதிஒதுக்கி இருக்க வேண்டும்.ஆனால், மத்திய, மாநில அரசுகளோ கல்விக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக்கொண்டே வந்தன.இதனால் சுதந்திரம்பெற்று 53ஆண்டுகள் ஆனபின்னும் இந்தியமக்கள் தொகையில் சரிபாதிப்பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்! இதற்குக் காரணம் என்ன?
  இதோ நோபல்பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமார்த்ய சென் கூறுகிறார் :
‘அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் ஆரம்பக்கல்வியைப் புறக்கணித்துவிட்டார்கள்.

பாடல் 5                                        பாடியோர்: அங்குசாமி, என்.நளினி

நிதியில்லை கல்விக்கு நிதியில்லை கல்விக்கு
நித்தமொரு ஒப்பாரியா?
கதியற்ற கிராமத்து ஏழைக்குழந்தைகள்
கல்விக்குத் தடை ஏனையா?
                                              (நிதியில்லை...)
விதைநெல்லை உண்பதா? விபரீதம் அல்லவா?
வீணாகும் எதிர்காலமே!
தற்குறிகள் நாடாகத் தரமற்ற கல்வியால்
தாய்நாடு/தமிழ்நாடு வீணாவதோ?
                                              (நிதியில்லை...)
ஆசிரியர் குறைந்தாலே கல்வித்தரம் சீரழியும்
உங்களுக்குத் தெரியாததா?
சுவையற்ற கல்வியால் மாணவர்கள் சலிப்பாகிப்
பாதியில் நிற்பார்களே!
                                               (நிதியில்லை...)
கட்டாய இலவசக் கல்வியே என்றாலும்
கவர்ச்சிக்கு எங்கே இடம்?
எட்டாத கனியாக ஏழைக்குக் கல்வியை
ஏய்ப்பதே முறையாகுமா?
                                               (நிதியில்லை...)

உரைவீச்சு

  கல்வித்தர உயர்வுக்கும், ஆசிரியர்-மாணவர் விகிதத்திற்கும் ஒருநெருக்கமான தொடர்பு உண்டு. ஆசிரியர்-மாணவர் விகிதம் அதிகமானால் கல்வியின் தரம் குறையும். இதை உணர்ந்துதான் 1964ல் 20மாணவர்களுக்கு 1ஆசிரியர் என்றவிகிதம் உருவாக்கப்பட்டது. 33ஆண்டுகள் நடைமுறையிலிருந்த 1:20என்ற ஆசிரியர்-மாணவர்
விகிதத்தை 1997ல்1:40எனத் தமிழகஅரசு உயர்த்திவிட்டது.தமிழ்நாட்டு ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்துவருகிறது. இதன்விளைவு என்னவாகும்? கல்வித்தரம் வீழ்ச்சியடையும். வசதிவாய்ப்புள்ளவர்கள் தரமான கல்விக்காகத் தங்கள் குழந்தைகளைக் கட்டணப்பள்ளிகளில் சேர்ப்பார்கள். மாணவர் எண்ணிக்கை குறைந்து கிராமப்புறப் பள்ளிகளே மூடப்படும்.ஏழைஎளிய மாணவர்களுக்கு இனி தரமான கல்வி இல்லையென்ற நிலை உருவாகும்.1:40ன்படி 79மாணவர்வரை ஒரே ஆசிரியர்தான்! 80வது மாணவர் வந்தால்தான் 2ஆசிரியர்!

79மாணவர்வரை 1 ஆசிரியர்தான் என்றால் பள்ளி எப்படி இருக்கும்?

பாடல்6                                    பாடியோர் : எஸ்.நாட்ராயன், என்.நளினி

ஆட்டைப்பட்டியில டைக்கிறாப்புல பள்ளிகூடம் இருந்தாக்க
அங்கேஎப்படிப் பாடம்நடக்கும்? நெனச்சிப்பாருங்க
நாட்டைக்காக்கும் குடிமகனா நாளைஇளைய தலைமுறையை
நாமஎப்பிடி உருவாக்குவோம்? எண்ணிப்பாருங்கோ!
                                                     ( ஆட்டைப்... )
அஞ்சுவகுப்பில் தொண்ணூத்தாறு மாணவர் இருந்தா
அஞ்சுபேரு ஆசிரியர் இருந்த நெலமையெ
இனிநூறு வரைக்கும் ரெண்டுபேரு மட்டுந்தானுன்னு
ஈராசிரியர் பள்ளிகளா குறைப்பதனாலே
                                                    ( ஆட்டைப்... )
அஞ்சுபேரு அஞ்சுவகுப்பில் சொல்லிக் கொடுத்தத
ரெண்டுபேரு மட்டுமினி நடத்தனு மின்னா
கொஞ்சங்கொஞ்ச மாகக்கல்வித் தரம்குறை யாதா?
விஞ்ஞானிகளா மேதைகளா வர முடியாதே!
                                                    ( ஆட்டைப்... )
ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதம் உயர்த்தினா
அன்றேகல்வி சீரழியும் என்றார் கலைஞரே!
தொண்ணூத்தஞ்சில் முரசொலியில் கண்டிச்ச தெல்லாம்
தொண்ணூத்தேழில் கலைஞரரசு மறந்திட லாமா?
                                                    ( ஆட்டைப்... )

உரைவீச்சு
40 மாணவர்களுக்கு ஓர்ஆசிரியர் என்று புதியவிகிதம் உயர்த்தப்பட்டபோது அதில் ஏராளமான ஆபத்துக்கள் இருந்தாலும் அந்த525 அரசுஆணையில் ஒரேஒரு நல்ல அம்சமும் இருந்தது.அதுதான் “ஒராசிரியர் பள்ளிகளே இனி இருக்காது  எல்லா ஓராசிரியர் பள்ளிகளும் இனி ஈராசிரியர் பள்ளிகளாக்கப்படும் என்ற அந்த அறிவிப்பு. 1999 ஏப்ரலில் சட்டப்பேரவையில் கல்விஅமைச்சர் பேராசிரியர், ‘ஓராசிரியர்பள்ளிகள் எல்லாம் ஈராசிரியர் பள்ளிகள் ஆக்கப்பட்டுவிட்டன, என்றுதெரிவித்தார். இந்த ஒரே ஒரு நல்ல அம்சமாவது நிறைவேறியிருக்கிறதா? கல்விஅமைச்சர் பேராசிரியர் அறிவித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் நிலைமை என்ன?

பாடல் 7                                                    பாடியவர்: அங்குசாமி
கவுண்டமணி செந்தில்வாழப் பழக்கதை யாட்டம் – கல்வி
காமெடியா ட்ராஜடியா ஆகிட லாமா?
வளருகிற தலைமுறையின் கல்வி தீபத்த – இங்கே
கண்ணாமூச்சி ஆட்டமாக மாற்றிட லாமா?
                                              ( கவுண்டமணி... )
ஓராசிரியர் பள்ளிகளே இனிஇருக்  காது – அதை
ஈராசிரியர் பள்ளிகளா  ஆக்கி  யாச்சுன்னு
பேராசிரியர் சட்டசபையில் சொன்னபோதுதான் -  நாங்க
பெருமையோட எதிர்பார்த்தோம் ஆனா என்னாச்சு?
                                                ( கவுண்டமணி... )
எங்கஊரு பள்ளியில  ஓராசிரி யர்தான் – அவரு
அஞ்சு  வகுப்பும் நடத்தறாரு இங்கிலீ  சும்தான்.
எங்கே  அந்த இன்னுமொரு ஆசிரியருன்னா – அந்த
இன்னொருவர் தாங்கஇவரு என்றே சொல்றாங்க!
                                                ( கவுண்டமணி... )

உரைவீச்சு
  ஆரம்பக்கல்வியைச் சீரழிக்கும் 1:40 ஆசிரியர் மாணவர் விகிதாச்சார உயர்வை ஆசிரியர்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் கல்வியாளர்களும், அறிஞர்பெருமக்களும், பத்திரிக்கையாளர்களும், அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் கண்டனம் செய்துள்ளார்கள். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நடத்திய ‘1:40 எதிர்ப்புக் கண்டன மாநாட்டில்தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வுகள் அரசுக்கும், தமிழகமுதல்வருக்கும் தெரிவிக்கப்பட்டன.
  வளர்ச்சி எது?முன்னேற்றம் எது? ஓராசிரியர்பள்ளி ஈராசிரியர்பள்ளி, மூன்றாசிரியர்
பள்ளியானால் அது முன்னேற்றம். ஆனால், இங்கு என்ன ஆகிறது? மூன்றுஆசிரியர் பள்ளி ஓராசிரியர் பள்ளியாக மாறுகிறது. ‘தமிழகம் கல்வியில் வளர்ந்துகொண்டிருக் கிறது என்று எவ்வாறு கூறுவது?

