Monday, 16 November 2020

ஒரு கம்யூனிஸ்ட் இயற்பியல் ஆசிரியை தென்னிந்தியாவில் கோவிட்–19 வரைபட வளைவைத் தட்டையாக்கியது எவ்வாறு ?

 ஒரு கம்யூனிஸ்ட் இயற்பியல் ஆசிரியை தென்னிந்தியாவில் கோவிட்–19 வரைபட வளைவைத் தட்டையாக்கியது எவ்வாறு ?

                                 ஆங்கிலத்தில்:வைஷ்ணவி சந்திரசேகர்      

                                   தமிழில்: தாரை இராகுலன்

 

உலகச் சுகாதார அமைப்பு (WHO) ஜனவரி 18 அன்று சீனாவின் வுஹானில் நாவல் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தனது முதல் அறிக்கையை வெளியிட்டபோது, இந்தியாவில் சில மாநில அரசுகளே மிகுந்த கவனம் செலுத்தின.  ஆனால், தென் மாநிலமான கேரளாவின் சுகாதார அமைச்சராகப் பணியாற்றும் எளிய பெண்மணியான கே. கே. ஷைலஜா, உடனடியாக சுறுசுறுப்படைந்தார்.

கேரளாவைச் சேர்ந்த பல மாணவர்கள் வுஹான் பல்கலைக்கழகத்தில் படிப்பதை ஷைலஜா அறிவார்; முந்தைய ஆண்டு சிலர் ’பயிற்சிவேலை’(internship) கேட்டிருந்தார்கள். ஒரு நோய் வெடிப்பு ஏற்படுத்தக்கூடிய அழிவை அவர் நேரடியாக அறிந்திருந்தார். 2018 ஆம் ஆண்டு, முதல் முறை அமைச்சராக இருந்தபோது, அவர் விலங்குகளிடமிருந்து மக்களுக்குப் பரவக்கூடிய மற்றொரு கொடிய நோய்க்கிருமியான நிபா வைரஸ் வெடித்ததை எதிர்க்கொண்டார், "எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதை நாங்கள் அறிவோம்," என்கிறார் அவர்.

ஜனவரி 24 ஆம் தேதிக்குள், ஷைலஜா தனதுவிரைவான மறுமொழிக் குழு’வின் கூட்டத்தைக் கூட்டியிருந்தார், ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்து, கண்காணிப்புக் குழுக்களை அணிதிரட்டினார்.  ஜனவரி 27 அன்று, முதல் குழு மாணவர்கள் வுஹானிலிருந்து திரும்பினர். மூன்று நாள்களுக்குப் பிறகு, அவர்களில் ஒருவரின் கோவிட்-19 பரிசோதனை ( பாசிடிவ்) நேர்மறையானது, இதுவே இந்தியாவின் முதல் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்று.

பெரிய நகர்ப்புற மக்கள்தொகை, பலர் வெளிநாடுகளில் வசிப்பது (முன்னும் பின்னுமாகப் பயணம் செய்கிறார்கள்), பிற மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வருகை போன்ற காரணங்களால் கேரளா தீநுண்மி பரவுவதற்கு வாய்ப்பாக உள்ளது. இலக்குடனான சோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மூலம், இடதுசாரி மாநிலஅரசு முதல்சில மாதங்களில் தினசரி புதிய நோய்த் தொற்றுகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வந்தது, இது இந்தியாவின் மற்ற பகுதிகளைவிட வரைபட வளைவைத் தட்டையாக்கியது. தேசியப் பொதுமுடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால், நோய்த்தொற்றுகள் மீண்டும் அதிகரித்துள்ளன, ஆனால் விசயங்களைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களில் 0.36% பேர் மட்டுமே இறந்துள்ளனர், இது உலகின் மிகக்குறைந்த இறப்பு விகிதமாகும். (இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, கேரளாவிலும் இளம் மக்கள் தொகை அனுகூலமாக உள்ளது, எனினும் பல பார்வையாளர்கள் அதன் குறைந்த இறப்பு விகிதத்திற்கு அதன் தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் இன்னும் கொள்ளளவை எட்டாத மருத்துவமனைகள் ஆகியவையே காரணம் என்று கூறுகின்றனர்.)

"பல வழிகளிலும், [கேரளா] அதைச் சரியாகப் புரிந்து கொண்டது" என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தின்திரிவேதி உயிர் அறிவியல் பள்ளி’யின் இயக்கு நர் வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல்.  "எந்தவொரு இந்திய மாநிலமும் அதைச் சரியாகப் பெற்றிருக்கக்கூடும்."

இந்தப்பெருமையெல்லாம் ’ஷைலஜா டீச்சர்’ என்று அழைக்கப்படும் அமைதியும் உற்சாகமும் கொண்ட கேரளாவின் சுகாதார அமைச்சரையே சாரும், அவர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். நாட்டின் மிகஉயர்ந்த கல்வியறிவு விகிதங்கள் மற்றும் அதன் சிறந்த ஆரம்ப சுகாதார அமைப்பு உள்ளிட்ட வரலாற்று அனுகூலங்களை கேரளா பெற்றிருந்தாலும், தீநுண்மிக்கு எதிரான போரில் ஷைலஜாவின் தலைமை முக்கியமானது என்கிறார்கள் நிபுணர்கள். "அவர் மக்களின் கருத்துளைக் கேட்கிறார்; மருத்துவமனைகளுக்கு தனிப்பட்ட முறையில் செல்கிறார்; மருத்துவர்களுடன் பேசுகிறார்," என்கிறார் இந்தியப் பொதுச் சுகாதார அறக்கட்டளையின் இயக்குனர் கே.ஸ்ரீநாத் ரெட்டி. "அவர் திறன் மற்றும் அடக்கம் ஆகிய பண்புகளை ஒருங்கே பெற்ற ஒரு நபராகக் காட்சியளிக்கிறார்."

ஷைலஜா ஒரு விஞ்ஞானி அல்ல, ஆனால் அறிவியல் மீதுள்ள அவரது ஆர்வம் 1970 களின் பிற்பகுதியில் இயற்பியல் மற்றும் உயிரியல் ஆசிரியராக இருந்த காலத்திற்கு அவரை இட்டுச்செல்கிறது. அவரும் அவரது மாணவர்களும் வகுப்பில் உள்ளூர்ச் செய்தித்தாள்களின் அறிவியல் பகுதியைப் படிப்பார்கள் என்று அவர் நினைவு கூர்கிறார். "விண்வெளி, சந்திரனில் தரையிறக்கம் போன்ற, பாடத்திட்டத்தில் இல்லாத பல விசயங்கள் பற்றியும் நாங்கள் மிகவும் சுவராசியமான விவாதங்களை மேற்கொள்வோம்," என்று அவர் கூறுகிறார். ஆயினும், இறுதியில் அரசியல் அவரை ஈர்த்துக்கொண்டது. 1950 களில், அவரது குடும்ப உறுப்பினர்கள் வளர்ந்து வரும் பொதுவுடைமை இயக்கத்திலும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திலும் இணைந்தனர்.

அவரது பாட்டி தீண்டாமைக்கு எதிரான உள்ளூர் இயக்கங்களில் பங்கேற்றார், சில சமயங்களில் இளம் ஷைலஜாவை கொந்தளிப்பான போராட்டங்களுக்கு அழைத்துச் சென்றார். ஷைலஜா தனது பாட்டி தனக்கு தைரியமாக இருக்கக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுகிறார், அரசியலில் மட்டுமல்ல, (மற்ற விசயங்களிலும்!) பெரியம்மை ஒரு காலத்தில் கேரளாவில் பரவலாக இருந்தது, நோய்வாய்ப்பட்டவர்கள் பெரும்பாலும் விலக்கப்பட்டனர்: அல்லது இறப்பிற்கு விடப்பட்டனர்; நோயாளிகள் ஒரு பெண்தெய்வத்தால் சபிக்கப் பட்டதாகப் பலரும் நம்பினர். ஆனால் அவருடைய பாட்டி அல்ல! அவர் நோயாளிகளின் வீடுகளுக்குச் சென்று சுத்தமான நீர், நல்ல உணவு மற்றும் பாரம்பரிய மூலிகை மருந்துகளை வழங்குவார். "அவர் மிகவும் தைரியமாக இருந்தார்," ஷைலஜா கூறுகிறார். "எல்லோருக்கும் அத்தகைய பாட்டி இருக்க வேண்டும்."

மாநில கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஒன்றில் தலைமைப் பதவிகளில் பணியாற்றிய பின்னர், ஷைலாஜா 2016-இல் இடது தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தபோது சுகாதார மற்றும் சமூக நல அமைச்சராக நியமிக்கப்பட்டார். பெரியம்மை பற்றிய நினைவுகள் 2018 இல் அவர் மனதில் இருந்திருக்கலாம், ஏனெனில் 50% முதல் 75% மக்கள் இறப்பு விகிதத்துடன் கூடிய வௌவால் மூலம் பரவும் வைரசான நிபா மாநிலத்தில் முதல் முறையாகப் பரவியபோது அவர் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர உறுதியுடன் போராடினார். அனைவரின் ஆலோசனையையும் புறக்கணித்து, ஷைலஜா மிகமோசமான பாதிப்புக்குள்ளான கிராமத்திற்குச் சென்று குடியிருப்பாளர்களை அமைதிப்படுத்தி, ’நிபா, குறைந்த அளவே நபருக்கு நபர், குறிப்பாக மருத்துவமனைகளில், பரவக்கூடும் என்றாலும், அன்றாட வாழ்க்கையில் ஆபத்து குறைவாகவே உள்ளது’ என்பதையும் விளக்கினார். இறுதியில் அது வெகுஜனப் பரவலாக மாறுவதைத் தடுத்தது.

