விமர்சனக்காற்று வீசட்டும்.
வெளிச்சத்தில் உண்மைகள் மிளிரட்டும்!
பொதுவாழ்வில் ஓர்இயக்கத்தின்
செயல்பாடுகளில் விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை. இன்னும் சொல்லப்போனால், இத்தகைய
விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. இந்த விமர்சனங்களே நமது பலம், பலவீனம்
ஆகியவற்றை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. விமர்ச னங்களைக் கண்டு முகம்சுழிப்பதோ,
ஆத்திரம்கொள்வதோ எந்தப் பயனையும் தராது.
நேர்மையான விமர்சனங்கள் நமது பலத்தை மேலும்
வளர்த்துக்கொள்ளவும், நமது பலவீனங்களைக் களைந்துகொள்ளவும் உதவுகின்றன. தவறான
விமர்சனங்கள் என்றால், அவை எந்த வகையில் தவறானவை என அறிவுபூர்வமாக ஆதாரங்களை
நிறுவி ,”அவை விமர்சனங்கள் அல்ல: அவதூறுகளே” என்று தெளிவுபடுத்துவதும்தான் நமது மதிப்பை நிலை நாட்டுவன
ஆகும்.
ஓர் இயக்கத்தின்
ஒருசெயல்பாட்டை, அல்லது அதன் ஒட்டுமொத்தச்செயல்பாடுகளையும் விமர்சனம் செய்து,
அதன்மீது கருத்துக்களை வெளியிட முன்வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு தார்மீகக்கடமை
உண்டு. தனது விமர்சனத்தின்மூலம் ஒருகருத்தை உருவாக்கி
வெளியிடும் போது ‘அந்தக்கருத்துக்குத் தான் வருவதற்கான ஆதாரங்களைத் தனது
விமர்சனத்தில் நிறுவ வேண்டும். ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் தனது சொந்த விருப்பு,
வெறுப்புக்களை அல்லது கோபங்களை விமர்சனக்கருத்துக்களாக வெளியிடுவது அவரது விமர்சன
நேர்மையின்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துவிடும்.
‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யின் இயக்கஏடான “ஆசிரியர்கூட்டணி’யின் 20.4.1994 இதழில், “புதுடெல்லியில் டங்கல்
நமக்குத் தந்த தடங்கல்” என்ற
தலைப்பிலும், அதே இதழில், “அரசியலா? இயக்கமா?” என்ற தலைப்பிலும், 30.6.1994 இதழில் “பேதங்கள் இனியும்
தொடருமானால்....”என்ற மிகநீண்ட
தலையங்கத்திலும், 10.7.1994 இதழில், “அருமை உடைத்தென்று...” என்ற மற்றுமொரு தலையங்கத்திலும் 20.8.1994
இதழில், “பேதங்கள் அடிப்படையில்....”என்ற நீண்ட கட்டுரையிலும் திரு,சு.ஈசுவரன் ‘தமிழ்நாடு
ஆரம்பம்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யை, அதன்
செயல்பாடுகளை, பொறுப்பாளர்களை விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி அகில இந்திய
அளவிலும், உலக அளவிலும் ஆசிரியர் இயக்கங் களோடு தொடர்புகளும், அனுபவங்களும்
உள்ளதாகச் சொல்லிக்கொள்ளும் ஓர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ‘தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’பற்றி
வெளியிட்டுள்ள கருத்துக்களை அலட்சியப்படுத்தாமல் உரிய கௌரவம் அளித்துப்
பரிசீலிப்பதும், விளக்கமளிப் பதும் நமது கடமை ஆகும்.
