தமிழ் மொழிவழிக் கல்வி - காத்திருக்கும் ஒரு நீண்ட போராட்டம்
செ.நடேசன்
உலகத்தமிழினத்தின் தலைவர் கலைஞர் கன்னியாகுமரியில் வள்ளுவப் பெருந்தகைக்கு 133 அடி உயரத்தில் மாபெரும்சிலை அமைத்த போது தமிழர் நெஞ்சங்களெல்லாம் மகிழ்ச்சிக் கூத்தாடின. உலகப் பொது மறை தந்த வள்ளுவருக்கு உன்னதமான நினைவுச்சின்னம் எனக் கொண்டாடின.
அதை விஞ்சும் அளவுக்கு ‘மதுரையில் தமிழ்த்தாய்க்கு 100 கோடி செலவில் உலகிலேயே உயரமான சிலை அமைப்பேன்’ எனத் தமிழக முதல்வர் அம்மா அறிவித்த போது அவரது தமிழ்ப்பற்றைக் கண்டு தமிழ் கூறும் நல்லுலகமே வியந்தது.
அவரது அறிவிப்பின் முழுமையான பொருள் 26.06.2013 அன்று புரிந்தது. ஆம் .அன்றுதான் ‘அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழிகல்வி நடைமுறைக்கு வரும். முதல்கட்டமாக 320அரசுப்பள்ளிகளில் ஒன்று,ஆறு, பதினொன்று ஆகியவகுப்புக்களில் ஆங்கிலமொழிவழிக்கல்வி துவங்கும்’ என்ற அறிவிப்பு வெளிவந்தது. இந்த ஆண்டில் இரண்டு ,ஏழு, பன்னிரண்டு வகுப்புக்களில்3200 பள்ளிகளில் ஆங்கிலமொழிவழிக் கல்வி துவங்கியுள்ளது .கூடாரத்திற்குள் தலையை நுழைத்த ஒட்டகம் ஒட்டுமொத்தக் கூடாரத்தையும் சரித்துவிடுவதைப் போல் இனித் தமிழ்நாட்டில் தமிழுக்குக் கல்விக்கூடங்களில் இடமில்லை.’ என்பது தெளிவாகியது. இதன்மூலம் தமிழக முதல்வர் அம்மாவின் அற்புதமான தமிழ்ப்பற்று வெளிப்பட்டது.
‘உன்னதமான தத்துவங்களுக்கு வைக்கவேண்டுமா உலை? ஒரு நிபந்தனை- அதற்கு வை உலகிலேயே மிகஉயரமான சிலை.!’ இதோ - தமிழன்னைக்கு உலகிலேயே உயரமான சிலை. பள்ளிகளில் தமிழ்வழிக் கல்விக்கு உலை!
தமிழக முதல்வரின் அறிவிப்பு வெளிவந்தவுடன் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஊடகங்களிலும்,நாளேடுகளிலும், மேடைகளிலும் மயிர்க் கூச்செறியும் விவாதங்கள் நடைபெற்றன.
‘தமிழுக்கும் அமுதென்று பேர் –அந்தத்தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ –என்ற பாவேந்தரின் ஆவேசத்தோடு தமிழறிஞர்களும், கல்வியாளர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் களம் இறங்கினார்கள். மகாகவி பாரதியின் கவிதைவரிகளில் தமிழ்த்தாய் ஒரு பேதையின் கூற்றாக கூறிய ‘ புத்தம் புதிய கலைகள் –பஞ்ச பூதச்செயல்களின் நுட்பங்கள்கூறும் மெத்த வளருது மேற்கே –அந்த மேன்மைக்கலைகள் தமிழினிலில்லை சொல்லவும் கூடுவதில்லை –அவை சொல்லும் திறனும் தமிழ்மொழிக்கில்லை மெல்லத்தமிழினிச்சாகும்- அந்த மேற்கு மொழிகள்புவிமிசையோங்கும்’எனக்கொன்றிடல் போன்ற வார்த்தைகளோடு தமிழ்வழிக் கல்விக்கு எதிராகக் , கல்வியை ஒரு இலாபம் கொழிக்கும் தொழிலாகக் கொண்டுள்ளவர்களும் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என உணர்ச்சி வசப்படுவதுமட்டும் தீர்வாகுமா? பேதையின் பிரதிநிதிகளாக உள்ள கட்டணக்கல்வி நடத்துவோரின் வியாபாரத்தந்திரங்களையும், அவர்களின் குரலாகச் செயல்படும் முதல்வரின் தரப்பையும் மக்களின்முன் வெல்லும் வழிகள் என்ன ?
