நீதிமன்றத்தீர்ப்புக்களும்
கல்வித்துறையின் அணுகுமுறைகளும்
செ.நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
![]() |
தமிழ்நாட்டின்
கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும்கல்வித் துறை ஊழியர்களின் நலன்களை
அரசுவிதிகளின்படி பேணிப்பாதுகாத்து, அவர்களை மகிழ்வான சூழ்நிலையில் கல்விப்பணியாற்றவைத்து,
தமிழ் நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்தும் கடமை இயக்ககங்களுக்கும், பள்ளிக்கல்வி ஆணையர்,
பள்ளிக்கல்விச்செயலாளர் ஆகியோருக்கும், உண்டு.
ஆனால் நடப்பது
என்ன?
ஆசிரியர்களும், கல்வித்துறையிலுள்ள அரசு ஊழியர்களும்
தங்களது பணிநிலை தொடர்பான பல்வேறு அம்சங்களில் அரசின் விதிகள் மீறப்பட்டு, அவர்கள்
பாதிக்கப்படும்போது துறைசார்ந்த முறையீடுகளை அளிக்கிறார்கள். அவற்றுக்கு அரசுவிதிகளின்படி
தீர்வுகாணவேண்டிய மாவட்டக்கல்வி அலுவலர்களும், முதன்மைக்கல்வி அலுவலர்களும், இயக்குநர்களும்,
பள்ளிக்கல்விச்செயலாளரும் பெரும்பாலும் அப்பிரச்சனைகளுக்கு
பதில் அளிப்பதில்லை. அத்தகைய தருணங்களில் அவர்களுக்கு நீதிமன்றங்களை அணுகுவதைத் தவிர
வேறுவழி இல்லாமல் போகிறது. ஆனால், நீதிமன்றங்களுக்குச்சென்று அவர்கள் பெறும் தீர்ப்புக்கள்
நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா, என்பது கேள்விக்குறியாகவே இன்றும் நீடிக்கிறது. இதற்குக்
காரணம் என்ன? “”In Tamilnadu, the
Education Department did not apply their mind
in the issues and judgments”. தமிழ்
நாட்டின் கல்வித்துறை அலுவலர்கள் பிரச்சனைகளிலும், தீர்ப்புக்களிலும் தங்கள் சிந்தனையைச்
செலுத்துவதில்லை” என ஒருமுறை உச்ச நீதிமன்றம் கவலையுடன் சுட்டிக்காட்டியது இன்றும்
தொடர்வதுதான்.
மத்திய
அரசுக்கு இணையான ஊதியம் தங்களுக்கு அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து
ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் 1985 மற்றும் 1988ல் ஜேக்டி -
ஜேக்டி பேரமைப்பு போராட்டங்களை நடத்தினார்கள். அதன்விளைவாக தமிழக அரசு 1.6.1988 முதல்
மத்திய அரசின் ஊதியவிகிதங்களை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக்கும், அரசுஊழியர்களுக்கும்
நடைமுறைப்படுத்தியது.
ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்களைப் பொருத்தவரை இடைநிலைத்தகுதி பெற்ற உதவி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளித்தலைமை
ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் என அனைவரும் 1.6.1988க்கு முன்பு,ஒரே
ஊதியவிகிதத்தில், அதாவது, சாதாரண நிலையில் 610- 20-730-25-955-30-1075 ஊதியவிகிதத்தையும்,
தேர்வுநிலையில் 705-20-745-25-845-35-1200 ஊதியகிதத்தையும், சிறப்பு நிலையில் 780-
35-1025-40-1385 ஊதியவிகிதத்தையும் பெற்றுவந்தார்கள். ஆனால், மத்திய அரசு ஊதியவிகிதத்தின்படி
1.6.1988 முதல் இடைநிலை உதவிஆசிரியர்களுக்கு சாதரணநிலைக்கு 1200-30-1560-40-2040 ஊதியவிகிதமும்,
தேர்வுநிலைக்கு 1400-50-2300-60-2600 ஊதியவிகிதமும், சிறப்பு நிலைக்கு 1640-60-2600-75-2900
ஊதியவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் சாதாரண நிலைக்கு 1400-50-2300-60-2600 ஊதியவிகிதமும், தேர்வு நிலைக்கு
1640-60-2600-75-2900 ஊதியவிகிதமும், சிறப்பு நிலைக்கு 2000-60-2300-75-3200 ஊதியவிகிதமும்
நிர்ணயிக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சாதாரணநிலைக்கு
1640-60-2600-75-2900 ஊதியவிகிதமும், தேர்வுநிலைக்கு 2000-60=2300-75-2900 ஊதியவிகிதமும்,
சிறப்பு நிலைக்கு 2200-75-2800-100-4000 ஊதியவிகிதமும் நிர்ணயிக்கப்பட்டது.