“அரசியல்
கைக்கூலிகள்,”
“கட்சிக்கட்டளைப்படி சேவகம் செய்பவர்கள்,” “கட்சிக்கு விசுவாசமாக இருக்க எண்ணுவார்களே தவிர
இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள்”
ஐந்து இதழ்களிலும் திரு.சு.ஈசுவரன்
வலியுறுத்துகின்ற முதன்மையான விமர்சனங்கள் இவைதான். 2.8.1984 முதல் அவர் தனது
விமர்சனத்தை முன்வைத்துள்ள 20.8.1994 வரை “தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியின் எந்தத்தீர்மானம், எந்தச்செயல்பாடு அல்லது எந்த நடவடிக்கை
இத்தகைய ஒரு விமர்சனத்திற்கு ஆதாரம் என்பது எந்த ஒரு இடத்திலும் அவரது
விமர்சனத்தில் காணப்படவிலை!”
ஆனால், உண்மையிலேயே நடந்தது என்ன? ஆசிரியர்
கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்துகொண்டு இயக்கத்தையே கட்சி அரசியலில்
ஈடுபடுத்தியது யார்? அரசியல் கைக்கூலிகளாக இருந்தது யார்? கட்சிக்கட்டளைப்படி
இயக்கத்தையே ஈடுபடுத்தியவர்கள் யார்?
1971 ஆம் ஆண்டு.
தமிழ்நாட்டில் ஐந்தாவது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம், “தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தன்னைத் தேர்தலில் ஈடுபடுத்திக்கொள்வது ஏன்?” என்று ஒருபிரசுரம்
திரு,ஜே.எஸ்.இராசுவால் மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் வெளியிடப்படுகிறது.
அந்தப்பிரசுரத்தில் “பொதுத்தேர்தலில் திரு.ஜே.எஸ்.இராசு மதுரைமேற்குத்
தொகுதியிலும், முன்னாள்மாநிலத்தலைவர் திரு.எல்லண்ணா போடிநாயக்கனூர் தொகுதியிலும்
வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள்”என இயக்கத்தின்
சார்பில் அறிவிக்கப்பட்டது. அனைத்து அரசியல்கட்சிகளும் இந்த இருதொகுதிகளையும்
விட்டுக்கொடுக்குமாறு இயக்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
மதுரைமேற்குத் தொகுதியை விட்டுத்தர தி.மு.க.-
இ.காங்கிரஸ் கூட்டணீயோ, காமராஜர் – இராஜாஜி தலைமையிலான ஸ்தாபனக் காங்கிரஸ்-
சுதந்திரா கூட்டணியோ முன்வராத நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் மட்டும் ஸ்தாபனக்
காங்கிரஸ் தனக்கு வேட்பாளர் கிடைக்காத காரணத்தினால் திரு.எல்லண்ணாவை ஆத்ரிப்பதாக
அறிவித்தது. திரு,ஜே,எஸ். இராசு தேர்தலில் போட்டியிடாமல், திரு.எல்லண்ணாவை மட்டும்
போடியில் ஸ்தாபனக் காங்கிரஸ் ஆதரவு வேட்பாளராக நிறுத்தித் தோல்வி அடையச்செய்தார். ஆசிரியர்
கூட்டணி என்ற இயக்கத்தைக் கட்சி அரசியலில் ஈடுபடுத்தித் தேர்தல் களத்திலும் நின்று
தோல்வியுற வைத்த கறைபடிந்த வரலாறு இது.
இதுபோன்று எந்த ஒரு நடவடிக்கையிலாவது
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஈடுபட்டது என்று திரு.சு.ஈசுவரனால்
சுட்டிக்காட்ட இயலுமா?
இதோ மற்றுமொரு நிகழ்ச்சி. அ.இ.அ.தி.மு.க. 1977
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்தநேரம் அது.
திருச்செந்தூர் தொகுதியில் ஓர் இடைத்தேர்தல். அன்றைய சூழ்நிலையில் ஆளும்கட்சியான
அ.இ.அ.தி.மு.க.வுக்கு திருச்செந்தூர் தேர்தல் மிகவும் கடுமையான போட்டியை
உருவாக்கிய சோதனைக்களமாக இருந்தது. தோல்வியைத் தவிர்க்க எத்தகைய முயற்சியையும்
ஆளும்கட்சி செய்யத்தயாராக இருந்த நேரம்அது.
