Friday, 15 May 2020

’காலம்தோறும் கம்யூனிச பூதம்’ -பகுதி 1


காலம்தோறும் கம்யூனிசபூதம் !
--------------------------------------------------- ---------------------------------------------------------
 செ. நடேசன்
  முன்னாள் பொதுச்செயலாளர்
  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

   ’ஒருபூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது: அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம்’என்றார்கள் போப் ஆண்டவரும், ஜார்அரசனான முதலாம் நிக்கலாயும் ஆஸ்திரிய நாட்டுஅரசியல் வித்தகன் என்று கருதப்பட்ட இளவரசன் மெட்டர்னிக்கும், முதலாளித்துவக்கண்ணோட்டம்கொண்ட ஃப்ரஞ்சு வரலாற்று ஆசிரியரான கிஸோவும். பழைய ஐரோப்பாவின் அதிகார சக்திகளான ஃப்ரஞ்சு தீவிரவாதிகளும், ஜெர்மன் போலீஸ் ஒற்றர்களும் இந்த பூதத்தை விரட்டுவதற்கான புனிதக்கூட்டணியை அமைத்துக்கொண்டார்கள்.,

  அந்தக்கூட்டணி காலந்தோறும் உலகெங்கிலுமுள்ள அதிகாரசக்திகளாலும், முதலாளித்துவசக்திகளாலும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது..  ஆட்சியிலுள்ள எதிரிவர்க்கத்தினரால் ‘கம்யூனிஸ்ட்’ என்று பழிதூற்றப்படாத எதிர்க்கட்சி எங்கேனும் உண்டா? தன்னிலும் முற்போக்கான எதிர்க்கட்சிகள் மீதும், பிற்போக்கான தன் எதிராளிகள் மீதும் ‘கம்யூனிஸ்ட்’ எனப்பட்டம்சூட்டி அவதூறு சேற்றை அள்ளிவீசாத ஆளும் வர்க்கக்கட்சிதான் எங்கேனும் இருக்கிறதா? என்று 1848லேயே கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை கேட்டது.
ஒடுக்குவோரும், ஒடுக்கப்படுவோரும் தீராப்பகைமை கொண்டுள்ள இன்றைய கொரோனா காலத்திலும், ‘இதுநாள்வரையில் நிலவிவந்துள்ள சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் ‘வர்க்கப்போராட்டங்,களின் வரலாறே ஆகும்’’என்ற நிலையிலும்  இடையறாத போராட்டத்தை நடத்திவரும் முற்போக்காளர்கள் பற்றி ’கம்யூனிஸ்ட்’ என்ற இந்தக்குழந்தைத்தனமான பூதக்கதையைக் கூறாதவர்கள் எங்கேனும் இருக்கிறார்களா? இதோ கொரோனா காலத்திலும் இந்த வைரஸ் தொற்று சீனாவின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு உலகநாடுகளை அச்சுறுத்தும் ஒரு கிருமி ஆயுதமாக வெளியிடப்பட்டுவிட்டது என்ற கதையை உலகெங்கும் ஆர்வத்தோடு பரப்பிவருகின்றன ஆளும்வர்க்கங்களும், அவர்களது அடிவருடிகளும்! இந்தக் கதாகாலட்சேபம் காலம்காலமாய் நடத்தப்பட்டுவருகிறது.

முதலாளித்துவம் என்னும் கொடிய வைரஸும்
மாமேதை லெனினின் சோவியத் யூனியனும்.

 மாமேதைலெனினின் புரட்சிகரமான அறிவுத்திறன்தான் ஜார் என்னும் கொடுங் கோலனின் முதலாளித்துவநுகத்தடி என்னும் கொடிய வைரஸின்கீழ் சீரழிக்கப்பட்ட ரஷ்யாவை மீட்டது. தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஆட்சிபீடத்தில் அமர்த்தியது. லெனினின் தலைசிறந்த மாணவரான தோழர் ஸ்டாலினின் உருக்குப்போன்ற மனவுறுதியின்கீழ்தான் அந்தநாட்டின் அடித்தட்டுமக்கள் தாம் மேற்கொண்ட சோசலிசவகைப்பட்ட சமூகத்தை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சியில் வெற்றிபெற்றார்கள். மனிதகுல வரலாற்றில் முதன்முறையாக கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது பொருள்ரீதியான மற்றும் கலாச்சாரத் தேவைகளில் மிக அதிகமான அளவுக்கு திருப்தியும் அடைந்தார்கள்.

