காணாமல் போன
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
டாக்டர். ராமச்சந்திர
குஹா
தமிழில்: செ.நடேசன்
முன்னாள்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி
ஒன்று
இந்தியப் பொதுவாழ்வின்
இதயம் இன்று முரண்பாடுகளோடு காணப்படுகிறது. இந்தநாட்டில் ஒரு வலதுசாரிக்கட்சி
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்வேளையில் வலதுசாரி அறிவுஜீவிகள் வலுவற்ற தளத்தில்
இருக்கிறார்கள். உலகில் நிலைநிறுவப்பட்ட ஜனநாயகநாடுகளில் இது இந்தியாவை
விதிவிலக்காக ஆக்கியுள்ளது. அமெரிக்க ஐக்கியநாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ் என
எல்லாமும் முதல்தர அறிவுஜீவிகளைத் தங்களிடம் கொண்டுள்ளன. அவர்கள் அமெரிக்காவில்
உள்ள குடியரசுக்கட்சி, பிரிட்டனில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி, பிரான்ஸில் உள்ள
கிரிஸ்தவ குடியரசுக்கட்சி ஆகியவற்றைப் பலப்படுத்தும் வழிமுறைகளைத் தொடர்ந்து
அளித்து வருகிறார்கள். அதன்மறுபக்கமாக இந்தியாவில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா
கட்சி புகழ்பெற்ற – பரவலாக எல்லாராலும் அறியப்பட்ட சில அறிவுஜீவிகளிடமிருந்து
ஆதரவைப் பெற்றுக்கொள்ள உரிமைபடைத்தது. ஆனால் அங்கே அறிவுஜீவிகள் உள்ளார்களா?
கடந்த
ஆகஸ்டில் ‘இந்தியவரலாற்று ஆய்வுக்கழகத்தின்’ தலைவராக
ஒய்.சுதர்சன்ராவ் நியமனம் செய்யப்பட்டபோது அதிர்ச்சி அளிக்கும்வகையில் தெளிவாக
இந்தக்குறைபாடு புலப்பட்டது. தீனநாத் பாத்ராவின் பள்ளிப்பாடத்திட்ட்த்தின்மீது
அதன் செல்வாக்கு படர்ந்தபோது இந்தக்குறைபாடு மேலும் துலாம்பரமாக வெளிப்பட்ட்து. ஒய்.சுதர்சன்ராவின்
படைப்புப்பட்டியல் மிகவும் சிறியது. 25 ஆண்டுகளுக்குமுன் எவராலும் கவனிக்கப்படாத
ஒருசிறிய புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். எந்த ஒருவெளியீட்டு நிறுவனமும் அதைக்
கூர்ந்து கவனித்து விமர்சித்து எந்த ஒரு பத்திரிக்கையிலும் வெளியிடவில்லை. அவர்
இந்திய வரலாற்றுக் கழகத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டபின் வெளியிட்டுவரும்
அறிக்கைகளிலிருந்து அவருக்கு உண்மைக்கும் கற்பனைக்கும் அல்லது வரலாற்றுக்கும்
கட்டுக்கதையான புராணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் தெரியாது என்பது தெளிவாகி
வருகிறது. அறிவுலகமேதை என்று தீனநாத் பாத்ரா கோரும் உரிமை இன்னும் ஒருபடி
விபரீதமானது. அவரது பார்வையின்படி, ’கடவுள்
மனிதனை உருவாக்கியபோது பல்வேறு சதைக்கோளங்களை வாணலியிலிட்டு அடுப்பில் வைத்தார். வெகுசீக்கிரத்தில்
அடுப்பிலிருந்து எடுக்கப்பட்ட சதைக்கோளம் ‘வெள்ளையர்கள்’ ஆனது. மிகவும் நேரம்கழித்து எடுக்கப்பட்ட சதைகோளம்
‘கருப்பர்கள்’
ஆனது. சரியான பத்த்தில் எடுக்கப்பட்ட சதைக்கோளம்
மாநிறஇந்தியர்களாகிப் பொருத்தமான நிறம் – வண்ணம்பெற்று அதன்மூலம் இந்த உலகையே
ஆள்வதற்கு விதிக்கப்பட்டது.’