தேர்தல்பொறுப்பாளராக இருந்த
முன்னாள்கல்விஅமைச்சர் செ.அரங்கநாயகத்தின் அழைப்பின் பேரில் திரு.ஜே.எஸ்.இராசுவும்,
திரு.சு.ஈசுவரனும் ஆளும்கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல்களத்தில் திருச்செந்தூர்
தொகுதிக்குள் கிளைப்பொறுப்பாளர்களைக் கொண்டு அமைச்சருக்கு வரவேற்புக் கூட்டங்கள்
நடத்தப்பட்டன. ஆசிரியர்களின் ஆதரவு ஆளும்கட்சிக்கு உறுதியளிக்கப்பட்டது. தேர்தலில்
250 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும்கட்சி வெற்றிபெற்றது!
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு இன்னொரு காட்சி.
அ.இ.அ.தி.மு.க. “ஜா”, “ஜே” என
இரண்டாகப்பிளவுபட்டு “ஜே” அணியிலிருந்து
நால்வர் அணி” பிரிந்து 1989 பொதுத்தேர்தலைச் சந்தித்த நேரம்.முன்னாள்
கல்வி அமைச்சர் செ.அரங்கநாயகம் நால்வர் அணியின் வேட்பாளராகக் கோவைமேற்குத்
தொகுதியில் “குலைதாங்கிய தென்னைமரம்”சின்னத்தில்
போட்டியிட்டார்.திரு.ஜே.எஸ்.இராசுவும், திரு.சு.ஈசுவரனும் இயக்கத்தின் சார்பில்
கோவையில் தங்கித் தேர்தல்பணிகளை மேற்கொண்டனர். ஆசிரியர்களைத் தேர்தல் பணிகளில்
ஈடுபடுத் தினர். இதன் உச்சகட்டமாக கோவைமாவட்டத்தில் வெளியாகும் தினசரிப்
பத்திரிக்கைகளில் “டாக்டர் செ.அரங்கநாயகம் அவர்களுக்கு குலைதாங்கிய
தென்னைமரச்சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு தமிழ்நாடு
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெயரில் விளம்பரங்களை வெளியிட்டனர்.
இவ்வாறு கட்சிஅரசியலில் இயக்கத்தை ஈடுபடுத்திய பெருமை முழுவதும்
திரு.ஜே.எஸ்.இராசுவுக்கும், திரு.சு.ஈசுவரனுக்கும் மட்டும் தானே சொந்தம்?
இந்தநிலையில் எவ்வித ஆதாரமோ, உண்மையோ இல்லாமல் ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்கூட்டணியின்மீது செய்யப்படுகின்ற விமர்சனங்கள் உண்மைக்கலப்பே இல்லாத
அவதூறுகளாகவே உள்ளன.
“கட்சிக்கு முதலிடம் அளித்து ஆசிரியர் நலனை
இரண்டாம்நிலைக்குத் தள்ளிப் புறக்கணிப்பவர்கள்”
திரு.சு.ஈசுவரனின் விமர்சனத்தில் அடுத்து
முக்கியத்துவம் பெறும்கருத்து இது. இந்தக் குற்றச் சாட்டுக்கும் எந்தஒரு சிறிய
ஆதாரத்தைய்ம் அவரது எழுத்துக்களில் காணமுடியவில்லை.
1984ல் தமிழ்நாடு அரசு நான்காம் ஊதியக்குழுவை
நியமித்திருந்தபோது “தமிழ் நாட்டு ஆசிரியர்களும், அரசுஊழியர்களும் இந்தியாவிலேயே
மிகக்குறைந்த ஊதியம் பெறுபவர்கள்” என ஒய்.பி.சவாண்
தலைமையிலான எட்டாவது நிதிக்குழு தெரிவித்தது. இவர்களுக்கு அகில இந்திய சராசரி
ஊதியமாவது அலிக்கப்பட வேண்டுமானால், அப்போதிருந்த ஊதியத்தை 25% உயர்த்திட வேண்டும்” எனப்பரிந்துரைத்தது. மத்திய அரசு ரூ.501கோடியைத்
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி இந்தவிவரங்களை நாடு முழுவதிலும் ஆசிரியர்கள் மத்தியில் கொண்டுசென்றது.
