Friday, 15 May 2020

’ காலம்தோறும் கம்யூனிச பூதம்’ -பகுதி 3


 இந்தியாவில்…
  அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நெருக்கமான நண்பரான இந்தியப்.பிரதமர் மோடி  தான் டிரப்புக்கு சளைத்தவர் அல்ல என்று நிரூபித்துவருகிறார்.

  2019 டிசம்பர் 12ல் சீனாவில் கொரோனா நோய்த்தொற்று துவங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 21 அன்று சீனாவே இதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. 2020 ஜனவரி 15ல் உலக அளவில் கொரோனா பரவ ஆரம்பிக்கிறது. ஜனவரி 18 ல் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு கொரோனா பற்றி எச்சரிக்கிறது .ஜனவரி 30 ல் இந்தியாவில் கேரளாவில் முதல் பாதிப்பு ஏற்படுகிறது. பிப்ரவரி 12 ல் இந்தியாவில் கொரோனா பரவிவிட்டதாக ராகுல்காந்தி மத்திய அரசை எச்சரிக்கிறார். ஆனால் மோடியின் மத்திய அரசு செய்தது என்ன?

 இந்தியாவில் கொரோனா பரவிவிட்டதாக ராகுல்காந்தி கூறுவது கோமாளித்தனம் என்று பிப்ரவரி 13 அன்று மோடியின் அரசு மறுக்கிறது. அதுமட்டுமா? பிப்ரவரி 16 ல் இந்துமகாசபையின் 5,000 பேர் கலந்துகொண்ட கோமுத்ரா மாநாடு, பிப்ரவரி 22 ல் கோவையில் ஜாக்கிவாசுதேவின் ஒரு இலட்சம்பேர் கலந்துகொண்ட சிவராத்திரி கொண்டாட்டம், பிப்ரவரி 23 முதல் ஒருவாரகாலம் டெல்லியில் மதவெறி ஆர்ப்பாட்டங்கள். பிப்ரவரி 25ல்   குஜராத்தில் ஒரு இலட்சம்பேர் பங்கேற்ற டிரம்ப் திருவிழா, மார்ச் 8 ல், ஜனாதிபதி மாளிகையில் 500 கலந்துகொண்ட மகளிர்தினவிழா, மார்ச் 10 ல், குஜராத், அகமதாபாத், கல்பூரில் 40,00 பேர் கலந்துகொண்ட ஹோலிப்பண்டிகை, ஆகியவற்றை அனுமதித்து பிரதமர்மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள்!

  மார்ச் 11 ல் உலக சுகாதார அமைப்பு, ‘கொரோனா வேகமாகப்பரவும் தொற்று நோய்’ என உலக நாடுகளுக்கு அறிவிக்கிறது. ஆனால், மத்திய அரசோ, ‘கொரோனா ஒரு சுகாதாரநெருக்கடி நிலை அல்ல’ என்று அறிவிக்கிறது! தொடர்ந்து மார்ச் 12 ல் 50,000 பேர் கலந்துகொண்ட சீக்கிய மதத்திருவிழா,மார்ச் 13,14,15ல் டெல்லியில் தப்லிக் மாநாடு, மார்ச் 15 ல் கர் நாடக பாஜக எம்எல்ஏ மகள் திருமணத்தில் எடியூரப்பா 5,000 பேருடன் பங்கேற்பு, என கொரோனா பரவலைப்பற்றிக் கவலைப்ப்டாமல் பல்வேறு நிக்ழ்ச்சிகளை அனுமதித்துக்கொண்டே இருந்தது. மோடி அரசின் ஆரம்பகால நிலைபாடுகள் அனைத்தும் டிரம்ப்பின் நடவடிக்கைகளைப்போலவே இருந்தன.
  கேரள அனுபவம்
 சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர் ஒருவர் கேரளா திரும்பி வந்த ஜனவரி30அன்று கேரளாவில் முதல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. உலகசுகாதாரநிறுவனத்தின் கொரோனா நோய்த்தொற்று பற்றிய எச்சரிக்கை வரும்முன்பே கேரளஅரசு தலைமைச்செயலாளர் தலைமையில் அரசு உயர்அதிகாரி களைக்கொண்ட ‘ஆபத்தை நிர்வகிக்கும் குழு’’வை அமைத்து நடவடிக்கைகளை துவங்கியது. 24 மணிநேரமும் செயல்படும் ‘கோவிட்-19 போர் முகாமை’ அமைத்து பன்னாட்டு விமானதளங்களை கண்காணித்தது. கொரோனா பரவலைத்தடுக்க, ’சங்கிலியை உடைப்போம்’ (BREAK THE CHAIN)  என அறிவித்து முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நாள்தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று கொரோனாவைத்தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு தெரிவித்தது.
  இந்தியாமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே கேரள அரசு ஊரடங்கை அறிவித்து மக்களை வீடுகளில் தனித்திருக்கவும், சமூகவிலகலை பின்பற்றவும் கேட்டுக்கொண்டது. கேரளாவின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் சோதனைக்கூடங்களை அமைத்து செயல்படுத்தியது.கேரளாவில் பணிபுரிந்துவரும் 3.8இலட்சம் வெளிமாநில ஊழியர்களின் நலன்களில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தியது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 9,72.000 படுக்கைகளையும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அவற்றின் விடுதிகளிலும்  விளையாட்டு அரங்கங் களிலும், ஓட்டல்களிலும் 8,402 ICU படுக்கைகளையும்2,302 வெண்டிலேட்டர்களையும் அமைத்தது. மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் கொரோனாவை எதிர்த்த போரில் வெற்றிபெற்றது. கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாதரணமாக திகழ்ந்துகொண்டிருக்கிறது.