முன்னதாக 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இந்தியா இரண்டு நிபா வெடிப்புகளை மட்டுமே கண்டுள்ளது, இரண்டுமே மேற்கு வங்காள மாநிலத்தில். பின்னர் உலகச் சுகாதார அமைப்பு (WHO) கேரளாவின் ஆரம்பகாலச் செயல்பாடுகள் முன் ஆயத்தமில்லாதது மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் போதிய பயிற்சி பெறவில்லை என்ற முடிவுக்கு வந்தது. எவ்வாறாயினும், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதன் மூலமும், 2000-இற்கும் மேற்பட்ட தொடர்புகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலமும் அந்த வெடிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இறுதியில் 19 உறுதிப்படுத்தப்பட்ட நோய் நிகழ்வுகளும் 17 மரணங்களும் இருந்தன. மேலும் ஷைலஜாவும் அவரது குழுவும் அடுத்த வெடிப்புக்கு மிகவும் தயாராக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். மேம்பட்ட கண்காணிப்பு மற்றும் தொடர்புத் தடமறிதல் அமைப்புகள், நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் மருத்துவமனை நெறிமுறைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர். ’கடந்தகால வெடிப்புகளின் படிப்பினைகளை ஒவ்வொரு மாநிலமும் நினைவில் வைத்திருப்பதில்லை’ என்று ஜமீல் குறிப்பிடுகிறார். "அமைதிக் காலத்தில் திறனை வளர்ப்பது முக்கியம்," என்ற அவர் மேலும் கூறுகிறார், "அவர்கள் அதில் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்."

ஒரு தொற்றுநோயின்போது முள்நிரம்பிய சமூக அம்சங்களை எவ்வாறு கையாள்வது என்பதையும் ஷைலஜா கற்றுக்கொண்டார். நிபா வெடித்ததில், அரசாங்கம் ஆரம்பத்தில் இறந்தவர்களை எரியூட்டியது. இது கேரளாவின் பல முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஓர் உறவினர் ஷைலஜாவை கண்ணீருடன் அழைத்தார், அவர் ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க தனது குழுவிடம் கேட்டுக்கொண்டார். இறுதியாக, அவர்கள் ஆழமாக அடக்கம் செய்வதற்கான ஒரு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தனர், அதில் ஓர் உடல் காற்றுப் புகாத நெகிழியால் மூடப்பட்டு 3 மீட்டர் ஆழத்தில் நிலத்தடியில் புதைக்கப்படுகிறது. " சிலநேரங்களில் எங்கள் சொந்த நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்," என்கிறார் அவர்.

கேரளாவின் பாரம்பரியமான வலுவான சமூக சேவைகள் புதிய தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவியுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேசியப் பொதுமுடக்கத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்குமிடம் மற்றும் தாராளமாக உணவு இருப்புகளை வழங்கியது, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்வதைத் தடுத்து, அதனால் ஏற்படும் வைரஸ் பரவலைத் தடுக்க உதவியது. பல பணக்கார நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய குழந்தை இறப்பு விகிதங்கள் உட்பட, நாட்டின் சில சிறந்த சுகாதார குறியீடுகளுடன் மாநிலத்தின் சுகாதார முன்னேற்றம் தொடங்கியது. அதிகாரப் பகிர்வு குடிமக்களின் பங்களிப்பு மற்றும் பொதுத் தகவல்தொடர்பு ஆகியவற்றை பலப்படுத்தியுள்ளது, ரெட்டி குறிப்பிடுகிறார். "அரசியல் துருவமுனைப்புகள் இருந்தபோதிலும், கிராமசபை மட்டத்தில், பெரும் சமூக ஒற்றுமை உள்ளது, குறிப்பாக ஆரம்ப சுகாதார முறைக்கு ஆதரவாக," என்று அவர் கூறுகிறார்.

விஞ்ஞான ஆலோசனையில் ஈடுபடுவதன் மூலமும், அமைச்சுகள் முழுவதும் ஆதரவை உருவாக்குவதன் மூலமும், பொதுமக்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும் ஷைலஜா அந்த நன்மைகளை உருவாக்கினார் என்று ரெட்டி கூறுகிறார். "மிகவும் படித்த மற்றும் அரசியல் ரீதியாகச் சுறுசுறுப்பான மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில், குடிமக்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெறுவதைப் பொறுத்தே முன்னேற்றம் அமையும், அவரால் அதைத் திறம்பட செய்ய முடிந்தது," என்று அவர் கூறுகிறார்.

இருப்பினும், அரசியல் போட்டியாளர்களிடமிருந்து அவர் எதிர்ப்பைச் சந்தித்துள்ளார், ஒரு பெண்ணாக அவர் பெற்ற வெற்றி மனக்கசப்பையே அளித்தது. ஒருவர் அவரை "நிபா இளவரசி" என்று கிண்டலாக அழைத்தார், குறிப்பாக, ஷைலஜாவின் தைரியமான நடவடிக்கைகள் பற்றிச் சித்தரிக்கும் பிரபலமான ஒரு நடிகரால் நடிக்கப்பட்ட நிபா வைரஸ் பரவல் தொடர்பான ’வைரஸ்’ என்னும் திரைப்படம் வெளியான பிறகு. மிகச் சமீபத்தில், ஓர் அரசியல்வாதி அவரை "கோவிட் ராணி" என்று அழைத்தார். நோய்த்தொற்றின் சமீபத்திய அதிகரிப்பால் எதிர்ப்பு அதிகரிக்கக்கூடும்.

இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டு, பயணம் அதிகரித்தபோது, கேரளாவின் சில பகுதிகளில் நோய் நிகழ்வுகள் கொத்தாக வளர்ந்தன, ஆகஸ்ட் மாத இறுதியில் அறுவடைத் திருவிழாவிற்குப் பிறகு அவை அதிகரித்தன. அக்டோபருக்குள், நாட்டின் மிக அதிகத் தினசரி நோய் நிகழ்வுகள் கொண்ட மாநிலமாகக் காணப்பட்டது. சில பார்வையாளர்கள், அரசாங்கம் தளர்வடைந்துவிட்டது, போதுமான அளவு சோதனை செய்யவில்லை என்கிறார்கள். மற்றவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையைச் சுட்டிக்காட்டுகின்றனர். "பொதுமுடக்கம் நீக்கப்பட்ட பின்னர் ஏராளமான மக்கள் வளைகுடாவில் இருந்து திரும்பி வந்தனர்" என்று ஜமீல் குறிப்பிடுகிறார்.

ஆரம்பகால கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட சோர்வு, குறிப்பாக சுகாதார ஊழியர்களிடையே அமைந்திருக்கலாம், மேலும் நடுவண் அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர், நல்ல சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் குறைந்த இறப்பு விகிதங்கள் ஆகியவை மக்களிடையே வைரஸ் பற்றிய பயத்தைப் போக்கிவிட்டன எனக் கருதுகிறார். ஆகஸ்ட் மாதம் ஷைலஜா ’சயின்ஸ்’(Science) இதழுடன் பேசியபோது, படுக்கைகளின் எண்ணிக்கையில் விரிவாக்கம் மற்றும் சில பொதுமுடக்க நடவடிக்கைகளைப் புதுப்பிப்பதற்கான பரிந்துரைகளுடன் சாத்தியமுள்ள இரண்டாவது அலைக்குத் தயாராகி வருவதாகக் கூறினார். இறப்பு எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பது மற்றும் வயதானவர்களைப் பாதுகாப்பதே அவரது குறிக்கோள் என்று அவர் கூறினார். "நாம் ஒரு தடுப்பூசி பெறும் வரை, நாம் அனைவரும் நம் வாழ்வில் சில இன்பங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.

திருவிழாக் கூட்டங்களும் அரசியல் ஆர்ப்பாட்டங்களும் சமீபத்திய உயர்வுக்குப் பங்களித்திருப்பதாக சமீபத்தில் அவர் ஒப்புக் கொண்டார், மேலும் பயணத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பரிந்துரைத்தார். இப்போது, முன்னெப்போதையும் விட, கேரளாவின் கடின உழைப்பாளி சுகாதார அமைச்சர் தனது எல்லாத் திறன்களையும் - மற்றும் அவரது பாட்டியின் துணிச்சலான ஆன்மாவையும் - வைரஸுக்கு எதிரான புதிய உத்திகளைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

நன்றி: ”சைன்ஸ்’(‘Science’) நவம்பர் 2020 இதழ்.

https://www.sciencemag.org/news/2020/11/how-communist-physics-teacher-flattened-covid-19-curve-southern-india?utm_campaign=SciMag&utm_source=JHubbard&utm_medium=Facebook

Friday, 23 October 2020

பாஜகவின் கண்கட்டுவித்தைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம்.

 பாஜகவின் கண்கட்டுவித்தைகளுக்கு எதிராக

மாபெரும் மக்கள் இயக்கம்.

        உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்

                               பேட்டி: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்

                                              தமிழில்: செ, நடேசன்

 சமாஜ்வாதி கட்சியின் (எஸ்.பி) தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் புதிய விவசாய சட்டங்களை நிறைவேற்றியதன்மூலம் சாதாரண மக்கள் குறிப்பாக சமுதாயத்தில் ஓரம்கட்டப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கண்கட்டுவித்தை தந்திரங்களைப் பார்த்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு.ள்ளார். “பாஜகவின் முதன்மைக்கவனம் நாட்டின் பெரும்பாலான நலன்களை விட்டுக்கொடுத்து   தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருசில முதலாளிகளை மேம்படுத்துவதுதான் என்பது தெளிவாகி விட்டது.  இந்தப்புரிந்துணர்வு மிகவேகமாக மக்களிடையே, குறிப்பாக விவசாய சமுகத்தினரிடையே பரவிவருகிறது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டது பாஜகவின் சொந்த வீழ்ச்சிக்கானஉச்சகட்டச் சான்றாகிவிட்டது. இந்தப் பிரச்சனையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் மழுப்பல்கள் வீழ்ச்சியிலிருந்து அவர்களைக் காப்பாற்றப்போவதில்லை“ அகிலேஷ் யாதவ் ஃப்ரண்ட் லைனின் இணையவழிக் கலந்துரையாடலில் கூறியதன் சிலபகுதிகள்

·         மக்களவையில் மத்திய அரசு விவசாய மசோதாக்களை கொண்டுவந்ததிலிருந்து  அவற்றுக்கெதிராக நீங்கள் போராடி வருகிறீர் கள். மேலும் அவர்களது பிதற்றல்கள்  பாஜகவையும், அதன் அரசையும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும் என்று சுட்டிக்காட்டியும் வருகிறீர்கள். மக்களிடையே உள்ள இந்த ஏமாற்றங்கள் நீண்டகால கூட்டாளிகளாக இருந்துவந்த சிரோமணி அகாலி தளம் (SAD) போன்ற கட்சிகள் பாஜகவால் தலைமைதாங்கப்படும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிவருவதன் அறிகுறிகளாகி வருகின்றன என்றும்கூட நீங்கள் கூறிவருகிறீர்கள். இருந்தபோதிலும், சமாஜ்வாதி கட்சி இந்தச்சட்டங்களுக்கு எதிராக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டுவதில் தளத்தில் தன்னளவில் தீவிரமாக இல்லை என்ற உணர்வு இங்கே உள்ளது.