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணீயும், பிற ஆசிரியர் இயக்கங்களும் தமிழக அரசு 25%
ஊதியஉயர்வை நான்காம் ஊதியக்குழுவில்
அளித்திடத் தொடர்ந்து வலியுறுத்திவந்தன. ஆனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
எடுத்த நிலை என்ன? இதோ,30.5.1985 நாளிட்ட “ஆசிரியர் கூட்டணி” இதழில் திரு.சு.ஈசுவரன் எழுதுகிறார்:
“நான்காம் ஊதியக்குழுவின்
அறிவிப்புக்களை வெளியிட்ட 26.5.85 அன்று கோட்டைக்குவந்த முதல்வர் ‘படக்”கெனத் தலைவர் ஜே.எஸ்.இராசுவின் பக்கம்
திரும்பினார். “கன்னியாகுமரி யிலிருந்து சைக்கிளிலேயே வந்தீர்களாமே?” எனவிசாரித்தார். ”மாநாடு சிறப்பாக நடைபெற் றதா?” எனக் கேட்டார். பின் ஊதியக்குழு
அறிவிப்புக்களை வெளியிடச்சென்றார்.”
“முதல்வர் எம்.ஜி.ஆர்.ஊதியக்குழு
அறிவிப்புக்களை வெளியிட்டதும் பலரும் வாழ்த்திட முந்தினர். முதல்வரோ,
தலைமைச்செயலாளரிடம், மைக்கை ஜே.எஸ்.இராசுவிடம் கொடுக்கு மாறு கூறினார்.
மாநிலத்தலைவர் ஜே.எஸ்.இராசு ஊதியக்குழு அறிவிப்புக்களை வரவேற்றுப் பாராட்டி நன்றி
தெரிவித்தார்.”
குறைந்தபட்சம் 25% ஊதிய உயர்வு அளிக்கவேண்டிய
தேவை இருந்தும்,மத்திய அரசு ரூ.501 கோடி நிதிஒதுக்கீடு செய்திருந்தும்கூட, 25%ஊதிய
உயர்வு அளிக்காமல், வெறும் 7%மட்டுமே ஊதியஉயர்வு நான்காம் ஊதியக்குழுவில்
அறிவிக்கப்பட்டிருந்தது. 18% ஊதிய உயர்வு வஞ்சிக்கப்பட்டது: ஏமாற்றப்பட்டது.
ஆசிரியர்நலனை இரண்டாம்நிலைக்குத் தள்ளாமல்,
கட்சிநலனுக்கு முதலிடம் அளிக்காமல் சங்கம் நடத்துபவர்களாக திரு.ஜே.எஸ்.இராசுவும்,
திரு.சு.ஈசுவரனும் இருந்திருந்தால், எம்.ஜி. ஆருக்கும் தங்களுக்கும் உள்ள
நெருக்கத்தைப் பயன்படுத்தி, “மத்திய அரசு 25%ஊதிய உயர்வு
அளிக்கப்பரிந்துரைத்து நிதிஒதுக்கீடும் செய்துள்ளபோது நீங்கள்வெறும் 7%மட்டுமே
அளிக்கி றீர்களே, இது நியாயமா? இதை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?” என்றுகேட்டு 25% ஊதிய உயர்வை
வற்புறுத்தியிருக்க வேண்டாமா? அவ்வாறு வற்புறுத்தாமல் அவர்களைத்
தடுத்தது கட்சிநலனுக்கு முதலிடம் அளித்து, ஆசிரியர்நலனை இரண்டாம்நிலைக்குப்
புறக்கணித்தநிலை அல்லாமல் வேறென்ன?