ஆரம்பப்பள்ளி
தலைமை ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றி பழையசிறப்பு நிலை 780-1385 ஊதியவிகிதத்துக்கு
இணையாக புதிய 2000-2900 ஊதியவிகிதத்தில்1.6.1988ல் ரூ2120/ மற்றும் ரூ2180/ ஊதிய நிர்ணயம்
பெறவேண்டியவர்கள் 1.6.1988க்கு முன் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு
பெற்றதால் நடுநிலைப்பள்ளி சாதாரண நிலை 1640-2900 ஊதியவிகிதத்தில் 1820 மட்டுமே நிர்ணயம்
பெற்றார்கள். பதவி உயர்வுக்குமுன் ஏற்கனவே பெற்றுவந்த ஊதியம் குறைக்கப்படலாமா? பதவிஉயர்வும்,
உயர்கல்வித்தகுதியும் தண்டனை ஆகலாமா? என்று ஆசிரியர்கள் முறையிட்டபோது விதி 4(3) ன்படி
கீழ்நிலைப்பதவியில் தொடர்ந்து நீடித்திருந்தால் என்ன ஊதியம் பெற்றிருப்பார்களோ அந்த
ஊதியத்தை நிர்ணயிக்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு
பதவி உயர்வுபெற்றவர்கள் இழப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள்.
தேர்வுநிலை. சிறப்புநிலைகளுக்கு ஒத்த ஊதியவிகிதத்தில் பணியாற்றிய காலம்முழுவதையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற அரசுவிதியின்படி
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 1.6.1988க்கு முன் இடைநிலை உதவி ஆசிரியர், ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என ஊதியவேறுபாடு இல்லாமல் ஒத்த ஊதியவிகிதத்தில் பணியாற்றிய காலம் முழுவதையும் தேர்வுநிலை/சிறப்பு நிலை வழங்க கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். அரசு விதிகளின்படியான இந்தக்கோரிக்கை கல்வித்துறை அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அலுவலர்கள், இயக்குநர்கள், செயலாளர்களால் - பிரச்சனைகளில் சிந்தனையைச்செலுத்த மறுத்து
வரும்.அவர்களது போக்குகளால் - இப்பிரச்சனை எவ்வித பதிலுமின்றி கிடப்பில் போடப்பட்டது
எனவே, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப்பெற்றார்கள். அவர்களுக்கு 1.6.1988க்கு முன் உள்ள ஒத்த ஊதியவிகிதப்பணிக்காலத்தைக்
கணக்கிட்டு 1.6.1988ல் சிறப்பு நிலை வழங்க
அரசு ஆணை 210 கல்வி(ஜி1)துறை நாள் 14,10.2009 பிறப்பிக்கப்பட்டது.
1.6.1988ல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகப்
பணியாற்றிய 260 பேர் தவிர மற்ற பலர் இதில் விடுபட்டார்கள்.
உச்சநீதிமன்ற
W.P.No.463 of 1971 மற்றும் 2004 of 1973,
நாள் 10.12.1974 வழக்குகளில் மேதகு நீதிபதிகள் எம்.ஹெச்.பெய்க், வி.ஆர்.கிருஷ்ணஐயர்
மற்றும் பி.கே.கோஸ்வாமி ஆகியோர் அளித்த தீர்ப்பின் பத்தி 24ல்.’we may however,
observe that, when a citizen aggrieved by
the action of a Government Department has approached the court and obtained a
declaration of law in his favor, other , in like the cumstances should able to relay , on the sense of responsibility of the
department , concerned to expect that they will be given the benefit of this
declaration without the need to take their grievances to the court” என்று குறிப்பிட்டார்கள்
இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்கள் நீதிமன்றத்துக்கு தங்கள் குறைகளைக்கொண்டுசெல்லாமலேயே,
தங்கள் அரசுத்துறைகளின் பொறுப்புணர்வின்மீது நம்பிக்கைவைத்து அவர்களைச் சார்ந்து நிற்கலாம்’
என்ற வழிகாட்டலின்படி அரசு ஆணை எண் 210ல் இடம்பெற்ற 260 பேர்தவிர மற்றவர்கள் கல்வித்துறை
செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு விண்ணப்பித்தார்கள்.