 கேரளாவின் இந்த சாதனையை ”கம்யூனிசத்தின் வெற்றி” என்று தலைப்பிட்டு முதலாளித்துவ ஏடான ‘ வாஷிங்டன் போஸ்ட்” கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும், கேரள அரசை படங்களை வெளியிட்டு பாராட்டியுள்ளது. ’இந்தியா டு டே’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடுகள் கேரளஅரசை பாராட்டி தலையங்கம் எழுதியுள்ளன. உலக நாடுகள் கேரள அரசின் செயல்பாடுகளை பாராட்டுகின்றன..   கொரோனாவைக் கட்டுப்படுத்திய பணிகளுக்காக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர்  இவ்வாண்டின் மிகச்சிறந்த மனித நேய செயல்பாட்டாளர் என கௌரவிக்கப்பட்டுள்ளார்..

 இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலங்களில் ஒன்றான கேரளம் , தனக்குரிய மிகக்குறைந்த அதிகாரங்களைக் கொண்டே, மத்திய அரசின் புறக்கணிப்பையும், நிதியளிக்க மறுப்பதையும் தாங்கிக்கொண்டே இத்தகைய அரிய சாதனையைப் புரிந்திருக்கிறது .இந்த மாநிலஅரசுக்கு மாநிலசுயாட்சி அதிகாரம் அளிக்கப்படு மானால், இந்தியாவின் மற்றமாநிலங்களிலும், கேரளாவைப்போல, பினராயி விஜயனைப்போல கம்யூனிச சிந்தனைகொண்ட முதல்வர்கள் அமைவார்களானால், இந்தியாவின்பிரதமர் இன்றையமோடியைப்போல மதவெறிசக்திகளின் பிரதிநிதியாக அல்லாமல், ஓர் இடதுசாரி சிந்தனையாளராக, ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பாரானால் கேரளாவில் நிகழ்த்தப்பட்ட அதிசயங்கள் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படும்: மனிதகுலம் எந்தவொரு அச்சத்தின் பிடியிலிருந்தும்விடுபட்டுவிடும் என மக்கள் சிந்திக்கத்தொடங்கிவிட்டார்கள்.

 ‘காலம்தோறும் கம்யூனிச பூதம்’ என்ற கட்டுக்கதையை, கதாகாலட்சேபத்தை மக்கள் இனியும் ஏற்கமுடியாத காலம் வந்துகொண்டிருக்கிறது. புதிய சிந்தனைகளோடு எழுச்சி பெற்றுவரும் மக்கள் திரளை ஒருங்கிணைப்பதும், ஆற்றல்மிகு போராட்ட சக்திகளாக மாற்றுவதும், முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகளை தூக்கியெறியும் செம்படைகளாக மாற்றுவதும் இடதுசாரி செயல்பாட்டாளர்களின்,, கம்யூனிஸ்ட்களின் கடமையாக காலம் நிர்ணயித்திருக்கிறது! இந்தக்கடமையை நிறைவேற்றும்  நீண்டபயணம் உலகை செம்மயமாக்கட்டும்! மானுடம் தழைக்கட்டும்!                   
 

  

காலம்தோறும் கம்யூனிச பூதம்’ -பகுதி 2


கொரோனாவும் இன்றைய கம்யூனிச எதிர்ப்பும் 
    
சீனாவிலுள்ள வூஹான் நகரில் உருவாகி உலகெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தக்கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா? அல்லது வூஹான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா?

 ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது: அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கு பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும், அவரது வெளியுறவுத்துறை அமைச்சரும் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக சீனாவுக்கு எதிரான அவதூறுகளை செய்தியாளர் கூட்டங்களில் அள்ளிவீசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்ன? சீனாவின் வூஹான் ஆய்வுக்கூடம் சீனாவும், ஃப்ரான்ஸும் அமைத்துள்ள ஒரு கூட்டுநிறுவனம் சீனாவுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. சீனா இங்கே தன்னிச்சையாக எதுவும் செய்துவிட முடியாது.