ஆனால்.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கூட்டணி
நான்காம்ஊதியக்குழு வஞ்சித்துள்ளதாக விமர்சனம் செய்தது. போராட்டக்களம்
கண்டது.மாபெரும் ஒற்றுமை உருவாகவும், இன்று தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான
ஊதியம்பெறவும் வித்திட்டது. மறுக்கமுடியாத இந்தவரலாற்று நிகழ்ச்சிகளைத்
திரித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மீது திரு.சு.ஈசுவ ரன் செய்துள்ள இந்த
விமர்சனம் இன்னொரு அவதூறு அல்லாமல் வேறென்ன?
‘குழப்பவாத பிளவுசக்திகள்’ – ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை
வர்ணிக்கத் திரு.சு.ஈசு வரன் பயன்படுத்தியுள்ள அடைமொழி இது.”ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வைத்த குழப்பமான வாதங்கள் என்ன? அது எவ்வாறு
பிளவுவாத சக்தியாகச் செயல்பட்டது?” என்ற
விபரங்களேதுமின்றி திரு.சு.ஈசுவரன் தெரிவிக்கும் கருத்து இது.
நான்காம் ஊதியக்குழுவின் பாதகமான அறிவிப்புக்குப்பிறகு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1985 ஜூலை9 அன்று ஊதியக்குழுவின் பாதிப்புக்களை
நீக்கக்கோரி சென்னை கடற்கரையில் 5,000பேர் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்தியது. நான்கு சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு ஏற்பட
முன்முயற்சி எடுத்தது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும், தமிழ்நாடு
ஆசிரியர் கூட்டணியும், தமிழக ஆசிரியர் கூட்டணியும் ஒற்றுமை உருவாகக் கரம் கோர்க்க
முன்வந்தன. ஆனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மேற்கொண்ட நிலை என்ன?
நான்கு சங்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழு ஜேக்டியாகப்பரிணமித்து
செப்டம்பர்5 ஆசிரியர் தினத்தைத் “துக்க
நாளாக” அனுசரித்தன. ஆனால், தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியோ “இன்ப நாளிது. இனிய நாளிது. எம்.ஜி.ஆருக்கு நன்றிதெரிவிக்கும்
வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் “பயன்தரும் நாங்கு பழமரகன்றுகளை நடுவோம்” என்று குழப்பியது.
ஆசிரியர்களுக்குத் துரோகமிழைத்து ஒற்றுமையைத் தடுக்கும் பிளவுசக்தியாகச்
செயல்பட்டது.
ஜேக்டி போராட்டத்தின் உச்சகட்டத்தில்
தாக்குப்பிடிக்க முடியாமல் ஜேக்டியில் இணைந்த இவர்கள் அன்றைய கல்வியமைச்சர்
பொன்னையன் கட்டளைக்கிணங்க ஜேக்டியிலிருந்து வெளியேறினார்கள்.
ஜேக்டி –அரசு ஊழியர் இயக்கங்களோடு இணைந்து
‘ஜேக்டி பேரமைப்பாகி “மத்திய அரசுக்கு இணையான ஊதியமே எங்கள் இலட்சியம்” என்று ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராடியபோது, “மத்திய
அரசுக்கு இணையான ஊதியமா? அதுவும் தமிழ்நாட்டிலா? கூரை ஏறிக் கோழிபிடிக்க
முடியாதவன் வானத்தைகீறி வைகுந்தம் போவானா?” என்றுவக்கணை பேசினார்கள். “ஆசிரியர் பயிற்சிக்கு 1981ல்
ஓர் ஊதிய உயர்வு பெற்றோம். இன்னொரு ஊதிய உயர்வு பெறுவதுதான் சாத்தியம்” என்றுகூறி வள்ளுவர் கோட்டத்தில் ஊக்க ஊதிய உயர்வு
மாநாடு நடத்தினார்கள்.மாநாட்டில் பங்கேற்ற கல்வி அமைச்சர் பொன்னையன்
“ஊக்கமது கைவிடேல்” என்று
அறிவித்துச்சென்றதை மாபெரும் வெற்றி எனக்கூறிப் பெருமிதம் கொண்டார்கள்.
