உண்மைகளின் வெளிச்சத்தில்.....
”இழப்பதற்கு
அடிமைச்சங்கிலிகளைத்தவிர வேறொன்றும் இல்லை.அடைவத்ற்கோ ஒரு பொன்னுலகம்
காத்திருக்கிறது” என்று பிரகடனம் செய்தார்கள் மார்க்சியமூலவர்கள்.
லெனினின் தலைமையில் அந்த பாட்டாளிவர்க்கப்புரட்சியை வெற்றிகரமாக சாதித்த சோவியத்
யூனியன், ‘உலகத்தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என
அறைகூவல் விடுத்தது. “ஆகா என்றெழுந்த்து பார் யுகப்புரட்சி” என்று உலகத்தின் உழைக்கும்
மக்கள் சிலிர்த்தெழுந்தார்கள்.
’லெனினின் மாணவன்’ என தன்னைப் பெருமையுடன்
அழைத்துக்கொண்ட ஸ்டாலினின் தலைமையில் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போ)
மூன்றாம் அகிலத்துக்குத் தலைமை தாங்கியபோது ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும்
அஞ்சிப் பின்வாங்கின. உலகெங்கும் உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் சோசலிச உலகத்தை
நிர்மாணிக்கும் என்ற மகத்தான நம்பிக்கை எழுந்தது. மிகவும் பின்தங்கிய நிலையில்
இருந்த சோவியத் யூனியன் மிகக்குறுகிய காலத்தில் ஸ்டாலின் தலைமையில் உலகின்
முன்னேறிய நாடுகளில் ஒன்றாக மலர்ந்து அந்த நம்பிக்கைக்கு வலுவூட்டியது.
ஸ்டாலின் மறைவுக்குப்பின் 1956 பிப்ரவரி 25
ல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது கட்சிக்காங்கிரசில் குருச்சேவ் ஒரு’இரகசிய உரை’யை நிகழ்த்தினார். அதில் அவர் ‘வெளிப்படுத்திய’ விவரங்கள் ஏகாதிபத்திய, முதலாளித்துவ
உலகில் அமோக வரவேற்பையும், கம்யூனிச உணர்வுகொண்டோர் மத்தியில் அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.
அமெரிக்க அரசுத்துறை குருச்சேவ் நிகழ்த்திய
அந்தஉரையை உடனடியாக வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்தது. ‘ நியூயார்க டைம்ஸ்’ ஏடு அந்தஉரையை ‘மகத்தான சாதனை’, ‘கொண்டாடத்தக்கது’ என்று போற்றியது. இந்தக்கட்டுரையை எழுதிய முதலாளித்துவ
எழுத்தாளர் வில்லியம் டாவ்ப்மென் குருச்சேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி ‘புக்கர்’ பரிசும் பெற்றார். இலண்டன் முதலாளித்துவ
ஏடான ‘டெலிகிராஃப்’ குருச்சேவின் உரையை ‘20ஆம் நூற்றாண்டின் மிகவும்
புகழ்பெற்ற உரை’
என புகழாரம்
சூட்டியது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி,
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட உலக கம்யூனிச இயக்கங்களும் அந்த உரையைப்
பரிசீலித்துத் தங்கள் கருத்துக்களை வெளியிட்டன.
அந்த ‘இரகசிய உரை’யில் குருச்சேவ் கூறியது என்ன? அது உண்மைதானா?
இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனுக்குத்
தலைமைதாங்கி, ஹிட்லரையும், நாஜிப்படையையும் தோற்கடித்து, பாசிசத்தின்பிடியில்
விழஇருந்த இந்தஉலகைக் காப்பாற்றிய, மிகக்குறுகிய காலத்தில் லெனினின்
வழிகாட்டலின்படி சோவியத் யூனியனை ஆற்றல்மிக்க சக்தியாக, ஏகாதிபத்தியத்தியங்களுக்கு
சவால்விடக்கூடிய மாபெரும் பாட்டாளிவர்க்க பூமியாக மாற்றிய ஸ்டாலின்மீது குருச்சேவின்
‘இரகசிய உரை’ அவதூறுகளைப் பொழிந்தது.
குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. உலகமே திடுக்கிட்டது.
ஸ்டாலின் ‘சர்வாதிகாரியா?’ ‘கொடுங்கோலரா?’ பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்த ‘கொலைகாரரா? தன்னைச்சுற்றி
‘தனிநபர்வழிபாட்டுணர்வை’ உருவாக்கிக் கொண்டவரா? உலகத்தின்
அனைத்து நாடுகளிலுமுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் அன்றைய சூழலில் கிடைத்த
தகவல்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் வளர்ச்சியையும், ஸ்டாலினின்
பாத்திரத்தையும்பற்றித் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தன.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விரிவடைந்த
பிளீனத்தின் முடிவுகளின் அடிப்படையில், “பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின்
வரலாற்றுபூர்வமான அனுபவங்கள்” என ‘மக்கள் தினசரி’ (People’s Daily’ –‘ Rinmin Ribao’) 1956
ஏப்ரல் 5 மற்றும் 1956 டிசம்பர் 29 ல் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது -அதன்
முக்கியமான அம்சங்கள்:
‘சுரண்டும் வர்க்கங்களுக்கு சேவைசெய்துவரும் எல்லா முதலாளித்துவ
நாடுகளிலும் ஆட்சி அதிகாரத்திலுள்ள எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ
அதனுடைய தீவிரமான தவறுகள்பற்றி. மக்கள் அல்லது தனது உறுப்பினர்கள் முன் வெளிப்படுத்த
வரலாற்றில் எப்போதும் துணிந்த்தில்லை. ஆனால் பாட்டாளிவர்க்க்க் கட்சிகளில் இது
முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்காக
சேவைசெய்துவரும் பாட்டாளி வர்க்கக்கட்சிகள் தங்களைசுயவிமர்சனம்
செய்துகொள்வதன்மூலம் தங்களது தவறுகளைத் தவிர வேறெதையும் இழப்பதில்லை. இதன்மூலம்
அவைகள் மக்களின் ஆதரவைப்பெற்று வருகின்றன.
சோவியத்யூனியன்கம்யூனிஸ்ட்கட்சி ‘தனிநபர்வழிபாடு பற்றி சுயவிமர்சனம் செய்துகொண்ட
தால் இப்போது ஒருமாதத்துக்கும் மேலாக உலகெங்கும் உள்ள பிற்போக்காளர்கள் மகிழ்ச்சியில்
கத்துகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்:
“ நன்று. முதன்முதலாக
சோவியத் அமைப்புமுறையை ஏற்படுத்திய சோவியத் யூனியன் அதிர்ச்சி தரக்கூடிய தவறுகளைச்
செய்துள்ளது. மேலும் என்ன? அந்த்த்தவறுகளை பரந்த அளவில் புகழ்பெற்றவரும்,
மதிக்கப்படுபவருமான ஸ்டாலின் தானே செய்துள்ளார்!”