சுதர்சன்ராவும், தீனநாத் பாத்ராவும் ‘ராஷ்ட்ரீய
சுயம்சேவக் சங்’
– ஆர்.எஸ்.எஸ்.
உடன் மிக நீண்ட தொடர்பு கொண்டிருப்பவர்கள். ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒருகலாச்சார
அமைப்பு என்று சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அது மிகத்தீவிரமான கொள்கைகளையும்,
ஆழமான அரசியலையும் கொண்டது. அதன் இறுதிஇலட்சியம் இந்துக்களால் ஆளப்படும் ‘இந்து ராஷ்ட்ரத்தை’
அமைப்பதே. ஆர்.எஸ்.எஸ். மிகநெருக்கமான உறவுகளை, அதற்கு
முந்தைய அமைப்பான ஜனசங்கத்தைப்போலவே, பா.ஜ.க.விடமும் கொண்டுள்ளது. அந்தக்கட்சிக்குத் தேவையான
தொண்டர்களை, அமைச்சர்களை, முடிவில்லாத அறிவுரைகளைத் தொடர்ந்து அளித்துவருகிறது.
பொதுக்கொள்கைகளின்மீது சுதர்சன்ராவ் மற்றும்
பாத்ராவின் செல்வாக்கு கட்டமைக்கப் பட்டிருப்பது அவர்களது அறிவார்ந்த தன்மையின்
காரணமாக அல்ல: அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.மீது கொண்டுள்ள உறவுகளின் பலத்தால். அவர்களது
அறிக்கைகளும், முன்மொழிவுகளும் மிகப்பெருமளவுக்கு ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
அந்த விமர்சனங்கள் பெருமளவுக்கு மதிக்கப்படுகின்றன. சுதர்சன்ராவுக்கும்,
பாத்ராவுக்கும் பதிலாக புதிய பா.ஜ.க.அரசு, தங்கள் பெயரில் காத்திரமான நூல்களையும்,
ஆராய்ச்சிக்குறிப்பு களையும் கொண்டுள்ள, ஆட்சியின்தேவைக்கேற்ற அரசியல் பார்வைகொண்ட
அறிஞர்களை ஆதரித்து அவர்களுக்குப் பதவி உயர்வு அளித்திருந்தால் இந்த அவலத்தைத்
தவிர்த்திருக்க முடியும். அந்தோ பாவம்! முடிவெடுக்கும் இந்த இரட்டையரைத்தவிர,
மக்களை ஈர்க்க மாற்று அறிஞர்குழாம் வேறு எதுவும் இங்கே இல்லையே!
அறிஞர்களால் செய்துமுடிக்கப்பட்ட வேலைக்கும்,
கருத்தியல்வாதிகளால் செய்துமுடிக்கப் பட்ட வேலைக்குமிடையே உள்ள வேறுபாட்டைக்
கட்டாயம் ஒருவர் பிரித்துப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு கல்விப்புலமும் தனக்கே உரிய
உயர்ந்த் அறிவின் தன்மையைக் கட்டமைக்கும் விதிமுறைகளைக் கொண்டது. – வரலாற்றாளர்கள்
கடிதங்களையோ, கையெழுத்துக்களையோ, அரசு ஆவணங்களையோ, அல்லது நீதிமன்றப்பதிவேடுகளையோ
ஆழத்தோண்டுகிறார்கள். சமூகவியலாளர்களும் மானுடவியலாளர்களும் எதைத் தங்கள்
ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறார்களோ அந்தக்களத்தில் மிகவிரிவான களப்பணிகளை
மேற்கொள்கிறார்கள். முதற்கட்டமாக அவர்களது முதல்தகவல்களும், உண்மைஆய்வுகளும்
எழுதப்பட்டு அலசப்படுகின்றன. அதன்பின் அறிவார்ந்த ஆய்வுக்கட்டுரைகளாகக்
கல்விப்புலம் சார்ந்த இதழ்களில் அல்லது புகழ்பெற்ற பதிப்பகங்களில் நூலகளாக
வெளியிடப்படுகின்றன. ஒருவரின் அறிவார்ந்த ஆய்வுமுடிவு பற்றிய மதிப்பீடு அது நூலாக
வெளியிடப்படுவதற்கு முன்னரே முதன்மையாக அவரது சகஅறிஞர் ஒருவரால் கூர்மையாக
விமர்சனமுடிவாக மதிப்பிடப்படுகிறது. பின்னர் அது துறைசார்ந்த பத்திரிக்கைகள்,
பதிப்பகங்களால் அச்சில் வெளிவருகிறது. அதன்பின் அந்த ஆய்வுமுடிவு எத்தனைமுறை
பிறரால் எடுத்தாளப்படுகிறது என்பதை வைத்து ஏற்கப்படுகிறது.