 

# நரேந்திரமோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக-தேமுகூ ஆட்சி பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒரு பிரவாகம்போல கொடூரமான சட்டங்களை திணிக்கத்தயாரானதுபோன்ற எண்ணத்தில் இருந்தது. இந்த நோக்கத்தில்தான் ஆளும்கட்சி கேள்வி நேரத்தையும், பூஜ்யநேரவிவாதத்தையும் இல்லாமல் செய்துவிட்டது. இந்த சூழ்நிலை யில் விவசாய மசோதாக்களை நிறைவேற்றிவிடுவது  அரசியலில் எளிதானது என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் இந்த மசோதாக்களால் உருவான பொதுமக்களின் சீற்றம்.குறிப்பாக விவசாய வர்க்கத்தினரின் சீற்றம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, அதனால், பாஜகவின் நீண்டகால கூட்டாளிகளாக இருந்தவற்றில் ஒன்றான சிரோமணி அகாலி தளம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், தேமுகூ விலிருந்தும்கூட விலகுமாறு வற்புறுத்தப்பட்டது. ஆனால், இது மட்டுமே மோடியின் அரசைகவிழ்க்கவோ அல்லது பாராளுமன்றத்தில் உள்ள அதன்மகத்தானபெரும்பான்மையை குறைக்கவோ போவதில்லை. ஆனால் இது பாஜகவின் அரசியல் மற்றும் நிர்வாக கண்கட்டு வித்தையை அடையாளப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

 

·         ஆனாலும், இன்னும் ஆற்றல்மிக்க எதிர்ப்பு இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

 

# நீங்கள் கூறுவதுபோல, சமாஜ்வாதி கட்சி களத்தில் தீவிரமாக இல்லை என்ற கருத்து இருக்குமானால், அதற்கு தொடர்பற்ற- சம்பந்தமில்லாத பல அம்சங்கள் உள்ளன: அவை தவறான செய்திகளை உருவாக்குகின்றன: தாங்கி நிற்கின்றன: பரப்புகின்றன. எங்களது மாபெரும் மக்கள் போராட்டங்களில் 10 சதவீதம்கூட ஊடகங்களால் கொண்டுசெல்லப்படுவதில்லை. உண்மையில் பல இடங்களில் சமாஜ்வாதிகட்சிஅணியினரும், முன்னணி ஊழியர்களும்  காவல்துறையால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்கள். மோடியின் ஆட்சி நிறுவனங்களின்மீது தனது அதிகாரத்தையும், கட்டுப்பாட்டை யும் கொண்டிருப்பது எந்த அளவுக்கும் செல்லக்கூடிய ஒன்று என்பதும், ஊடகங்களும் இதில் மாறுபட்டுநிற்கவில்லை என்பதும் உங்களுக்கும் தெரியும் மாநிலக்கட்சிகளின் செய்திகளை மக்களின் பார்வைக்குப் பரவலாகக் கொண்டுசெல்லவிடாமல் தடுக்க மிகக்கவனமாக முயற்சிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. நீங்கள் பேசுகின்ற கருத்தை உருவாக்குவதில் மிக உறுதியாக இந்த அம்சங்கள் உள்ளன. மேலும், இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் முதன்மையாக ஒருசில பணக்காரர்களின் நலன்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன.

 

·         விவசாய மசோதாக்களின் பின்னால் அவர்களின் விருப்பார்ந்த நலன்கள் உள்ளன என்ற அம்சத்தை நீங்கள் மீண்டும்மீண்டும் எழுப்பிவருகிறீர்கள். ஆனால் பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மக்களை திசைதிருப்ப முயற்சிக் கின்றன என்று கூறிவருகிறார்களே….

# இந்த அரசின் சாதனைப்பதிவுகளை மேம்போக்காகப் பரிசீலித்தால் கூட,தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முதலாளிகளின் உள்ளார்ந்த நலன்கள் எவ்வாறு இந்தஅரசின் முதன்மைநோக்கமாக இருந்து வந்ததுள்ளது என்பதைக் காட்டும்.  நரேந்திரமோடி தலைமையிலான பாஜக-தேமுகூ ஆட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் ஆதார வளங்களை குறிவைத்து, ஆதாரங்களோடு விற்பனை செய்துவரும் ஆட்சியாக குறிக்கப்படும். யோகிஆதித்யநாத் தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாநிலஅளவிலான பாஜக அரசு போன்றவை இதே பாதையை- அரசின் சொத்துக்களை விற்பனை செய்யும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. மாநில மற்றும் மத்திய அரசுகள் சந்தைகளை, பெருவழி சுங்கங்களை, அரசு அங்காடிகளை, தொழில்நுட்பநிறுவனங்களை, பாலிடெக்னிக்குகளை, விமான நிலையங்களை, ரயில்வேக்களை,ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களை விற்றுவிட்டார்கள். ஆதாரபூர்வமாக பாஜகவின் ஆதரவாளர்களுக் கிடையில் உள்ள ஒருசில முதலாளிக்களுக்கு உதவ இந்த மாபெரும் தனியார்மயமாக்கல் முடுக்கிவிடப்பட்டுள்ளது.: இது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை குறைப்பதையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவசாய மசோதாக்கள் என்ன செய்திருக்கின்றன என்றால், இவற்றின் உண்மைத்தன்மைகளை மக்கள்முன், குறிப்பாக விவசாய சமுதாயத்தினர்முன் முற்றிலுமாக அம்பலமாகியிருக்கின்றன. இந்த மசோதாக்களின் இயல்பும், அவற்றின் தாக்கமும், இது விவசாயியை ஒரு முக்கியத்துவமற்ற கடினமான வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியாக, அவரை நிலத்தின் உரிமையாளர் என்பதிலிருந்து தன்னை முற்றிலும் விற்றுவிடுபவராக ஆக்கிவிடும் தன்மை கொண்டதாக உள்ளது. செயல்பாட்டு அளவில் , விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் (APMCs) ஒழிக்கப்படுவதும், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) இல்லாததும் விவசாயியை தனது உற்பத்திப்பயிர் களை கட்டுபடியாகாத ஏதாவது ஒருவிலைக்கு விற்குமாறு வற்புறுத்தும். இதற்குமேலும் கோதுமை மற்றும் நெல்பயிர்களும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது விவசாயியை அவரது பயிர்களை பெரிய முகவர்கள் மற்றும் பெரும் வணிகர்களால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்றாகவேண்டும் என வற்புறுத்துகின்றன. இந்த அநீதியான தொடர்நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட சமாஜ்வாதி கட்சி மிகவும் உறுதியாக உள்ளது.

 

·         வேளாண்விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பலரும் விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் போன்ற நுட்பங்கள் வழக்கற்றுப்போனவை, என்று சுட்டிக்காட்டுகிறார்கள். அத்தகைய நுட்பங்களை சீர்திருத்தவேண்டியதேவை உள்ளது என்று விவாதிக் கிறார்கள்.விவசாயச்சட்டங்களின் ஆதரவாளர்கள், இந்தச்சட்டங் களின் உணர்வுகள் விவசாயிகளின் இந்தத்தேவைகளை உணர்ந்து பாதுகாக்கிறது என்று கூறுகிறார்களே.

# நமது விவசாயத்துறையில் மிகப்பெரும் அளவிலான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதை  எவர் ஒருவரும் மறுக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவற்றைச்.செய்வதற்கான வழிகளும், முறைகளும் உள்ளன. சீர்திருத்துவதற்கான  நிறுவனம் ஜனநாயகமானதாகவும், வெளிப் படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதிலிருந்து துவங்க வேண்டும். அதை நீங்கள் பின்வாசல்வழியாகக் கொண்டுவரக் கூடாது: பின்னர் அவற்றின்மீது முறையான கலந்துரையாடல்கள் நடத்துவதை மறுத்து. பாராளுமன்றத்தில் முறையான பிரிவுவாரி வாக்கெடுப்பு நடத்துவதை மறுத்து ஜனநாயக அமைப்புக்களை இடித்துத்தள்ளக்கூடாது.

 மேலும் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக, 2012-2017ல் உத்தரப்பிரதேசத்தில் இருந்த சமாஜ்வாதி தலைமையிலான அரசு உள்ளிட்ட பலமாநிலஅரசுகளின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எங்கள் அரசு விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை துவக்கியது.அந்த சீர்திருத்தங்களின் மையநோக்கம் விவசாயிகளுக்கு பயனளிப்பதாக இருந்தது. அது விவசாயிகளுக்கும் நுகர்வோர் களுக்கும் இடையே உள்ள விநியோகச்சங்கிலியை குறுக்குவதாக இருந்தது. நாங்கள் ரூ.164.79 கோடி நிதித்திட்டத்தில் விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட லக்நோ, ஜான்ஸி, கண்ணூஜ், காஸ்கஞ்ச் மற்றும் சாய்ஃபயை உள்ளிட்ட  584 விவசாயச் சந்தை மையங்களை வளர்த்தெடுத்தோம். நாங்கள் அமைத்த 30க்கும் மேற்பட்டமையங்களில் அமைத்த ‘அப்னா பஜார்’   விசாலமான வளர்ச்சிக்கொள்கைகளை பின்பற்றின. மேலும் விவசாய உற்பத்திகளுடன் கைத்தறிகளின் உற்பத்திப்பொருள்களும், தனித்தன்மைவாய்ந்த கிராமியக் கலாச்சாரப் படைப்புக்களும் அங்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எங்கள் அரசில் குளிர்பதன வைப்பகங்களையும், பண்டகசாலைகளையும் அமைக்கும் கொள்கைகளையும் சட்டங்களையும் விவசாயப்பொருள்களை பதனம் செய்வதன் மதிப்பை உயர்த்தும்வகையில் மாற்றியமைத் தோம்.விவசாய சந்தைகளை மேம்படுத்த நாங்கள் ஆக்ரா- லக்னோ, மற்றும் பூர்வாஞ்சல் விரைவுவழித்தடங்களில் பிரம்மாணட்மான மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களை துவக்கினோம். இந்த நெடுஞ்சாலைகளில் கட்டப்பட்டுவரும் கட்டடங்கள் நிறைவடையும் பல்வேறு நிலைகளில் உள்ளதை இன்றும் காணலாம். அவை அனைத்தும் யோகிஆதித்யநாத் அரசால் புறக்கணிக்கப்பட்டன. மேலும் அவை தற்போதைய பாழ்பட்டுவரும் சித்திரத்தைத் தருகின்றன. மற்றவர்களின் நல்லவேலைகளை பாஜக தலைமை அவமரியாதை செய்வது  மிகவிரைவில் விட்டுவிடவேண்டிய ஒன்றாகும். ஆனால் அதற்காக,சில ஜனநாயக மதிப்புக்களை நீங்கள் உள்ளீர்த்துக்கொள்ளவும், உட்படுத்தவும் வேண்டும்.