 உலகவரலாற்றிலேயே முதன்முறையாக உருவான இந்தப்புதிய சமூக அமைப்பின் வெற்றிஎன்பது உலகநாடுகளின் மக்களிடையே அளவுகடந்த வியப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகிலேயே மிகப்பெரும் தொழில்வளர்ச்சி பெற்றநாடாக சோவியத் யூனியன் உருவாகியிருந்தது. இதன்விளைவாக, சர்வதேசப்பெருமுதலைகளாலும், அறிவுசார் உலகத்தில் நீக்கமற நிறைந்திருந்த அவர்களது அடியாட்களாலும் பாதுகாக்கப்பட்டுவந்த பழைய சமூக-பொருளாதாரஅமைப்புக்கு சோவியத் யூனியன் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது

 ஒரேநாட்டுக்குள் சோசலிசத்தைக்கட்டுவது’ லெனின் உருவாக்கிய  கருத்தோட்டம் ஸ்டாலினின் வீரம்செறிந்த, ஊக்கமூட்டும் முயற்சியின் விளைவாகவே லெனினின் ‘ஒரே நாட்டுக்குள் சோசலிசம்’ என்ற கருத்தோட்டம் உயிரோட்டமான ஓர் அமைப்பாக உருமாற்றப்பட்டது: உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒளிமய மானதோர் உலகைக்காட்டும் ஒருதிசைகாட்டியாகவும் அமைந்தது. உலகம் முழுவதும் கம்யூனிசத்தின் வழிகாட்டலில் சோசலிசப்பாதையில் நடைபோடத் துவங்கிவிட்டால் முதலாளித்துவமும், ஆளும்வர்க்கங்களும் என்னவாகும்?  உலகப்பாட்டாளி வர்க்கத்துக்கு கம்யூனிஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டிய, “இழப்பதற்கு அடிமைச்சங்கிலிகளைத்தவிர எதுவும் இல்லை: ஆனால், அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது’ என்ற கடைசி வரிகளைக் கண்டு ஆளும்வர்க்கங்கள் அஞ்சி நடுங்கின. ஏனெனில், அது நடந்துவிட்டால், அந்த ஆளும் வர்க்கங்கள் ‘இழக்கப்போவதோ இதுவரை அனுபவித்துவந்த ஓர் பொன்னுலகம்: ஆனால், அடையப்போவதோ நிரந்தரமான அடிமைச் சங்கிலிகள்’  .எனவே, ‘கம்யூனிசம் ஒரு பூதம்’ என்று விழிப்புணர்வுபெறாத மக்களிடம் கதாகாலட்சேபங்களை நடத்தத் துவங்கினார்கள்

1917ஆம் ஆண்டு ரஷ்யாவை புரட்சிகரமான சூழல் என்ற சூறைக்காற்று  சுற்றி வளைத்திருந்த காலம் அது. ஜார் மன்னன் துரத்தப்பட்டு கெரென்ஸ்கி தலைமை யிலான இடைக்கால அரசு அமைந்தது.  அது போல்ஷ்விக்குகளையும், தொழிலாளர் களையும் நசுக்கியது. லெனினை ஜெர்மன் உளவாளி என்றும், மொடாக்குடியன் என்றும், பெண்பித்தன் என்றும் அவதூறுகளை அள்ளிவீசி  அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானங்களையும் அறிவித்தது..   இந்தப்பொய்ப் பிரச்சாரங் களில் மாமேதை லெனினை இழிவுபடுத்த எடுத்த முயற்சிகள் தோல்;வியில் முடிந்தன.  

  இந்தக்கதாகாலட்சேபத்தில், அடுத்ததாக, ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்றும், இரக்கமே இல்லாத அரக்கன் என்றும், ஜார் என்ற கொடுங்கோலனின் மூதாதையான ‘இவான் தி டெரிபிள்’ என்றழைக்கப்பட்ட இவானின் கொடூரச்செயல்களையெல்லாம் விஞ்சிய நாசக்காரன் என்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஸ்டாலின்மீது மட்டும் ஏன் இத்தகைய பொய்களை அவிழ்த்துவிட வேண்டும்?  அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

 முதலாவதாக அவர், லெனினின் உண்மையான மாணவராக, ஒடுக்குவோர், சுரண்டுவோர், முதலாளிகள், நிலப்பிரபுக்கள் ஆகியோருக்கு எதிரான போரில் தனது சமகால போல்ஷ்விக்குகளை விஞ்சி முன்னேநின்றார். வர்க்கப் போராட்டத்தை பொருத்தவரை அவர் யாரையும், எதையும் விட்டுவைக்கவில்லை. ஜார் ஆட்சியின் எதிர்ப்புரட்சியாளர்களின் இயக்கத்தை இருந்த இடம் தெரியாமல் நசுக்கியபோதோ, அல்லது சோசலிசவகைப்பட்ட சீரமைப்புக்கு கேடுவிளைவிக்கத் துணிந்தவர்களை நச்சுப்பாம்புகளாக நசுக்கியபோதோ, அல்லது ஹிட்லரின் பாசிசக்கோட்டையை சுக்கு நூறாக தூளாக்கியபோதோ மிகக்கடுமையானவராக, எதற்கும் இடம்கொடாதவராக அவர் இருந்தார்.