களத்தில் இன்று உள்ள நிலையைச்சற்று பரிசீலிக்கவேண்டும்.
1)நாமக்கல் பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி விளம்பரம் இப்படி மக்களிடம் கூறுகிறது: ‘ தமிழ் மீடியத்தில் படிக்கிறது நம்ம நாட்டு நாணயம் மாதிரி உள்நாட்டுக் குள்ளதான் செல்லுபடியாகும்இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிறது முத்திரைப் பவுன் மாதிரி.உலகத்துல எங்கே போனாலும்செல்லுபடியாகும்’
2)உலகத்தில் அதிக மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரிந்தால் உலகமெங்கும் நாம் தொடர்புகொள்ள முடியும்.
3)ஆங்கிலம் படித்தால் உலகமெங்கும் வேலை கிடைக்கும்.
4)இத்தகைய பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டுப் பெரும்பாலான பள்ளிகளில் முதல்வகுப்பு ஆங்கிலவழியில் பிள்ளைகளைச் சேர்க்கப்பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
5)பலமாவட்டங்களில் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது பெற்றோர்களிடமும் மகிழ்ச்சி நிலவுகிறது
6).போதிய மாணவர்சேர்க்கை இன்மையால் மூடப்படுமோ என்று பயந்திருந்த ஓராசிரியர்,ஈராசிரியர் பள்ளிகள் எல்லாம் இப்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன
7).ஆசிரியர்அமைப்புக்கள் ஆங்கிலவழிக் கல்விக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கா மைக்குஇதுமுக்கியக்காரணம் .அரசுப்பள்ளிஆசிரியர்களுக்கு இப்போது உற்சாகம் வந்துள்ளது .ஒவ்வொருபள்ளியின் முன்னும் ஆங்கிலவழி வகுப்புக்கள் பற்றிய பதாகைகள் வரவேற்கின்றன .தனியார்பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகள் விளம்பரம் செய்கின்றன.
8)ஆங்காங்கே சிறிய அளவில் சிறைகளைப்போன்ற அறைகளிலும் ,வீடுகளிலும் நடைபெற்றுவந்த தனியார் நர்சரி பிரைமரி தொடக்கப் பள்ளிகள் பல இவ்வாண்டு மூடப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளன.
9) ஏற்கனவே நிலைப்பட்டுவிட்ட மிகப்பெரும் தனியார் பள்ளிகளுக்குப் பெரிதாகப்பதிப்பு ஏதுமில்லை.அவை உயர்,நடுத்தர வர்க்கப் பிரிவினரை வாடிக்கையாளராகக் கொண்டிருக்கின்றன
10)பொருளாதாரத்தில் நலிந்துள்ளவர்கள், தலித்துகள் மற்றவர்கள் பயிலும் ஆங்கிலவழிக் கல்வியைப்பயிலக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று வரவேற்புக் கூறுவோரும் உள்ளனர்
11).அ.தி.மு.க. அரசுஅறிவித்துள்ள ஆங்கிலவழிக்கல்வித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது
12)பயிற்றுமொழியையும், பள்ளியையும் தேர்ந்தெடுப்பது தனிமனித உரிமை என்கின்றனர் சில.இதற்கு நீதிமன்றமும் துணைபோகிறது!
13)உயர்கல்வியில் குறிப்பாக மருத்துவம்,பொறியியல் கல்வியைத் தமிழில் கொண்டுவராமல் ஆரம்பக்கல்வியில் தமிழ்வழிக்கல்வியை வற்புறுத்துவது அர்த்தமற்றது என்கின்றனர் கல்வியாளர்கள் சிலர்.
.
14) தமிழ் அமைப்புக்கள் நடத்தும் போராட்டங்களுக்குப் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. தமது இருப்பைத் தெரிவிக்கும் செயல் பாடாகவே அவை உள்ளன.
