காணாமல் போன
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
டாக்டர்.ராமச்சந்திர குஹா
தமிழில்: செ.நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
தமிழில்: செ.நடேசன்
முன்னாள் பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மூன்று
இந்தியாவில் பழமைவாதஅறிவுஜீவிகள் ஏன்
அரிதாகவே உள்ளார்கள்? இதைப்புரிந்து கொள்ள இந்தக்கேள்வியைச் சற்றுமாற்றி, ‘இந்த
நாட்டின் அறிவார்ந்த வாழ்வில் லிபரல் மற்றும் சோசலிச மரபுகள் ஏன் மிகவும் ஆதிக்கம்
செலுத்துபவையாக உள்ளன?’ என்று
பார்ப்போம்.
19ஆம்நூற்றாண்டில் இந்தியாவின் முதல்நவீனப்
பல்கலைக்கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அப்போது இந்தத் துணைக்கண்டம் பிரிட்டிஷாரின்
கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. மேற்கு உலகைப்போல அல்லாமல் சமூக விஞ்ஞான்ங்கள்
என்று அறியப்படுபவை காலனிய ஆட்சியின் அனுபவங்களிலிருந்து உருப்பெற்றன. அதேவேளையில் இந்திய சமுதாயம்
இங்கு ஆழமான பொருளாதார அசமத்துவங்கள் நிலவி வந்ததைக் குறித்துக்கொண்டது. அன்னிய
ஆட்சியும், முடிவில்லா ஏழ்மையும் நிலவிவந்த காலகட்டத்தில் இந்திய சமூக
விஞ்ஞானிகள் இயல்பாகவே பின்னோக்கிப் பார்ப்பதற்குப்பதிலாக, ‘எங்கள் நாடு எப்போது
சுதந்திரம் பெறும்? இந்தியா சமத்துவமான
குடிமக்களைக்கொண்ட ஒரு நாடாக எப்போது எழுந்து நிற்கும்?’என்ற காலத்தைத்தேடி முன்னோக்கிச் சிந்தித்தார்கள். மான்ஹீமின்
வார்த்தைகளில் சொல்வதானால் இருபதாம் நூற்றாண்டு இந்தியாவைப் பழமைவாதத்தைவிட
விபரலிஸமும், சோசலிஸமும் மிகவும் கவர்ச்சியாகக் கௌவிப்பிடித்தன.
காலனிய ஆட்சியிலும், வறுமையிலும் மக்கள்
எதைப்பெற்றிருந்தார்களோ அதைப் பாதுகாப்பதைவிட இந்திய அறிவுஜீவிகள் அரசியல்
அடிமைத்தனத்திலிருந்தும், சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் விடுதலைபெற்ற ஒருபுதிய
உலகத்தைப் படைக்க விரும்பினார்கள். தேசிய அரசியல்வாதிகளால் இந்தக்கருத்துக்கள்
பரப்பப்பட்டன. நாட்டுவிடுதலையை நோக்கிய இந்தப்பயணத்தில் இந்தியாவின் பலதலைமுறைகளைச்சார்ந்த
சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும்
சமூகசீர்திருத்தவாதிகள் மிகச்சிறந்த அறிவார்ந்த உயர்ந்த படைப்புக்களையும், அரசியல்
பகுப்பாய்வுகளையும் எழுதினார்கள்.
இவர்களில் செல்வாக்குமிக்கவராக மிகச்சிறந்த
லிபரல்சிந்தனையாளராக ஜான்ஸ்டூவர்ட்மில், மற்றும் ஜான்மோர்லே ஆகியோர் சிந்தனைமரபில்
வளர்ந்த கோபால கிருஷ்ண கோகலே விளங்கினார். ஜான்ஸ்டூவர்ட்டும், ஜான்மோர்லேவும்
தங்கள் நாட்டுமக்கள் அனுபவித்துவரும் ஜனநாயக உரிமைகளை இந்தியநாட்டு மக்களுக்கும்
அளிக்கவேண்டும் என பிரிட்டிஷ் அரசை வலியுறுத்தினார்கள். ரஷ்யப்புரட்சியாலும், ,
பிரிட்டிஷ் ஃபோபியன் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்ட
நவீனசோசலிஸ சிந்தனையாளரான ஜவஹர்லால் நேரு, முற்போக்குச் சிந்தனை களின்
இருப்பிடமாக விளங்கிய கொலம்பியா பல்கலைக்கழகம்,மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப்
எகனாமிக்ஸ் ஆகியவற்றில்படித்த பொருளாதாரநிபுணரும்,சட்டமேதையுமான
பி.ஆர்அம்பேத்கர் பெர்லினில் அரசியல்
விஞ்ஞானத்தில் பிஹெச்.டி. பெற்றவரும், நாஜிக்கொடுமைகளை நேரடியாக அனுபவித்து
வாழ்நாள் முழுவதும் சோசலிஸ்டாக வாழ்ந்தவருமான ராம்மனோகர் லோகியா, அமெரிக்காவில்
மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்காலத்தில் அங்குபடித்துக்கொண்டு வேலைபார்த்தவருமான
இடதுசிந்தனையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் இருந்தனர்.