பாடல் 8                                    பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி

ஒன்று என்பது இரண்டானால்
அதுதான் வளர்ச்சியின் பரிமாணம்
மூன்று நான்கு  ஐந்தானால்
அதுமுன் னேற்றத்தின் அடையாளம்
         ஆனால் கல்வியில் நடப்பதென்ன?
         அதையே வளர்ச்சி என்பதென்ன?
                                        ( ஒன்று என்பது...)
ஐந்தா சிரியர் பள்ளிகளை
ஈரா   சிரியர் ஆக்குவதா?
ஐந்தை இரண்டாய் ஆக்குவது
எதிர்மறை விளைவு ஆகாதா?
          ஏழைகள் கல்வியைக் காத்திடவே
          எங்களின் குரலைக் கேளுங்கள்
                                        ( ஒன்று என்பது... )
தமிழக முதல்வரைச் சந்தித்தோம்
மாநாடுகளும் நடத்தி விட்டோம்
எதுவும் இங்கே மாறவில்லை
ஏனோ  கல்வியைக் காக்கவில்லை.
          முதல்வரின் கவனத்தை ஈர்த்திடவே
           மக்களின் குரல்தான் எழவேண்டும்.
                                        ( ஒன்று என்பது... )
எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
ஏழையின் வாழ்வதில் பொன்னாகும்.
கண்களைப் பறிக்கும் செயலாகக்
கல்வியைப் பறிப்பது முறைதானா?
          மக்களின் குரலே எழுந்திடுக!
          மகேசன் குரலாய் ஒலித்திடுக.
                                        ( ஒன்று என்பது...)
உரைவீச்சு

  தமிழக முதல்வர் தனது பிறந்தநாள் செய்தியாக “ வலிமைமிக்க நாடாக இந்தியாவையும், வளம்கொழிக்கும் மாநிலமாகத் தமிழ்நாட்டையும்  நிலைபெறச் செய்ய என்தொண்டு தொடரும் என அறிவித்துள்ளார். இதற்கு அடித்தளமே கல்வி அல்லவா? கல்வி கண்போன்றது. மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வி. அத்தகைய கல்வியை ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமாக வழங்குவது அரசின் தலையாய கடமை. அதுதான் வலிமைமிக்க இந்தியாவை, வளம்கொழிக்கும் தமிழ் நாட்டை நிலைபெறவைக்கும்.
 
  இதற்குமாறாகப் புதியபொருளாதாரக்கொள்கையின் அடிபடையில் புதியகல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுகிறது. கல்விக்கான நிதி குறைக்கப்படுகிறது. கல்வி சீரழிக்கப்படுகிறது. அதன் ஒருதுவக்கம்தான் 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதாச்சார உயர்வு. ஆசிரியர் மாணவர் விகிதத்தை உய்ர்த்துவது கிராமப்புறக் குழந்தைகளின் கல்வியைச் சீரழிக்கும். உபரி என்ற பெயரால் ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைத்துவிடும்.

தமிழக முதல்வர்

 இந்த ஆபத்துக்களைப் பரிசீலிக்க வேண்டும்.
 1:40 ஐ இரத்து செய்திட வேண்டும்.
 1:20 ஐ தொடர்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.
 இது உடனடியாக நடைபெற



பாடல் 9   பாடியோர்: எஸ்.நாட்ராயன், என்.நளினி

மக்கள் சக்தி திரளட்டும்
மறைக்கும் தடைகள் உடையட்டும்.
ஏழைஎளிய மக்கள் வீட்டில்
கல்வி  தீபம் ஒளிரட்டும்.
                            ( மக்கள் சக்தி...)
குற்றமற்ற நிரப   ராதி
தூக்கி  லேற்றப் படுவதா?
காற்றில் உயிரைப் பறித்தபின்பு
கருணை மனுவை ஏற்பதா?
                             ( மக்கள் சக்தி...)
கல்வித் தரத்தைத் தூக்கிலேற்றும்
கல்வித் துறையின் ஆணையை
இல்லையென்று ரத்து செய்யும்
இடி முழக்க மாகவே
                            ( மக்கள் சக்தி...)
வணக்கம்!

( 2000 ஆம் ஆண்டு ‘கல்வியைக் காப்போம் பிரச்சாரப் பயணத்தின் ஒலிப்பேழை )

Sunday, 6 October 2013

                   தோழர் கருணாமனோகரன்
  1960களின் துவக்கத்தில் சமுதாயமாற்றத்திற்கான கருத்தாக்கமாக இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது ‘திராவிட இயக்கம். கலைஇலக்கிய வடிவங்களான கவிதை, சிறு கதை, நாடகம், பாடல்கள், திரைப்படம் என அனைத்துச் சாதனங்களையும் மிகவலிமையாகப் பயன்படுத்தித் ‘திராவிடக் கருத்தியலை இளைஞர்களின் சிந்தனைத் தளங்களில் அது ஏற்றியது. ஆனால்,1967ல் தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்,சமதர்மசமுதாய மாற்றத்திற்காக ஏங்கிநின்ற இளைஞர்களின் நெஞ்சங்களில் அது உருவாக்கிய பிம்பங்கள் உதிரத்துவங்கின.
  திராவிட இயக்கத்தத்துவத்தின் போதாமையை உணர்ந்த அவர்கள், சமுதாய மாற்றத்திற்கு ஒருபுரட்சிகரமான தத்துவத்தின் தேவையை உணரத்துவங்கினார்கள். சமுதாய அவலங்களைக்கண்டு கோபம்கொண்ட இந்த இளைஞர்களின் பிரதிநிதிகளாக ஊத்துக்குளிப் பகுதியிலும் சிலர் இருந்தனர்.கவிஞர்.முத்துப்பொருநன், நீலவண்ணன், கலையரசு ஆகிய மூவரும் 1972 மே தினத்தன்று எங்கள் கோபங்களைக் கவிதைகளாக்கி ‘பரணி என்ற ஒருசிறிய தொகுப்பை வெளியிட்டோம். கவிஞர்.சேலம் தமிழ் நாடன் அளித்த கனல்தெறிக்கும் முன்னுரையும், ‘ மனிதன் இதழில் அந்தச் சின்னஞ்சிறிய தொகுப்பை வரவேற்று எழுதப்பட்ட மூன்று பக்க விமர்சனமும் பரபரப்பை ஏற்படுத்தின. புதிய தொடர்புகள் தேடிவந்தன. அப்படி எங்களை இனம்கண்டு வந்தவர்தான் தோழர்.கருணாமனோகரன்.
  மார்க்ஸிசம் எங்களுக்குப் பிடிபட்டது இவரது விளக்கங்களால்தான். மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசே துங் என்ற மாபெரும் தலைவர்களை நாங்கள் அறிமுகம் கொண்டதும் இவரால்தான்.அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளை அவர் எங்களுக்குள் விதைத்தார். உழைக்கும் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அவர்களின் சுகதுக்கங்களில், போராட்டங்களில் பங்கேற்று அந்த அனுபவங்களை எழுதுவதே ‘மக்கள் கலை இலக்கியம் என்று கற்பித்தார். கவிஞர்.முத்துப்பொருநன், கரைப்பாளையம் க.பழனிசாமி, சந்திரமூலரசன்,தொரவலூர் சீனிவாசன், எம்.நல்லசாமி ஆகியோர் தோழர். கருணாமனோகரனின் வழிகாட்டல்களால் புதியவெளிச்சங்களக் கண்டோம்.
  1977ல் நான் ஆசிரியர்சங்கப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டபோது தோழர்.கருணா அதை விமர்சித்தார். இன்றைய ஆசிரியர்கள் சமுதாய உணர்வின்றித் தங்கள்வேலை, தங்கள்சம்பளம், சலுகைகள், இடமாறுதல்கள் போன்ற குறுகிய வட்டங்களிலேயே உள்ளவர்கள். அவர்களுக்காகப் பாடுபடுவது சமுதாயமாற்றத்திற்குப் பயன்படுமா? என்று வினவினார்.ஆசிரியர்களைச் சமுதாய உணர்வுபெற வைத்தால் அவர்களைச் சமுதாய மாற்றத்திற்கான தூதுவர்களாக ஆக்கமுடியும் என்று நான் கருதினேன். என் சங்க நடவடிக்கைகளால் தோழர்.கருணாவுடனான தொடர்பில் இடைவெளி எழுந்தது
  பொதுவாகக் கிராமப்புறப் பள்ளிகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஆசிரியர்கள் ஆதிக்கசக்திகளால் அடிமைத்தளையில் சிக்குண்டு அவமானப் படுவதிலிருந்து விடுவிக்க எனது பணிகளைத் தொடர்ந்தேன். உயர்சாதியினர் முன் சைக்கிளில் செல்லக்கூடாது: காலில் செருப்பணியக்கூடாது.டீக்கடைகளில் தனிடம்ளர் போன்றவற்றை மாற்றவேண்டும் என்றால் ஆசிரியர்களை அணிதிரட்டி அநீதிகளுக்குஎதிராகப் போராடவைக்கவேண்டும் என்ற திசைவழியில் எனது சங்கப்பயணம் தொடர்ந்தது.ஊத்துக்குளிப் பகுதியில் அதற்கு நல்லபயன் கிடைத்தது.
  தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த ஆசிரியரின் மகனும், உயர்வகுப்பைச் சார்ந்த பெண்ணும் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது அதற்கு எதிர்ப்பு வந்ததைத் தடுத்து ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அழைப்பிதழ் தந்து அந்தத் திருமணத்தை நடத்தி முடித்தோம்
  எம்.ஜி.ஆரின் சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்டபோது, நம்பியூர் வட்டரத்தில் ஒரு பள்ளியில் சத்துணவுத் திட்டக்குழுவின் தலைவராக ஆளும்கட்சிப் பிரமுகரான தன்னை நியமிக்காமல் ஊராட்சிமன்றத்தலைவரை முறைப்படி நியமித்ததற்காக   ஆளும்கட்சிப்பிரமுகரால் தாழ்த்தப்பட்ட இனஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் செருப்பால் அடிக்கப்பட்டார். ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அந்தப்பிரமுகரை உடனடியாகக் கைதுசெய்யக் கோரியபோது காவல்துறை மறுத்தது.காவல் நிலையத்தின்முன் திரண்டிருந்த ஆசிரியர்களிடம் ‘நாளைமுதல் பெரியார் மாவட்டம் முழுவதும் ஒரு பள்ளியில்கூட சத்துணவு வழங்கப்பட மாட்டாது என ஆசிரியர்கூட்டணியின் மாவட்டக்கிளையின் சார்பில் அறிவித்ததும் காவல்துறை அஞ்சியது. முதல்வர் எம்.ஜி.ஆரின் திட்டம் மாவட்டம் முழுவதும் நிறுத்தப்பட்டால் பிரச்சனை பெரிதாகிவிடுமே என்று கெஞ்சியது. இரவு 12மணிக்குள் கைதுசெய்யா விட்டால் முடிவில் மாற்றமில்லை என்றதும் கைது செய்தது: சிறையில் அடைத்தது. .இந்தச் செய்திகளை அறிந்த தோழர்.கருணாமனோகரன் மகிழ்ச்சி அடைந்தார்.
  1985ல் ராஜீவ்காந்தியின் ‘புதிய கல்விக்கொள்கை ஆரவாரத்தோடு வெளியிடப்பட்டது. இக்கல்விக்கொள்கையில் உள்ள கல்விநலன், மாணவர்நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன்களுக்கு எதிரான பாதகமான அம்சங்களைத் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பார்வையில் புதியகல்விக்கொள்கை என்ற அறிக்கை அம்பலப்படுத்தியது. இக்கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தது. திராவிடர் கழகத்தின் ‘விடுதலை நாளேடு இந்த நீண்ட அறிக்கையைத் தொடர்ந்து நான்குநாட்கள் வெளியிட்டது. தமிழ்நாட்டில் புதியகல்விக் கொள்கையின் வர்க்கநலன் தெளிவுபடுத்தப்பட்டது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதைக் கலைவடிவமாக்கி ‘புதுசோ புதுசு என்ற வீதி நாடகமாகத் தமிழ்நாடு முழுவதும் மக்கள்முன் கொண்டுசென்றது இதைப்பார்த்த தோழர்.கே.எம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் இத்தகைய சிந்தனைகள் ஏற்பட்டுள்ளதை வரவேற்றார்.
  பெண்ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்விடுதலைக்குக் குரல்கொடுக்கவும் தமிழ்ச்செல்வியின் பங்கேற்பு தேவைப்பட்டபோது அவர் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிநிகழ்ச்சிகள், சங்கக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் மகிழ்வோடு கலந்துகொண்டார். 1972முதலான 40ஆண்டுகாலத் தொடர்பில் இவர்களது செல்வங்களான ஜான்சிராணி, ஜென்னி நிர்மலா, ஜீவா ஆகிய மூவரும் என்னையும், என்துணைவியார் பாக்யலட்சுமியையும்  மாமா. அத்தை என உரிமையோடு உறவுகொண்டாடுவதும், தோழர்.கே.எம். எனது துணைவியாரைத் தனதுமூத்த சகோதரியாகவே நடத்தியதும் நினைவில் நீங்காதவை.
  தோழர்.கருணாமனோகரன் ‘தமிழகச் சூழலில் சாதியம் பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர். டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் ‘பார்ப்பனியத்தின் வெற்றி முதலான பல நூல்களை சமூகநீதிப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அவர் எழுதிய ‘சாதிய சமூக அமைப்பும், தமிழ்தேசிய இனப்பிரச்சினையும், ‘பார்ப்பனீயத்தின் வெற்றி, ‘வரலாற்றுப்போர், திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா? ‘ஆரியர், திராவிடர், தமிழர்  ஆகியநூல்கள் குறிப்பிடத் தக்கவை.
   பெரியாரைப் பெரிதும் நேசித்த தோழர்.கே.எம். ‘பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராடினாரே தவிர சாதியத்தை ஒழிக்கப்பாடுபடவில்லை என்ற விமர்சனத்தையும் கொண்டிருந்தார்.
  அவர் கடைசியாக எழுதிய ‘தமிழ் ஈழமும், தமிழ்த்தேசியத்தின் எதிர்காலமும் விமர்சனத்திற்குரிய ஆனால், ஆழ்ந்து பரிசீலிக்கவேண்டிய கருத்துக்களை நம் முன் வைக்கிறது.     
 