கடந்த 1967முதல் 2014 வரையான 47 ஆண்டுகால ஆட்சியின் தமிழ் மொழிக் கொள்கை பற்றிய ஒரு வரலாற்றுப்பார்வையின்றி ஆங்கில மொழிவழிக் கல்விக்கு ஆதரவான இத்தகைய ஓர் மனநிலை தமிழ்நாட்டில் எவ்வாறு தகவமைக் கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளமுடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றது என்ன என்ற பரிசீலனையில் இருந்து துவங்குவதுதான் நல்லது தமிழ்நாட்டில் தமிழ்மொழியை ஆட்சிபீடம் ஏற்ற 1956டிசம்பர் 27ல்சட்டமன்றத்தில் ஒரு மசோதா அறிமுகப் படுத்தப்பட்டது.
ஒன்றுபட்ட கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.இராமமூர்த்தி சட்டமன்றத்தில் ‘இந்த நாள் தமிழ்நாட்டின் திருநாள்..நமது தாய்மொழி ஆட்சிபீடமேற வேண்டுமென்ற தமிழ்மக்களின் நீண்டகால ஆசை இன்று நிறைவேறுகிறது. திருச்சி ஜில்லாவில் செய்யப்பட்டுவரும் பரிட்சார்த்தத் திட்டத்தை விரிவு படுத்துவதற்காகவும் முதலில் தாலுகா அளவில் அதைக்கொண்டுவந்து பிறகு ஜில்லா அளவில் அதுகொண்டுவரப் படுமென்றும் மசோதாவில் கண்டுள்ளது. அவ்வாறில்லாமல் சகல இடங்களிலும் உடனடியாகத்தமிழ் பயன்படுமென்று பிரகடனப்படுத்த வேண்டும்.’என்று வலியுறுத்தினார்.
மும்மொழிக்கொள்கையை வலியுறுத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தி சி.சுப்பிரமணியம் ‘தமிழால் முடியும்’ என்று ஒருபுத்தகமே எழுதினார்.
காமராசர்ஆட்சிக்காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள எல்லாக் கிராமங் களிலும் பள்ளிகள் துவங்கப்பட்டன. ஏழைக்குழந்தைகள் பள்ளிக்கு வர மதிய உணவுத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இலவசச் சீருடைகளும் அளிக்கப் பட்டன .அவரது முயற்சியால் முதல்வர் பக்தவச்சலம்ஆட்சியில் கிராமப்புறக் கல்வி தரமானதாக அமைய 2௦ மாணவர்களுக்கு 1ஆசிரியர் என அரசு ஆணை எண் 250கல்வி நாள் 29.2.1964 பிறப்பிக்கப்பட்டது. பக்தவச்சலம் முதல்வராக இருந்த காலத்தில்தான் தமிழ்நாட்டுப்பாடநூல் கழகத்தில் பலதுறைநூல்கள் தமிழில் வெளியிடப்பட்டுக் கல்லூரிகளில் தமிழ்வழிக்கல்வி துவங்கியது
மத்தியஅரசு 1965ல் ஆட்சிமொழியாக இந்தியைக்கொண்டுவர முயன்ற போது தமிழ்நாட்டில் இந்திஎதிர்ப்புப் போராட்டம் தீவிரமானது. அதைத் தொடர்ந்து 1967ல் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்றது.
.
1965 இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றியது. 1967ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.
மும்மொழித்திட்டம் என்பதை இருமொழித் திட்டமாக்க மத்திய ஆட்சி மொழிச் சட்டம்1967திருத்தப்பட்டநிலையில் 1968ஜனவரி 23 அன்று நடந்த விவாதத்தில் “நீதி,நிர்வாகம், கல்விஎன்ற மூன்று நிலைகளிலும் தமிழைத்தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால் தமிழ்மக்களுக்கு பீதி இருக்காது:பயம் இருக்காது’ என மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்கள் ஏ.பாலசுப்பிரமணியம், என்.சங்கரைய்யா, தமிழரசுக் கட்சித்தலைவர் மா.பொ.சி.ஆகியோர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினர்.
அண்ணா தமக்கே உரியபாணியில் ‘மழை பெய்கிறபோது குடை கிடைக் காவிட்டாலும் மேல்துணியைத்தலையில் வைத்துக்கொள்வதுபோல் உடனடியாக இந்தி வந்துவிடாமல் தடுக்க ஆங்கிலத்தை வைத்துத் தடுக்கிறோம்’ அன்று பதிலளித்தார்.