கோகலே, நேரு, அம்பேத்கர், லோகியா, நாராயண்,
ஆகியோர் இந்தியா மற்றும் உலக நடப்புகளைப்பற்றி விமர்சித்து, இந்தியா
விடுதலைபெற்றபிறகு அதன் பொருளாதார மற்றும் சமூகசீர்திருத்தங்கள் எவ்வாறு
அமையவேண்டும் என்ற தங்கள் ஆலோசனைகளைச் சிறப்பான எழுத்துக்கள் மூலம் தந்தவர்கள்.
இந்தவகையில் லிபரல் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்கள் வரிசையில்
அணிவகுக்க ஒரேஒரு பழமைவாதியாக வி.டி.சாவர்க்கர் இருந்தார். அவர் இறப்புக்குப்பிறகு
‘இந்து உரிமை’யின் அடையாளச்சின்னமாக்கப்பட்டார். ஆனால் அவரது
கடைசிக்காலங்கள் இருள்சூழ்ந்த மர்ம்மாகவே இருந்தன.
காலனிய ஆட்சியின்போது மேற்கத்தைய அரசியல்
தாக்கங்களுக்குள் வராதவர்களில் இரண்டு முக்கியமான சிந்தனையாளர்கள்-
செயல்பாட்டாளர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் ரவீந்திரநாத் தாகூர் – மோகன்தாஸ்
காந்தி. நேரு தன்னை சோசலிஸ்ட் என்று அறிவித்துக்கொண்டார். ஆனால் இந்த இருவரும்
அம்பேத்கர் கணிப்பின்படி லிபரல்களோ, சோசலிஸ்ட்களோ அல்ல. இருந்தாலும் இவர்கள்
இருவரும் பொதுப்பிரச்சனைகள்பற்றி விரிவாக எழுதினார்கள். அவை மிகக்கவனமாக இந்திய
இளைஞர்களால் படிக்கப்பட்டன. தேசியவாதம் பற்றிய தாகூரின் கடுமையான விமர்சனங்கள்
இந்திய அறிவுஜீவிகளை – உலகத்துடனான அவர்களது அணுகுமுறைகளில் அன்னிய நாட்டினர்மீதான
வெறுப்பைத் தணியச்செய்தன.. அந்தக் கவிஞரைப்போல உலகின் எந்த மூலையிலிருந்து ஒளி
பிறந்தாலும் அதைப்போற்றவேண்டும் என நம்பத்துவங்கினார்கள். அதேவேளையில்
தீண்டாமைக்கு எதிரான காந்தியின் பிரச்சாரங்களும், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காக
வாழ்நாள் முழுதும் அவர் நட்த்திய போராட்டங்களும் இந்தியாவின் தன்மைப்பன்மையில் – First Person –Plural- சாதிய
இந்துக்களைமட்டுமல்ல மற்றவர்களையும் அணைத்துச்செல்ல வேண்டும் என அறிவ்ஜீவிகளை உற்சாகப்படுத்திச்
சிந்திக்கவைத்தது.
இந்தவகையில் பிந்தைய காலனி ஆட்சியில்
இந்தியாவின் தீர்மானகரமான அரசியல்போக்கு புகழ்பெற்ற அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல:
அறிவுஜீவிகளிடமும் லிபரல் மற்றும் சோசலிஸ சிந்தனைகள் பரவி உற்சாகப்படுத்தியது.
இந்தக்கருத்துக்கள் பின்னர் நிறுவன வடிவமாக உருவெடுத்தன. 1930-ல் கோகலேயின்
விசுவாசியும், அம்பேத்கரின் நண்பருமான டாக்டர்.காட்கில் ‘கோகலே இன்ஸ்ட்டிட்யூட்
ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எக்கனாமிக்ஸ்’ என்ற
இந்தியாவின் முதல் அரசியல் விஞ்ஞான ஆய்வு மையத்தை நிறுவினார். ஓராண்டுக்குப்பிறகு
தாகூர் மற்றும் நேருவின் நெருங்கிய சகாவான பி.சி.மகனலோபிஸ் ‘இந்தியன்
ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்ட்டிட்யூட்’ ஐ
நிறுவினார். இது சுதந்திர இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டங்களை வரைய ஒத்துழைத்தது.