     

Friday, 4 October 2013

                      அறிவியல் அரசியல் அறிஞர்
                     பேராசிரியர் மைரன் வெய்னர்
   இந்தியாவின் நண்பரும், அரசியல் அறிவியல் அறிஞருமான பேராசிரியர் மைரன் வெய்னர் ‘இந்திய அரசியல் பற்றிய தனது ஆய்வுகளைத் தொடங்கி 22 புத்தகங்களை எழுதியுள்ளார். ஜனநாயகக்கோட்பாட்டை வரித்துக்கொண்ட இந்திய நாட்டின்மீது ஆர்வம் கொண்ட அவர் 1950களில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்திய அரசியலைத் தனது ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டார். அரசியல் கட்சிகள் எவ்வாறு உருவாகின்றன? எத்தகைய கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன? தொலைதூரக் கிராமங்களிலும்கூட அவை எவ்வாறு வேர்கொள்கின்றன? என ஆராய்ந்தார்

  இந்த ஆண்டுகளில் வெய்னர் தனது ஆய்வுத்தளங்களை மேலும் விரிவாக்கிக்கொண்டார். மத அடிப்படையிலான அரசியல் நடவடிக்கைகள் பற்றியும்,மக்களைத் தங்கள் சொந்த வீடுகளிலி ருந்தும், பூர்வீகக்கிராமங்களிலிருந்தும் எத்தகைய வன்முறைகள் வெளியேற்றி அகதிகளாக்குகின்றன? என்பது பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார். தனது ஆய்வுகளுக்குப் புத்தகங்களை மட்டுமே நம்பியிராமல் கிராமங்களுக்கும் சென்று சாதாரண மக்களை நேரில் சந்தித்து அடிப்படையான கேள்விகளைக் கேட்டு, அவர்கள் அளிக்கும் பதில்களிலிருந்து விபரங்களைச் சேகரித்துக் கொண்டார்.
                                                                                   சாதனை மகுடம்
  இத்தகைய நுணுக்கங்களைக் கையாண்டு ஆய்வுசெய்து பேரா .மைரன்வெய்னர் எழுதிய “இந்தியாவில் குழந்தையும், அரசும்(   TheChild and the State inIndia                ) என்ற நூல்இந்தியாவில் மட்டுமன்றி வளரும் நாடுகளிலும்கூடக் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விவாதங்களின் அடித்தளத்தையே மாற்றியது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரபேராசிரியரான ஜக்தீஷ் பக்வதி இந்த நூலைப்பற்றிக் குறிப்பிடும்போது “இது பேரா.மைனர் வெய்னரின் சாதனை களின் மகுடம் என்கிறார்.

