காணாமல் போன
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
டாக்டர்.ராமச்சந்திர குஹா
இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?
டாக்டர்.ராமச்சந்திர குஹா
தமிழில்: செ.நடேசன்
முன்னாள்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
இரண்டு
இந்தியாவில் பழமைவாத
அறிவுஜீவிகள் ஏன் மிக்க்குறைவாகவே இருக்கிறார்கள்? இந்தக்கேள்விக்குப்
பதிலளிக்கும்முன் ‘பழமைவாதம்’ என்றால்
என்ன? என்பதைப்பற்றிய மிகத்தெளிவான விளக்கம் அளிக்கவேண்டும். சமூகவியலாளரான கார்ல்
மான்ஹீம் ‘Ideology
and Utopia’ என்ற தனது தரமான நூலில் , நவீன உலகில்
மூன்று முக்கியமான அரசியல் சார்புகளான ’லிபரலிசம்’
‘பழமைவாதம்’, ’சோசலிசம்’
ஆகியவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை வரையறுத்துள்ளார்.
தாராளவாதம் என்பது மத்திய காலகட்டத்தின் மதவிருப்பங்களின் மீதான அறிவார்ந்த
பிரதிபலிப்பு என்கிறார். அது நிலவுடைமையாளர்களின் கொடூர அடக்குமுறை மற்றும்
அடக்குமுறைக்கு உள்ளானவர்களின் அதிர்ச்சிதரும் பழிவாங்கல் ஆகிய இரண்டுக்குமிடையே
மதம்சார்ந்த கிளர்ச்சியாளர்கள் முன்வைத்த தீர்வு. சமூக நடவடிக்கைகளின் தத்துவமான
தாராளவாதம் எதிர்காலச்சார்பைக் கொண்ட்தாகவும், மானுட வளர்ச்சிப்போக்கில்
முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட்தாகவும்
இருந்தது.
இதன்மீதானபழமைவாதிகளின் விமர்சனம், ‘தாராளவாதம்
உறுதியான அடித்தளம் கொண்ட் தல்ல’என்பதாகும்.
பழமைவாதிகள்,‘வாழ்க்கை எவ்வாறு
உண்மையாக வாழப்படுகிறதோ அதன்மீதுதான் – சாத்தியமான எதிர்காலத்தின்மீதல்ல –
குவிமையம்கொண்டிருந்தார்கள்’ மான்ஹீம்
எழுதினார்: ‘பழமைவாதிகளைப் பொருத்தவரை இந்த உலகில் உள்ள ஒவ்வொன்றும் சாதகமான
மற்றும் குறைந்தபட்ச மதிப்பைக் கொண்டவை. ஒவ்வொன்றும் மெல்லமெல்லவும்,
படிப்படியாகவும் தோன்றின.’ அதன்விளைவாகக்
கடந்த காலத்தின்மீது கவனம் திரும்பியது மட்டுமல்ல: மறதியிலிருந்து அவற்றைப்
பாதுகாப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அதனால், இன்றைய இருப்பும்,
முழுமையான கடந்த காலமும் உண்மையான வாழ்வின் அனுபவங்களாகி வருகின்றன.’
சோசலிசத்தைப்போலவே தாராளவாதமும்
எதிர்காலத்திற்காக –எங்கே சுதந்திரமும், சமத்துவமும் கட்டமைக்கப்படுகிறதோ – அதை நோக்கிச்
செயல்படுகிறது. ஆனால், தாராளவாதம் படிப்படியாக என்ற சார்பைக்கொண்ட்து. சோசலிசமோ
தீவிரமாக முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பை முறியடிக்க விரும்புகிறது. தாராளவாதம் இதைக்
’கற்பனா
உலகம்’
என்று எதிர்க்கிறது. ஆனால், சோசலிஸ்டுகளோ தங்களால்
எதிர்காலத்தில் ஓர் ஒழுங்கமைவான சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்று
நம்புகிறார்கள். ஐரோப்பா முழுதும் போர்க்களம்போல அரசியல் விவாதங்கள் நடைபெற்றபோது
அதற்கான அறிவார்ந்த பதிலாக – பிரதிபலிப்பாக மான்ஹீமின் புத்தகம் இருந்தது. ‘Ideology and Utopia’ முதலில் 1929-ல் ஜெர்மனியில் வெளியிடப்பட்டது. அதன்
ஆங்கிலமொழிபெயர்ப்பு 1936–ல் வெளிவந்தது.