1949-ல் காந்தியையும் நேருவையும் போற்றிய, கேம்ப்ரிட்ஜில் பொருளாதாரம் பயின்ற
வி.கே.ஆர்.வி.ராவ் ‘டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ்’ என்ற இந்தியாவின் முதன்மையான பொருளாதார ஆய்வு மற்றும்
கற்பித்தல் அமைப்பை ஏற்படுத்தினார். (1959-ல் சமூகவியல்துறையை அமைத்ததன்மூலம் இந்த
டெல்லிப் பள்ளி இந்தத்துறையில் இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக விளங்கியது) 1963-ல்
ஜெயப்பிரகாஷ் நாராயணின் நண்பர் ரஜினி கோத்தாரி ‘சமுதாய வளர்ச்சிக்கான ஆய்வு
மையத்தை’
நிறுவினார்.
அப்போதிருந்தே இந்த மையம் அரசியல் விஞ்ஞானத்தில் இந்த நாட்டின் முதன்மை
ஆய்வு மையமாக அங்கீகரிக்கப்பட்ட்து.
1950களிலும் 1960களிலும் மார்க்சீயத்தின்
தாக்கம் இந்திய அறிவுஜீவிகள் மத்தியில் உறுதியாக வளர்ச்சி பெற்றது. சோவியத்
நாட்டின் தொழில்மயமாக்கலால் தெளிவாகத் தெரியவந்த சாதனைகளும், இவை
ஜெர்மானியர்களைப்போரில் வீழ்த்தியதும், விண்வெளி ஆய்வில்
அமெரிக்கர்களுடன்போட்டியிட்டு முன்னிலை பெற்றதும் – அண்டை நாடான சீனாவில் விவசாயிகளின்
தலைமையிலான புரட்சியின் வெற்றியும், மார்க்ஸ் தனது பொருளாதார சமூகவியல்
எழுத்துக்கள்மூலம் விடுத்த கிளர்ச்சியூட்டும் அழைப்பும் – இந்தியாவில் நிலவிவந்த
வர்க்கவேறுபாடுகளும் , கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் தேர்தல்களில் பெற்ற
வெற்றிகளும் இதில் பெரும்பங்கு வகித்தன.
வரலாற்றுத்தளத்தில் மார்க்க்சியத்தின் செல்வாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக
இருந்தது. பல்வேறு துறைகளில் வழிகாட்டும் எழுத்துக்களும், ‘பழங்கால இந்தியா’
பற்றி அறிஞர் டி.டி.கோசாம்பி இயந்திர கதியில் அல்லாமல்
விமர்சனப்பார்வையோடு வகுத்த ‘மார்க்சீயப் பகுப்பாய்வு’ முறையும் இதைச்செழுமைப்படுத்தியது.
சுதந்திர இந்தியாவின் அறிவுடைமையின் வரலாற்றை,
இதில் இடமும் செல்வாக்கும் பெறுவதற்காக லிபரல்களுக்கும்,இடதுசாரிகளுக்கும் இடையே
நடைபெற்ற ஒருபோராட்டமாகப் பெரிதுபடுத்தி ஒருவர் சித்தரிக்க முயலலாம். டெல்லி
ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் போன்ற சில மையங்கள் லிபரல்களின் ஆளுகைக்கு
உட்பட்டிருந்தன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற பிற மையங்கள் மார்க்சிஸ்ட்களின்
செல்வாக்கின்கீழ் இருந்தன. லிபரல்களுக்கும் மார்க்சிஸ்ட்களுக்கும் நடுவில் –
மார்க்ஸ் அல்லது லெனினைவிட- லோகியா மற்றும் நாராயணின் செல்வாக்கின்கீழ்
சோசலிஸ்ட்கள் இருந்தார்கள். சோசலிஸ்ட் அறிவுஜீவிகள் தனி நபர்களையோ அல்லது
மாநிலத்தையோ சாராமல் சமுதாய இனப்பிரிவுகளில் நிலைகொண்டார்கள். இதன்படி அவர்கள்
சாதியை அடிப்படையாகக்கொண்டு மிகவும்பெரிய உடன்பாடான நடவடிக்கைகளை வேண்டினார்கள்.
பொருளாதார வளர்ச்சியில் கிராம சமுதாயம் ஒரு மையப்புள்ளியாக ஆக்கப்படவேண்டும்
என்றார்கள்.