அறிவின்
வளர்ச்சிக்குப் பங்களிப்பதைவிடத் தங்கள் அரசியல் அல்லது மத நம்பிக்கைகளில் அதிகம்
ஆர்வம்கொண்டகருத்தியல்வாதிகளுக்கும்,அறிவுஜீவிகளுக்கும்இடையே ஒரு வேறுபாடு உண்டு.
கருத்தியல்வாதிகளின் எழுத்துக்கள் மிகவும் அரிதாகவே மிகவும் ஆழமான கருத்துக்களையோ,
விரிவான ஆய்வுகளையோ அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. முன்கூட்டியே
தீர்மானிக்கப்பட்ட முடிவுகளை அடைவதற்காக சிலஉண்மைகளைத் தேர்ந்தெடுப்பது அல்லது
மூடிமறைப்பது என்றபோக்கு உள்ளது. அறிவுஜீவிகள் வளமார்ந்த, நியாயமான சமுதாயத்தை
உருவாக்கவேண்டும் என்ற சமூகப்பார்வை கொண்டவர்கள் மட்டுமல்ல: இந்த நாட்டின்
குடிமக்களும்கூட. அவர்களது அறிவுசார்ந்த எழுத்துக்கள் அறிந்தோ, அறியாமலோ அவர்களது
அரசியல்பார்வைகளையும் பிரதிபலிக்கின்றன. கருத்தியல்வாதிகளுக்கும்,
அறிவுஜீவிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு தீர்க்கமான ஒன்றுஅல்ல. எனினும் அழுத்தம்
தரவேண்டியஅளவுக்குமுக்கியமானவை. எடுத்துக்காட்டாக, அறிவுஜீவிகளைப்போல அல்லாமல்
கருத்தியல்வாதிகள் தங்களது கருத்துக்கள் அறிஞர்களால் எவ்வாறு வரவேற்கப்படுகிறது
என்பதுபற்றிய அக்கறை எதுவும் இல்லாதவர்கள். அவர்கள் செல்வாக்குச் செலுத்த
விரும்புவது சமூக, அரசியல் மாற்றங்களின் போக்கில்தானே தவிர அறிவின்
வளர்ச்சிப்போக்கில் அல்ல.
இந்தியாவில் ஏராளமான வலதுசாரிக்
கருத்தியல்வாதிகள் இருந்தாலும்கூட மிகச்சில வலதுசாரிஅறிவுஜீவிகளே
நாளேடுகளில்,தொலைக்காட்சிகளில், சமூகஊடகங்களில் தீவிரமாகச் செயல்பட்டு
வருகிறார்கள். இந்தப்போதாமைதான் அரசியல்களத்தில் மதிப்புமிக்க நடுநிலை மற்றும்
இடதுசாரி அறிவுஜீவிகள்மீது தங்களது ஆற்றல்மிக்க செல்வாக்கைச் செலுத்துவதற்கு
எதிராக உள்ளது. நமது தலைமுறையில் மிக உயர்வாக மதிக்கப்படும் வரலாற்றாளர்களின்
பட்டியலைத் தொகுத்தால் சீமாஆல்வி, ஷாஹித் அமீன், நயன்ஜோத்லஹிரி,ருத்ராங்சு
முகர்ஜி, ஜானகிநாயர், சேதன்சிங், உபீந்தர்சிங், மற்றும் ஏ,ஆர்.வெங்கடாச்சலபதி
ஆகியோர் பெயர்கள் கட்டாயம் இடம்பெறும். தாங்கள் எந்தக்கட்சிக்கு வாக்களித்தோம்
என்று இந்த அறிஞர்கள் விளம்பரப்படுத்திக் கொள்ளாவிட்டாலும்கூட அவர்களது
வெளிப்படையான ஆய்வுகள்மூலம் ஒன்று நிச்சயமாகத் தெளிவாகிறது. அது ஆர்.எஸ்.எஸ்.ஆல்
வரையறுக்கப்பட்ட அல்லது பா.ஜ.க.வால் முன்மொழியப்பட்டவைகளிலிருந்து அவர்கள்
மிகத்தொலைவில் விலகியுள்ளார் கள் என்பதே.