  ‘ஒப்புமைநோக்கில் குழந்தைத் தொழிலாளரும், கல்விக்கொள்கைகளும் என்ற துணைத் தலைப்பு கொண்ட பேரா.மைனர் வெய்னரின் நூல் வெளிவருவதற்குமுன்னர் ‘இந்தியா ஓர் ஏழ்மைநாடு. எனவே, குழந்தை உழைப்பைத் தடுக்கவும், அனைவருக்கும் கல்வி கொடுக்கவும் அதனால் முடியாது. ஏழைப்பெற்றொர்கள் தங்கள் குடும்ப வரவுசெலவை ஈடுகட்டக்கூடத் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள். பெற்றோர்களின் வருமானம் உயராத வரையில் இதில் மாற்றம்செய்வது இயலாது என்பதாகவே பல அரசியல்வாதிகளின் சிந்தனை ஓட்டம் இருந்தது.
                                   வெய்னரின் மறுப்பு
  ஆனால், பேரா.மைனர் வெய்னர் வரலாற்றுப்பூர்வமான வாதங்களை முன்வைத்து இந்தச் சிந்தனைஓட்டங்களை மறுத்தார். ‘ஏழ்மை நிறைந்த 19ஆம் நூற்றாண்டின் சமூகங்களில்- ஸ்காட்லாந்தில், கல்வியைப் பரவலாக்கும் சீர்திருத்தங்கள் மதநோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பரவலாகித் தொடர்ந்தன. அதிகரித்த வருமானம் அதன்பின்னரே தொடர்ந்தது என்றார் வெய்னர். ‘ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்தியாவைவிட மிகஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் கல்வியறிவின்மையின் விகிதாச்சாரத்தைக் குறைப்பதிலும், கல்வியைப் பரவலாக்கிஅடையவைப்பதிலும் இந்தியாவைவிட மிகச்சிறந்த சாதனைகளைச் செய்துள்ளன‘ என்ற வெய்னரின் ஒப்பீட்டுப் பட்டியல்கள் அவரது கருத்துக்களை மேலும் எளிதாக ஏற்க வைக்கின்றன. இந்தப்புத்தகத்தில் இந்தியாவோடு அடிக்கடி ஒப்பீடு செய்யப்படும் சீனா கல்வியில் இந்தியாவைவிட அதிகம் சாதித்துள்ளது ஒப்பீட்டு ஆய்வுமுறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
                                                                   எல்லாம் தெரிந்தவர்கள்
  வெய்னர் தனது ஆய்வுகளுக்குப் பல்வேறு தகவல்களைச் சேகரிக்கும்போதே அவற்றை ஆய்வுசெய்து கண்டறிந்த முக்கியமான தகவல்களைச் சம்பந்தப்பட்ட அரசுஅலுவலர்களின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளார். இந்த அலுவலர்களோ, ‘நிலைமைகள் எல்லாம் தங்களுக்கு முழுவதும் தெரியும் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள்.
  கொலம்பியா பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜக்தீஷ் பக்வதி கூறும் ஒரு தகவல் மிகவும் சுவாரசியமானது.இதை வெய்னரே அவரிடம் கூறியதாக பகவதி தெரிவித்தார்.
  புதுடில்லியில் கல்வித்துறைச் செயலாளரை ஒருமுறை வெய்னர் சந்தித்தார். “இந்தியாவில் கட்டாயக்கல்வி நடைமுறையில்  உள்ளதா? இல்லையா? என்பதுபற்றி அவர்கள் விவாதம் நடைபெற்றது. வெய்னர் “இந்தியாவில் கட்டாயக்கல்வி நடைமுறையில் இல்லை என்று கூறினார். ஆனால், கல்விதுறைச் செயலாளரோ ‘கட்டாயக்கல்வி அளிக்க அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. என்வே, இந்தியாவில் கட்டாயக்கல்வி நடைமுறையில் உள்ளது என்று சாதித்தார்.
  ஆனால், வெய்னர் கல்வித்துறைச் செயலாளரிடம் “அரசியல் சாசனத்தில் உறுதி அளிக்கப் பட்டதை வைத்துக்கொண்டு பல்வேறு மாநிலங்களும் கட்டாயக்கல்விச் சட்டத்தைத் தங்கள் சட்டமன்றங்களில் நிறைவேற்றிவிட்டதாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். என்று தெரிவித்தார். அரசியல் சாசனக்கடைமைகளை மாநிலஅரசுகள் நிறைவேற்றச் சட்டங்கள் இயற்றுமாறும், தேவைப்படும் உதவிகளை இந்தியக்குடிமக்களுக்கு அளித்திடுமாறும் வலியுறுத்தி ஒருகடிதத்தை அளித்தார்.
  வெய்னர் தனது கடிதத்தில், “குழந்தை உழைப்பை முடிவுக்குக்கொண்டுவரப் பலமுறை முயன்று சோதிக்கப்பட்ட ஒருதீர்வு உள்ளது. அதுதான் ஆரம்பக்கல்வியைக் கட்டாயமாக்குவது. வெறும் இலவசமாகத் தருவதல்ல: கட்டாயமாக்கி இலவசமாகத் தருவதே என்று வலியுறுத்தினார். “குழந்தை உழைப்புச்சட்டத்தின் அமலாக்கம் தேவையான ஒன்றுதானேதவிர, அதுமட்டுமே குழந்தை உழைப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போதுமானதல்ல என்று அவர் பல்வேறு நாடுகளின் வரலாற்றுப் பூர்வமான ஒப்பீட்டு விபரங்களைச் சுட்டிக்காட்டினார். “குழந்தை உழைப்பைக் களைந்திடும் திறவுகோல் கட்டாயக்கல்வியே என்றார். “பலநாடுகளில் கட்டாயக்கல்வி பொருளாதார வளர்ச்சியின் முன்னோட்டமாக விளங்கியிருக்கிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். 1993ல் தமிழகமுதல்வர் செல்வி.ஜெயலலிதாவிடம் தனது கடிதத்தை அளித்து கட்டாய ஆரம்பக்கல்விச் சட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். அந்தக் கடிதத்தை ‘ஃப்ரண்ட் லைன் ஆங்கிலஏடு தனது 12.3.1993 இதழில் வெளியிட்டது.
  வெய்னரின் கடிதத்தைத் தொடர்ந்து இந்திய நாட்டிலேயே முதல்மாநிலமாக தமிழ்நாடுஅரசு 1994ல் கட்டாய அரம்பக்கல்விச் சட்டத்தை நிரைவேற்றியது.
                                                                      அரசின் செயலற்றதன்மை
  ‘உலகத்திலேயே மிகஅதிக எண்ணிக்கையில் கல்வியறிவற்றவர்களைக் கொண்டுள்ளநாடு இந்தியாதான் என்று குறிப்பிட்ட வெய்னர், ‘ஒருங்கிணைந்த கட்டாயக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தவறியதுதான் இதற்குக் காரணம் என்று விளக்கினார். குழந்தை உழைப்பின் பயனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், ஆட்சிஅதிகாரத்தில் இருப்பவர்களும் நம்பிக் கொண்டிருப்பதைப்போல ‘நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கும், கல்விப்பரவலுக்கும் பெருமளவுக்குத் தொடர்பு இல்லை என்பதைத் தெளிவுபடுத்திய வெய்னர், இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் இருப்பதற்குக் காரணம் அரசின் செயலற்றதன்மையும், அதன் “எதையுமே செய்யாத அரசியலுமே காரணம் என்று சுட்டிக்காட்டினார்.
                                                                        மூன்று அம்சங்கள்
  1994ல் இந்தியாவில் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய சாதகமான பார்வை உருவாகியிருப்ப தாக வெய்னர் அறிவித்தார். தனது நம்பிக்கை மூன்று அம்சங்களில் துளிர்விடுகிறது என்று ‘ஃப்ரண்ட் லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். வெளியீட்டுச் சாதனங்கள் (பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி) அரசுசாரா நிறுவனங்கள், உலக அமைப்புக்கள் – ஆகிய மூன்றும் குழந்தை உழைப்புபற்றியும், கட்டாயக்கல்வி பற்றியுமான கொள்கைகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்திவருகின்றன என வெய்னர் நம்பினார். எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் உயர்கல்விக்குப் பதிலாக ஆரம்பக்கல்விக்கு மிக அதிகஅளவில் நிதிஆதாரங்களை ஒதுக்கிட மத்தியஅரசு செய்திருந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கும் நல்ல மாற்றம் என்றும் வர்ணித்தார்.
                                                                   தொடக்கக்கல்வி இயக்ககம்
  1994ல் தமிழகசட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப் பட்டிருந்த கட்டாயக்கல்வி ஆரம்பக்கல்விச்சட்டம் 1999-2000 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது வெய்னரின் கனவு நனவாகும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தொடக்கக்கல்விக்குத்தனிஇயக்ககம்என்ற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தது. குழந்தை உழைப்பை ஒழித்துக் கல்லாமையை இல்லாமை ஆக்கும் திசைவழியில் எடுத்துவைக்கப்பட்ட முதல்நடவடிக்கை என வரவேற்கப்பட்டது.
  ஆனால், அதேநேரத்தில் 1964ல் இருந்து நடைமுறையில் இருந்த 1:20ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:40என உயர்த்திக் கிராமப்புறப் பள்ளிகளில் 96மாணவர்வருகைக்கு 5 ஆசிரியர்கள் என இருந்த நிலையை 2ஆசிரியர் மட்டுமே எனக்குறைத்தது.பலபள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள் ஆயின. ஆசிரியர் எண்ணிக்கையைக் குறைத்து மாணவர்களின் கல்வித்தரத்தைச் சீர்குலைப்பது கட்டாயக்கல்விச் சட்டத்தின் நோக்கங்களை அடைவதில் தடைக்கற்களாகும் என்பதை அரசும், கல்வித்துறையும் தெரிந்தே செய்தன.
                                                                          வெய்னர் மறைவு
  வளரும்நாடுகளின்மீது- குறிப்பாக இந்தியா நாட்டின் மீதும், இந்தியக் குழந்தைகளின்மீதும் பெரிதும் அக்கறைகொண்டு தமது வாழ்நாளின் பெரும்பகுதியைக் குழந்தை உழைப்பைக் களைந்திடவும், கட்டாய ஆரம்பக்கல்வியை அரசுகள் நடைமுறைப்படுத்திடவும் ஆய்வுகள் செய்து, தீர்வுகளை அளித்த பேராசிரியர்.மைரன் வெய்னர் தமது 68வது வயதில் 3.6.1999 வியாழன் அன்று அமெரிக்காவில் மோர்டவுன்-ல் உள்ள தமது இல்லத்தில் மூளையில் ஏற்பட்ட புற்றுநோயால் மறைந்தார். இந்தச்செய்தி உலகம் முழுவதிலும் உள்ள கல்வியாளர்கள் அறிவியல் அறிஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  நியூயார்க் நகரில் 1931ல் பிறந்து, 1951ல் சிடி கல்லூரியில் பட்டம் பெற்று, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1953ல் முதுகலைப்பட்டமும், 1955ல் டாக்டர் பட்டமும் பெற்ற பேரா. மைரன்வெய்னர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகத் தமதுபணியைத் தொடங்கினார். 1961ல் மாசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் அரசியல் அறிவியல்துறைப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1999ல் ஓய்வுபெறும்வரை 38ஆண்டுகள் இக்கல்லூரியில் பணியாற்றினார்
.
                                 பேராசிரியர் மைரன் வெய்னரின் முக்கிய நூல்கள்