அந்தக்குடை தமிழ்க்குடையாக இல்லாமல்போனதற்குக் காரணம் ‘உலகத்தொடர்புக்கும், விஞ்ஞான அறிவுபெறவும் ஆங்கிலம் இன்றியமையாத ஒன்று’ என திராவிட இயக்கத்தவர் மனங்களில் ஊறிக்கிடந்த கொள்கைதான்.
இந்த ஆங்கிலமோக மனோபாவம் தான் ‘தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!!’ என்று முழக்கமிட்டாலும் இந்தியின் இடத்தில் தமிழை வைக்க முன்வராமல் ஆங்கிலத் தையே உயர்த்திப்பிடித்தது.
தமிழரின் மனங்களை ஆங்கிலத்திற்கேற்பத் தகவமைக்கும் பணியையே தொடர்ந்தார்கள் .சென்னைப்பல்கலைக்கழகத்தோடு இருந்த மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் பள்ளிக்கல்வித் துறைக்குக் கொண்டுவரப்பட்டன.. மேலும் பல புதிய மெட்ரிக் பள்ளிகளை ஆளும்கட்சிப் பிரமுகர்களும், அவர்களது ஆதரவாளர்களும் துவக்க உற்சாகம் அளிக்கப்பட்டது. தி.மு.க ஆட்சியில் கல்வி அமைச்சர் க.அன்பழகன் தம்பி க.அறிவழகன் இதற்கு உறுதுணையாக இருந்தார் .30 மெட்ரிக்பள்ளிகள்200 ஆக உயர்ந்தன. கல்வியின் பெயரால் கொள்ளை இலாபம் பெறும் தொழில் அரங்கேறியது.
அ.தி.மு.க.ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த செ.அரங்கநாயகம் சுயநிதிப் பள்ளிகள் என்றபெயரில் காளான்களைப்போல ஆங்கிலப்பள்ளிகள் தோன்ற வழிவகுத்தார்.இவர் அளித்த உற்சாகத்தால் ஆளும்கட்சியினரும் ,இவர்களது ஆதரவாளர்களும் ஆங்கிலவழிக் கட்டணப்பள்ளிகளைத்துவக்கினர். 1977ல் 200ஆகவும், 1992ல் 1000ஆகவும் 2000ல் 2000ஆகவும், இப்போது 4000க்குமேலும் மெட்ரிக் பள்ளிகள் பெருகின.
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி,மாநகராட்சிப் பள்ளிகளிலும், அரசின் நிதி உதவிப் பள்ளிகளிலும் 1:20 ஆசிரியர் மாணவர் விகிதத்தில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் இருந்து தரமான கல்வி அளிக்கப்பட்டதால் மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கப் பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை
.கிராமப்புறக்கல்வியைச் சீரழித்தால்தான் தங்கள் ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவார்கள் எனத்திட்டமிட்டு அரசை அணுகினர். தி.மு.க ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் காலியான ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் விடப்பட்டன. 1995ல் முதல்வர் ஜெயலலிதா 1:50 என ஆசிரியர் மாணவர் விகிதத்தை உயர்த்தி கிராமப்புறப்பள்ளிகளை இயற்கை மரணம்அடைய வழிவகுத்தார்
.அப்போது ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியோடு சேர்ந்து இதை எதிர்த்த கலைஞர் 1996ல் ஆட்சிக்கு வந்தார். மீண்டும் 1:20 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தை நடைமுறைக்குக்கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை! ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சென்னையில் நடத்திய 1:40 எதிர்ப்புக்கண்டனமாநாட்டில் கல்வியாளர்களும், பத்திரிக்கையாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுத் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலித்தபோதும் கலைஞர் இந்தக்கோரிக்கையை ஏற்கமுன்வரவில்லை.
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து கல்வித்தரம் சீரழிந்ததால் ஓரளவு வசதிமிக்க மக்கள் தரமான கல்விக்காக மெட்ரிக் பள்ளிகளை நாடிச் செல்லவேண்டிய நிலையைத்திட்டமிட்டுஉருவாக்கினர். ஈமுகோழி வியாபாரத் தந்திரத்தைப் போன்ற ஆங்கிலவழிக் கல்விபற்றிய இவர்களது விளம்பர டமாரச்சத்தத்தில் மக்கள் உண்மை நிலைகளை அறியாது அதன்பால் ஈர்க்கப்பட்டார்கள்.