இதன்மூலம் சோவியத் யூனியன் மற்றும்
பிறநாடுகளிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை மதிப்பிழக்கச்செய்ய தங்களுக்கு ஒரு
பிடி கிடைத்துள்ளது என்று
பிற்போக்குசக்திகள் கருதுகின்றன. ‘ நாங்கள் எப்போதும் தவறுகளைச் செய்ய்மாட்டோம்’ என்றோ, ‘குறிப்பிட்ட ஒருகம்யூனிஸ்ட்
தவறுகளைச் செய்வது என்பது சாத்தியமே இல்லை’ என்றோ
தலைமையில் உள்ள எந்த மார்க்சிஸ்ட்டாவது எப்போதாவது எழுதியுள்ளாரா? அது, பெரிய
அல்லது சிறிய தவறுகளை எப்போதும் செய்யாத ஒருகடவுளின் பாதியாக இருப்பதை
கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள் துல்லியமாக மறுப்பதாலும், கம்யூனிஸ்ட்களாகிய நாங்கள்
எங்கள் உள்கட்சிவாழ்வில் விமர்சனம், சுயவிமர்சன்ங்களைப் பயன்படுத்துவதாலும்
அல்லவா? மேலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை இந்த உலகில் முதன்முறையாக நிறுவிய,-
இதற்கான முன்னுதாரணங்களின் பயன்களைப் பெற்றிராத – ஒரு சோசலிசஅரசு தவறுகளையே
செய்யாது என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்? 1921 அக்டோபரில் லெனின் கூறினார்:
சோவியத்
அமைப்பைக் கட்டமைக்கும் நமது பணிகளில் ஏற்படும் பின்னடைவுகளும், தவறுகளும் நம்மீது,
சவக்குழிக்குச் செல்லும் முதலாளித்துவ, குட்டிகுதலாளித்துவ ஜன நாயகவாதிகளின்
அருவருப்பான வசைப்பேச்சுக்கள் குவிக்கப்படும். நாம் எண்ணற தவறுகளைச் செய்ததன்மூலம்
எண்ணற்ற பின்னடைவுகளைச் சந்தித்துவருகிறோம் என்பதை நாம் ஒருகணம்கூட
மறந்துவிடக்கூடாது. உலகவரலாற்றிலேயே முன்னுதார ணம் இல்லாத ஒருஅரசமைப்பை கட்டமைக்கும்போது
எவ்வாறு பின்னடைவுகளையும், தவறுகளையும் தவிர்க்கமுடியும்! நாம் பின்னடைவுகளையும்,
தவறுகளையும் சரிப்படுத் தவும், சோவியத் கொள்கைகளை – அவை இன்னும் முழுநிறைவு
பெறுவதில் மிகமிக தொலைவில் உள்ளது – நடைமுறைப்படுத்தவும், வளர்க்கவும் தளராத
உறுதியோடு போராடுவோம்’
இவ்வாறு குறிப்பிட்ட சீன கம்யூனிஸ்ட்கட்சி, ”லெனின் மறைவுக்குப்பிறகு கட்சி மற்றும் அரசின் தலைவர் என்றமுறையில்
ஸ்டாலின் படைப்பாற்றலோடு மார்க்சிய-லெனினிசத்தைப் பிரயோகம்செய்து அதை
வளர்த்தெடுத்தார். டிராட்ஸ்கியர்கள், ஜினோவீவியர்கள், முதலாளித்துவதரகர்கள் முதலானஎதிரிகளிடமிருந்து
லெனினிச கொள்கையைப் பாதுகாப்பதற் கான போராட்டங்களில் மக்கள் உறுதியையும், விருப்பங்களையும்
தெரிவித்து ஸ்டாலின் தன்னை மார்க்சிய-லெனினியத்தின் ஒருமிகச்சிறந்த போராளி என்பதை
நிரூபித்தார்’ என ஸ்டாலின் வகித்த பாத்திரத்தை
மதிப்பீடு செய்தது.
ஆனால், குருச்சேவின் ‘இரகசிய உரை’யின் தாக்கத்தால் தனது மதிப்பீட்டின்
இன்னொரு பகுதியாக, “ஸ்டாலின் தனிநபர் வழிபாட்டை ஏற்றார்: அதை வளர்த்தார்:
தன்னிச்சையான நடவடிக்கைகளில்ஈடுபட்டார். இவ்வாறுஸ்டாலின் தனதுபிந்தைய வாழ்நாளில்
தத்துவத்துக்கும் நடைமுறைக்குமிடையே தானே ஒருமுரண்பாடாகக் காணப்பட்டார்” என விமர்சித்தது.