 

·         விவசாயத்துறையையும், ஏராளமானவிவசாயிகளையும் மேம்படுத் துவது பற்றிய எம்.எஸ்.சுவாமினாதன் குழு அறிக்கை (2004-06)யின் முக்கியத்துவம் பற்றி எல்லாக்கட்சிகளும் அழுத்தம் கொடுக்கின் றன.ஆனால்.அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதுமட்டுமே அதைப்பற்றிப் பேசுகின்றன.அவர்களே அதிகாரத்துக்கு வரும்போது அவர்கள் தங்களது உற்சாகத்தை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன?

 

# சுவாமிநாதன்குழு அறிக்கை நமது விவசாயத்துறை பற்றிய உணர்வார்ந்த ஒரு விரிவான பகுப்பாய்வு ஆகும்: மேலும் அது பல அடுக்குகள் கொண்ட கூறுகளைக் கொண்டுள்ளது. எந்த ஒரு அரசுக்கும் ஒரேயடியாக அவற்றை நிறைவேற்றுவது சாத்தியம் என்று நான் கருதவில்லை. எங்கள் தரப்பில் 2012-17காலகட்டத்தில் இருந்த சமாஜ்வாதி அரசு அந்த அறிக்கையின் சிலமுக்கியமான அம்சங்களை நிறைவேற்ற முயற்சித்தோம்.

 

                         நன்றி: ஃப்ரண்ட்லைன் அக்டோபர் 23 2020    

ஒருகடந்தகாலத்தைக்கண்டுபிடித்தல்

 

ஒருகடந்தகாலத்தைக்கண்டுபிடித்தல்

 

       ஜியா உஸ் சலாம்                தமிழில்: செ.நடேசன்

இந்தியாவின் மிகப்பழங்காலத்தை ஆய்வுசெய்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்டகுழு அறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் விமர்சனங்களை ஈர்த்துவருகிறது: அந்தக்குழு பின்பற்றப் போவதாகக் தோன்றும் நிகழ்ச்சிநிரல் பற்றிய சந்தேகங்களை அவர்கள் எழுப்புகிறார்கள்

 

முன்னர் 2014 அக்டோபரில் பிரதமர் நரேந்திரமோடி கணேஷாவின் (விநாயகரின்) (பிளாஸ்டிக்) நெகிழி அறுவை சிகிச்சை பற்றிய அவரது (இ)புகழ்பெற்ற குறிப்புரையைக் கூறினார்: “ நாம் அனைவரும் மகாபாரதத் தில் கர்ணனைப் பற்றிப் படித்திருக்கிறோம் நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாக சிந்திப்போமானால், கர்ணன் அவனது தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை என்று மகாபாரதம் கூறுவதை உணர்ந்திருப்போம். இதன் பொருள் அந்தக்காலத்திலேயே மரபணு அறிவியல் இருந்திருக்கிறது என்பதுதான். அதனால்தான் கர்ணனால் அவனது தாயின் வயிற்றுக்கு வெளியே இருந்து பிறந்திருக்க முடிந்தது. நாம் பிரபுகணேஷா (விநாயகர்) வை. வழிபடுகிறோம். அந்தக்காலத்தில் அங்கே ஒரு  நெகிழி(பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சை நிபுணர் கட்டாயம் இருந்திருக்கவேண்டும், அவர் ஒரு யானையின் தலையை மனித உடலின்மீது பெற்றார்: நெகிழி (பிளாஸ்டிக்) அறுவை சிகிச்சையைத் துவக்கினார்.” மோடி இதை மும்பையில் ஒரு மருத்துவர்கள் கூட்டத்தில் கூறினார். அப்போதிலிருந்து வரலாற்றுக்கும், புராணக்கதைகளுக்கும் இடையே இருந்த வேறுபட்ட தனித்தன்மை மங்கியது: மேலும் வரலாற்றைத் திருத்திஎழுதுவதற்கு அடிக்கடி முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

 

 இப்போது பழங்கால இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வுசெய்வ்தற்கு ஒரு குழு அறிவிக்கபட்டிருக்கிறது. அது வரலாற்றுக்கும், தொல்பொருள் ஆராய்ச்சிக்கும் இடையில்உள்ள வேறுபாடுகளை மங்கச்செய்துவிடும்.: அது வரலாற்றை ஆய்வு செய்யும்பணியை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்  களிடம் ஒப்படைத் துள்ளது.பாராளுமன்றத்தில் எழுத்துபூர்வமான ஒரு பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை துணை அமைச்சர் பிரகலாத் படேல். ’12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்றுவரையான இந்தியக் கலாச்சாரத்தின் தோற்றமும் வளர்ச்சியும்பற்றியும், உலகின் மற்ற கலாச்சாரங்களோடு அதன் உள்ளார்ந்த தொடர்புகள் பற்றியும் ஒரு முழுமை யான ஆய்வை நடத்த      16 உறுப்பினர்கள் கொண்ட ஒருகுழு அமைக்கப் பட்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். அந்தக்குழு கே.என்.தீக்‌ஷித் -தலைவர். இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம். புதுடெல்லி, மற்றும் முன்னாள் இணை இயக்குநர், இந்திய தொல்பொருள் அளவைக்கழகம், ஆர்.எஸ். பிஷ்ட் – இந்திய தொல்பொருள் அளவைக்கழக முன்னாள் இணை இயக்குநர் ஜெனரல், பி.ஆர் மணி – தேசிய அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநர் ஜெனரல்,டெல்லி, சந்தோஷ் சுக்லா – ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சமஸ்கிருத ஆய்வுமையம், பி.என்.சாஸ்திரி- ராஷ்ட்ரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் துணை வேந்தர், எம்.ஆர்.சர்மா – உலக பிராமணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் குமார் பாண்டே –லால்பஹதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சன்ஸ்கிரிட் வித்யாபீட துணைவேந்தர் ஆகியோரைக் கொண்டுள்ளது.

 

 திராவிடக் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதைக் குறிக்கும்வகையில், அங்கே தென்னிந்தியாவிலிருந்து  எந்தஒரு பிரதிநிதித் துவமும் இல்லை. அங்கே அந்தக்குழுவில் எந்த ஒரு பெண்ணும் இல்லை. முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை சமூகத்திலிருந்தும்கூட எந்த ஒரு பிரதிநிதியும் இல்லை.அந்தக்குழு குற்றம் சாட்டப்படுவதைப்போல,பன்மைத்துவம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றைத் திறம்பட ஒதுக்கிவிட்டு,  ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற ஆளும்தரப்பின்  கண்ணோட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.

 

  புகழ்பெற்ற அரசியல் அறிவியலாளர் நீரா சந்தோக்கின் நூல் ‘பன்மைத்து வத்தைத் திருத்தி எழுதுதல்’  மிகவும் வசீகரமாக இந்தியாவின் பகிர்ந்து கொள்ளப்பட்ட கலாச்சார சமுதாயப்பண்பின் அடிப்படைக்கூறுகள் பற்றிப் பேசுகிறது : ‘ இவை அனைத்தும் ’கலாச்சாரம்’ என்பதை அரசு எவ்வாறு பொருள்கொள்கிறது என்பதைச் சார்ந்தே உள்ளது. இந்தக்குழு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்யவா? அல்லது இந்துக்கலாச்சாரத்தை ஆய்வுசெய்யவா, அமைக்கப்பட்டுள்ளது?. மேலும் வரலாற்றை ஆய்வுசெய்யும் முறையான ஆதாரச்சான்றுகள் இல்லாத நபர்களைக் கொண்டு – புகழ்பெற்ற கண்ணியமான வரலாற்று ஆய்வாளர்கள் குழுவில் இல்லாமல் இதைச்செய்வது  இது ஒரு சிக்கலான செயல். இது மிகவும் ஆபத்தான முயற்சி. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்பது மிகவும் சர்வாதிகாரமான கருத்தாக்கம் ஆகும் .இந்தக்குழுவில் உள்ள மக்கள் அவ்வாறு இருக்க நாம் ஏன் அனுமதிக்க முடியாது? நாம் பல்வேறு கலாச்சார, பல்வேறு மதங்களைக்கொண்ட சமுதாயமாக உள்ளோம். ஒரு பெண்கூட இல்லாமல், தென்னிந்தியாவிலிருந்தோ அல்லது சிறுபான்மை யினரிடமிருந்தோ ஒரு பிரதிநிதிகூட இல்லாமல். இது மிக அதிகமாக விவாதிக்கப்பட வேண்டிய செயல்.  இது மதசார்பின்மை சவப்பெட்டியின் மீதான இன்னொரு ஆணியாகக் காணப்படுகிறது.