அடுத்ததளமான அரசியல்அறிவியலைப் பார்ப்போம்.
மிகவும் செல்வாக்குமிக்க, இந்தியாவில் பணியாற்றும் அறிவுஜீவிகளில் ராஜிவ்பார்கவா,
பீட்டர் டி சௌஸா, ஸோயாஹாஸன், நிரஜா கோபால் ஜோயல், குர்பீத் மஹாஜன், பிரதாப்
பானுமேத்தா, சுபாஷ் பல்ஷிஹர் மற்றும் வெலேரியன் ரோட்ரிக்ஸ் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் தங்களை லிபரல்கள் அல்லது சோசலிஸ்ட்கள் எனக்
குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். சமூகவியல் தளத்திலும் இதேபோல அமிதா பவிஸ்கர், திபங்கர்
குப்தா, சுரீந்தர் ஜோத்வா, நந்தினி சுந்தர், ஏ.ஆர்.வாசவி மற்றும் சூசன் விஸ்வநாதன்
போன்றோர் இந்தத்தளத்தில் ஆர்வத்தோடு செயல்படும் அறிவுஜீவிகளில் சிலர். ஆவர்.
பொதுக்கொள்கைகளை
உருவாக்கும் சமூக அறிவியல்துறைகளில் பொருளாதாரம் ஒருதனித்துவம் மிக்கதாக
முதல்பார்வையிலேயே விளங்குகிறது. இங்கு பொருளாதாரத்தைக் கையாளவதில் அரசுக்கு
மிகப்பெரிய பாத்திரம் தேவை என்று வலியுறுத்துபவர்களை ‘இட்துசாரிப்பிரிவு’
என்று கொண்டால், சந்தைப்பொருளாதாரத்தை ஆதரிப்பவர்கள்
‘வலதுசாரிப் பிரிவு’
எனலாம். சமீப ஆண்டுகளில் சந்தேகத்துக்கிடமில்லாமல்
சந்தைப்பொருளாதாரம் நோக்கிய நகர்வுகள் அமைந்துவருகின்றன. 1954-ல் இரண்டாம்
ஐந்தாண்டுத் திட்டத்தின் வரைவு அளிக்கப்பட்ட 24 பொருளாதார நிபுணர்களில் 23 பேர்
பொருளாதாரத்தில் அரசு உறுதியான ஆணைகளைப் பிறப்பிக்கும் உயர்ந்த இடத்தை
வகிக்கவேண்டும் என்பதை அங்கீகரித்தார்கள். இப்போது அதேபோன்ற வரைவு சுற்றுக்கு
விடப்பட்டால் இந்தியாவின் பொருளாதார நிபுணர்களில் நான்கில் மூன்றுபேர் பொருளாதார
வளர்ச்சிக்கும், வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், அரசையும் அதன்
அதிகாரவர்க்கத்தையும்விட, சந்தை மற்றும் தனியார்தொழில் முனைவோர்தான் தேவை என்று
வாதம் செய்வார்கள்.
சமூகவிஞ்ஞானங்களில் ஏராளமான எண்ணிக்கையில்
பகுப்பாய்வுமுறைகளையும், தொழில் நுட்ப அமைப்பையும் சார்ந்திருப்பது பொருளாதாரம்தான்..