1956 ஜூலை 12ல் புதுதில்லியில் கூடிய
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழுவும் இதேபோன்ற
கருத்துக்களையும், விமர்சங்களையும் தீர்மானங்களாக வெளியிட்டது. உலகின் பல்வேறு
நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட்கட்சிகளும் இத்தகைய பரிசீலனைகளைச்செய்து தங்கள்
கருத்துக்களை வெளியிட்டன.
ஆனால் குருச்சேவின் ‘இரகசிய உரை’ நிகழ்த்தப்பட்ட 35 ஆண்டுகளுக்குப்பின்-
அதாவது சோவியத்யூனியன் வீழ்ச்சிக்குப்பின் – முதலாளித்துவம் மீண்டும்
அரங்கேறியபின், முன்னாள் சோவியத் ஆவணக்காப்பகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அனைத்து
ஆதாரங்களும் 1956 பிப்ரவரி 25ல் குருச்சேவ் தனது ‘இரகசிய உரை’யில் ஸ்டாலின்மீது சுமத்திய குற்றச்சாட்டுக் களும்,
தாக்குதல்களும் பொய்களால் வடிவமைக்கப்பட்டவையே என்பதை நிரூபித்துள்ளன.
அமெரிக்காவிலுள்ள மாண்ட்க்ளேர் பல்கலைக்கழக் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான
குரோவர் ஃபர் 10ஆண்டுகளுக்கும்மேலாக நட்த்திய தனது ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் Khrushchev Lied நூலில் அம்பலப்படுத்தியுள்ளார்.
குருச்சேவின் பொய்களால் தவறாக எழுதப்பட்டுள்ள சோவியத் யூனியன் வரலாறு மட்டுமல்ல’ சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி
மற்றும் உலக வரலாறும் உண்மைகளின் வெளிச்சத்தில் திருத்தி எழுதப்பட்டே
ஆகவேண்டும் என பேரா.குரோவர் ஃபர் ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.
1904ல் ‘தி மெட்டல் ஒர்க்கர்’ இதழில் ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்ற தொழிலாளி
எழுதினார்: “தொழிலாளர் இயக்கம் பத்தாயிரம்முறை விழும்! மறுபடியும் எழும்! அதன்
குரல்வளை நெறிக்கப்படும்: தொண்டை அடைக்கப்படும். நீதிமன்றம் கேள்விக்கணை
தொடுக்கும்: குண்டர் களால் வசைபாடப்படும். பொதுமக்களின் புருவ நெரிப்பும்கூட
போர்தொடுக்கும். அரசியல்வாதி களால் ஏய்க்கப்படும். ஓடுகாலிகளால் மறுப்புரை கூறப்படும்: சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்:
உளவாளிகளின் ஒற்றறியும் நோய்களால் பீடிக்கப்படும்: கோழைகளால் நடுவீதிகளில்
விடப்படும்: தலைவர்களால்கூட விற்றுவிடப்படும்.”
ஓ! இவ்வளவு சோதனைகள் இருந்தாலும், இந்த வையகம்
இதுவரை கண்டிராத உன்னதசக்தி வாய்ந்தது உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டுகளாக அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை விடுதலை செய்வதே இதன்
வரலாற்றுக்கடமையாகும். இதன் வெற்றி நிச்சயமே!
இதைமீண்டும் உறுதிப்படுத்தும் Khrushchev Lied என்ற இந்த அரியநூலை ‘ஸ்டாலின்பற்றிய
குருச்சேவின் பொய்கள்’ என இந்தியமொழிகளிலேயே
முதலாவதாக தமிழில் மொழிபெயர்க்க அனுமதித்துள்ள மாண்ட்க்ளேர் பல்கலைக்கழக்
பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான குரோவர் ஃபர் அவர்களுக்கும், அழகிய நூலாக
வெளியிடும் பொன்னுலகம் பதிப்பகம் தோழர் குணா அவர்களுக்கும் எனது நன்றி!
பாராட்டுக்கள்!!
ஊத்துக்குளி. ஆர்.எஸ் தோழமையுடன்,
9.4.2016 செ. நடேசன்