                  The Global Migration Crisis Challenge to States and Human Rights

               Threatened Deoble Threatened border   World Migration and U,S, Policy

         The State and Social transformation in Afghanistan, Iran and Pakistan  ஆகியன அவரது முக்கிய நூல்களில் சிலவாகும்.
  இந்தியநாட்டின் கல்விவளர்ச்சி, குழந்தைத் தொழிலாளர்நலன் ஆகியவற்றில் அக்கறைகொண்டுள்ள அனைத்து ஆசிரியர் இயக்கத்தலைவர்களும், ஒவ்வொரு ஆசிரியரும் தவறாது படிக்கவேண்டிய நூல் ‘இந்தியாவில் குழந்தையும் அரசும்  இந்தியாவின் அந்த உண்மை நண்பரின் கனவை நனவாக்குவோம் அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றி.
 

.

Tuesday, 1 October 2013

If Gandhiji were alive...?


  காந்தி இன்று உயிருடன் இருந்தால்...
  காந்தி சமாதான நிதி நிறுவனத் தலைவரும்,காந்தியவாதியுமான
     டாக்டர் உஷாமேத்தா அவர்களுடன் ஒருபேட்டி
                      தமிழில் : செ.நடேசன்
 அக்டோபர் 2.-அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி மிகச்சிறந்த காந்தியவாதியும், காந்தி சமாதான நிதிநிறுவனத் தலைவருமான டாக்டர்.உஷா மேத்தா 1992ல் ‘பிளிட்ஸ் இதழுக்கு அளித்த ஒருபேட்டியில் ‘காந்தி இன்று உயிருடன் இருந்தால் இன்றைய பொருளாதார, சமூக, அரசியல் நிலைமை பற்றி என்ன செய்திருப்பார்? என்பதை விளக்கிக் கூறினார்.இதோ அவரது பேட்டி தமிழில்.. (ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதழில் வெளிவந்தது)
  “இதற்கு முன்பிருந்த எந்தவொரு அமைப்பையும்விட இந்தியாவுக்கு மிகஅதிகத் தீமையைச் செய்துகொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தால் ஒருவர் பாதிக்கப்படாமலிருந்தால் அது அவரது அதிருஷ்டம் என்று நான் கருதுகிறேன். -மேலே கூறியுள்ள விமர்சனம் 1991க்குப்பின்னுள்ள இன்றைய அரசுக்கும், மன்மோகன்சிங்கின் பொருளாதாரக் கொள்கைக்கும் முழுவதும் பொருந்தும் என்றாலும், அதைக்குறித்ததல்ல. 1922ல் பிரிட்டிஷ்.ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகாத்மா காந்தி கூறிய கருத்துக்கள் அவை. மகாத்மா காந்திக்கு எதிராகத் தொடுக்கப்பட்டு 6ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் அவர் அளித்த பதில் இது. அண்ணல் காந்தியடிகளுக்கு வந்த சோதனை 6 ஆண்டுகளில் முடிவடைந்தது. ஆனால், இந்த நாட்டிற்கு ஒரு சோதனை சென்ற ஆண்டுதான் (1991) தொடங்கியுள்ளது.
                                 காந்திய வழியா?
  சாதி,மத, இனம் கடந்து அனைத்துக் குடிமக்களுக்கும் பொருளாதார சமூகநீதி என்பதுதான் பாபுஜி கனவு கண்ட சுதந்திர இந்தியாவாகும். கடந்த ஆண்டுமுதல் அமுலாக்கப்பட்டுவரும் ‘தாராளமயமாக்கப்படும் கொள்கைகள் சமூகநீதியின் அடிப்படைக் கோட்பாட்டினையே தூக்கி எறிந்து விட்டன. மகாத்மா காந்தி இதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார். நான்தான் ஒரேகாந்திய வாதி என்றோ, அல்லது அத்தாரிடி என்றோ என்னை நான் கருதவில்லை. ஆனாலும், காந்திய சிந்தனைகளைக் கற்றஒருவர் என்றவகையில் என்னால் தயக்கமின்றிக் கூறமுடியும்: ‘இன்று சமூகப் பொருளாதார வளர்ச்சி என்றபெயரால் நடைபெற்றுவருபவை அனைத்தும் காந்தி எதை விரும்பினாரோ அதற்கு மாறானதாகவே அமைந்துள்ளன. கடந்த ஓராண்டு காலமாகப் பின்பற் றப்பட்டுவரும் பொருளாதாரக்கொள்கைகள் காந்தியப் பாதையில் செலுத்தக் கூடியவை அல்ல என்றுநான் உறுதியாகக் கூறுகிறேன். அரசாங்கம் ஏதோ ஒரு மாயையில் இருக்கிறது: அல்லது, மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறது.
  இங்கே பொருளாதார வளர்ச்சி ஏதும் நடைபெறவில்லை. மாறாக, பொருளாதாரச் சீர்குலைவு தான் நடந்துகொண்டிருக்கிறது ‘.எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம் என்று அண்ணல் காந்தி எப்போதும் கூறுவார். ஆனால், நமது அரசாங்கம் உலக வங்கியையும், மற்ற நிறுவனங்களையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றிவருகிறது என்றே கருதுகிறேன்
.
                           காந்தியப் பொருளாதாரம்
  சிறுதொழில்களுக்கு முக்கியத்துவத்தையும், அதிகாரப் பரவல்முறையும் கொண்ட ஒரு பொருளாதாரத்தை காந்திஜி முன்வைத்தார். அவர் காட்டியவழி ஒவ்வொரு கிராமத்தையும் ஓர் அலகாகக் கொண்டது. அவர் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு கொண்டதாக் விளங்க வேண்டும் என்று எண்ணினார். இன்று இது நடைமுறை சாத்தியமில்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். கிராமம் தேசியப்பொருளாதாரத்தோடு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஆனால், அதற்காகப் பன்னாட்டுக் கம்பெனிகளை நம்நாட்டுக்கு அழைக்க வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை. அவை ஏற்கனவே போதுமான அளவுக்குச் சுரண்டிவிட்டன.
                                     தாக்குதல்
  இன்று பணவீக்கத்தின் அளவும், அத்யாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் மிகமிக உயர்ந்துள்ளன. இவை காந்திஜியின் பெயராலோ, பண்டிதநேருவின் பெயராலோ நடைமுறைப் படுத்தப்பட்டாலும்கூட – நான் உறுதியாகக் கூறுவேன் – இது அவர்கள் சமூகப் பொருளாதார வழிமுறை அல்ல. இது ஏழைகளிலும் பரம ஏழைகளை மிகஅதிகமாகத் தாக்குகிறது. காந்தி இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ஏழைகள் தங்கள் வயிறுகளை இறுகக் கட்டிக் கொள்ளவேண்டும் என்பதையும், பணக்காரர்கள் எவ்விதத் தண்டனையும் இல்லாமல் உலாவலாம் என்பதையும் காந்திஜி ஒத்துக்கொள்ள மாட்டார். தர்மகர்த்தாமுறை என்பதுதான் அவரது பொருளாதாரக்கொள்கை. அது தொழிலாளர்களின் பங்கேற்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தது. ஆனால், கடந்த ஓராண்டுக்குள் எவ்வளவு பொருளாதாரக்கொள்கை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பதைப் பாருங்கள்! இந்த மாற்றங்களால் பாதிக்கப்படக் கூடிய மக்களின் ஒப்புதலையோ, அனுமதியையோ பெறவேண்டும் என்பதைக்கூட இந்த அரசாங்கம் கருதவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை பட்ஜெட் நிறைவேற்றப்படும் என்பதுபோய், குறைந்தது ஆண்டுக்கு நான்குமுறை பட்ஜெட் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.
                                   வேலைவாய்ப்பு
  வேலையின்மையை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, இதற்குத் தீர்வுகாணும் சிலவழிமுறைகளை அரசாங்கம் கண்டுபிடிக்கவேண்டும். வேலைவாய்ப்பை அடிபடையாகக் கொண்டுதான் காந்தி கதருக்கு முக்கியத்துவம் அளித்தார். வேலைவாய்ப்பு, கல்வி ஆகிய பிரச்சனைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. காந்திஜி கைத்தொழிலை மையமாகக் கொண்ட ஆதாரக்கல்வி முறையைப் பெரிதும் வலியுறுத்தினார். இதை நாம் கவனமுடன் உறுதியாகப் பின்பற்றியிருந்தால் வேலையின்மைப் பிரச்சனை இவ்வளவு கடுமையாக் உருவாகியிருக்காது என நான் கருதுகிறேன். ஆனால், அதற்கு மாறாக அரசு ஆரம்பகாலம் முதலே இவைகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துவிட்டது. உயர்கல்வி என்றும், தொழிற்கல்வி என்றும் பிரித்துத் தொழிற்கல்வியை இரண்டாம் தரத்திற்குத் தாழ்த்திவிட்டது. இது வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கே பயன்பட்டது.
  சுதந்திர இந்தியாவில் இன்னும் மெக்காலே கல்விமுறைதான் பின்பற்றப்படுகிறது.அது நமக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நமது அரசாங்கங்கள் இக்கல்விமுறையை நிலைத்திருக்கச் செய்துவிட்டன. உயர்கல்வி என்ற பெயரால் இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? உயர்கல்வியை அரசியல்வாதிகள் பணம்கொழிக்கும் ஒரு தங்கச் சுரங்கமாக மாற்றிவிட்டார்கள். கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நீதிமன்றங்கள் அறிவித்த தீர்ப்புகளில் நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
                                   அரசியல்முறை
  “அமைச்சர்கள் தங்கள் பதவி நாற்காலிகளை இறுகப்பற்றிக் கொள்ளக்கூடாது என்று ஒருமுறை காந்திஜி கூறினார். ஆனால், இன்று நேர்மாறானதையே அமைச்சர்கள் செய்வதைப் பார்க்கிறோம். தங்கள் நாற்காலிகளைத் தக்கவைத்துக்கொள்ள இளைஞர்களின் உயிர்களோடு
விளையாடுவது உட்பட எதை வேண்டுமானாலும் செய்ய அவர்கள் தயாராகிவிட்டர்கள். காந்திஜி அரசியலை ஒழுக்கமுறை உள்ளதாக ஆக்கப் பெரிதும் பாடுபட்டார். ஆனால், நமது அரசியல்வாதிகளோ அரசியலைக் குற்றவாளின் கூடாரமாக ஆக்குவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள். அமைச்சர்களுக்குக் குற்றவாளிகளோடு உள்ள் தொடர்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
                                   மன்னர் மான்யம்
  நாம் மன்னர் மான்யத்தை ஒழித்துவிட்டோம். ஆனால், இன்று புதிதாக மன்னர்களாக உருவாகியிருப்போரின் மான்யத்தின் கதை என்ன? நமது பாராளுமன்றத்தின் பிரநிதிகள் வெட்கப்படவேண்டும், விதிவிலக்காகக் கம்யூனிஸ்டுகள் தவிர.- அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தின் கடைசிநாளில் எவ்வித ஆட்சேபனைகளோ, விவாதமோ இன்றித் தங்களது ஊதியத்தை உயர்த்திக்கொள்ளும் மசோதாவை நிறைவேற்றிக்கொண்டார்கள். இந்த அரசியலமைப்புமுறை மாற்றப்பட்டாக வேண்டும்.
  இந்த அமைப்புமுறையை ஒவ்வொருவரும் குறைகூறுவது மட்டும் போதுமானதல்ல. போபர்ஸ் ஊழலில் வின்சத்தாவைப் பாருங்கள்: பங்குமார்க்கெட் ஊழலில் ஹர்சத்மேத்தாவைப் பாருங்கள். நீங்கள் இவர்களைத் தண்டிக்கவேண்டுமென்றால் இவர்களோடு தொடர்புடைய மற்றவர்களையும் தண்டிக்கவேண்டும். ஏனெனில், மேலிடத்தில் உள்ளவர்கள் அறியாமல் அவர்கள் எதுவும் செய்திருக்க முடியாது.
                                     முழுப்புரட்சி
  “நாம் கலியுகத்தை அதன் மோசமான அவதாரத்தில் சகித்துக்கொண்டிருக்கிறோம் என்று நான் கருதுகிறேன். காந்திஜியின் குறிக்கோள்களில் மிகவும் முக்கியமானது ‘வார்த்தைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடற்ற முழுமையான ஒருங்கிணைப்பு‘ ஆகும். எதைச்சொல்கிறோமோ அதைச் செய்யவேண்டும். ஆனால், இன்று அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கும், செயலுக்கும் எவ்வளவு வித்தியாசத்தைக் காண்கிறோம்! இத்தகைய அமைப்புமுறையை ஒழுங்கமைப்பதற்கு மக்கள் இயக்கம் நமக்குத் தேவையாக உள்ளது. எந்தத் தனியொருவரும் பொறுப்பேற்க முடியாது. ஒரு முழுப்புரட்சி நடைபெறவேண்டும். ஆனால், அது என் வாழ்நாளில் நடைபெறும் என்று நான் கருதவில்லை.
                                 காந்திஜி இருந்தால்...
  நடைபெறும் நிகழ்ச்சிகள் எவ்வளவு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், எவ்வளவு விரக்தி அளிப்பதாக இருந்தாலும்கூட காந்திஜி இன்று உயிருடன் இருந்தால் அதை வெறும் பார்வையாளராகப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். அவர் கட்டயம் போராடியிருப்பார். முதலில் அமைதியான வழிமுறைகளிலும், பின்னர் நேரடியான சத்யாக்கிரகப் போராட்ட வழிமுறைகள் மூலமாகவும் அவர் போராடியிருக்கிறார்.
    நாமும் அவ்வாறு போராடவேண்டும் என்று அவர் விரும்பியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.