 

தவிர்ப்புக்களைக் கூறுதல்

 

 பேராசிரியர் ரொமிலாதாப்பர். ’அரசாலோ அல்லது எந்த ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பாலோ என்னிடம் இந்தக்குழுவைப்பற்றி கூறப்படவில்லை’ என்று கூறினார். அவர் மேலும், ‘அதைப்பற்றிய   விவரங்கள்கூட எனக்குத் தெரியாது’ என்கிறார். புகழ்பெற்ற வரலாற்றாளர் டி.என்.ஜா கூட, இந்தக் குழுவைப்பற்றி,“பத்திரிக்கைச் செய்திகள் மூலம்” மட்டுமே அறிந்து கொண்டதாக கூறுகிறார். ‘இந்தக்குழுவில் உள்ளவர்கள் அவர்களுடைய சமச்சீரான கண்ணோட்டங்களுக்காக  அறியப்பட்ட அறிஞர்களை அல்ல, ஆனால், இந்தியாவின் கடந்தகாலத்தைப்பற்றிய வலதுசாரிப் பிரிவின் கருத்துக்களைக்  கொண்டிருப்பவர்களையே கொண்டிருக்கிறது. அவர்கள் இதுவரை இருந்திராத ‘இந்துஇந்தியா’”வை பெருமைப்படுத்துவதில் விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள்”  என்பதை அவர் உற்றுநோக்குகிறார்,

 

  அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆய்வாளரான சையத் அலி நதீம் ரெஸாவி இந்தக்குழுவின் தேர்வையும் அதன் விவரங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறார். அவர் கூறுகிறார்: ”அந்தக்குழுவுக்கு ஆய்வு செய்வதற்காக அரசு  நிர்ணயித்துள்ள காலகட்டம் அதனளவில் புதிரானது: சிக்கலானது. அந்தக் காலகட்டத்தில் நாம் உயிர் வாழ்ந்திருந்தோமா என்பதையே ஒருவர் அறிந்திருக்கமாட்டார்! வரலாற்று ஆய்வாளர்கள்கூட உறுதிப்படுத்த முடியாத காலத்தை அவர்கள் ஆய்வு செய்யப்போகிறார்கள்!”

 

 மேலும், அந்தக்குழு சந்தேகத்துக்குரிய சில பெயர்களைக் கொண்டிருக் கிறது. ஒரு தலித் அல்லது முஸ்லீமை மறந்துவிட்டது: வேறுவகையில் இந்தக்குழு புகழ்பெற்ற நற்பெயருடைய எந்தஒரு அறிஞரையும் பெற்றிருக்க வில்லை. அவர்கள் அனைவரும் சர்ச்சைக்குரிய நபர்கள். அவர்கள் ஒருதரப்பான ஒருசார்பான அறிவைப் பெற்றிருப்பவர்கள்.பி.ஆர்.மணியோ அல்லது வேறு எந்த ஒருவராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டம் கொண்டவர்கள். அதனால்தான் அவர்கள் அந்தக்குழுவில் உள்ளார்கள். அது ஏதோஒன்றை ’எதிரொலிக்கும் அறை’யாக உள்ளது. வேறு எதுவும் இல்லை:”

 

ஏ.பி.வாஜ்பேயி அமைச்சரவையில் முரளி மனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது,பாட நூல்களில் வரலாற்றைத் திருத்தி எழுதும்பணியை ஏற்றுக்கொண்டிருந்த  பேராசிரியர் மக்கன்லால் அந்தக்குழுவில்  சேர்க்கப்பட்டிருப்பதை பேராசிரியர் .ரெஸாவி கவனத்துக் குக் கொண்டுவருகிறார். ”(அந்தக்குழுவில்)  தலித்துகள் இல்லை: சிறுபான்மையினர் இல்லை. பெரும்பாலும் தொல்பொருள்ஆய்வாளர்களே உள்ளார்கள். வரலாற்றளர்கள் யார்? அவர்களுடைய தகுதிகள் என்ன? அங்கே பேராசிரியர் மக்கன் லால் இருக்கிறார்………அவர்தான்ஜோஷி அமைச்சராக இருந்தபோது .என்சிஇஆர்டி( கல்விப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசியக்குழு)வின் பாடநூல்களைத் திருத்திஎழுத முயற்சி செய்த அறிவுலக  மேதை !இதைவிட ஒருவரால் என்ன கூறமுடியும்!” 

 

  இந்தக்குழுவைப் பற்றியும், ஆளும்கட்சியின் கண்ணோட்டத்தை முன்னெடுத்துச் செல்லஉள்ள அதன் பாத்திரம் பற்றியும் பல கல்வியாளர் கள் குரல் கொடுத்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும்கூட கட்சி வேறுபாடு இல்லாமல் ஆட்சே[பணை செய்துள்ளார்கள் மேலும், குடியரசுத்தலைவரிடம் அந்தக்குழுவை கலைக்குமாறும் வேண்டியுள்ளார் கள். ஊடகச் செய்திகளின்படி, 32 பாராளுமன்ற உறுப்பினர்களும், பலரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவரது தலையீட்டை எதிர் நோக்கியும், மத்தியஅரசால் இந்தியாவின் கலாச்சார வரலாற்றை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர்கள்குழுவை, அதன் உறுப்பினர்கள் நாட்டின் பன்முக சமுதாயத்தைப் பிரதிபலிப்பவர்கள் அல்ல என்ற அடிப்படையில் கலைக்க ’அறிவுரை” வழங்குமாறும் எழுதியுள்ளார்கள். அதில் கையொப்பமிட்டவர்களில் ப,சிதம்பரம், கனிமொழி ஏ.எம்.ஆரிஃப், எஸ்.ஜோதிமணி   . மற்றும் டி.சுமதி ஆகியோர் உள்ளார்கள்.

 “ அந்த 16 உறுப்பினர் ஆய்வுக்குழுவில் அத்தகைய பன்முக சமுதாயத்தைப் பிரதிபலிப்பவர்கள் யாரும் இல்லை என்பதை தங்கள் அன்பான கவனத்துக்கு கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம். அங்கே தென் இந்தியர்கள் இல்லை: வடகிழக்கு இந்தியர்கள் இல்லை.: தலித்துகள், பெண்கள் இல்லை. சொல்லப்பட்ட அந்தக்குழுவில் கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களும் குறிப்பிட்ட சிலசமூகக்குழுக்களைச் சார்ந்தவர்கள்: அவை இந்திய சமூகத்தின் சாதியபடிநிலையில் உச்சத்தில் உள்ளவை” என்று அந்தக்கடிதம் கூறியுள்ளது. அந்தக்கடிதம் மேலும் கூறியுள்ளது: “அந்தக்குழு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளதும், மத்திய அரசால் செம்மொழி என அங்கீகரிக்கப்பட்ட மொழியுமான தமிழ் உள்ளிட்ட தென்இந்திய மொழிகளின் ஆராய்ச்சியாளர்கள் யாரையும் கொண்டிருக்கவில்லை.”

 

 பெண்கள்அமைப்புக்கள் மற்றும் சிறுபான்மைஅமைப்புக்களின் எதிர்வினைகள் ஊமையாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கத் தவறிய அந்தக்குழுவை கலைத்து விடுமாறு திராவிட அமைப்புக்களின் கூட்டமைப்பு கோரியுள்ளது. தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட அமைப்புக்கள், ’இந்தியக்கலாச்சாரத்தில் உயர்தன்மைக்கான போராட்டம் போட்டியற்றது அல்ல’ என்பதை உறுதிப்படுத்துவதற்கான இலட்சியத்துக்காக ‘திராவிட கலாச்சார கூட்டமைப்பு’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

 ஆளும் தரப்பின் சித்தாந்தத்துடன் இணைந்து சொந்தம்கொண்டாடும் அறிஞர்கள், ’ஆரியர்கள்  இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்டவர்கள்: இதுவரை நம்பப்பட்டதுபோல மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் அல்ல’ என்று அடிக்கடி கூறிவருகிறார்கள். பேரா.தாபர் தனது ‘A History of India’ நூலில் எழுதுகிறார்: ‘ ஆரியன் என்பது உண்மையில் இந்தோ-ஐரோப்பிய மூலத்தோற்றம்கொண்ட ஒரு குழுவினரின் பேச்சைக் குறிக்கும் ஒரு பொழியியல் வார்த்தை. வரலாற்றுக்கு முந்தைய இந்திய மக்கள் மற்றும் கலாச்சாரத்துக்கு எதிரான பின்னணியில்தான் ஆரியமொழி பேசும் பழங்குடியினர்  வடஇந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்கள்.: இந்திய நாகரிகத்துக்கு தங்கள் பங்களிப்பைச் செய்தார்கள்”

  

 ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் புகழ்மிக்க வரலாற்றாளர் ரிஸ்வான் கெய்ஸர், இந்தக்குழுவின் அமைப்புமுறை ’அரசின் தொகுதியை மகிழ்ச்சி யுடன் வைத்திருக்கும் ஒரு மக்கள் தொடர்பு செயல்பாடாகும்’ என்கிறார். அவர் கூறினார்: ‘இது ஒரு பழைய விளையாட்டு ஆகும். அது பின்பற்றப் படுகிறது. அவர்கள் ராக்கிஹாரியில் கண்டுபிடிக்கப்பட்டவைகளுக்கு வித்தியாசமான பொருள்விளக்கத்தைத்தர விரும்புகிறார்கள். அக்பருக்கு ஒரு வித்தியாசமான பொருள்விளக்கம், தாஜ்மஹாலுக்கு என மற்ற பலவற்றுக்கும் அவர்கள் வித்தியாசமான பொருள்விளக்கங்களைத் தர விரும்புகிறார்கள். இந்த வகையான வரலாறு ஒருபோதும் எந்த ஒரு குற்ற உணர்வையும் கொண்டிருக்காது. இத்தகைய ஒருகுழுவின் அறிக்கை வரலாற்றாளர்களின் மீளாய்வில் மீண்டெழ முடியாது. தங்கள் தொகுதியினருக்கு, ’இதோ பாருங்கள், வரலாற்றுத்தளத்திலும்கூட நாங்கள் தீவிரமானவற்றைச் செய்துகொண்டிருக்கிறோம்’ என்று சொல்வதற்காக இது அரசால் நடத்தப்படும் ஒரு மக்கள்தொடர்புப் பயிற்சி, மேலும் நீங்கள் பின்தொடர்வதற்கான ஆர்வமூட்டக்கூடியவை பலவும் வர உள்ளன. அந்தக்குழு எந்தவொரு குற்ற உணர்வையும் கொண்டிருப்பதாக நான் பார்க்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே தீவிர கவனம் செலுத்துபவர்களாக இருந்திருந்தால், அவர்கள் ஒரு வரலாற்றாளரை… தங்கள் வாழ்வையே வரலாற்று ஆய்வுக்காக அர்ப்பணித்துள்ள ஒன்று அல்லது இரண்டு வரலாற்று ஆய்வாளர்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அரசு ஒவ்வொன்றையும் ஒளி ஊடுருவமுடியாத இருளில் வைத்துக் கொண்டிருக்கிறது.: அது கொரோனா நோய்ப்பரவலுக்கு நடுவே ஒரு குழுவை அமைத்துள்ளது.