இந்த மூன்று முக்கிய முகாம்களுக்கிடையே
நடைபெற்ற விவாதங்கள் அடிக்கடி நடவடிக்கைகளுக்குத் தூண்டுபவைகளாகவும்,
கூர்மையாகவும் நடைபெற்றன. லிபரல்கள் காலனியாதிக்கம் இந்தியாவுக்கு நல்லது, கெட்டது
என இரண்டுமாக இருந்த்து என்று சிந்தித்தார்கள்.
சோசலிஸ்ட்களும், மார்க்சிஸ்ட்களும் பிரிட்டிஷ் ஆட்சியை இருண்டது என
வர்ணித்தார்கள். லிபரல்கள் அரசு தனது அதிகாரத்தை மட்டுப்படுத்திக்கொண்டு
தனிநபர்களின் குடியாட்சி உரிமையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.
மார்க்சிஸ்ட்கள் பொருளாதாரம் மற்றும் சமூகவாழ்வில் அரசு தலையிட்டுச்
செயல்படவேண்டும் என விரும்பினார்கள். லிபரல்கள் இந்தியா மேற்கு உலக நாடுகளுடன்
நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளித்தார்கள்.
மார்க்சிஸ்ட்கள் சோவியத் ஆதரவு வெளியுறவுக்கொள்கை வேண்டும் என்றார்கள். மார்க்சிஸ்ட்கள் வர்க்கங்களின் முதனமையை
வலியுறுத்தினார்கள். சோசலிஸ்ட்கள் சாதியை
முதன்மைப்படுத்தினார்கள். லிபரல்களோ தனிநபர்களை முன்னிறுத்தினார்கள்.
ஒட்டுமொத்தமாக இந்த விவாதங்களில் காணாமல்போன
குரல்கள் பழமைவாதி களுடையதாக இருந்தன. லிபரல்களும், மார்க்சிஸ்ட்களும்
தங்களுக்குள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளவிட்டாலும் இந்தியாவின் அறிவார்ந்த
வாழ்வில் ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் மிகவும் செல்வாக்குமிக்க
பல்கலைக்கழகங்களின் துறைகளையும், ஆய்வுமையங் களையும், அரசு நிதிஉதவியில் செயல்பட்ட
‘இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக்கழகம்’, ‘இந்திய
வரலாற்று ஆய்வுக் கழகம்’ ஆகியவற்றைத்
தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த அறிஞர்கள் சுதந்திரத்துக்கு
முன்னும், பின்னும் முக்கியத்துவம் பெற்றார்கள்.
லிபரல்கள் மற்றும் சோசலிஸ்ட்கள் இளையதலைமுறையினருக்குப் பயிற்சி அளித்து
வளர்த்தார்கள். இது கொள்கைகளை வெறுமனே கற்பித்த்து மட்டுமல்ல: அந்தக் காலகட்டத்தின்
உணர்வுகளைப் பாதுகாத்ததுமாகும். காலனிய நுகத்தடியிலிருந்து விடுபட்ட இந்தியாவும்,
இந்தியர்களும் ஓய்வின்றி இந்தியாவை நவீனமயமாக்க, தொழில்மயமாக்க, பகுத்தறிவுக்கொள்கைகளையும், சிந்தனைகளையும்
பரப்ப, சமுதாயத்தின் பிற்பட்ட நிலையைக் குறைக்க – குறிப்பாக கேடுவிளைவிக்கும்
சாதியத் தப்பெண்ணங்களைப் போக்க, ஏழ்மைக்கு-குறிப்பாக –கிராமப்புற ஏழ்மைக்கு
முடிவுகட்ட உறுதி மேற்கொண்டார்கள்.
எதிர்காலம் சமிக்கைகளைக் காட்டியது: இறந்த காலமோ வழிமறைத்து நின்றது.
எனது சிலதனிப்பட்ட அனுபவங்கள் இங்கு பொருத்தமாக
இருக்கும். 1974ல் பி.ஏ., பட்டம்பெற நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். 10
ஆண்டுகளுக்குப்பிறகு எனது ஆய்வை முடித்து டாக்டர் பட்டம் பெற்றேன். இந்திய
அறிஞர்களோடு கடந்த 40 ஆண்டுகளாக நான் வாழ்ந்தபோதும், வேலைசெய்தபோதும்
நூற்றுக்கணக்கான சமூகவிஞ்ஞானிகள், வரலாற்று அறிஞர்களை நான் சந்தித்தேன். அவர்களோடு
பேசினேன். அவர்களைப் படித்தேன். இவற்றின்
மூலம் நான் உருவானேன். இவர்களில் ஏராளமானோர் இந்தக்கட்டுரையில்
குறிப்பிடப்பட்டுள்ள மார்க்சிஸ்ட்கள், மாவோயிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள்,
லோகியாவிஸ்ட்கள், உடனிருந்த லிபரல்கள், உயர்நிலை லிபரல்கள், நேருவிஸ்ட்கள்,
காந்தியிஸ்ட்கள் - ஆனால் எந்த ஒருவகுப்பறையிலும், கூட்ட அரங்குகளிலும் தன்னை வலதுசாரி என அடையாளப்படுத்திக் கொண்ட அல்லது
அந்தக்கருத்துக்கு உடன்பாடு தெரிவித்த எந்த ஒருவரையும் சந்தித்ததை என்னால்
நினைவுகூர முடியவில்லை. இதுதான் இன்றுவரை
இந்தியக்கல்வி அமைப்பில் லிபரல் மற்றும் இட்துசாரி சிந்தனைகள் முழுஆளுமை
கொண்டிருந்த நிலை.