  இரண்டாவதாக,’வர்க்கவிரோதிகள்மீதான வெறுப்பு ஸ்டாலினுக்கு இயற்கையாகவே அமைந்த ஒருகுணம்’   புரட்சிகர இயக்கங்களின் தாக்கம் மிகவும் அரிதாகிப்போன இன்றைய சூழலில், தொழிலாளிவர்க்கத்துக்கும், சோசலிசத்துக்கான போராட்டத் துக்கும் எதிரான சக்திகளால் ‘கொடுமையின் அவதாரமே ஸ்டாலின் தான்’ என்று குறிப்பாகப் பழிக்கப்படுவது இயல்பானஒன்றுதான். ஏனெனில், ’தலைமையை வீழ்த்துவதன்மூலம் தத்துவத்தையே வீழ்த்திவிட முடியும்’என்னும் எதிரிவர்க்கத் திட்டம், தோழர் ஸ்டாலினையே அதற்கான முதல் தேர்வாக்கிக்கொண்டது

  ஹிட்லரைவிட, மாபெரும்கொடுங்கோலர்களான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை விட ஸ்டாலின் மோசமானவர் என்று ஏன் சித்தரிக்கிறார்கள்? ஏனென்றால் கம்யூனிசம் முதலாளித்துவத்துக்கு நேர்எதிரான தத்துவம். ஏனென்றால், ஸ்டாலின் காலத்தில்தான் உலகப்பொதுவுடைமை இயக்கம் ஏராளமான நன்மைகளைச் செய்தது .ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி(போ) மூன்றாம் அகிலத்துக்கு தலைமை தாங்கியபோது முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் அஞ்சிப்பின்வாங்கின.   எனவேதான் ஸ்டாலினையும், சோவியத் யூனியனையும் வசைபாடுகிறார்கள்.
 ஸ்டாலினுக்கு எதிரான பொய்கள் பலவகையானவை. அவர் தேசிய இனங்களுக்கு எதிரானவர்: கலை இலக்கியவாதிகளை அடக்கி ஒடுக்கினார்: ஹிட்லரின் திட்டங்களை உரிய நேரத்தில் புரிந்துகொள்ளத் தவறியவர். அதன்காரணமாக பெரும் இழப்புக்குக் காரணமாக இருந்தவர், என்பவை முக்கியமானவை ஸ்டாலின் மறைவுக்குப்பிறகு 1956 பிப்ரவரி 25ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி (போ)யின் 20ஆவது கட்சிக்காங்கிரஸில் குருச்சேவ் ஒரு ”இரகசிய உரை’யை நிகழ்த்தினார். அதில் இதுவரை முதலாளித்துவ, ஏகாதிபத்தியவாதிகள் பரப்பிவந்த ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகளை தம்முடைய உரையில் இடம்பெறச்செய்தார்.
  எதிர்பாராத இடத்திலிருந்து, அதுவும் கம்யூனிஸ கோட்டையிலிருந்தே தங்கள் பொய்கள் குருச்சேவின் அறிக்கையாக வெளிவந்ததில் பூரித்துப்போன ’நியூயார்க் டைம்ஸ்’ ஏடு குருச்சேவின் உரையை ‘மகத்தான சாதனை’ எனக் கொண்டாடி ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்தக்கட்டுரையை எழுதிய வில்லியம் டாப்ஸ்மென் குருச்சேவின் வரலாற்றை எழுதி ‘புலிட்ஸர்’ பரிசும் பெற்றார். இலண்டன் முதலாளித்துவ ஏடான, ‘டெலிகிராஃப்’ குருச்சேவின் உரையை 20ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்பெற்ற உரை என புகழாரம் சூட்டியது.  . ஆனால் இந்தப்பொய்கள் எல்லாம் ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’ என்ற குரோவர் ஃபர் எழுதிய நூலில் உண்மை அல்ல என்று ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டுவிட்டன.
..

No comments:

Post a Comment