 . கொரோனா வைரஸ் வூஹான் ஆய்வுக்கூடத்தில் உருவானதல்ல: இயற்கையாக உருவானதுதான்  என்று புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் காட்டுகிறார்கள். வவ்வால்களில் சார்ஸ்கோவ் -2ன் நெருங்கிய உறவுவைரஸை (ஆர் எம் ஒய் என் 02) அடையாளம் கண்டிபிடித்துள்ளனர்.  கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ். ஆய்வுக்கூடத்தில் உருவாகாமல் இயற்கையாக உருவானதற்கு இதுதான் ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷாண்டாங் முதல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதுகுறித்த ஆய்வுக்கட்டுரை, கரண்ட் பயாலஜி’    இதழில் வெளியாகியுள்ளது. அதில் ’சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (ஆர்எம்ஒய்என்-02) சார்ஸ்கோவ்-2 வைரஸின் நெருங்கிய உறவு வைரஸ். அதில் இதற்கான மரபணு வரிசைகாணப்படுகிறது’ எனக்கூறப்பட்டுள்ளது.
 இந்த வைரஸின் ஸ்பைக் புரதத்தின்  எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில் சார்ஸ்கோவ்-2 ஐப்போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன .கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இத்தகைய அசாதாரண நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதுபற்றி ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் வெய்பெங் ஷி .”எஸ்-1 மற்றும் எஸ்-2 இடைச்செருகல் மிகவும் அசாதாரனமானது. இது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது. ஆனால் எங்கள் ஆராய்ச்சியில் இந்த நிகழ்வுகள் வனவிலங்குகளில் இயற்கையாகவே நடக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது, இது சார்ஸ்கோவ்-2 வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து தப்பியது என்பதற்கு எதிரானது” என்று ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளார்.

  ’வவ்வால்களில் அடையாளம் காணப்பட்ட வைரஸில் இதுபோன்ற செருகும் நிகழ்வு இயற்கையான தோற்றம் கொண்டவை என்று உறுதியாகக்கூறுகின்றன.  உண்மையில் விலங்குபீட்டா  கொரோனா வைரஸ் இயற்கையாகவே ஏற்படலாம். எங்கள் ஆய்வு சார்ஸ்கோவ்-2ன் பரிமாணமான வம்சாவளியைப்பற்றி மேலும் வெளிச்சம் தந்துள்ளது’ என்றும் கூறியுள்ளார். ஆர்எம்ஒய்என்-2  வைரஸ் வவ்வால்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் உலகை இப்போது படாதபாடு படுத்தும் நாவல்கொரோனா என்னும் கோவிட்-19 வைரஸும் இயற்கை யாகவேதான் தோன்றியிருக்கிறது.: பரிசோதனைக்கூடத்தில் இருந்து அல்ல’ என்பதுதான் விஞ்ஞானிகளின் கருத்து.
  இதுபற்றி உலகசுகாதார அமைப்பின் தலைவர் சௌம்யா சாமிநாதன் அளித்துள்ள ’டிரம்ப் குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ என்றபேட்டி மிகவும் முக்கியமானது.

கே: இந்தத்தொற்று சீனாவால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மையா?
ப: அப்படிச் சொல்லப்படுவதில் உண்மை இல்லை. அது அத்தனையும் கட்டுக்கதை, பொய். இதுவரை ஏற்பட்ட இந்த நோய்ப்பரவல், இறப்புக்கள் எல்லாவற்றையுமே சரியானமுறையில் சீனாவில் பதிவுசெய்திருக்கிறார்கள். இந்தநோய் உருவானது குறித்து ஆய்வுகளை தீவிரமாக நடத்திவருகிறார்கள்.

கே: அமெரிக்க அதிபர் தினம் தினம் ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டுவருகிறாரே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: அவரைப்பற்றி நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. உலகசுகாதார அமைப்பு மெத்தனமாக இருந்துவிட்டது: சீனாவுக்கு சப்போர்ட் செய்தது என்று சொல்லியிருக்கிறார். பொதுவாக எந்த ஒரு பேரிடர் வந்தாலும் எங்கள் அமைப்பில் உடனே  ஒரு டீம் உருவாகிவிடும். அந்தவகையில் டிசம்பர்31 ஆம் தேதி சீனா சொன்னதுமே உடனே ஒரு குழுவை அமைத்தோம். அதன்மூலம் எங்கள் தலைமை யகமான ஜெனீவா மற்றும் 6 பிராந்திய அலுவலகங்கள், , தில்லியில் உள்ள தென்கிழக்கு அலுவலகம் என எல்லாருக்குமே உடனடியாக எச்சரிக்கை அனுப்பி யுள்ளோம். சீனாவில் ஏதோ ஆபத்தான வைரஸ் கிருமி உருவாகியிருக்கிறது. அதனால், எல்லாரும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று தெரிவித்திருந்தோம்.

  ஜனவரி 7-ஆம் தேதி இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது என்று எங்களுக்கு ரிப்போர்ட் வந்ததும் எங்கள் இணையதளம் மூலம்  எல்லா உறுப்பு நாடுகளுக்கும் மீண்டும் தெரிவித்தோம். ஜனவரி 11 ஆம் தேதி அது கொரோனா வைரஸ் என்று தெரிந்தவிட்டது. அது தெரிந்ததுமே இதற்குமுன்னால் இருந்த கொரோனா வைரஸை வைத்து , இது இருமல்,தும்மல் மூலம் பரவும்தன்மை உடையது.மூச்சுத்திணறல், நிமோனியா வரும் என ஒவ்வொரு தகவலாக வரவர நாங்களும் எல்லா நாடுகளுக்கும் தெரிவித்துக்கொண்டே இருந்தோம்.