சமூகவியலாளர்கள் அல்லது வரலாற்றாளர்களைவிடப் பொருளாதார நிபுணர்களின் அரசியல்
மற்றும் தத்துவார்த்தச்சார்பு மிகவும் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. இந்தியாவில்
மிகவும் போற்றப்படும்சுதந்திரமான சந்தைப்பொருளாதாரவாதிகள் எந்தவிதிவிலக்குமின்றி
சமூகதாராளவாதிகளாகத் தோன்றுகிறார் கள்.இந்தத்தளத்தில் முதிர்ந்த அனுபவம்கொண்ட
ஜெகதீஷ்பகவதியை எடுத்துக்கொள்வோம். இவர் அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டும்,
பணியாற்றிக்கொண்டும் இருந்தாலும் இந்திய அறிஞர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க
செல்வாக்கைக் கொண்டுள்ளார். நிவாரண உதவிகளை மையமாகக்கொண்ட, முதலில் நல்வாழ்வு என்ற
காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலம் – குறிப்பாக சோனியா
காந்தியின் தேசிய ஆலோசனைக்குழுவின் கொள்கைகளால் ஏமாற்றமடைந்த ஜெகதீஷ்பகவதி,
தொழில்முனை வோருக்கும், புதிய கண்டுபிடிப்புக்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும்
ஏற்றவர்கள் என நரேந்திரமோடியையும், பா.ஜ.க.வையும் கண்டார். அவர்களை ஆதரித்தார்.
தாராளமயச்சந்தை என்பதில் மிகநீண்டகாலமாகத் தெளிவான ஒருங்கிணைப்பைக்
கொண்டிருந்தாலும், ஜெகதீஷ்பகவதி ஜவஹர்லால் நேருவின்மீது மிகப்பெரிய மரியாதை
கொண்டிருந்தவர். நேருவின் மதங்கள் மற்றும் சமூகப்பன்மைத்தன்மைப் பார்வையின்மீதான
உறுதிப்பாட்டை ஜெகதீஷ்பகவதி பகிர்ந்துகொண்டார்.
அண்மையில் இந்தியாவுக்கு வருகைதந்த
இந்தப்பொருளாதர நிபுணர் தனது பல்வேறு சொற்பொழிவுகளிலும், நேர்முகப்பேட்டிகளிலும்
ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதனுடன் இணைந்த விஷ்வஹிந்துபரிஷத் உள்ளிட்ட
சங்பரிவாரங்களுக்கு எதிராகப் பேசினார். பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
சங்பரிவாரங்கள் என்று அறியப்படும் இந்துத்துவா அமைப்புக் குடும்பங்களில் உள்ள தனது
கட்சிக்கும், மத்த்தீவரவாதிகளுக்கும் எதிராக மோடி உறுதியாக வெளிவராவிட்டால்
மோடியின் பொருளாதாரத்திட்டம் ஆபத்துக்குள்ளகிவிடும் என்ற அபாயத்தைச்
சுட்டிக்காட்டினார்.
இந்தவகையில் ஜெகதீஷ்பகவதி ஒரு பிரதிநிதி.
உண்மையில் இந்தியாவில் உள்ள முக்கியமான சந்தைப்பொருளாதாரநிபுணர்கள் எல்லாரும்
நாட்டின்குடிமக்களைப் பிளவுபடுத்தும் போக்கு, ஓரினச்சேர்க்கையாளர்களின் மகிழ்ச்சி
மற்றும் உரிமைகளை மறுக்கும்போக்கு போன்ற பலவற்றுக்கு எதிரான உறுதிப்பாட்டைக்
கொண்டிருப்பவர்களே. ஒப்பீட்டளவில் சந்தைப் பொருளாதாரத்திற்கு விசுவாசிகள் என்ற
நம்பிக்கையில் பிஜே.பி.யை ஆதரித்தபோதும் அல்லது வாக்களித்தபோதும் அந்தக்கட்சியின்
மதவாதத்தையோ, பாலினச்சிறுபான்மையினர் மீதான அவர்களின் உணர்வுகளையோ இவர்கள்
ஒருபோதும் ஏற்றுக்கொண்ட்தே இல்லை. அரசின் முன்னாள் பொருளாதார முதன்மை ஆலோசகரான
அசோக்தேசாய் அண்மையில் மிக அழுத்தம் திருத்தமாக,”மரியாதைக்குரிய எந்தப்பொருளாதார அறிஞரும் ‘இந்து தேசிய
உணர்வின்’மீது சாய்மானம் கொண்டவர்கள்அல்ல. பொருளாதார அறிஞர்களைப்
பொருத்தவரை அந்தக்கருத்து தவறானது”, என்று
எழுதியுள்ளார். இந்திய ஊடகங்களில் செல்வாக்குமிகுந்த பத்திரிக்கையாளர்கள்
‘பழமைவாதிகள்’,
’வலதுசாரிகள்’
என்ற அடையாளங்களை அணிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பது சரியே. என்றாலும் அவர்களின் வெளிப்பாடுகள் ஆயிரம்
வார்த்தைகள் மட்டும் என்று வரையறுக்கப்பட்டுத் தொலைக்காட்சிகளில்
காட்டுக்கூச்சல்களாக வெளிவருகின்றன. அவற்றில் ஒன்றில்கூட வரலாறு, அரசியல்,
சமுதாயம் பற்றிய ஏற்றுக்கொள்ளத்தக்க வாதங்கள் இல்லை.