 

 “ நாளை இந்த அறிக்கை வரும்போது, மக்கள் அதிர்ச்சி அடைவார்கள். இந்த அரசு நோய்ப்பரவலையோ அல்லது மக்களின் துயரங்களைப் பற்றியோ கவலைப்படவில்லை: தங்களைத்தவிர வேறு எவரையும் அவர்கள் மகிழ்ச்சிப்படுத்தப் போவதுமில்லை.”

 

                                 நன்றி: ‘ஃப்ரண்ட் லைன் 2020 அக்டோபர் 23 இதழ்.     

 

 

தாக்குதலைப் புதுப்பிக்கிறதுஆர்எஸ்எஸ்

 தாக்குதலைப் புதுப்பிக்கிறதுஆர்எஸ்எஸ்

                                ஏ.ஜி.நூரானி

                                                                         தமிழில்: செ. நடேசன்

 

ஆர்எஸ்எஸ் தனது அரசியல் அணிதிரட்டலை முன்னெடுத்துச் செல்ல அதன் திட்டமான மதத்தைப் பயன்படுத்துவதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது .இந்தமுறை அதன் இலக்கை மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி என்று  அழைக்கிறது,

 

 ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை அது தனது ஷாகாக்களை மறந்துவிடாமல் இருக்க பெரும்திரள் சைன்ய அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ்-ஸின் மீதான தடையில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க 1949ஜூலை 9 ல் அகில பாரதிய வித்தியர்த்தி பரிஷத்தை (ABVP) அமைத்தது.. அது ஒரு மாணவர் அமைப்பு என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அது சூறாவளிப்படையினரின் அமைப்பு ஆகும். நரேந்திரமோடி அதன் முன்னணிப் பிரமுகர்களில் ஒருவர். ஆர்எஸ்எஸ் விஸ்வ ஹிந்து பரிஷத்தை (உலக இந்துக்களின் அமைப்பு) உருவாக்கி இதை ஜகத்குரு (உலக ஆசிரியர்கள்) என்று கூறிப் பாதுகாத்துவருகிறது. இது 1964 ஆகஸ்ட் 29-30ல் மும்பையில் ஆர்எஸ்எஸ் தலைவர் எஸ்.கோல்வாக்கரால் தோற்றுவிக்கப்பட்டது. கே.எம்.முன்ஷியும்கூட அதன் நிறுவனர்களில் ஒருவர். அதன் அயோத்திய பிரச்சாரப்பயணம் வேகம்கொள்ளத் துவங்கியபோது 1984ல் விஹெச்பி பஜ்ரங் தள்-ஐ அமைத்தது. ஆர்எஸ்எஸ் ஒரு தாத்தாவாக உருவாகி அதன் எல்லாக்குழந்தைகளையும் தனது இறுக்கமான பிடியில் வைத்துக் கட்டுப்படுத்தியது. இவற்றில் அதன் அரசியல் பிரிவுகளாக 1951ல் ஜனசங்கமும், 1980ல் பாரதிய ஜனதா கட்சியும் இருந்தன.

 

  1984 தேர்தல்களில் பாஜக ஒரு அவமானகரமான தோல்வியால் கவலைக்குள்ளானபோது,, ஆர்எஸ்எஸ் மக்களை அணிதிரட்டுவதற்காக ஒரு நல்ல கருவியைக் கண்டுபிடித்தது—அதுதான் மதம். இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் இருந்த அதன் உறுப்பினர்கள்=குறிப்பாக சாதுக்கள் இந்தப்பணியில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டார்கள்: உலகியல் வாழ்வின் ருசியை அவர்கள் அனுபவித்தார்கள். இந்த எல்லா அமைப்புக்களும் ஆர்எஸ்எஸ்-ஸின் உத்தரவுப்படி உற்சாகத்துடன் தேர்தல் களத்தில்   பாஜகவுக்கு ஆதரவாக குதித்தன. 1984ல் அது அவ்வாறு செய்ய மறுத்தது.

 

 பாஜகவின் மனச்சோர்வை அகற்றவும், அதற்கு ஒரு உறுதியான பாதையைக் காட்டவும், விஹெச்பியின் (ஆர்எஸ்எஸ் என்று படிக்கவும்) முதலாவது தர்ம சம்ஷத் 1984ல் அயோத்தியில் ராமஜென்ம பூமியை ‘விடுதலை’ செய்வதற்காக ஒருதீர்மானத்தை நிறைவேற்றியது. அதை நடைமுறைப்படுத்த, அது தனி நபர்களுக்கான, குடும்பங்களுக்கான, மற்றும் அரசியல் தலைவர்களுக்கான ஆச்சார் சம்ஹிதா, என்ற   18 அம்ச நோக்கங்கள் மற்றும் விதிகளையும்கூட  வரைந்து கொண்டது. அதன் மையநோக்கம் நவீனகாலத்துக்கேற்ப இந்து சமுதாயத்தை வளர்த்தெடுப்பதற்குப் பொருத்தமான ‘தர்ம’ ஒழுங்குகளை நிர்ணயிப்பதுதான். ஆர்எஸ்எஸ்-ஸின் நவீனமயமாக்குதல் என்ற கருத்தாக்கம் மிகத்தெளிவாக – மதத்தைப் பயன்படுத்துவதும், சமுதாயத்தை ஒருங்கிணைத்தலும் என-அமைக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதா னால் ‘மதத்தின் மூலம் அரசியல் அணிதிரட்டல். நோக்கம் 7 கூறுகிறது:’மடங்களையும், கோவிலகளையும் வளர்ப்பதற்காக…’ நோக்கம் 12 ‘இந்துக்களின் நலன்களைப் பாதுகாக்க அரசை நிர்ப்பந்திப்பது’ என்பதை இணைத்துக்கொள்கிறது. எண் 18 கூறுகிறது: ‘இந்து தர்மத்தை, இந்து கலாச்சாரத்தை, இந்து கடவுள்களையும் பெண் கடவுள்களையும் மற்றும் இந்து வாழ்வியல் மதிப்பியல்களையும் திரைப்படங்கள் பரிகசிப்பதை அனுமதிக்கக்கூடாது’ இது நோக்கம்11ஐத்தொடர்ந்து வருகிறது: அது இவ்வாறு கூறுகிறது:”ஸ்ரீராமா மற்றும் ஸ்ரீகிருஷ்ணா ஜென்மபூமி, காசி விசுவநாதர் கோவில் மற்றும் பிற எல்லா வரலாற்றுக் கோவில்களும் இந்துக்களுக்கு கட்டாயம் திருப்பித்தரப்படவேண்டும்.”

 

 இந்த முழுஆவணத்தின் நேரம், சந்தர்ப்பசூழல்,மற்றும் குணாம்சம் அது அரசியல் அணிதிரட்டல்களை நோக்கமாகக்கொண்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இதை விஹெச்பியின் மாதமிருமுறை பத்திரிக்கையான ’ஹிந்துசேத்னா’  நிலைநாட்டுகிறது.மஞ்சரி கட்ஜு தனது ‘விஸ்வ ஹிந்து பரிஷத்தும், இந்திய அரசியலும்’ என்ற நூலில் எழுதுகிறார்: “விஹெச்பி அமைக்கப்பட்டபிறகு இரண்டு பத்தாண்டுகளாக அதன் உண்மையான நோக்கமான உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் உள்ள இந்துக்களை ஒருங்கிணைப்பது மற்றும் இந்தியாவில் கிருத்துவ மிஷினரிகளின் செயல்பாடுகளை எதிர்ப்பது என்பவற்றைப் பின்பற்றிவந்தது. அதன்பிறகு அது மாநிலஅரசின் கொள்கைகளில்அரசியல் அணிதிரட்டல்கள்மூலம் செல்வாக்கு செலுத்த நேரடி அரசியல் அணிதிரட்டலை எடுத்துக்கொண்டது. அயோத்தியில் ராமஜென்மபூமி, மதுராவில் கிருஷ்ணஜென்மபூமி, வாரணாசியில் காசி விசுவ நாதர் கோவில் என்று அது அழைத்துக்கொள்பவற்றின்மீது அதன் பிரச்சாரப்பயணங்களும், அதேபோல, தேர்தல்காலங்களில் அது ’இந்துக் களுக்கு ஓர் அழைப்பு’ என தர்ம சன்சத் மூலம் ஒரு இந்து கட்சிக்கு வாக்களியுங்கள் என்று விடுத்த அழைப்புக்களும் இந்தியாவில் வடக்கிலும், மேற்கிலும் பாஜக தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள உதவியது.

 

 மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் 14 ஏப்ரல் 2000ல் போபாலில், கோவில் இயக்கம் இயல்பாகவே அதன் தன்மையில் அரசியல்தான்: மதத்துக்காக அது எதையும் செய்யவில்லை” என்று ஒப்புக்கொண்டார். அருண்ஜெட்லி அமெரிக்காவின் உயர்மட்டதூதரிடம் கொடுத்த ஒப்புதல்வாக்குமூலம் இன்னும்கூடுதலாக  கள்ளம் கபடின்றி நேர்மையானதாகவும், விரிவானதாகவும் இருந்தது. மஞ்சரி கட்ஜு எழுதுகிறார்: “ ராமஜென்மபூமி அல்லது அயோத்தி பிரச்சனை பல்வேறு சாதுக்களை விஹெச்பியின் பின்னால் ஒருங்கிணைத்தது. இதன்மூலம் விஹெச்பி மறுபுறத்தில் பாஜகவின் சமூக அடித்தளத்தை வலுப்படுத்தவும்,விரிவடையவும் செய்தது. இந்துத்வா அலையின் எழுச்சிக்கும் (ராமர் கோவில் பிரச்சாரப்பயணங்களில் வெளிப்படுத்தப்பட்டது போல்) அயோத்தி சட்டமன்றத்தொகுதியிலும், ஃபாஜியாபாத் பாராளுமன்றத் தொகுதியிலும் (இதில்தான் அயோத்தி தொகுதி உள்ளது) அதேபோல ஒட்டுமொத்தமாக உத்தரப்பிரதேச சட்டமன்றத்தொகுதிகளிலும் பாஜகவின் தேர்தல் எழுச்சிக்கும் உள்ள தொடர்பை எவரொருவரும் பார்க்கலாம். நாட்டில் பாஜகவின் எழுச்சியை ’ஹிந்துத்துவா எழுச்சி’ என்று எல்,கே,அத்வானி போற்றிப் பாராட்டினார்.