கே: நீங்கள் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யா?

ப: நாங்கள் முன்கூட்டியே எச்சரிக்காததால்தான் இது மாதிரி ஆயிற்று என்கிறார் அதிபர் டிரம்ப். அடுத்து எங்கள்அமைப்பு சீனாவுக்கு அதரவாக இருப்பதாக சொல்கிறார்.ஆனால் சீனா இதுபோன்று நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடனேயே உடனடியாக ஊரடங்கை அறிவித்து என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். அதனால்தான் அங்கு விரைவில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது. அதுபோன்று தகவல்களையும் அவ்வப்போது பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மற்றநாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்புவது, உபகரணங்கள், சோதனைக்கருவிகள் கொடுப்பது என உதவினார்கள் .எங்களைப் பொருத்தவரை 194 நாடுகளுமே ஒன்றுதான்.தனியாக யாருக்கும் எந்த சலுகையும் தருவதில்லை.

கே: உங்கள் நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை ,அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?

ப: தற்போது 20 சதவீதம் நிதியை நிறுத்திவிட்டார். இதனால், உலகத்துக்கே பாதிப்பு இருக்கும். ஏனென்றால், போலியோ சிகிச்சைநோய் எதிர்ப்புத்திறன் வளர்த்தல், எமர்ஜென்ஸி போன்றவற்றுக்குத்தான் அவர் அளித்துவரும்நிதி உதவுகிறது. இதனால் எல்லாமேபாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப் இப்படி பேசியதற்கு பிறகு  மற்றநாடுகள் எல்லாமே எங்களுக்கு ஆதரவு தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார் கள். இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு அமெரிக்காவுடன் ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது உலகசுகாதார அமைப்பு மிகமிக தேவையான ஒன்று. அதுவும் இப்போதைய சூழலில் இப்படி குற்றம் சாட்டுவதும், நிதியை குறைப்பதும் செய்யாமல் இருந்தால் நல்லது. எங்களுடைய கடமையை நாங்கள் செய்துகொண்டுதான் இருப்போம்
.
இந்தப்பேட்டி  அமெரிக்கஅதிபர் டொனால்ட் .ஜெ.டிரப்பின் பொய்களை மிகவிரிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது டிரம்ப்பின்கோமாளித்தனங்கள் இவைமட்டுமா? இன்னும் தொடர்கின்றன..

மே14வரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதல் 14,32,08 பேருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக ,அமெரிக்காவில் இறந்துபோனவர்கள் எண்ணிக்கை 85,2680ஐ தண்டியள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மக்களில் பலரது மின்னஞ்சலில் ,அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து’ உங்களால் ஒரு இரகசியத்தைப் பாதுகாக்க முடியுமா?’ என்ற ஒருசெய்தி அனுப்பப்பட்டது.. ”அமெரிக்.காவின் முதல்பெண்மணி யான மெலினா டிரம்ப்புக்கு “ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் கையொப்பமிட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டை அனுப்பப்படவேண்டும்” இதுதான் அந்தச்செய்தி. இது டிரம்பின் வியாபாரத்தந்திரங்களில் ஒன்று. இதைக்கண்ட பெரும்பாலான அமெரிக்கர்கள் கோபம்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

  டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, பதவிவிலகிய முன்னாள் அதிபர் ஒபாமாவின்  நிர்வாகம் ‘வரப்போகும் உலகளாவிய நோய்த்தொற்றுபற்றி எச்சரித்ததையும், அதைக்கட்டுப்படுத்த படிப்படியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய வழிகாட்டலையும் புறக்கணித்தார். 2017ல் அமெரிக்காவின் உள்நாட்டுப்பாதுகாப்புத்துறை அமெரிக்காவின் மிகமுக்கியமான உள்கட்டமைப்பிலிருந்து உலகளாவிய நோய்த்தொற்று ஏற்படுவது பற்றிய தகவல்களைப் புதுப்பிப்பதை நிறுத்திவிட்டது. 2018 மே மாதத்தில் அமெரிக்காவின்  உலகளாவிய நோய்த்தொற்றுத் தகவலை அளிக்கும் குழு கலைக்கப்பட்டது: ஏனென்றால் அது ஒபாமாவால் உருவாக்கப்பட்டதாம்.

 2019 நவம்பரில் அமெரிக்க இராணுவம் சீனாவிலிருந்து உலகளாவிய நோய்த்தொற்று பரவுவதாக அளித்த தகவலை டிரம்ப் நிராகரித்தார். கடந்தஆண்டு உலகசுகாதார நிறுவனத்திலுள்ள அமெரிக்க மருத்துவநிபுணர்கள் உடனடியாக நிகழப்போகும் கொரோனா   நோய்த்தொற்று பெருமளவில் பரவும் என வழங்கிய ஆலோசனையை  எற்கமறுத்தார். டிரம்ப்பின் நிர்வாகம் தேசியப்பாதுகாப்பு அமைப்பை மூடி, பல்வகை நெருக்கடி நிதியை 300 மில்லியன் டாலரிலிருந்து 150 மில்லையன் டாலராக குறைத்தது.

 அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை நோய்க்கட்டுப் பாட்டுமையம் ஜனவரி 20ல்  உறுதிப்படுத்திய இரண்டு நாட்களுக்குப்பிறகு, கவனிக்க ஆரம்பித்தார். இரண்டு வாரங்களுக்குப் பிறகும் நோய்த்தொற்று நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றும் வெள்ளைமாளிகை அலுவலரின் பெயரை அவர் தெரிவிக்கவே இல்லை. ஜனவரி 29 அன்று பொருளாதார ஆலோசகர் பீட்டர்  நவர்ரொ 5,43, 000 அமெரிக்கர்கள் இறந்துவிடுவார்கள் என்று எச்சரிக்கை குறிப்பை தந்தபோதும் டிரம்ப் ‘இது எனக்கு சீனாவால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என  முழுப்பொய்யைக்கூறி எந்த நடவடிக்கையையும் எடுத்தவில்லை.  பிப்ரவரி 14 அன்று   கொரோனாமரணங்கள் ஆயிரத்துக்கும் மேல் என்ற எண்ணிக்கையைத் தொட்டபோது, அதிபர் டிரம்ப் தேசிய எல்லைக்கட்டுப்பாட்டு கவுன்சிலுக்கு 12 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும், அவர்களில் பலர் குணமடைந்துவருகிறார்கள். எனவே நாம் மிக நல்ல நிலையில் உள்ளோம்’ என்று பொய்கூறினார்.

  மார்ச் 4 அன்று கூன்விழுந்த ஒரு நிபுணரின் மதிப்பீட்டை அடிப்படையாகக்கொண்டு கோவிட் 19ன் இறப்புவீதங்கள் தவறானவை என்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்து நாட்டை திக்குமுக்காட வைத்தார். சுகாதாரம் மற்றும் மனிதசேவைகளின் செயலாளர் அலெக்ஸ் அஸார் நோய்த்தொற்றின் வீச்சைப்பற்றி எச்சரித்தபோது அவரை,’’பீதியை ஏற்படுத்துபவர்” என்று அழைத்தார். நோய்த்தொற்றுப்பரவல் வேகம் எடுத்தபோது, ஒவ்வொருநாளும் நூற்றுக்கணக்கானவர்களை பலிகொண்ட ஐரோப்பா விலிருந்து விமானங்கள் வருவதைத்தடுக்க விமான நிலையங்களை மூட மறுத்தார். அதன்பிறகு நோயைக் கண்டறியும் தவறான சோதனைக்கருவிகளை சிடிசி யிலிருந்து திருப்பியனுப்பி, சோதனைக்கருவிகள் பற்றாக்குறையை ஏற்படுத்தினார். அந்த குறைபாடு இன்னும் நீடிக்கிறது. ஒருங்கிணைந்த கொரோனா வைரஸ் நிலைமை பற்றிய அறிக்கையை வெளியிட்டதற்காக சுகாதாரம் மற்றும் மானுடசேவைகளின் ஆய்வாளர் ஜெனரல் கிறிஸ்டி கிரிம்மை ‘அது ஒரு போலியான ஆவணம்’ என்று டிரம்ப் திட்டித்தீர்த்தார். கொரோனா நோய் நிவாரணப்பணிகளைச் செய்துவந்த தலைமை ஆய்வாளர் கிளென் ஃபைன் –ஐ பணியிலிருந்து நீக்கினார்.

 அதிபர் டிரம்ப்பின் இந்தப்பைத்தியக்காரத்தனங்களால் கொரோனா தொற்றால் உலகிலேயே மிகவும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களும் அமெரிக்கர்களே என்ற அவல நிலையை அந்த நாடு சந்தித்துக்கொண்டிருக்கிறது. இவற்றை மறைப்பதற்காகவும், அமெரிக்க மக்களின் இழப்புக்களுக்கு சீனாவே காரணம்என்று நம்பவைக்கவும் சீனமற்றும் கம்யூனிச எதிர்ப்புணர்வைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிரம்ப்! கொரோனா வைரஸை சீன கம்யூனிச வைரஸ் என்று பெயரிட்டுள்ள அதிபர் டிரம்ப் இந்த வைரஸை சீனாதான் பரப்பியது என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக பலமுறை கூறிவிட்டார், அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் மிக்கேல் பாம்பினோவும் இதையே கூறுகிறார் அந்த ஆதாரங்களை வெளியிடுமாறு அமெரிக்க அதிகாரிகளும், சீனாவும் வலியுறுத்திய போதும் அவர்கள் வெளியிடவே இல்லை..இருந்தால்தானே வெளியிட? இதனால் அமெரிக்க மருத்துவத்துறை ஆய்வாளர் மட்டுமல்ல, உலக நாடுகளின் விஞ்ஞானி களும் இவர்கள் பொய்யை நம்ப மறுக்கிறார்கள்!