தாய்மொழிவழிக் கல்வியின் இன்றியமையாமை பற்றிய ஆய்வாளர்கள், அறிஞர் பெருமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடையவில்லை.
1)நாடு விடுதலை அடைந்தபின் 1952ல் அமைக்கப்பட்ட ஏ.இலட்சுமணசாமி முதலியார் ஆணையமும்,1964ல் அமைக்கப்பட்ட கோத்தாரி ஆணையமும் தாய்மொழி வழிக்கல்வியையே வலியுறுத்தின. 1986ஆம்ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கல்விக்கான தேசியக்கொள்கையும் துவக்கப்பள்ளிகளில் தாய்மொழிவழியிலேயே பயிற்றுவிக்கவேண்டுமென்று வலியுறுத்தியது.
2) அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியைச்சேர்ந்த ஆராயச்சிக்குழு வினர்160மொழிக்குடும்பங்களைக் கொண்டுள்ள 22 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்
அ) தாய்மொழிவழிக்கல்வியால் குழந்தைகள் விரைவாக வாசிக்கப்பழகு கின்றன.காரணம் மொழியின்கட்டமைப்பு பற்றிய அறிவு அவர்களிடம் ஏற்கனவே இருக்கிறது .எனவே சரியானமுறையில் ஒலிக்கமுடிகிறது. மேலும் நிறைய சொற்களை அறிந்து வைத்திருக்கி றார்கள்
ஆ) தாய்மொழியில் கற்பிக்கும்போது செலவு குறைகிறது.
இ)தாய்மொழியைக் கற்றுத் தேர்ச்சிபெறுபவர்கள் மிக்க எளிதாக இன்னொரு மொழியைக் கற்கமுடிகிறது.
ஈ) சொந்தப் பண்பாட்டு அறிவு-பாரம்பரிய அறிவு சொந்த அடையாளம் பற்றிய வலுவான புரிதல் –பள்ளியில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதனை புரிபவர் களாக இருக்கிறார்கள்.
3) 2010 ல் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் மொழியியல் வல்லுனர்கள் ‘தாய்மொழிவழி கல்வி கற்கும் ஆர்வத்தை உருவாக்கி மாணவர்களின்திறமைகளை வளர்த்தெடுக்கும் ஆற்றல் கொண்டது’ என்பதைப் பறை சாற்றினார்..
4)தாய்மொழி வழியாக அல்லாமல் வேறுமொழியின் வழியாகப் படிக்கும்போது மூளை எப்போதும் மொழி பெயர்த்துக்கொண்டே இருக்கிறது.இப்படி இரட்டை வேலைச்சுமை காரணமாகவே புதிதாக ஒன்றைக்கண்டுபிடிக்கும் திறனோ, படைப்பாக்கத்திறனோ அடிபட்டுப் போகிறது.
4) தாய்மொழியில் கற்பவர்களே ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் பெறுவார்கள்.
. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பொறியியல்,மருத்துவப்பாடங்களைக் கற்பிக்க 27பாடநூல்கள் –70,000கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. அண்ணா பல்கலைக் கழகத்தி லிருந்து 16ஆசிரியர்கள் 1997ஜூன் மாதம் பயிற்சி பெற்றார்கள்.தமிழக அரசு 5 பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி கற்பிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் ஏ.ஐ.சி.டி.ஈ அனுமதிதரவில்லை என இத்திட்டம் கைவிடப்பட்டது. ஏ.ஐ.சி.டி.ஈக்கு தாய்மொழியில் கற்பிக்கக்கூடாது எனகூற உரிமை இல்லை. அதைமீறி அரசு செயல் பட்டிருக்கவேண்டும். அவசரநிலையின்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்ற கல்வியை மாநிலப் பட்டியலுக்குகொண்டுவர மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அறிவியல் ,தொழில்நுட்பத் துறையில் தமிழ் வழிக் கல்வி வந்தால்தான் தமிழில் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனை வளரும் .நூல்கள்,கலைச்சொற்கள் ,அகராதிகள் தானாகவே வந்துசேரும். சந்தை இருந்தால்தான் சரக்குவரும்.