இந்த நூற்றாண்டின்முடிவில், அல்லது எனக்கு
முந்தைய இரண்டு தலைமுறைகளில் தங்களது அறிவுத்திறனாலும், படைப்புக்களாலும் சிறந்து
விளங்கிய வரலாற்று அறிஞர்களில்- இர்பான் ஹபீஃப், ஆர்.எஸ்.சர்மா, ரணஜித் குஹா,
ரொமிலா தாபர், பிபின் சந்திரா, அமலேந்து குஹா, சுமித் சர்க்கார் மற்றும் சவ்யஷாஷி
பட்டாச்சார்யா ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் சிறிய அல்லது பெரிய அளவில்
மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டார்கள். அசின்தாஸ் குப்தா, தர்மகுமார், பார்த்தசாரதி
குப்தா , அமலேஷ் திருபாதி, ரஜத் காந்த ராய், மஸ்ரூல்ஹாசன் மற்றும் தபன்ராய்
சௌத்திரி ஆகியோர் லிபரல்கள். தலைசிறந்த அரசியல் விஞ்ஞானிகளில் லிபரல்களான ரஜினி
கோத்தாரி, பஸிருத்தீன் அஹமது, ரமேஷ்ரே ராய்,, மார்க்சிஸ்ட்களான ஜாவேத் ஆலம்,
பார்த்தா சாட்டர்ஜி மற்றும் தாகூர்-காந்தியின் புகழ் பாடுபவராக- மரபுசார்ந்த
பிரிவுகளால் வகைப்படுத்தப்படுவதை மறுத்த ஆஷிஷ் நந்தி லிபரல்கள் என்று தங்களை
அடையாளப்படுத்திக்கொண்ட புகழ்பெற்ற சமூகவியலாளர்களான எம்.என்.சீனிவாஸ், ஆந்த்ரே பட்டெய்லி,
குடும்பம், குடும்ப உறவுகள், மதம் போன்ற பழமைவாதக்கொள்கைகளை ஆய்வுசெய்திருந்தாலும்
தன்னைஒரு லிபரல் என்ற டி.என். மதன், 1960-1970களில் மிகவும் அறியப்பட்ட புகழ்பெற்ற
பொருளாதார அறிஞர்களான கே.என்.ராஜ், அமார்த்திய சென், வி.எம்.தாண்டேகர், அமித்
பாதுரி, கிருஷ்ண பரத்வாஜ், பிரணாப் பர்தான், பிரபாத் மற்றும் உஷா பட்நாயக், அசோக்
ருத்ரா ஆகியோர் இட்துசாரிக் கொள்கைகளின்பக்கம் நிற்பவர்கள்.
ரோஜர் ஸ்கர்ட்டன் தனது ‘How to be a Conservative?’
நூலில் ‘பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் 70% கல்வியாளர்கள் – அறிஞர்கள் தங்களை ’இடது சார்பாளர்’ என
இனம் கண்டுகொள்கிறார்கள்’ என்கிறார்.
இந்த நாடுகளில் கற்பித்த எனது சொந்த அனுபவம் இந்தக்கருத்தை ஆதரிக்கிறது. அமெரிக்க
ஐக்கிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவன்ங்களில் உள்ள
பழமைவாத அறிஞர்கள் தாங்கள் அடக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள்.
இந்தியாவில் உள்ள சிறந்த ஆய்வுமையங்களில்
நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. இங்கு பழமைவாதிகள் மிகவும் சிறுபான்மையினராக,
ஆதரவற்ரவர்களாக உள்ளார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைதவர்கள் மட்டுமல்ல:
அடிக்கடி காணாமல் போனவர்களும்கூட.
---------------------------------------------------
பகுதி 4 தொடர்கிறது -----------------
No comments:
Post a Comment