எனவே, மிக அண்மையில் வெளிவந்த பிரிட்டிஷ்
த்த்துவ்வியலாளரான ரோஜர் ஸ்கர்ட்டனின் ‘How to be a
Conservative’ என்ற 2014-ல் பதிப்பிக்கப்பட்ட
நூலைப்பார்ப்போம். ஸ்கர்ட்டனைப் பொருத்தவரை பழமைவாதத்தின் துவக்கப்புள்ளியே, ‘
நல்லவைக்ள் எல்லாம் எளிதாக அழித்தொழிக்கப்படுகின்றன. ஆனால், அவை எளிதாகத்
தோற்றுவிக்கப்படுவதில்லை’ என்ற
உணச்சியை அடிப்படையாகக் கொண்டது. பிரிட்டன் கட்டாயம் பாதுகாக்கவேண்டிய நல்லவைகள்
‘சமாதானம்’,
’சுதந்திரம்’, ‘சட்டம்’,
’குடிமை’, ’பொது
உணர்வு’,
‘குடும்பவாழ்வு மற்றும் உடமைகளின் பாதுகாப்பு’
என அவர் நம்புகிறார். தேசம் – அரசுக்கு ஸ்கர்ட்டன்
மிகுந்த அழுத்தம் தருகிறார். ‘உலகக் குடிமகன்’ என்ற கருத்தை
மறுக்கும் அவர், ஒரு குறிப்பிட்ட எல்லை வரையறைக்குள் வரலாற்றைப்
பகிர்ந்துகொண்டு வாழும் மக்கள் மிக எளிதாகத் தங்கள் சமூகத்தின் கலாச்சாரத்தையும்,
கூட்டுறவையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிறார்.
அதேநேரத்தில் பிறபழமைவாதிகளுக்கு எதிராக
‘அறிவியல் சார்ந்த சிந்தனை மற்றும் சட்டங்களே நாட்டின் பொதுநிகழ்வுகளுக்கு
வழிகாட்டவேண்டுமே தவிர – நம்பிக்கைகளோ மதமோ அல்ல’ என்று வாதிடுகிறார். லெபனானின் முன்னுதாரணத்தை
எடுத்துக்கொண்டு அவர் எழுதுகிறார்:’ அடையாளங்கள்
எல்லை வரையறைக்கு உட்பட்டன என்பதற்கு மாறாகப் ’பாவத்தை ஒப்புக்கொள்ளுதல்’ என்ற அடிப்படையில் அமையும்போது ஜனநாயகம் ஆபத்துக்குள்ளாகிறது’. பழமைவாதிகள் மதம்
மற்றும் அரசமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான தீவிரமான வேறுபாட்டைக் கடவுளின்
சட்ட்த்தைச் சார்ந்து நிற்காமல், அரசாளும் கலையைக் கட்டமைப்பதில் நவீன ஒளியூட்டும்
சிந்தனையின் அடிப்படை முகவுரையை ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும்’
என்று வலியுறுத்துகிறார்.
ஸ்கர்ட்டன் கூறும் பழமைவாதத்தின் எடுத்துக்காட்டாக
18ஆம் நூற்றாண்டின் தத்துவ வாதியான எட்மண்ட் பர்கே விளங்குகிறார். அவர்,’
அதிகார பலம்மிகுந்த அரசு மற்றும் எல்லாம் தெரிந்த அரசியல் மேல்மட்ட்த்திற்கு
மாறாக‘ நமது
இயற்கையான தேவையாக உள்ள ஒருவருக்கொருவர் இணைந்து
நிற்கும் தன்மையிலிருந்து உருவான மரபுகளையும், கீழேயிருந்து கட்டப்பட்ட
சமுதாயத்தையும் உருவாக்க வேண்டும்’ என்றார்.
ஸ்கர்ட்டன் தொடர்கிறார்:’பழமைவாதம் ஒரு ’தன்மைப்பன்மையை’ ஓர் இடமாகவும், ‘எங்களுடையது’ என்பதை ஒருவாழ்முறையாகவும் கொண்டு ஜீவிக்கிறது. அவருக்கு
‘தன்மைப்பன்மை’(First Person Plural) என்பது ’தேசம்’ தானே தவிர மதம்சார்ந்த ‘நாங்கள்’ அல்ல. அவர் மேலும் விவாதிக்கிறார்: ‘அரசின் வேலை
குடிமக்கள்மீது மதத்தைத் திணிப்பதோ அல்லது மதக்கோட்பாடுகளை ஒத்துக்கொள்ள வைப்பதோ
அல்ல. மதத்துக்குக் கீழ்படிதல் என்பது ‘குடியுரிமை’யின் ஒருபகுதி அல்ல. எந்தஒரு முரண்பாட்டையும்
தீர்த்துக்கொள்வது குடிமக்களின் கடமையேதவிர மதநம்பிக்கையாளர்களின் வேலை அல்ல. இது
நிலை நாட்டப்படவேண்டும்’
கடவுள் நம்பிக்கை இல்லாத சோசலிஸ்டுகளையோ அல்லது அறிவியல்சிந்தனை கொண்ட
தாராளவாதிகளையோ போலின்றிப் பழமைவாதிகள்’அமைதி’, ‘ஆறுதல்’, ‘நம்பிக்கை’,தருவதில் மதத்தின் பங்கைப் பெரிதும் மதிக்கிறார்கள். கடவுள்