கணினிக்குப் பொருத்தமான மொழியாகத் தமிழ் இருப்பது பெருமை தருவதாகும்.ஆனால் கணினிக்கெனத் தனியாக எழுத்துரு இன்னும் உருவாக்கப் படவில்லை.ஒருபொதுவான தமிழ்விசைப்பலகை தயாரித்து சில ஆயிரம் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாக மக்களுக்குத்தரவேண்டும்.
1960களில்சென்னைப்பல்கலைக்கழகம் முனைவர் ஏ.சிதம்பரநாத செட்டியாரை முதன்மை ஆசிரியராகக்கொண்டு வெளியிட்ட ஆங்கிலம்-தமிழ் அகராதிக்குப்பின் அரசுசார்பில் எந்த முயற்சியும் இல்லை. உலகத்து மொழிகளிலேயே அதிகமான வேர்ச்சொற்களை உடையமொழி தமிழே என்றார் மொழியியல் தந்தை டாக்டர் எமினோ
.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் –கலைச்செல்வங்கள் யாவுங்கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்றார் மகாகவி பாரதி.
இவற்றில் எதையுமே செய்யாமல் உதட்டில் தமிழும், உள்ளத்தில் ஆங்கிலமு மாகவே தன்வாழ்நாள் முழுவதும் தமிழ்ப்பணியாற்றிய தமிழினத் தலைவரையும் ,உடம்பே ஆங்கிலமாகி நிற்கும் அம்மாவையும் நம்பி இனி எந்தப்பயனும் இல்லை
இந்துத்வா சக்திகளுக்கு மதம் எப்படி ஒருஅணிதிரட்டும் கருவியாக உதவுகிறதோ அதுபோல இவர்களுக்கு ‘தமிழ்’ ஓர் அரசியல் அணி திரட்டலுக்கான கருவி என்பதற்குமேல் தமிழுக்கும் இவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை
மொழியைப் படைத்த மக்களே தம் மொழியைக் காக்கும் போரை நடத்தியாகவேண்டும். அது ஒன்றும் எளிதான காரியமல்ல கடந்த 47ஆண்டுகளாக ஆங்கிலமொழிக்கு இசைவான ஒருமனநிலை தவறான தகவல்களால் தகவமைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் மத்தியில் நாம் அடிப்படை உண்மைகளைக் கொண்டுசென்றாக வேண்டும்.
1) உலகின்மொத்த மக்கள் தொகை 630 கோடி .இதில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெறும் 48 கோடிப்பேர் மட்டுமே.இது உலக மக்கள் தொகையில் வெறும் 8% தான். உலகில் உள்ள பிற அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் தாய்மொழி தான் பேசப்படுகிறது. இந்த நாடுகளில் ஆங்கிலம் செல்லுபடியாகாது.
2) ஆங்கிலம் பேசும் நாடுகள் பீரிட்டன், அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நன்கு நாடுகள் மட்டுமே.இந்த நாடுகளிலும் ஆங்கிலமொழி உச்சரிப்புக்கள் மாறுபடுகின்றன. எனவே இந்தியாவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் ஆங்கிலம் இங்கே செல்லுபடியாகாது. அந்த நாடுகளில் மேல்படிப்புப் படிக்க அல்லது வேலைக்குச்செல்ல அந்த நாடுகள் நடத்தும் TOFEL என்ற ஆங்கிலமொழித்தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறாமல் அங்கு செல்ல முடியாது
3) நாமக்கல் பேருந்து நிலையத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒலிபெருக்கி விளம்பரம் செய்ததுபோல் இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிறது முத்திரைப் பவுன் மாதிரி அல்ல..உலகத்தில் ஆங்கிலமொழி பேசும் நான்கு நாடுகளைத் தவிர வேறு எங்கே போனாலும் செல்லுபடியாகாது.
4) உலகத்தில் அதிக மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் அல்ல. சீனமொழி தான்.. ஆங்கிலம் தெரிந்தால் உலகமெங்கும் நாம் தொடர்புகொள்ள முடியாது..
5)ஆங்கிலம் படித்தால்உலகமெங்கும்வேலைகிடைக்கும் என்பதும் தவறு.. கடந்த ஜூன் மாதக்கணக்கு பிரிட்டனில் வேலை இல்லாதோர் 7.8%(2.51மில்லியன் பேர்)அமெரிக்காவில்14.3%(11.8மில்லியன்பேர்) ஆஸ்திரேலியாவில் 5.7% கனடாவில் 7.1%
ஆங்கிலம் கற்றால் உலகம் முழுவதும், இந்தி கற்றால் இந்தியாமுழுதும்
பயன்படும்,வேலை கிடைக்கும் என்பது ஓர் மயக்கமே!
6) பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் முதல்வகுப்பு ஆங்கிலவழியில் பிள்ளைகளைச் சேர்க்கப்பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் இது தற்காலிகமானது. ஆங்கிலத்தை ஒருமொழியாகக் கற்பிக்க மட்டுமே பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கணிதம், வரலாறு ,புவியியல், அறிவியல் போன்ற எல்லப்பாடங்களையும் ஆங்கில மொழியில் தரமாகக் கற்றுத்தர முடியாது. இதனால் விரக்தி அடையும் பெற்றோர்கள் மீண்டும் கட்டணப்பப்பள்ளிகளையே நாடுவர்.
7) .ஆசிரியர் அமைப்புக்கள் ஆங்கிலவழிக் கல்விக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கா ததும்,உற்சாகம் பெற்றுள்ளதும் வடிந்துவிடும். ஏனெனில் இப்போதுள்ள ஆசிரியர் மாணவர் விகிதத்தாலும், ஆங்கில மொழிவழிக் கற்பித்தலில் பயிற்சி இல்லாததாலும் அடிப்படைக் கட்டமைப்புக் குறைபாடுகளாலும் தரமான கல்வியைத் தர முடியாமல் போகும்போது ஏமாற்றமே இவர்களுக்கு மிஞ்சும்.
8) ஆங்காங்கே சிறிய அளவில் சிறைகளைப்போன்ற அறைகளிலும் ,வீடுகளிலும் நடைபெற்றுவந்த தனியார் நர்சரி பிரைமரி தொடக்கப் பள்ளிகள் பலஇவ்வாண்டு மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதைப் போலவே அரசுப்பள்ளிகளும் மூடப்படும் சூழ்நிலை உருவாகும். அது ஏற்கனவே நிலைப்பட்டுவிட்ட மிகப்பெரும் தனியார் பள்ளிகளுக்குப் பயன்பட வேண்டும் என்ற முதல்வர் அம்மாவின் திட்டம் நடைமுறை யாகவே உதவும். .
9) பொருளாதாரத்தில் நலிந்துள்ளவர்கள், தலித்துகள் மற்றவர்கள் பயிலும் ஆங்கிலவழிக் கல்வியைப்பயிலக் கிடைத்துள்ள வாய்ப்பு என்பது கானல் நீரே .ஏனெனில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் அரசுப்பள்ளிகள் வெற்றிகரமாக இயங்முடியாது.
10) உயர்கல்வியில் குறிப்பாக மருத்துவம்,பொறியியல் கல்வியைத் தமிழில் கொண்டுவராமல்ஆரம்பக்கல்வியில்தமிழ்வழிக்கல்வியைவற்புறுத்துவதுஅர்த்தமற்றது என்பது கவனிக்கத்தக்கது. எனவே, ‘அனைத்துநிலையிலும் கல்வி தாய்மொழி யிலேயே அளிக்கப்படும்: அனைத்துப்பள்ளிகளும் அரசுப்பள்ளிகளாக ஆக்கப்படும்’ என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்கச்செய்வது தேவை.
11) பயிற்றுமொழியையும், பள்ளியையும் தேர்ந்தெடுப்பது தனிமனித உரிமை என்கின்றனர் ஆங்கிலமோகம் கொண்டவர்களும், மெட்ரிகு லேஷன் பள்ளி நிர்வாகிகளும். இதற்கு நீதிமன்றங்களும் துணைபோகின்றன. ஆனால் இது ஒட்டுமொத்த சமூகப்பார்வையில் சரியல்ல என்பதற்கு சமூகமேம்பாட்டுக் கான அமைப்பின் தலைவராக இருந்த முகுந்த்துபே யின் அனுபவம் சான்றாகும். இவர் ஒருகட்டத்தில் நியூயார்க் நகரில் பணியமர்த்தப் பட்டபோது தமது பிள்ளைகளை அருகமைப்பள்ளியில் சேர்க்கவேண்டிய நிலை ஏற்பட்டது .அந்தப்பள்ளி உள்ளபகுதி குற்றச்செயல்கள் நிறைந்த தாகவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகவும் இருந்தது. இதனால் வேறுபள்ளியில் சேர்க்க எண்ணினாலும் இயலாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் அங்குள்ள விதிமுறைகள்தான் .’சமூக சமத்துவத்தை உறுதிசெய்ய நேரிடும்போது தனிமனித உரிமைகள் அதற்கு இடையூறாக இருக்க முடியாது ’என்பதே அந்தவிதிமுறைகளின் அடிப்படை நோக்கம் என்கிறார் துபே. இந்தக்கருத்து இங்குபேசப்படும் தனிமனித உரிமைகளுக்கும் பொருந்தும் என்பதை மனம்கொள்ளவேண்டும்.