                               நன்றி: பிளிட்ஸ் – ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதழ்கள்   
                                         அக்கினிக்குஞ்சு அய்யாசாமி
பாரதியினுடைய பெருமையை மீண்டும் நிலைநாட்டுகின்ற வகையிலே நமது அன்பிற்குரிய இயக்குநர் ஞானராஜசேகரன் ‘பாரதி படத்தினை வெற்றிகரமாக எடுத்து மக்கள்மத்தியிலே பாரதியை மீண்டும் நினைவுபடுத்தினார்.
  பாரதி எனது உணர்வுகளைத் தட்டிப்பறித்தது ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற அந்தக் கவிதையிலேதான். எழுத்தாளர் சி.சு.செல்லப்பா அந்தக்கவிதைக்குச் சில விளக்கங்களைக் கொடுத்திருந்தார். அதில் ‘அக்கினி என்பது ஓர் அழிக்கும் சக்தி அந்தக் கோணத்தில் அதை விளக்கினார். இன்னொன்று ‘அக்கினி என்பது ஓர் ஆக்க சக்தி அந்தக் கோணத்திலும் அதைப்பார்த்தார்.
  பாரதி வாழ்ந்த அந்தக்காலகட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு இந்த நாட்டிலே அடிமைத்தனத்தைச் சுட்டெரிக்கின்ற ஓர் அக்னிக்குஞ்சு தேவைப்பட்டது. அந்த அக்கினிக்குஞ்சை இந்திய நாட்டினுடைய அடிமைத்தனம் என்கின்ற அந்தப்பொந்தி னிலே பாரதி இட்டார். அந்த அக்கினிக்குஞ்சு தகித்து  அடிமைவிலங்குகளை யெல்லாம் நொறுக்கி வெந்து தணிந்தது காடு. அந்தவகையில் சுதந்திரம் பெற்றது நாடு. இந்தக்கோணத்தில் நான்மெய்சிலிர்த்தேன்.
  இத்தகைய அக்கினிக்குஞ்சுகள் எங்கெங்கே இருக்கின்றன்வோ அவைகளை எல்லாம் கண்டுபிடித்துத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இணைத்தோம், நமது கூட்டணி ஏற்கனவே பெயரளவுக்கு இருக்கின்ற மற்ற சங்கங்களைப்போல் இருந்துவிடக் கூடாதுஎன்ற காரணத்தாLLல்! ஆசிரியர்களடைய பணிநியமனம், அவர்களுடைய சம்பளம், பஞ்சப்படி, மாறுதல் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே சுற்றிச் சுழன்று நின்றுவிடாமல் இந்த நாட்டு மக்களுடைய வாழ்க்கையோடும்  நாட்டினுடைய சுதந்திரத்தோடும், இறையாண்மையோடும் தங்களைப் பின்னிப் பிணைத்துக் கொள்கின்ற உணர்வுமிக்க ஆசிரியர்களை உருவாக்கிட இதுதேவை என்று கருதினோம்.
  இளையதலைமுறையின் தலைவராக நண்பர் டி.ஏ.அய்யாசாமி கூட்டங்களுக்கு வருவார்.அவர் பேசும்போது மணிக்கணக்கிலெல்லாம் பேசமாட்டார். அனேகமாக ஒரு 10நிமிடம் அல்லது 15நிமிடம்தான் பேசுவார்.ஆனால் அந்த நேரத்திற்குள் உணர்ச்சிப் பிரளயமாக ஆசிரியர் சமுதாயத்திற்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளைப்பற்றியும், அதிலிருந்து மீள்வதற்கு நாம் ஒன்றுபட வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விளக்கி, அதற்கு அளப்பரிய தியாகங்களுக்கு ஆயத்தமாக வேண்டுமென்ற அறைகூவலையும் விடுப்பார். அப்படிப்பட்ட அக்கினிக் குஞ்சாகத்தான் அவர் விளங்கினார். இப்படி மேடையிலே அனல்தெறிக்கப் பேசுகின்ற அய்யாசாமி எப்படிப்பட்டவர்? அவர் மேடையில் மட்டும் வீரமுழக்கமிடுபவரா?