இதேவேளையில், 1.6.1960 முதல் 31.5.1988 முடிய உள்ளவர்களின் சிலர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தீர்ப்பின்படி அரசு ஆணை எண் 271 நிதி (பென்ஷன்) நாள் 15.6.1998ன்படி பணப்பயன் பெற்றார்கள், இதைத்
தொடர்ந்து அன்றைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு,கருணாநிதி 1.9.2008 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் ‘பென்ஷனர்கள் வயதான காலத்தில் வழக்குமன்றம்
செல்வதால் ஏற்படும் காலவிரயம், செலவுபோன்ற இன்னல்களைத் தவிர்க்க இந்தஅரசு முடிவு செய்துள்ளது.”
என கொள்கைப்பிரகடனம் வெளியிட்டு அரசு ஆணை எண் 579 நிதி(பென்ஷன்) நாள் 15.9.2008ஐ பேரறிஞர்
அண்ணா பிறந்த நாளன்று வெளியிட்டு வழக்குமன்றம் செல்லாமல் ஆயிரக்கணக்கானோர் பயனடைய வழிவகுத்தார்
ஆனால்,
உச்சநீதிமன்ற வழிகாட்டலையோ, தமிழக முதல்வர், ‘பென்ஷனர்கள் வயதான காலத்தில் வழக்குமன்றம்
செல்வதால் ஏற்படும் காலவிரயம், செலவுபோன்ற இன்னல்களைத்தவிர்க்க பிறப்பிக்கப்பட்ட அரசு
ஆணை எண் 579 நிதி பென்ஷன் நாள்:15.9.2008ஐயோ கணக்கில் எடுத்துக்கொள்ளாத - இப்பிரச்சனையில்
தங்கள் சிந்தனையை முழுவதும் செலுத்தத்தவறிய - கல்வித்துறை அலுவலர்களால் நடுநிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P.No.3263 of 2012 and M.P.No.1
of 2012 முதலான பல வழக்குகளைத் தொடுத்தார்கள்.
இந்த வழக்குகளை
விசாரித்த மாண்புமிகு நீதிபதி டி.ஹரி பரந்தாமன் அவர்கள் 18.6.2015 அன்று அளித்த தீர்ப்பின்
பத்தி 11-ல் ‘விண்ணப்பதாரருக்கு 1.6.1988க்கு முன் உள்ள ஒத்த ஊதியப்பணிக்காலத்தைக்
கணக்கிட்டு தேர்வு நிலை/சிறப்புநிலை இதுவரை அளிக்கப்படாமலிருந்தால் நான்கு வார காலத்துக்குள்
அளிக்கப்படவேண்டும் :1.6.1988 முதல் பணிக்கால ஊதிய நிலுவையையும், ஓய்வுபெற்ற நாள் முதல்
ஓய்வூதிய நிலுவையையும் நான்குவார காலத்துக்குள் வழங்கவேண்டும்’ என கால நிர்ணயத்துடன்கூடிய
உத்தரவைப் பிறப்பித்தார்.
ஆனால்
வழக்கம்போலவே, ஆசிரியர்களின் நலனில் அக்கறையற்றிருந்த கல்வித்துறை இந்தத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல்
சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுவழக்கை தொடர்ந்தது. ஆசிரியர்களும் இந்த மேல்முறையீட்டு
வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். W.A.No.34/2017 முதல் W..A.No.1816/2017 வரையான
வழக்குகளில் 3.1.2019 அன்று தீர்ப்பளித்த மாண்புமிகு நீதிபதிகள் திரு.எஸ்.மணிக்குமார்
மற்றும் திரு.சுப்பிர மணியம் பிரசாத ஆகியோர் தங்கள் ஒருங்கிணைந்த தீர்ப்பின் பத்தி
எண் 15(8)ல் “……to direct the appellents to Fix the pay in
Selection Grade/ Special Grade with in a period of Four Weeks from the date of
receipt of a copy of this Judgment and consequently the appellents are further
directed ‘revise the Pension/Family Pension, and disburse both the arrears of
salary and differential Pension with in a period of eight weeks , there after. Consequently,
connected civil miscellaneous petitions are closed. No costs.” என்று உத்தரவிட்டார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளையில் ஆசிரியர்களால்
தொடரப்பட்ட வழக்குகளில் 26.3.2019ல்பிறப்பித்த ஒருங்கிணைந்த தீர்ப்பாணையில், இந்தப்பிரச்சனை
ஏற்கனவே டிவிஷன் பெஞ்ச்-ல் முடிவுசெய்யப்பட்டுவிட்டதால்,மேலும் விசாரணைகள் இந்த நீதிமன்றத்தில்
தேவைப்படவில்லை. அரசு சம்பந்தப்பட்ட ஊழியர்களின் ஊதியத்தையும், ஓய்வூதியம்/குடும்பஓய்வூதியம்
ஆகியவற்றை திருத்தியமைத்து, பணிக்கால நிலுவையையும், ஓய்வூதியம்/குடும்ப ஓய்வூதிய நிலுவையையும்
எட்டுவாரகாலத்துக்குள் வழங்கவேண்டும்’ என்று
காலவரையிட்டு உத்தரவிடப்பட்டது.