    சீனா, கியூபா, வியட்நாம் முதலான சோசலி,ச நாடுகள் கொரோனாவுக்கு எதிராக அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தங்கள் நாட்டுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், உலகிலுள்ள பல நாடுகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நூற்றுக்கணக்கான மருத்துவர்களையும், ஆயிரக்கணக்கான மருத்துவ ஊழியர்களையும், மருந்துகளையும் கப்பல்களில் அனுப்பி மனிதநேயத்தோடு பாதுகாத்துவருகிறார்கள்.
  சீனாவில் கொரோனா நோய்த்தொற்றுப்பரவல் வெற்றிகரமாக எதிர்கொள்ளப் பட்டதற்கு சோசலிச அரசியல் கட்டமைப்பே காரணம். நாடு எதிர்கொள்ளும் எத்தகைய சவாலையும் ஆளும்கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமை திறம்பட எதிர் கொள்ளும் என்பதை கொரோனா நோய்த்தொற்று நெருக்கடி நிரூபித்துள்ளது என்கிறார் சீன அதிபர்பிங் ஷி ஜின் பிங்.! சோசலிச நாடுகள் தங்கள் நாட்டுமக்களின் நல்வாழ்வை, சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதில் முன்னணியில் இருப்பதோடு, நெருக்கடிநேரங்களில், உலகிலுள்ள மற்றமுதலாளித்துவ நாடுகளிலுள்ள மக்களையும்  பாதுகாக்கிறார்கள் இன்று இவற்றையெல்லாம் அனுபவபூர்வமாக காணும் மக்கள் உலகம் முழுவதும் சோசலிச அரசியல் கட்டமைப்பு  ஏற்படுமானால் இந்தப்பூவுலகம் சொர்க்கமாகிவிடும் என்று விரும்புவார்கள் .இதுதான் முதலாளித்துவ ஆளும்வர்க்கங்களை ‘கம்யூனிச பூதம்’ கதைகளைப் பிடித்துத்தொங்க வைக்கின்றன.   .

’காலம்தோறும் கம்யூனிச பூதம்’ -பகுதி 1


காலம்தோறும் கம்யூனிசபூதம் !
--------------------------------------------------- ---------------------------------------------------------
 செ. நடேசன்
  முன்னாள் பொதுச்செயலாளர்
  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

   ’ஒருபூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது: அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம்’என்றார்கள் போப் ஆண்டவரும், ஜார்அரசனான முதலாம் நிக்கலாயும் ஆஸ்திரிய நாட்டுஅரசியல் வித்தகன் என்று கருதப்பட்ட இளவரசன் மெட்டர்னிக்கும், முதலாளித்துவக்கண்ணோட்டம்கொண்ட ஃப்ரஞ்சு வரலாற்று ஆசிரியரான கிஸோவும். பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகளான ஃப்ரஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் இந்த பூதத்தை விரட்டுவதற்கான புனிதக்கூட்டணியை அமைத்துக்கொண்டார்கள்.,

  அந்தக்கூட்டணி காலந்தோறும் உலகெங்கிலுமுள்ள அதிகாரசக்திகளாலும், முதலாளித்துவசக்திகளாலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது..  ஆட்சியிலுள்ள எதிரிவர்க்கத்தினரால் ‘கம்யூனிஸ்ட்’ என்று பழிதூற்றப்படாத எதிர்க்கட்சி எங்கேனும் உண்டா? தன்னிலும் முற்போக்கான எதிர்க்கட்சிகள் மீதும், பிற்போக்கான தன் எதிராளிகள் மீதும் ‘கம்யூனிஸ்ட்’ எனப்பட்டம்சூட்டி அவதூறு சேற்றை அள்ளிவீசாத ஆளும் வர்க்கக்கட்சிதான் எங்கேனும் இருக்கிறதா? என்று 1848லேயே கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை கேட்டது.
ஒடுக்குவோரும், ஒடுக்கப்படுவோரும் தீராப்பகைமை கொண்டுள்ள இன்றைய கொரோனா காலத்திலும், ‘இதுநாள்வரையில் நிலவிவந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் ‘வர்க்கப்போராட்டங்,களின் வரலாறே ஆகும்’’என்ற நிலையிலும்  இடையறாத போராட்டத்தை நடத்திவரும் முற்போக்காளர்கள் பற்றி ’கம்யூனிஸ்ட்’ என்ற இந்தக்குழந்தைத்தனமான பூதக்கதையைக் கூறாதவர்கள் எங்கேனும் இருக்கிறார்களா? இதோ கொரோனா காலத்திலும் இந்த வைரஸ் தொற்று சீனாவின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு உலகநாடுகளை அச்சுறுத்தும் ஒரு கிருமி ஆயுதமாக வெளியிடப்பட்டுவிட்டது என்ற கதையை உலகெங்கும் ஆர்வத்தோடு பரப்பிவருகின்றன ஆளும்வர்க்கங்களும், அவர்களது அடிவருடிகளும்! இந்தக் கதாகாலட்சேபம் காலம்காலமாய் நடத்தப்பட்டுவருகிறது.