 

 1992 டிசம்பர் 6 ல் அவர்கள் பாபர் மசூதியை இடித்துத்தள்ளுவதற்கு முன்பு, 1990களின் துவக்கத்தில் மூன்று கோவிலகளையும் பற்றி பாஜகவும், விஹெச்பியும் கொண்டிருந்த நிலைபாட்டை ஆய்வுசெய்வது மிகவும் முக்கியமானதாகும். அத்வானி, முஸ்லீம்கள் பாபர் மசூதியைக் கைவிட்டு விடுவார்களானால், மதுரா மற்றும் காசி கோவில்களை விட்டுவிடுகிறோம் என்று அவ்வப்போது சத்தியம் செய்துவந்தார். மற்ற சந்தர்ப்பங்களில் அத்வானியும், பிற பாஜக தலைவர்களும் ‘இப்போது’ காசி மற்றும் மதுரா கோவில்கள் தங்கள் செயல்திட்டத்தில் இல்லை என்று- அதை  ஓர் அர்த்தமுள்ள தகுதியாக – கூறினார்கள்.

முஸ்லீம்களுக்கு ‘ஒரு பாடம்’ புகட்டுதல்

 

 1997 டிசம்பர் 29 அன்று விஹெச்பியின் அசோக் சிங்கால் “முஸ்லீம்களின் கழுத்துக்களைப்பிடிப்பதற்கும், அவர்களது இடம் எங்கே இருக்கிறது என்று சொல்வதற்குமான நேரம் இது” என்று கூறினார். அவர் மேலும் கூறினார்: ”காசியும் மதுராவும் எங்களுடையது. முஸ்லீம்கள் மேலும் அவமானங்களைத் தவிர்க்கவிரும்பினால், அவர்கள் அந்தப் புண்ணியத்தலங்களை சத்தமில்லா மல் எங்களிடம் ஒப்படைக்கவேண்டும்.” இந்தப் பிதற்றல்களை ஏ.பி.வாஜ்பேயி கண்டனம் செய்யவில்லை. இந்தக் காட்டுமிராண்டித்தனமான பிதற்றல்களின் தன்மை காரணமாக மட்டுமே முறையான விலகிநிற்றலாக ஆனது. அசோக் சிங்கால் லக்நோவில் விஷத்தைக் கக்கிக்கொண்டிருந்த அதே நாளில் அத்வானி கோவில் நகரமான திருப்பதியில் பேசினார்.

 

 ’தி ஹிந்து’ நாளிதழ், “ அவர் இந்த சந்தர்ப்பத்தை சந்தேகத்துக்கு இடமில்லாதவகையிலும், தெளிவாகவும் பாஜகவின் திட்டத்தில் காசியும், மதுராவுல் இல்லை என்று உறுதிப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்டார். அவர் எவ்வாறோ, காசியும், மதுராவும் பாஜகவின் அறிக்கையின் ஒருபகுதியாக இருந்தபோதிலும், தேர்தலில் மிகவும் முக்கியமான பிரச்சனை ஸ்திரத்தன்மையும், நல்ல நிர்வாகமும்தான் என்று கூறினார். முன்னதாக அதே ஆண்டு மார்ச் 16 அன்று இதன் பொருள் என்னவென்று அத்வானி தாமாகவே விளக்கினார்: “(காசியும், மதுராவும்) திட்டத்தில் இல்லை. அயோத்தியில் துவங்குவதும்கூட திட்டத்தில் இல்லை” . எதிர்பார்த்தவாறே 1998 ஜனவரி 1 அன்றுசிங்கால் வாஜ்பேயியின் மறுப்பின்மீது வசைகளைப் பொழிந்தார். அத்தகைய அறிவிப்புக்களின் பொருளை அவர் மிக நன்றாக அறிந்திருந்தார்…..  சங் பரிவாரங்களின் முடிவுதான் இறுதியானதும் கட்டுப்படுத்துவதும் ஆகும். ஒருநாள் முன்பு அவர் அயோத்தியில் கூறினார்: “கோவில் பிரச்சனையின்மீது பாஜகவுக்கும், விஹெச்பிக்கும் இடையில் எந்தஒரு வேறுபாடும் இல்லை. அவர்களுடைய மொழி வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்: ஆனால், கொள்கையளவில் நாங்கள் ஒன்றாகவே உள்ளோம்.” ஜனவரி 9 அன்று அவர் ‘ அங்கே இந்த விஷயத்தில் சங் பரிவாரங்களின் இரண்டு அணிகளுக்கிடையே எந்த ஒரு மோதலும் இருக்காது’ என்று சபதம் செய்தார்.

 

 “ஆர்எஸ்எஸ்-ஸின் உயர்மட்டத்தலைவர் ராஜேந்திர சிங்கின் ஜனவரி 10  பேச்சு அந்த சூழ்நிலையை மிகவும் தெளிவாக்கியது. அயோத்தி, அரசியல் சட்டம் 370, மற்றும் பிற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளில் அழுத்தம் தருவதிலிருந்து பாஜக வெளிப்படையாக மாறுவதை அவர் நியாயப் படுத்தினார்.” நீங்கள் நோயுற்றிருப்பீர்களானால், குளிக்கவேண்டாம்: ஆனால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் எப்போதைக்குமான ஏற்பாடு அல்ல.”

 

 உச்ச நீதிமன்றத்தின் ஒருதரப்பான தீர்ப்புக்குப்பிறகு, 2020 செப்டம்பர் 9 அன்று திடைம்ஸ்ஆஃப்இந்தியா’ தெரிவித்தது: ‘ அயோத்தி ராமர் கோவிலுக்குப்பிறகு, காசி மற்றும் மதுரா புண்ணியத்தலங்களை மீட்டுருவாக்கும் கோரிக்கைகளை ஆர்எஸ்எஸ் எடுத்துக்கொள்ளாது; மேலும் ஒரேமாதிரியான குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன் அதை நடைமுறைப்படுத்த ஒரு பொதுக்கருத்தை உருவாக்கவேண்டும் என்று உணர்கிறது.”

 

 ஆர்எஸ்எஸ்-ஸில் உள்ள இந்தக்கண்ணோட்டம், ராமர்கோவில் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஏற்படும் விழிப்புணர்வில் சிலகுழுக்களில் காசி விசுவநாதர் மற்றும் கிருஷ்ணஜென்மபூமிக்கு ஆதரவாக ஏதாவது பொதுக்கருத்து உருவாகுமா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும் என்பதுபோலக் காணப்பட்டது.

 

 ஒருசில நாட்களுக்குள்ளாகவே, மதுராவில் உள்ள மசூதியைச் சொந்தம் கொண்டாடும் ஒரு உரிமைவழக்கின் முறையீட்டிலிருந்த விவரங்களைப் பத்திரிக்கைகள் மிகவிரிவாக வெளியிட்டன. நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால் ஆர்எஸ்எஸ்-ஸின் பதிவு அதை ஒரு ஏமாற்றுவித்தை என்றும், அது ஒட்டுமொத்த இயக்கத்தையும் குறிப்பிடுகிறது என்றும் காட்டியது. அதன் இலக்கு கோவில்கள் அல்ல: அவை குறியீடுகள்தான். அதன் இலக்கு ஒரு இந்துஅரசு. அரசியல் மற்றும் சட்டபூர்வ தடைகளால் (வழிபாட்டுத்தலங்கள் சட்டம்) அதை எதிர்த்து நிற்கமுடியாது. அரசின் உதவியோடு இந்துத்துவாவாதிகள் ’பழங்கால நினைவுச்சின்னங்கள், மற்றும் தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சியவை சட்டம் 1958’ ஐ அவமதிப்பார்களானால், அந்த வழக்கு அவர்களுக்கு எந்த பாதிப்பையும் அளித்துவிட முடியாது.

    

 ஆனால்,1968ல் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மசூதிபற்றிய புனிதமான ஒப்பந்தம் கூறுவது என்ன? அதன் வாசகம் இங்கே தரப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் நோக்கம் இரண்டுபிரிவினரிடையே  நீண்டகாலமாக இருந்துவந்த சர்ச்சைகளை முடித்துக்கொள்வதுதான். அப்போது ஆர்எஸ்எஸ்-ஸும், ஜனசங்கமும் மிகவும் உயிர்ப்போடு இருந்தன. அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு தரப்பும் பெற்றிருந்த அதிகாரச்சான்றைப் பதிவு செய்கிறது. அது உண்மையில் 50 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தமாகும். முஸ்லீம்கள்தரப்பு கொஞ்சம்நிலத்தை விட்டுக்கொடுத்தது அதை இந்து தரப்பு ஏற்றுக்கொண்டு கையகப்படுத்திக்கொண்டது: அதைப்போலவே இந்துக்கள் தரப்பிலும் கொஞ்சம் நிலம் விட்டுகொடுக்கப்பட்டு முஸ்லீம் தரப்பு அதை ஏற்றுக்கொண்டு கையகப்படுத்திக்கொண்டது. அங்கே ஒரு கொடுத்தலும், எடுத்துக்கொள்ளலும் இருந்தது. இரண்டு தரப்பிலும் தொடுக்கப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன. ’அந்தஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்பதற்காக மட்டுமே நீதிமன்றங்களின் உதவி நாடப்பட்டது.

 

ஸ்ரீகிருஷ்ணஜென்மஸ்தான், சாஹி இடாஹ் அறக்கட்டளை இரண்டுக்கும் இடையே 1968 அக்டோபர் 12 அன்று இரண்டு தரப்பும் நிலத்தை எடுத்துக்கொள்ளவும், கொடுக்கவும் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் புகைப்பட நகலின் மொழிபெயர்ப்பு

பிரச்சனைக்கான சட்டபூர்வ அம்சங்கள்/ பக்கம் 95

 சாஹி இடாஹ் அறக்கட்டளைக்கும், ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான், மதுராவுக்கும் இடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் மொழியாக்கம்.