தமிழ்நாட்டு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்
ஜேக்டி பேரமைப்பில் இணைந்து நின்று 1988 ஜூன் 22முதல் மாபெரும்
வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஜூலை15ல் சிவ.இளங்கோவுடன் சேர்ந்து
அரசோடு’துரோக ஒப்பந்தம்’ செய்து ஆசிரியர்
சமுதாயத்தின் குழப்பவாத – பிளவுசக்தியாகித் தனிமைப்பட்டு நின்றார்கள். உண்மை
வரலாறு இது.
ஆனால்,திரு.சு.ஈசுவரனோ, தனக்கும், தனது
அமைப்புக்கும் மட்டுமே பொருந்துகிற “குழப்ப வாத பிளவு சக்தி” என்ற அடைமொழியை 1984முதல் இன்றுவரை ஒற்றுமைக்கு உறுதுணையான சக்தியாக
விளங்கும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்குச் சூட்டிமகிழ விரும்புகிறார்.என்ன
ஒரு வேடிக்கை மனிதர் இவர்?
“மாஸ்டர் கொள்கைக்கு எதிரான இவர்கள் அவரது
கொள்கைக்கு வாரிசாவது எப்படி? அவரது பெயருக்குப் புனிதம் தேடுவது என்ன நியாயம்?”
திரு.சு.ஈசுவரன் எழுப்பும் வினோதமான கேள்வி
இது!
மாஸ்டர் இராமுண்ணி தன்னை இந்த நாட்டின்
சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுத்திகொண்ட போராளி. ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு
அவரது இரத்தத்தில் ஊறிய ஒன்று. அவரது உணர்வு களோடு ஒன்றிப்போயிருப்பதால்தான்
மத்திய அரசின் புதிய பொருளாதரக்கொள்கையால்- புதிய தொழிற்கொள்கையால், தாராளமயமாக்குதல்
நடவடிக்கைகளால், தனியார்மயமாக்கும் போக்குகளால் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கே
ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி “டங்கல்
எதிர்ப்புப் பேரணி”யில் பகிரங்கமாக
அறிவிப்புத் தந்தே பங்கேற்கிறது. இந்திய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க
நடைபெறும் இரண்டாம் சுதந்திரப்போராட்டத்தில் தனது பங்கைச்செலுத்த முன்நிற்கிறது.
எதிர்காலத்திலும் இந்தக் கடமையை நிறைவேற்றிட – அனைத்துத் தியாகங்களுக்கும் தயாராக
உள்ளது.
அந்நியநாட்டு டாலர்களின் ஸ்பரிசத்தில்
புழகாங்கிதம் அடைந்து ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களைப்போல் கண்மூடித்தனமான
‘கம்யூனிச எதிர்ப்பு அரசியலை’த் தனது
கொள்கையாகக் கொண்டுள்ள திரு.சு.ஈசுவரன் இன்னும் மாஸ்டர் பெயரை உச்சரிப்பதுதான்
வேடிக்கையாக இருக்கிறது!
இறுதியக திரு,சு,ஈசுவரனுக்கு ஒன்றை
நினைவுபடுத்துவோம். “நீங்கள் யார் என்பதையோ, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
என்பதையோ, நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதையோ வைத்துஅல்ல: நீங்கள் என்ன
செய்கிறீர்கள் என்பதை வைத்தே நீங்கள் யார்? என்பது நிர்ணயிக்கப்படும்.
இவ்வாறு நிர்ணயிப்பதில் தமிழ்நாட்டுஆசிரியர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள்.
உங்களை மட்டுமல்ல: எங்களையும் அவர்கள் மிக நன்றாகவே இனம்கண்டு வருகிறார்கள்”.