முதலாளித்துவம் என்னும் கொடிய வைரஸும்
மாமேதை லெனினின் சோவியத் யூனியனும்.

 மாமேதைலெனினின் புரட்சிகரமான அறிவுத்திறன்தான் ஜார் என்னும் கொடுங் கோலனின் முதலாளித்துவநுகத்தடி என்னும் கொடிய வைரஸின்கீழ் சீரழிக்கப்பட்ட ரஷ்யாவை மீட்டது. தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஆட்சிபீடத்தில் அமர்த்தியது. லெனினின் தலைசிறந்த மாணவரான தோழர் ஸ்டாலினின் உருக்குப்போன்ற மனவுறுதியின்கீழ்தான் அந்தநாட்டின் அடித்தட்டுமக்கள் தாம் மேற்கொண்ட சோசலிசவகைப்பட்ட சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் வெற்றிபெற்றார்கள். மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது பொருள்ரீதியான மற்றும் கலாச்சாரத் தேவைகளில் மிக அதிகமான அளவுக்கு திருப்தியும் அடைந்தார்கள்.

 உலகவரலாற்றிலேயே முதன்முறையாக உருவான இந்தப்புதிய சமூக அமைப்பின் வெற்றிஎன்பது உலகநாடுகளின் மக்களிடையே அளவுகடந்த வியப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகிலேயே மிகப்பெரும் தொழில்வளர்ச்சி பெற்றநாடாக சோவியத் யூனியன் உருவாகியிருந்தது. இதன்விளைவாக, சர்வதேசப்பெருமுதலைகளாலும், அறிவுசார் உலகத்தில் நீக்கமற நிறைந்திருந்த அவர்களது அடியாட்களாலும் பாதுகாக்கப்பட்டுவந்த பழைய சமூக-பொருளாதாரஅமைப்புக்கு சோவியத் யூனியன் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது

 ஒரேநாட்டுக்குள் சோசலிசத்தைக்கட்டுவது’ லெனின் உருவாக்கிய  கருத்தோட்டம் ஸ்டாலினின் வீரம்செறிந்த, ஊக்கமூட்டும் முயற்சியின் விளைவாகவே லெனினின் ‘ஒரே நாட்டுக்குள் சோசலிசம்’ என்ற கருத்தோட்டம் உயிரோட்டமான ஓர் அமைப்பாக உருமாற்றப்பட்டது: உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒளிமய மானதோர் உலகைக்காட்டும் ஒருதிசைகாட்டியாகவும் அமைந்தது. உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் வழிகாட்டலில் சோசலிசப்பாதையில் நடைபோடத் துவங்கிவிட்டால் முதலாளித்துவமும், ஆளும்வர்க்கங்களும் என்னவாகும்?  உலகப்பாட்டாளி வர்க்கத்துக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டிய, “இழப்பதற்கு அடிமைச்சங்கிலிகளைத்தவிர எதுவும் இல்லை: ஆனால், அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது’ என்ற கடைசி வரிகளைக் கண்டு ஆளும்வர்க்கங்கள் அஞ்சி நடுங்கின. ஏனெனில், அது நடந்துவிட்டால், அந்த ஆளும் வர்க்கங்கள் ‘இழக்கப்போவதோ இதுவரை அனுபவித்துவந்த ஓர் பொன்னுலகம்: ஆனால், அடையப்போவதோ நிரந்தரமான அடிமைச் சங்கிலிகள்’  .எனவே, ‘கம்யூனிசம் ஒரு பூதம்’ என்று விழிப்புணர்வுபெறாத மக்களிடம் கதாகாலட்சேபங்களை நடத்தத் துவங்கினார்கள்

1917ஆம் ஆண்டு ரஷ்யாவை புரட்சிகரமான சூழல் என்ற சூறைக்காற்று  சுற்றி வளைத்திருந்த காலம் அது. ஜார் மன்னன் துரத்தப்பட்டு கெரென்ஸ்கி தலைமை யிலான இடைக்கால அரசு அமைந்தது.  அது போல்ஷ்விக்குகளையும், தொழிலாளர் களையும் நசுக்கியது. லெனினை ஜெர்மன் உளவாளி என்றும், மொடாக்குடியன் என்றும், பெண்பித்தன் என்றும் அவதூறுகளை அள்ளிவீசி  அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானங்களையும் அறிவித்தது..   இந்தப்பொய்ப் பிரச்சாரங் களில் மாமேதை லெனினை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகள் தோல்;வியில் முடிந்தன.  