12) தமிழ் அமைப்புக்கள் நடத்தும் போராட்டங்களுக்குப் பெரிய ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. தமது இருப்பைத் தெரிவிக்கும் செயல் பாடாகவே அவை உள்ளன என்ற விமர்சனம் எதார்த்தநிலையையே பிரதிபலிக்கிறது .அறிவார்ந்த அணுகுமுறையின்றி, உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இவை கையாளப்ப டுகின்றன. எந்த மக்களை அணி திரட்டவேண்டுமோ அந்த மக்களின் ஆங்கிலமொழிவழிக் கல்விக்கு ஆதரவாகத் தகவமைக்கப்பட்ட மனங்களை வெல்லாமல் இந்தப் போராட்டங்கள் வெற்றி பெறமாட்டா
1990களுக்குப்பிறகான.தீவிர உலகமயம், தனியார்மய காலத்தில் பொருளாதாரம், தகவல் தொடர்பு, நிர்வாகம் சார்ந்த தேவைகளுக்காக ஒற்றை மொழியை, ஒற்றை அரசை முன்வைக்கும் ஒருமைப்போக்கு தொடர்கிறது .தாய்மொழிவழிக் கல்விக்கான இயக்கம் ஒற்றை மொழியை முன்னிறுத்தும் கார்ப்பரேட் அமைப்புக்களை எதிர்த்த இயக்கமாக, தனியார்மயத்தை ஆதரிக்கும் அரசுகளை எதிர்த்த இயக்கமாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.
கலைகளும், இலக்கியங்களும் தாய்மொழிவழிக் கல்விக்கான போராட்டங்களில் ஆயுதங்களாக உருவாக்கப்படவேண்டும். மக்களின் மனங்களை வெல்லவேண்டும். கிராமங்கள்தோறும் நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து,, வீதிநாடகங்கள், கதாகாலட்சேபங்கள், பட்டிமன்றங்கள், வழக்காடுமன்றங்கள், கலைஇரவுகள் முதலான கலைஇலக்கிய வடிவங்களில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆங்கிலத்திற்கு ஆதரவாகத் தகவமைக்கப்பட்ட மக்களின் மனங்களைத் தாய்மொழிக் கல்விக்கு ஆதரவாகத் தகவமைக்க வேண்டும். இது மிகவும் கடினமான பணி. ஆனாலும் இதைத்தவிர வேறு வழி இல்லை
‘காலனியவாதிகள் ஒருசமூகத்தை அடிமைப்படுத்த வன்முறையை மட்டும் சார்ந்துநில்லாமல் மொழி மற்றும் பண்பாட்டுத்தளத்தில் அடிமைப்புத்தியைப் பயிரிடுவதின் மூலமே வெற்றிபெற்றனர்’ என்றார் இத்தாலி நாட்டின் அந்தோனியோ கிராம்சி. இன்றைய மத்திய,மாநில ஆட்சியாளர்களின் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற மக்களுக்கு எதிரான கொள்கைகளை முறியடிக்கும் இயக்கமாக தாய்மொழிவழிக் கல்வி இயக்கத்தை ஆக்குவோம்.
உதவிய நூல்கள்:
1) தமிழ்வழிக் கல்வியை மீட்டெடுப்போம் –த.மு.எக.ச. அறிக்கை
2) காலச்சுவடு ஜூலை 2013 –பெருமாள்முருகன், ச,தமிழ்ச்செல்வன்,சுகிர்தராணி
3) தினமணி –செம்மொழிக்கோவை 2010
4) பாரதியார் கவிதைகள்
5) ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதழ்கள் .