  தன்னுடைய சொந்தவாழ்க்கையிலே, நண்பர்கள் குழாமிலே, ஆசிரியச் சமுதாயத் திலே அப்பேர்ப்பட்ட புதுமையான கருத்துக்களை, புரட்சிக்கருத்துக் நாற்று நடுவதுபோல் நட்டுக்கொண்டிருந்தவர்.அதைவளர்த்துப் பயிர்செய்து கொண்டிருந்தவர். அய்யாசாமி இங்கே நிகழ்த்தியதுதான் புதுமை. விதவைத் திருமணத்தை இங்கே நடத்தி வைத்தார். கோவை மாவட்டத்தில் பல்வேறு ஆசிரியர் குடும்பங்களிலே சீர்திருத்தத் திருமணங்களை நடத்தி வைத்தார். மூட நம்பிக்கைகளை எல்லாம் விட்டொழித்து அறிவார்ந்த ஒரு திருமணமுறைக்கு நாம் வரவேண்டுமென்று ஆசிரியச் சமுதாயத்தில் அறிமுகப்படுத்தியவர் அய்யாசாமி.
  அவருடைய துணைவியார் சரஸ்வதி உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது நானும்.மாநிலப்பொருளாளர் நாகப்பனும் வந்தோம். அய்யாசாமி போன்ற, தன்னையே இயக்கத்திற்கு ஒப்படைத்துக் கொண்டுள்ளவர்களின் குடும்ப நலன்களில் இந்த இயக்கத்திற்குப் பெரிதும் அக்கறை இருக்கிறது. அரசுப் பொதுமருத்துவமனையில் அவர்துணைவியார் பாயில்தான் படுத்திருந்தார். அய்யாசாமி சொன்னார், நீங்கள் செய்கிற உதவியால், வேறுவிஷயங்களால் என்னுடைய மனைவிக்கு ஒருவசதியான இடத்தைக் கொடுத்துவிட முடியும். ஆனால், என்மனைவியைப் போன்று இங்கே இருக்கிறார்களே நூற்றுக் கணக்கானவர்கள்; இவர்களுக்கெல்லாம் யார் செய்வார்கள்? கிடைக்கிற வசதியை வைத்துக்கொண்டு தான்மட்டும் உயர்ந்துவிட வேண்டும் என்ற உணர்வே இல்லாத உன்னதமான தன்மையை அந்தத் தோழனிடத்தில் கண்டு வியந்தோம்.
 அந்தஇனிய தோழன் ‘பாரதி திரைப்படம் வெளிவந்தபோது அதைக் கோவை மாவட்டம் முழுவதும் தனது தோள்களிலே சுமந்துசென்றார். என்நெஞ்சைக் கவர்ந்த இலட்சியங்களைத் தாங்கி வந்திருக்கிற இந்தப்படமும், பாரதியின் கருத்துக்களும் மக்களைக் கவ்விப் பிடிக்க வேண்டும்; அவர்கள் மத்தியில் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தவேண்டும், என்ற உந்துதலால் பள்ளி பள்ளியாகச் சென்று மாணவர்களை, ஆசிரியர்களை, பெற்றோர்களை, பொதுமக்களை அழைத்துவந்து கோவையில் 100 நாட்களுக்குமேல் அந்தப்படத்தை ஓடச்செய்தார்.
  அய்யாசாமி ஆசிரியர் பணியிலிருந்தும், இயக்கப்பணியிலிருந்தும் ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு இன்று பாராட்டுவிழா. இது அவரைபோன்ற நூற்றுக்கணக்கான அய்யாசாமிகள் ஆசிரியர் சங்கத்தில் மட்டுமல்ல; இந்தச் சமுதாயத்திலும் உருவாகி யாகவேண்டும். அப்போதுதான் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் ஒருமுடிவு ஏற்படுத்தி முற்போக்கான கருத்துக்கள் இந்தச் சமுதாயத்தில் நின்றுநிலவ நாம்வழி காணமுடியும். அதற்காகத்தான்.
  நம்நாட்டில் பழம்பெரும் புராணங்களும், இதிகாசங்களும் இருக்கின்றன. இவற்றை நாம் மறுவாசிப்புக்குள்ளாக்கிப் புதியவழியில் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அவற்றை மக்கள் மனங்களுக்குக் கொண்டுசென்றாக வேண்டும். மகாபாரதமும், இராமாயணமும் நுழையாத வீடுகள் இந்த நாட்டில் இல்லை.அவை தொலைக்கட்சித் தொடர்களாக வந்தபோது இந்தியா முழுவதும் ஈர்க்கப்பட்டிருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அதன் கருத்துக்கள் இந்த மண்ணிலே நின்றுநிலவி வருகின்றன.