  இந்தக்கதாகாலட்சேபத்தில், அடுத்ததாக, ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்றும், இரக்கமே இல்லாத அரக்கன் என்றும், ஜார் என்ற கொடுங்கோலனின் மூதாதையான ‘இவான் தி டெரிபிள்’ என்றழைக்கப்பட்ட இவானின் கொடூரச்செயல்களையெல்லாம் விஞ்சிய நாசக்காரன் என்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஸ்டாலின்மீது மட்டும் ஏன் இத்தகைய பொய்களை அவிழ்த்துவிட வேண்டும்?  அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

 முதலாவதாக அவர், லெனினின் உண்மையான மாணவராக, ஒடுக்குவோர், சுரண்டுவோர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான போரில் தனது சமகால போல்ஷ்விக்குகளை விஞ்சி முன்னேநின்றார். வர்க்கப் போராட்டத்தை பொருத்தவரை அவர் யாரையும், எதையும் விட்டுவைக்கவில்லை. ஜார் ஆட்சியின் எதிர்ப்புரட்சியாளர்களின் இயக்கத்தை இருந்த இடம் தெரியாமல் நசுக்கியபோதோ, அல்லது சோசலிசவகைப்பட்ட சீரமைப்புக்கு கேடுவிளைவிக்கத் துணிந்தவர்களை நச்சுப்பாம்புகளாக நசுக்கியபோதோ, அல்லது ஹிட்லரின் பாசிசக்கோட்டையை சுக்கு நூறாக தூளாக்கியபோதோ மிகக்கடுமையானவராக, எதற்கும் இடம்கொடாதவராக அவர் இருந்தார்.

  இரண்டாவதாக,’வர்க்கவிரோதிகள்மீதான வெறுப்பு ஸ்டாலினுக்கு இயற்கையாகவே அமைந்த ஒருகுணம்’   புரட்சிகர இயக்கங்களின் தாக்கம் மிகவும் அரிதாகிப்போன இன்றைய சூழலில், தொழிலாளிவர்க்கத்துக்கும், சோசலிசத்துக்கான போராட்டத் துக்கும் எதிரான சக்திகளால் ‘கொடுமையின் அவதாரமே ஸ்டாலின் தான்’ என்று குறிப்பாகப் பழிக்கப்படுவது இயல்பானஒன்றுதான். ஏனெனில், ’தலைமையை வீழ்த்துவதன்மூலம் தத்துவத்தையே வீழ்த்திவிட முடியும்’என்னும் எதிரிவர்க்கத் திட்டம், தோழர் ஸ்டாலினையே அதற்கான முதல் தேர்வாக்கிக்கொண்டது

  ஹிட்லரைவிட, மாபெரும்கொடுங்கோலர்களான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை விட ஸ்டாலின் மோசமானவர் என்று ஏன் சித்தரிக்கிறார்கள்? ஏனென்றால் கம்யூனிசம் முதலாளித்துவத்துக்கு நேர்எதிரான தத்துவம். ஏனென்றால், ஸ்டாலின் காலத்தில்தான் உலகப்பொதுவுடைமை இயக்கம் ஏராளமான நன்மைகளைச் செய்தது .ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி(போ) மூன்றாம் அகிலத்துக்கு தலைமை தாங்கியபோது முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் அஞ்சிப்பின்வாங்கின.   எனவேதான் ஸ்டாலினையும், சோவியத் யூனியனையும் வசைபாடுகிறார்கள்.
 ஸ்டாலினுக்கு எதிரான பொய்கள் பலவகையானவை. அவர் தேசிய இனங்களுக்கு எதிரானவர்: கலை இலக்கியவாதிகளை அடக்கி ஒடுக்கினார்: ஹிட்லரின் திட்டங்களை உரிய நேரத்தில் புரிந்துகொள்ளத் தவறியவர். அதன்காரணமாக பெரும் இழப்புக்குக் காரணமாக இருந்தவர், என்பவை முக்கியமானவை ஸ்டாலின் மறைவுக்குப்பிறகு 1956 பிப்ரவரி 25ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போ)யின் 20ஆவது கட்சிக்காங்கிரஸில் குருச்சேவ் ஒரு ”இரகசிய உரை’யை நிகழ்த்தினார். அதில் இதுவரை முதலாளித்துவ, ஏகாதிபத்தியவாதிகள் பரப்பிவந்த ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகளை தம்முடைய உரையில் இடம்பெறச்செய்தார்.
  எதிர்பாராத இடத்திலிருந்து, அதுவும் கம்யூனிஸ கோட்டையிலிருந்தே தங்கள் பொய்கள் குருச்சேவின் அறிக்கையாக வெளிவந்ததில் பூரித்துப்போன ’நியூயார்க் டைம்ஸ்’ ஏடு குருச்சேவின் உரையை ‘மகத்தான சாதனை’ எனக் கொண்டாடி ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்தக்கட்டுரையை எழுதிய வில்லியம் டாப்ஸ்மென் குருச்சேவின் வரலாற்றை எழுதி ‘புலிட்ஸர்’ பரிசும் பெற்றார். இலண்டன் முதலாளித்துவ ஏடான, ‘டெலிகிராஃப்’ குருச்சேவின் உரையை 20ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற உரை என புகழாரம் சூட்டியது.  . ஆனால் இந்தப்பொய்கள் எல்லாம் ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ என்ற குரோவர் ஃபர் எழுதிய நூலில் உண்மை அல்ல என்று ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுவிட்டன.
..