சமூக ஊடகங்களில் செல்வாக்குமிக்க
வலதுசாரிக்குரல்களும் உள்ளன. அவர்களில் ஒருவர் சுப்பிரமணியசாமி. இவருக்கு
டிவிட்டரில் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சுப்பிரமணியசாமி ஒருகாலத்தில்
ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் பொருளாதாரப்பாடம் கற்பித்தவர். அவர் ஆய்வுகளில்
ஈடுபட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவர், தான் வெறுக்கும் அரசியல்வாதிகளின்மீது
சதித்திட்டங்களை மிதக்கவிடுபவராக _ சிறுபான்மை யினர்மீது பழிதூற்றுபவராக உள்ளார்.
2011-ல் இவர் முஸ்லீம்கள் பொதுவாக்காளர் பட்டியலில் இடம்பெறக்கூடாது எனவும்,
இட்துசாரி அறிஞர்களின் புத்தகங்களைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனவும்
வாதாடினார். ஒருகாலத்தில் அறிவுஜீவியாக இருந்த இவர் இப்போது மிகச்சிறந்த
எரிச்சலூட்டுபவராக மாறிவிட்டார்.
இந்தியாவில் ஆழ்ந்த கருத்துக்கள்கொண்ட ஒரே
வலதுசாரி அறிவுஜீவியாக ஒருவேளை அருண்ஷோரி
இருக்கக்கூடும். அவரும்கூட சமூக அளவில் பழமைவாதத்தில் சுதர்சன்ராவைப் போலவோ,
அல்லது தீனநாத்பாத்ராவைப்போலவோ, அல்லது மேலே குறிப்பிட்ட வலதுசாரிப்பிரிவுப்
பத்திரிக்கையாளர்களைப் போலவோ இல்லை. அருண்ஷோரி உண்மையான ஆய்வுகளைச் செய்து பல
புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவை பழமைவாதக் கருத்துக்களிலிருந்த் வேறுபட்டு தேச
ஒற்றுமையின் – ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்றலின் முக்கியத்துவம், வேற்றியல்புகளை
மறுக்கும் அதீதக்கலாச்சாரத்தின் ஆபத்துக்கள், சீனா, பாகிஸ்தான் போன்ற
வெளிநாடுகளின் அச்சுறுத்தல்கள் என விரிகின்றன. அருண்ஷோரி பி.ஜே.பி.யின் பாராளுமன்ற
உறுப்பினராகவும்,பி.ஜே.பி.யின் கட்டுப்பாட்டில் அமைந்த அரசில் அமைச்சராகவும் இருந்தவர்.
இந்தியாவின் மற்ற சுதந்திரச்சிந்தனையாளர்களைப்போல அல்லாமல் பழமைவாத அரசியல் மற்றும்
சமூகச்சார்பைத் தனது அடையாளமாகச் சட்டையின் தோள்பகுதியில் அணிந்திருப்பவர்.
----------------------------------------------------------ப்குதி
இரண்டு தொடர்கிறது-----
No comments:
Post a Comment