தோழர் கருணாமனோகரன்
1960களின்
துவக்கத்தில் சமுதாயமாற்றத்திற்கான கருத்தாக்கமாக இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது
‘திராவிட இயக்கம்’. கலைஇலக்கிய வடிவங்களான கவிதை, சிறு கதை,
நாடகம், பாடல்கள், திரைப்படம் என அனைத்துச் சாதனங்களையும் மிகவலிமையாகப் பயன்படுத்தித்
‘திராவிடக் கருத்தியலை’
இளைஞர்களின் சிந்தனைத் தளங்களில் அது ஏற்றியது. ஆனால்,1967ல் தி.மு.க.
ஆட்சிப்பொறுப்பை ஏற்றபின்,சமதர்மசமுதாய மாற்றத்திற்காக ஏங்கிநின்ற இளைஞர்களின்
நெஞ்சங்களில் அது உருவாக்கிய பிம்பங்கள் உதிரத்துவங்கின.
திராவிட
இயக்கத்தத்துவத்தின் போதாமையை உணர்ந்த அவர்கள், சமுதாய மாற்றத்திற்கு
ஒருபுரட்சிகரமான தத்துவத்தின் தேவையை உணரத்துவங்கினார்கள். சமுதாய அவலங்களைக்கண்டு
கோபம்கொண்ட இந்த இளைஞர்களின் பிரதிநிதிகளாக ஊத்துக்குளிப் பகுதியிலும் சிலர்
இருந்தனர்.கவிஞர்.முத்துப்பொருநன், நீலவண்ணன், கலையரசு ஆகிய மூவரும் 1972 மே
தினத்தன்று எங்கள் கோபங்களைக் கவிதைகளாக்கி ‘பரணி’ என்ற ஒருசிறிய தொகுப்பை வெளியிட்டோம்.
கவிஞர்.சேலம் தமிழ் நாடன் அளித்த கனல்தெறிக்கும் முன்னுரையும், ‘ மனிதன்’ இதழில் அந்தச் சின்னஞ்சிறிய தொகுப்பை
வரவேற்று எழுதப்பட்ட மூன்று பக்க விமர்சனமும் பரபரப்பை ஏற்படுத்தின. புதிய
தொடர்புகள் தேடிவந்தன. அப்படி எங்களை இனம்கண்டு வந்தவர்தான் தோழர்.கருணாமனோகரன்.
மார்க்ஸிசம் எங்களுக்குப் பிடிபட்டது இவரது விளக்கங்களால்தான். மார்க்ஸ்,
எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசே துங் என்ற மாபெரும் தலைவர்களை நாங்கள் அறிமுகம்
கொண்டதும் இவரால்தான்.அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளை அவர் எங்களுக்குள்
விதைத்தார். உழைக்கும் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து அவர்களின்
சுகதுக்கங்களில், போராட்டங்களில் பங்கேற்று அந்த அனுபவங்களை எழுதுவதே ‘மக்கள் கலை
இலக்கியம்’ என்று
கற்பித்தார். கவிஞர்.முத்துப்பொருநன், கரைப்பாளையம் க.பழனிசாமி, சந்திரமூலரசன்,தொரவலூர்
சீனிவாசன், எம்.நல்லசாமி ஆகியோர் தோழர். கருணாமனோகரனின் வழிகாட்டல்களால்
புதியவெளிச்சங்களக் கண்டோம்.
1977ல்
நான் ஆசிரியர்சங்கப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டபோது தோழர்.கருணா அதை விமர்சித்தார்.
இன்றைய ஆசிரியர்கள் சமுதாய உணர்வின்றித் தங்கள்வேலை, தங்கள்சம்பளம், சலுகைகள்,
இடமாறுதல்கள் போன்ற குறுகிய வட்டங்களிலேயே உள்ளவர்கள். அவர்களுக்காகப் பாடுபடுவது
சமுதாயமாற்றத்திற்குப் பயன்படுமா? என்று வினவினார்.ஆசிரியர்களைச் சமுதாய உணர்வுபெற
வைத்தால் அவர்களைச் சமுதாய மாற்றத்திற்கான தூதுவர்களாக ஆக்கமுடியும் என்று நான்
கருதினேன். என் சங்க நடவடிக்கைகளால் தோழர்.கருணாவுடனான தொடர்பில் இடைவெளி எழுந்தது
பொதுவாகக்
கிராமப்புறப் பள்ளிகளில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஆசிரியர்கள்
ஆதிக்கசக்திகளால் அடிமைத்தளையில் சிக்குண்டு அவமானப் படுவதிலிருந்து விடுவிக்க
எனது பணிகளைத் தொடர்ந்தேன். உயர்சாதியினர் முன் சைக்கிளில் செல்லக்கூடாது: காலில்
செருப்பணியக்கூடாது.டீக்கடைகளில் தனிடம்ளர் போன்றவற்றை மாற்றவேண்டும் என்றால்
ஆசிரியர்களை அணிதிரட்டி அநீதிகளுக்குஎதிராகப் போராடவைக்கவேண்டும் என்ற திசைவழியில் எனது சங்கப்பயணம்
தொடர்ந்தது.ஊத்துக்குளிப் பகுதியில் அதற்கு நல்லபயன் கிடைத்தது.
தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த ஆசிரியரின் மகனும், உயர்வகுப்பைச் சார்ந்த
பெண்ணும் திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது அதற்கு எதிர்ப்பு வந்ததைத் தடுத்து
ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அழைப்பிதழ் தந்து அந்தத் திருமணத்தை நடத்தி
முடித்தோம்
எம்.ஜி.ஆரின்
சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்டபோது, நம்பியூர் வட்டரத்தில் ஒரு பள்ளியில் சத்துணவுத்
திட்டக்குழுவின் தலைவராக ஆளும்கட்சிப் பிரமுகரான தன்னை நியமிக்காமல் ஊராட்சிமன்றத்தலைவரை
முறைப்படி நியமித்ததற்காக ஆளும்கட்சிப்பிரமுகரால் தாழ்த்தப்பட்ட இனஆசிரியர்
மாணவர்கள் முன்னிலையில் செருப்பால் அடிக்கப்பட்டார். ஆசிரியர் கூட்டணியின்
சார்பில் அந்தப்பிரமுகரை உடனடியாகக் கைதுசெய்யக் கோரியபோது காவல்துறை மறுத்தது.காவல்
நிலையத்தின்முன் திரண்டிருந்த ஆசிரியர்களிடம் ‘நாளைமுதல் பெரியார் மாவட்டம்
முழுவதும் ஒரு பள்ளியில்கூட சத்துணவு வழங்கப்பட மாட்டாது’ என ஆசிரியர்கூட்டணியின் மாவட்டக்கிளையின்
சார்பில் அறிவித்ததும் காவல்துறை அஞ்சியது. முதல்வர் எம்.ஜி.ஆரின் திட்டம் மாவட்டம்
முழுவதும் நிறுத்தப்பட்டால் பிரச்சனை பெரிதாகிவிடுமே என்று கெஞ்சியது. இரவு
12மணிக்குள் கைதுசெய்யா விட்டால் முடிவில் மாற்றமில்லை என்றதும் கைது செய்தது:
சிறையில் அடைத்தது. .இந்தச் செய்திகளை அறிந்த தோழர்.கருணாமனோகரன் மகிழ்ச்சி
அடைந்தார்.
1985ல்
ராஜீவ்காந்தியின் ‘புதிய கல்விக்கொள்கை’ ஆரவாரத்தோடு வெளியிடப்பட்டது. இக்கல்விக்கொள்கையில் உள்ள
கல்விநலன், மாணவர்நலன், ஆசிரியர் நலன், மக்கள் நலன்களுக்கு எதிரான பாதகமான
அம்சங்களைத் ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பார்வையில்
புதியகல்விக்கொள்கை’ என்ற அறிக்கை
அம்பலப்படுத்தியது. இக்கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு அறைகூவல்
விடுத்தது. திராவிடர் கழகத்தின் ‘விடுதலை’ நாளேடு இந்த நீண்ட அறிக்கையைத் தொடர்ந்து நான்குநாட்கள்
வெளியிட்டது. தமிழ்நாட்டில் புதியகல்விக் கொள்கையின் வர்க்கநலன் தெளிவுபடுத்தப்பட்டது.தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இதைக் கலைவடிவமாக்கி ‘புதுசோ புதுசு” என்ற வீதி நாடகமாகத் தமிழ்நாடு
முழுவதும் மக்கள்முன் கொண்டுசென்றது இதைப்பார்த்த தோழர்.கே.எம் ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்கள் மத்தியில் இத்தகைய சிந்தனைகள் ஏற்பட்டுள்ளதை வரவேற்றார்.
பெண்ஆசிரியர்கள்
மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்விடுதலைக்குக் குரல்கொடுக்கவும் தமிழ்ச்செல்வியின்
பங்கேற்பு தேவைப்பட்டபோது அவர் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிநிகழ்ச்சிகள்,
சங்கக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் ஆகியவற்றில் மகிழ்வோடு கலந்துகொண்டார்.
1972முதலான 40ஆண்டுகாலத் தொடர்பில் இவர்களது செல்வங்களான ஜான்சிராணி, ஜென்னி
நிர்மலா, ஜீவா ஆகிய மூவரும் என்னையும், என்துணைவியார் பாக்யலட்சுமியையும் மாமா. அத்தை என உரிமையோடு உறவுகொண்டாடுவதும், தோழர்.கே.எம்.
எனது துணைவியாரைத் தனதுமூத்த சகோதரியாகவே நடத்தியதும் நினைவில் நீங்காதவை.
தோழர்.கருணாமனோகரன் ‘தமிழகச் சூழலில் சாதியம்’ பற்றிய ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டவர்.
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் ‘பார்ப்பனியத்தின் வெற்றி’ முதலான பல நூல்களை சமூகநீதிப்
பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அவர் எழுதிய ‘சாதிய சமூக அமைப்பும், தமிழ்தேசிய
இனப்பிரச்சினையும்’, ‘பார்ப்பனீயத்தின்
வெற்றி’, ‘வரலாற்றுப்போர்’, ’திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால்
வீழ்ந்தோமா?’ ‘ஆரியர்,
திராவிடர், தமிழர்’ ஆகியநூல்கள் குறிப்பிடத் தக்கவை.
பெரியாரைப்
பெரிதும் நேசித்த தோழர்.கே.எம். ‘பெரியார் பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராடினாரே
தவிர சாதியத்தை ஒழிக்கப்பாடுபடவில்லை’ என்ற விமர்சனத்தையும் கொண்டிருந்தார்.
அவர் கடைசியாக
எழுதிய ‘தமிழ் ஈழமும், தமிழ்த்தேசியத்தின் எதிர்காலமும்’ விமர்சனத்திற்குரிய ஆனால், ஆழ்ந்து
பரிசீலிக்கவேண்டிய கருத்துக்களை நம் முன் வைக்கிறது.
No comments:
Post a Comment