3.1.2019
அன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டின் தீர்ப்பை 2019
ஏப்ரல் முடிவுக்குள் நடைமுறைப் படுத்தியிருக்கவேண்டிய கல்வித்துறை, நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு தொடர அறிவிப்பு அளிக்கப்பட்டபிறகு, நீதிமன்ற அவமதிப்பு குற்றம் தங்கள் மீது
வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் தீர்ப்பை தப்பும்.தவறுமாக அவசரகதியில் நடைமுறைப்படுத்தத்
துவங்கியிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, நாகப்பட்டிணம் மாவட்டத்தில்
11.8.1997ல் ஓய்வுபெற்றபின் வழக்குத் தொடர்ந்து 11.6.2009ல் இறந்துவிட்ட ஆசிரியருக்கு
1.6.1988 முதல் கருத்தியலாகவும், நிதிப்பயன் 1.9.1997 முதல்பெற ஆணையிடப்படுகிறது: ஓய்வூதியப்பயன்கள்
மட்டும் பெற தகுதியுடையவர் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது’ என நீதிமன்றத்தீர்ப்புக்கு
மாறாக பணிக்கால ஊதிய நிலுவை மறுக்கப்பட்டிருக்கிறது.
மதுராந்தகம்
மாவட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந,க,எண். 1312/அ3/2020 உத்தரவில் 13.6.1986 முதல்
நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியராக பதவி உயர்வுபெற்று 30.6.2000 முடிய பணியாற்றி
ஓய்வுபெற்றவருக்கு,”1.6.1988 அன்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்ற வில்லை’
என்று குறிப்பிட்டு அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ள வேடிக்கை நிகழ்ந்துள்ளது! இதுபோன்று, நீதிமன்றத்தீர்ப்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், 03.01.2019 தீர்ப்பின்படி
தகுதியுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிராகரித்து ஆணைபிறப்பிக்கும் அலங்கோலங்கள் கல்வித்துறையில்
தமிழ்நாடு முழுவதும் அரங்கேறிவருவது கவலை அளிக்கிறது.
இந்திய
ஆட்சிப்பணி (I.A.S) தகுதிபெற்ற பள்ளிக்கல்விச்செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையாளர், பள்ளிக்கல்வி
இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் என அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்த உயர் அலுவலர்கள்
இருந்தும் - ஆசிரியர்கள் பலரும் ஓய்வுபெற்று, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுக்கு
சாதகமான தீர்ப்பைப்பெற்று, அதன் பிறகு கல்வித்துறை அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு
வழக்கை தொடர்ந்தபோது அந்த வழக்கிலும் தங்களை இணைத்துக்கொண்டு - 10 ஆண்டுகாலம் கழித்துப்பெற்ற
தீர்ப்பைக்கூட முழுமையாக நிறைவேற்றாமல் காலம்
தாழ்த்தி, அல்லது தீர்ப்பை மறுத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுவருவது கல்வித்துறையின்
மேன்மைக்கு அழகல்ல.
கல்வித்துறை
செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையாளர் தலைமையிலுள்ள கல்விஅலுவலர்கள், ஆசிரியர்கள்
மற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளிலும், நீதிமன்றத்தீர்ப்புக்களிலும், தங்கள் மனதைச்செலுத்தி
தீர்வுகாண்பதில்லை என ஒருமுறை உச்ச நீதிமன்றம் கவலையுடன் சுட்டிக்காட்டியதை இப்போதாவது
தமிழ் நாட்டின் கல்வித்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். பள்ளிக்கல்விச் செயலாளரும், பள்ளிக்கல்வி
ஆணையாளரும் தொடர்கதையாக நிகழ்ந்துவரும் இந்த அவலத்துக்கு இன்றாவது முடிவுகட்டவேண்டும்:
நீதிமன்றத்தீப்புக்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற விளக்க ஆணையைப் பிறப்பித்து,
மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு
வழிகாட்டவேண்டும், என ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் நிறைவேற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
அந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் நிறைவேற உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