 

ஸ்ரீகிருஷ்ணஜன்மஸ்தான், மதுராவால் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ தியோதர் சாஸ்திரி.யு,பி. மன்ஸ்ட்ரி ஆகிய நாங்கள் முதல்தரப்பினராகவும்,மற்றும்ஷாஹி மஜ்ஜித்தின் சாஹி இட்கா அறக்கட்டளையின் பிரதிநிதிகள் ஸ்ரீ ஷாஹ் மிர் மாலிஹ், வழக்கறிஞர் அப்துல் கஃப்பார் இரண்டாம் தரப்பினராகவும்

 

 8.1.1968 நாளிட்ட அறகட்டளையின் தீர்மானம் எண்;2 ன் கீழ்,

 

ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங் மற்றும் ஷாஹி மஜ்ஜித் இட்கா அறக்கட்டளை மற்றும் கோஷி என அழைக்கப்படும் குடியிருப்போர் மற்றும் உரிமம் பெற்ற இரண்டாம் தரப்பினர் ஆகியவற்றுக்கிடையே நீண்டகாலமாக இருந்துவரும் சர்ச்சைக்குத் தீர்வுகாண்பதற்காக இந்து மற்றும் முஸ்லீம் என இரு சமுதாயத் தினரின் ஆலோசனைகளின்கீழ் இப்போதுமுதற்கொண்டு நமது இருதரப்பு சர்ச்சைகளுக்குத் தீர்வுகாணவும், ஒருவருக்கெதிராக ஒருவர் தொடுத்துள்ள வழக்குகளை தவிர்க்கவும் ஓர் ஒப்பத்தத்துக்கு வந்துள்ளோம்.

 

 பின்வரும் ஒப்பந்தம் இரண்டாம் தரப்பால், அதாவது உத்தரப்பிரதேச மத்திய வக்ஃப் போர்டின் விரைவுக்கடிதம் எண்.2876, 43 CIR நாள்:9.9.1968 மற்றும் ஸ்ரீசாஹி மிர் மாலிஹ் மற்றும் வழக்கறிஞர் அப்துல்கஃபார் அதிகாரமளிக்கப்பட்ட  ஷாஹி மஜ்ஜித் இட்கா அறக்கட்டளையால் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த  அவர்களது 8.10.1968 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்:2ன் கீழ்  அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

 

அதேபோல, முதல்தரப்பு, அதாவது, ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்-கும் இந்த ஒப்பந்தத்தை அதன் 25.8.1968 கூட்டத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது, மேலும் ஸ்ரீதியோதர் சாஸ்திரியை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற அதிகாரப்படுத்தியுள்ளது.

சர்ச்சையின் அடிப்படைக்கூறுகள்/ பக்கம் 96

பின்வரும் ஒப்பந்தம் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிதுகாலம் எடுத்துக்கொள்ளும்: எனவே நாங்கள் எழுத்துமூலமான ஒரு ‘இக்ரார்நாமா’வை பதிவு செய்துள்ளோம். எனவே இருதரப்பினரின், அதாவது ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங் மற்றும் ஷாஹி மஜ்ஜித் இட்காஅறக்கட்டளை சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளாகிய நாங்கள் இந்த முடிவுகள் நிறைவேற்றப்பட்ட பிறகு சுதந்திரமாகவும், அதேபோல இரண்டு தரப்பினரின் பொதுவான சம்மதத்தின்படியும் இந்த ‘இக்ரார் நாமா’வைப் பதிவு செய்துள்ளோம்.எனவே இப்போதுமுதல் நாங்கள் பின்வரும் ஒப்பந்தத்துக்குக் கட்டுப்பட்டவர்களாவோம், மேலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது எங்கள் கடமை ஆகும்.

1.   இட்காஹின் குச்சிகுர்ஷியின் வடக்கு மற்றும் தெற்குச்சுவர்கள் கிழக்குப்பக்கத்தை நோக்கி சரக்குரயில்பாதைவரை நீட்டிக்கப்படும். இதற்கான செலவுகள் மஜ்ஜித் அறக்கட்டளையால் ஏற்றுக்கொள்ளப்படும்.

2.   வடக்கு மற்றும் தெற்குச்சுவர்களுக்கு வெளிப்பக்கம் முஸ்லீம் கோஷிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளபகுதிகள் அறக்கட்டளையின் சார்பில் அப்புறப்படுத்தப்பட்டு, ஸ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங் வசம் ஒப்படைக்கப்படும்.

 

அதுபோலவே, வடக்கு மற்றும் தெற்கு சுவர்களுக்கு உள்பகுதியில் இருக்கும் நிலம் அறக்கட்டளையின் சொத்து ஆகும்.எனவே,இந்த நிலத்தின்மீது சேவா சங் தரப்பில் எந்த உரிமைகோரலும் இருக்காது.

 

3.   இட்காஹின் குச்சிகுர்ஷியின் வடக்கு-தெற்கு மூலை நிலப்பகுதியில் (ABCDவரைபடத்தில்காட்டப்பட்டுள்ளது)  சேவா சங் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை குச்சிகுர்ஷியைப் பெற்றுக்கொள்ளும். மேலும் அது அறக்கட்டளையின் சொத்து ஆகும். 

4.    நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள தெற்குப்பக்கத்தில் சர்ச்சைக்குரிய படிக்கட்டில் உள்ள குப்பைகூளங்கள் அறக்கட்டளையால் 1968 அக்டோபர் 15 வாக்கில் அகற்றப்படும். அதன்பின் இந்தப்பகுதி சேவா சங்-கின் சொத்து ஆகிவிடும்.

5.   வடக்கு மற்றும் தெற்கு சுவர்களுக்கு வெளியே முஸ்லீம் கோஷிகளால் கட்டப்பட்டுள்ள வீடுகள் அறக்கட்டளையுடன் ஏற்படுத்திக்கொண்ட இந்தத்தீர்வின் கீழ், அறக்கட்டளையின் சார்பில் அகற்றப்பட்டு, சேவா சங்-கிடம் ஒப்படைக்கப் படும அகற்றபடுதல் நிறைவடைந்த பிறகு மட்டுமே சுவர்களைக் கட்டுவதற்கு அறக்கட்டளை உரிமைபடைத்ததாகும்.

 

மேலும், இந்த அறக்கட்டளை கதவுகளையோ, சன்னல்களையோ, பிஞ்சார் முதலான வைகளையோ அல்லது எந்த ஒரு நீர்வழிப்பாதைகளையோ (வடிகால்) குறிப்பிட்ட சுவரிலிருந்து சேவா சங்-ஐ நோக்கி திறக்கக்கூடாது. சேவா சங்-கும்கூட இடாஹ்-க்கு எதிராக இத்தகைய எந்த ஒன்றையும் செய்யக்கூடாது.

 

6.   ஏற்கனவே ஜன்மஸ்தானின் மேற்குப்பகுதி நோக்கி பாய்ந்துவரும் இட்காஹின் வடிகால்கள் கட்டாயம் அகற்றப்பட்டு, இட்காஹை நோக்கி குழாய்மூலம் திருப்பப்படவேண்டும். இதற்கான செலவுகள் சேவா சங்-கால் செய்யப்படும். குழாய் பதிக்கும்போது ஜன்மஸ்தானின் பிரதிநிதி அங்கு இருப்பார்.

 

7.   ஜன்மஸ்தான் சேவா சங்-கால் பெற்றுக்கொள்ளப்படும் இட்காஹின் வடக்கு மற்றும் தெற்குச் சுவர்களின் முன்னால் உள்ள ரயிவே நிலத்தின் ஒருபகுதி, அந்த நிலத்தைப் பெற்றபிறகு, ஜென்மஸ்தன் சேவா சங் இட்காஹின் வடக்கு மற்றும் தெற்குப்பதி சுவருக்குள் வரும் அந்த நிலத்தின் பகுதியை ஜன்மஸ்தான் சேவா சங் அறக்கட்டளைக்கு மாற்றித்தரும்.

 

8.   குச்சி குர்ஷிக்கு முன்னால் கிழக்குப்பகுதி நோக்கி உள்ள நிலத்தின் பகுதி

 

 

                              சர்ச்சையின் அடிப்படைக்கூறுகள்/ பக்கம். 97

 (EFGHUKL) வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) மற்றும்   வடமேற்குமூலையில் உள்ளதும் (ABCD)வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) அறக்கட்டளைக்கு சார்பாக சேவாசங்-கால் விடப்பட்டது வரைபடத்தில் சாய்வான கோடுகளில்     காட்டப் பட்டுள்ளது

 

9.   மேலே கண்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஒருவருக்கு எதிராக ஒருவர் தொடுத்த வழக்குகள் கட்டாயம் திரும்பப்பெறப்படவேண்டும்.

10.  எந்த ஒரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதிலிருந்து வழுவினாலும் இரண்டுதரப்பும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளன.

ஆகையால் இரண்டு தரப்பினரின் சட்ட ஆலோசகர்கள் மூலம் எழுத்துபூர்வமாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

 

                                           எழுதப்பட்ட நாள்: 12 அக்டோபர் 1968

 

 

மஜ்ஜித் இட்காஹ் சாஹியின் எல்லைகள்:

கிழக்கு - ரயில்வே லைன்

மேற்கு _ சபுத்ரா ஜன்மஸ்தான்

வடக்கு - ஜன்மஸ்தான் நிலம்

தெற்கு: - ஜன்மஸ்தான் நிலம்

 

  பாங்கே கட்ரா, கேஷவ் - தேவெ மதுரா டான்

 

எழுதியவர்: நவ்நீத் லால் ஷர்மா சாஸ்திரி

தியோதர் சாஸ்திரி

கையெழுத்து: அப்துல் கஃபார்: ஆங்கிலத்தில்

கையெழுத்து: மொஹம்மது ஷாஹ் மிர் மாலிஹ்

 

 

ஆர்எஸ்எஸ்- எப்போதும் ஏமாற்றுதலையும், வஞ்சகத்தையும் கொண்டுள்ளது என்பதை அதன் பதிவுகள் காட்டுகின்றன…. அதன் நோக்கம் கோவில்கள் அல்ல…… ஹிந்து ராஜ்யம் தான் அதன் நோக்கம்…. அரசியல் மற்றும் சட்டபூர்வத் தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல.

 

                                  நன்றி: ஃப்ரண்ட் லைன் 2020 அக்டோபர் 23 இதழ்