  மகாபாரதம் என்ன கூறுகிறது? ‘சூதாட்டத்தில் தோற்ற நாட்டை 12 ஆண்டுகள் வனவாசம், 1 ஆண்டு அஞ்ஞாதவாசம் முடிந்தபிறகு மீண்டும் பாண்டவர்களுக்குக் கௌரவர்கள் தந்துவிட வேண்டும் அவற்றை முடித்தபிறகு பாண்டவர்கள் வருகிறார்கள். துரியோதனாதிகளோ நாட்டைக் கொடுக்க மறுக்கிறார்கள். கடவுள் அவதாரமான கிருஷ்ணன் பாண்டவர்களுக்காகத் தூதுபோகிறார். மினிமம் டிமாண்ட். ‘5கிராமங்கள் கொடு. 5வீடாவது கொடு என்கிறார். ஆனால், கௌரவர்களோ ‘முடியவே முடியாது என்கிறார்கள். தூதுதோல்வி அடைகிறது. குருச்சேத்திரப்போர் மூள்கிறது. பாண்டவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.கடவுளே தூதுபோனாலும் களத்தில் இறங்காமல் காரியங்கள் வெற்றி பெற்றதில்லை.இப்படித்தானே மகாபாரதத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்?
 இராமாயணத்தின் கதை என்ன? பாண்டவர்களுக்காவது இராஜ்ஜியம். கடவுள் அவதாரமான இராமனுக்கு? தன்வாழ்வின் வசந்தமாகிய சீதையைத் தூக்கிக்கொண்டு போகிறான் இராவணன். அந்தச் சீதையைக்கூட எப்படி மீட்க முடிந்தது? இராமன் ஓர் அவதாரபுருஷன். கடவுளே அவதாரமாக வந்தாலும், சொல்லின்செல்வன்அனுமனைத் தூதாக அனுப்பினாலும் ஒன்றும் நடக்கவில்லை. இராமஇராவண யுத்தத்தில் இராவணன் அழிக்கப்பட்டுத்தான் சீதை மீட்கப்பட்டாள். இங்கே இருக்கிற அநீதிகளை எல்லாம் வென்றெடுக்க வேண்டுமென்றால் நாம் போராடுவதைத்தவிர வேறுவழி இல்லை. போராட்டத்தில் அனைத்துப்பகுதி மக்களையும் இணைப்பதைத்தவிர வேறுவழி இல்லை. இப்படித்தான் இராமாயணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  எப்படி மாவோ ‘மலைகளை அகற்றிய மூடக்கிழவனிலிருந்து கற்றுக்கொண்டாரோ அதைப்போல நமதுநாட்டின் இதிகாசங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்தி அவற்றிலி ருந்து புதிய உண்மைகளை, புதிய படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு அவற்றை  நாம்  நூற்றுக்கணக்கான அய்யாசாமிகளாக மாறி இந்த நாட்டின் ஆசிரியர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும். அநீதிகளைக்கண்டு கொதித்தெழுகின்ற ஆவேசத்தின் வார்ப்புகளாக, அக்கினிக்குஞ்சு ளாக அவர்களை மாற்றவேண்டும்.அதற்கு ஆயிரமாயிரம் அய்யாசமிகள் இந்த மண்ணில் உருவாக வேண்டும். அதற்குத்தான் இந்தப் பாராட்டுவிழா.அய்யாசமியைப் பாராட்டி “ உங்கள் வேலை முடிந்துவிட்டது: உங்களுக்கு நன்றி! போய்வாருங்கள், என்று சொல்வதற்கல்ல. அய்யாசமிக்கு இன்னும் நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. அவர் தன்வாழ்நாள் முழுவதும் இந்த இலட்சியத்தை உயர்த்திப்பிடித்து இதற்காகப் பாடுபடுகின்ற இளையதலைமுறையைத் தலைமைக்கு உயர்த்த வேண்டும்.
  இந்தநாட்டில் தலைவர்களுடைய பஞ்சத்தைப்பற்றி இயக்குநர் ஞானராஜசேகரன் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் அரசியலில் மட்டுமல்ல: சங்கங்களிலும்கூடத் தலைவர்கள் மத்தியில் ஒருபஞ்சம் இருக்கிறது. அதாவது தலைமைக் குணத்திற்குப் பஞ்சம் இருக்கிறது. தலைவர்கள் இருக்கிறார்கள்: ஆனால், தலைமைப் பண்புதான் இல்லை.
  மாஸ்டர் இராமுண்ணி எந்த இலட்சியங்களுக்காக இந்தச்சங்கத்தை உருவாக்கி னாரோ அந்தஇலட்சியங்களை மீண்டும் ஆசிரியர் சமுதாயத்திற்கு நினைவுபடுத்தி அவற்றை முன்னெடுத்துச் செல்கின்ற தளபதிகளாக இந்தத் தலைவர்கள் விளங்க வேண்டுமென்ற தேவை இங்கே இருக்கிறது.
  1037 டிசம்பர் 29,30ல் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலத்தில்  ஆசிரியர் சங்கத்தின் 4ஆம் மாநாடு நடைபெற்றது. ‘சௌத் இண்டியன் டீச்சர்ஸ் யூனியன் கேரளப்பகுதித் தலைவராக சதேசன் என்பவர் இருந்தார்.இந்த மாநாட்டில் ‘இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபடலாமா?என்ற பிரசனை விவாத்தத்திற்கு வந்தது. ஆனால்,தலைவர் சதேசனோ ‘சம்பளம், டி.ஏ, பணிப்பாதுகாப்பு, டிரான்ஸ்பர் ஆகியவற்றுக்குத்தான் நமது மாநாட்டில் தீர்மானம் போட வேண்டும். சுதந்திரத்தைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது. அதெல்லாம் அரசியல் பிரச்சனை என்று விவாதத்தை அனுமதிக்க மறுத்தார்.
  ஆனால், 1930களின் பிற்பகுதியில் இந்தியநாடு முழுவதிலும் சுதந்திரக்கனல் அனைவரது நெஞ்சங்களையும் கௌவிப்பிடித்துக்கொண்டிருந்தபோது மக்களின் ஒரு பகுதியினரான ஆசிரியர்களை மட்டும் அது விட்டுவைக்காது அல்லவா? என்வே கேரளமாநிலத்திலிருந்த ஆசிரியர்கள் ‘ இந்தியநாட்டின் சுதந்திரத்தில் நமது பங்கேற்பு இருந்தாக வேண்டும். நம்நாடு சுதந்திரம் அடைகிறபோதுதான் கல்வியிலேயும் சுதந்திரமான கலைத்திட்டங்களையும், கல்வித்திட்டங்களையும் கொண்டுவர முடியும். அடிமைஇந்தியாவில் அடிமைக்கல்வி முறையைத்தான் நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கிறது. எனவே, இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் தேவை. ஆசிரியர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று விவாதம் செய்தனர்.ஆனால், சதேசன் அதை அனுமதிக்க மறுத்து, மாநாட்டின் தலைவர் பொறுப்பிலிருந்து வெளி நடப்புச்செய்தார்.
  அன்றுதான் கோழிக்கோடு பகுதியின் ஆசிரியர் சங்கத்தலைவராகவும், கேரளாவின் ஆசிரியர் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய மாஸ்டர்.வி.இராமுண்ணி அந்த மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஆசிரியர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்ற தீர்மானம் வருகிறது: ஒருமனதாக நிறைவேறுகிறது. இராமுண்ணி சுதந்திரப் போராளியாக மாறுகிறார்.
   அந்தக்காலகட்டத்தில், மெட்ராஸ் ப்ராவின்ஸ் என்ற சென்னை மாகாணத்தின் இன்னொரு பகுதியான தமிழ்நாட்டில் ஆசிரியர் சங்கமே இல்லை.ஆசிரியர்கள் மத்தியில் எந்தவித விழிப்புணர்வும் இல்லை. எனவே, கேரளாவில் இருந்து ஆசிரியச் சகோதரர்கள் சிலர் தமிழ்நாட்டிற்குச் சென்று ஆசிரியர்கள் மத்தியில் வேலைசெய்து ஒருபுரட்சிகரமான ஆசிரியர் சங்கத்தை உருவாக்க வேண்டுமென்று முடிவுசெய்தார்கள். அந்தமுடிவு மாஸ்டர் இராமுண்ணியிடம் ஒப்படைக்கப் படுகிறது.
  1947ஜனவரி7ல் 19பேரோடு கோழிகோட்டிலிருந்து மிதிவண்டியிலேயே சென்னைக்கு ஜனவரி29ல்வந்தார். மார்ச்1,2ல் சென்னை மாநாட்டில் அவர் உருவாக்கியதுதான் ‘சென்னை இராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம் என்ற ‘மெட்ராஸ் ப்ராவின்ஸியல் பிரைமரி டீச்சர்ஸ் ஃபெடரேஷன் இதை அவர் உருவாக்கியது எதற்காக? டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்கிற புரோக்கர்களை உருவாக்குவதற்கா? அல்லது சம்பளம். பஞ்சப்படி வாங்கித்தருகிற சிலநபர்களைத் தயாரிப்பதற்கா? அல்ல. “ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரராகவும், மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராகவும் மிளிர்ந்த மாஸ்டர் இராமுண்ணி இந்த உணர்வுகளை ஆசிரியர் சமுதாயம் தனக்குள் வரித்துக்கொள்ள அரும்பாடுபட்டார். அதேநேரத்தில் அவர்கள் பொருளாதார நலன்களுக்காகவும் இடைவிடாது பாடுபட்டார்.
  அந்த இலட்சியத்தை ஏந்திப்பிடித்துவரும் இயக்கம்தான் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இந்த இலட்சியத்தை நிறைவேற்ற நூற்றுக்கணக்கான அய்யாசாமிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை.தமிழ்நாடு முழுவதிலும் தேவை. அய்யாசாமியைப் பாராட்டி முடிப்பதோடு நம்கடைமை முடிந்து விடுவதில்லை. அவர் உயர்த்திப் பிடித்திருக்கிற இலட்சியத்தை நம்வாழ்க்கையில் பின்பற்றுவதும், ஆசிரியர் கள் மனங்களிலே அந்த இலட்சியங்களை விதைத்துக் கௌவிப்பிடிக்கச் செய்து அவர்களை ஒருபௌதீக சக்தியாக எழவைப்பதும் நம்முடைய கரங்களிலே இருக்கிறது. ஒருபுதிய தலைமுறையை, இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட பணியைச் செய்வதுதான் அய்யாசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாம்செலுத்துகிற உண்மையான பாராட்டாக இருக்கும்.
  இந்தப்பாராட்டுவிழாவில், அய்யாசாமி என்கிற - இனிய ஒரு தலைவர் என்று சொல்வதைவிட - போலித்தனமில்லாத வாழ்க்கையைக் கொண்டிருக்கிற இனிய தோழனுக்குப் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இலட்சியப் பயணத்தில் அவர் தன்னை இணைத்துக்கொள்ளப் பெரிதும் உறுதுணையாக் இருக்கும் அவரது துணைவியார் அன்புச்சகோதரி சரஸ்வதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மாநில அமைப்பின் சார்பில் வாழ்த்துக்களையும்; பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வணக்கம்!
                                    அய்யாசாமி ஏற்புரை
         நான் சார்ந்துள்ள ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொண்டாமுத்தூர் வட்டாரக்கிளை இவ்வளவு சிறப்பாக ஒருவிழாவினை எடுத்துச் சிறப்பு மலரையும் வெளியிட்டு எனது இயக்கப்பணியையும், சமுதாயப்பணியையும் பெருமைப் படுத்தியதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  என்மீது அன்புகொண்டு இவ்விழாவுக்கு வருகைதந்து சிறப்புமலரை வெளியிட்டுத் தனது அடுத்த படமாகப் “பெரியார் படத்தின் அறிவிப்பை எனது பாராட்டுவிழாவில் முதன்முதலாக வெளியிட்டுப் பெருமைப் படுத்தியுள்ள இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கும், இலட்சங்களைப் பார்க்காமல், இலட்சியத்திற்காக உழைப்பவர்களைக் கொண்ட எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் செ.நடேசன் அவர்களுக்கும் நன்றி.
  ஆசிரியர் பணியிலிருந்து மட்டுமே நான் விலகியுள்ளேன். தொடர்ந்து சமுதாயப்பணி ஆற்றிவருவேன் .இவ்விழா சிறக்க அல்லும், பகலும் உழைத்த அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.வணக்கம்!
           (நண்பர் டி.ஏ.அய்யாசாமி 19.2.2010 அன்று மறைந்தார்)