அல்லது கடவுளை வழிபடும் முறைகளிலிருந்து மற்றவர்கள் மாறுபட்ட நிலை எடுக்க உரிமை
உள்ளவர்கள் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்’
‘நாட்டோடும், அதன் எல்லைகளோடும், அதன்
உள்ளார்ந்த கலாச்சாரங்களோடும் – சில நிகழ்வுகளில் குடும்பத்தோடு தங்களை
இனம்கண்டுகொள்வது, அரசியலில் விட்டுக்கொடுத்துச் சமாதானம் செய்துகொள்வது (இது
ஜனநாயகச் செயல்பாடுகளுக்குத் தேவை) போன்றவற்றில்
மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாமல் – அல்லது அடையாளப்படுத்திக்
கொள்ளும்வரை அந்த நாடு நாடாக உருவாகாது’
ஸ்கர்ட்டனின் மாதிரியை இந்தியாவுக்குப்
பொருத்தும்போது உடனடியாக ஓர் அடிப்படைப் பிரச்சனை எழுகிறது. இங்கே ‘தன்மைப்பன்மை’
என்பது எது? இந்தியத்தன்மையான ‘நாங்கள்’ தங்களை
முஸ்லீம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் எண்ணிக்கொண்டும், செயல்பட்டுக் கொண்டும் வாழ்கிற
‘இந்திய முஸ்லீம்களையும்’, இந்தியக்
கிறிஸ்தவர்களையும்’
உள்ளடக்கி இருக்கிறதா? பிரிட்டிஷ் பழமைவாதிகளுக்கு
‘கிறிஸ்தவம்’
என்பது தங்களின் தத்துவத்தின் கட்டுமானம்.
ஸ்கர்ட்டனுக்கும்கூடத் தன்னளவில் ’உடமைகளுக்கு,
குடும்ப உறவுகளை உறுதிசெய்துகொள்வதற்கு மற்றும் தர்ம அறச்செயல்களைச் செய்வதற்கு
மரியாதைகளை அளித்தது ‘கிறிஸ்தவம்’. இது
கிறிஸ்தவம் அளித்த நன்கொடை.’ என
வாதம் செய்வார்.ஆனால் கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொள்வது தேசியசமூகத்தின்
ஓர்உறுப்பினராக இருப்பதற்குக் கட்டாயம் அல்ல. அவரைப்பொருத்தவரை பிரிட்டிஷ்
முஸ்லீம்களும், பிரிட்டிஷ் இந்துக்களும் கிறிதவர்களாக மதம்மாறுவதோ அல்லது
கிறிஸ்தவம்தான் முதன்மையானது என்று ஏற்றுக்கொள்வதோ தேசிய வாழ்வில் பங்கேற்பதற்குத்
தேவை இல்லை.
அதற்குமாறாக இந்தியாவில் உள்ள,
ஆர்.எஸ்.எஸ்.,இந்துமகாசபா மற்றும் அதன் பரிவாரங்களால் வெறுப்பேற்றப்பட்ட, இந்து
பழமைவாதிகளோ, ‘தேசத்தைச் சார்ந்தவர்கள் என்பது மிகவும் சிக்கலான ’மதச்சார்போடு பின்னிப்பிணைந்தது’ என்று நம்புகிறார்கள். வி.டி சாவர்க்கர் தந்தையர் நாடு
என்பதை ‘பித்ரு பூமி’ என்றும்,
ஒருவரது மதநம்பிக்கையின் பாற்பட்ட புண்ணிய இடங்களை ‘புண்ய பூமி’
என்றும் விளக்கம் செய்து இந்த இரண்டையும் இந்தியாவில்
கொண்டவர்கள்தான் இந்தியர்கள் என்றார். சாவர்க்கருக்கு இந்தியாவில் இந்துக்களும்,
சீக்கியர்களும் ஒரேமாதிரியானவர்கள். ஆனால், முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ அவ்வாறு
அல்ல. இந்து மற்றும் சீக்கியர்களின் புனிதத்தலங்கள் இந்தியாவுக்குள்ளேயே
இருக்கின்றன. முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனிதத்தலங்கள் வேறு எங்கோ
உள்ளன. சாவர்க்கரின் இந்த சிந்தனை உடனடியாக இந்திய முஸ்லீம்கள் மற்றும்
இந்தியக்கிறிஸ்தவர்களின் நாட்டுப்பற்றைச் சந்தேகத்திற்குள்ளாக்கியது.
ஸ்கர்ட்டன் போன்ற பிரிட்டிஷ் பழமைவாதிகளுக்கு
பெரும்பான்மை மதம் என்பது தேசிய குணாம்சங்களில் ஒன்று. ஆனால், அதற்கு மறுதலையாக
இந்தியப் பழமைவாதிகளுக்கோ மதத்தைச் சார்ந்திருப்பது கட்டாயம். இந்துக்கள்,
சீக்கியர்கள், ஜைனர்கள் மட்டுமே தேசிய சமுதாயத்தில் உண்மையான உறுப்பினர்கள்.
வரலாற்று ஆய்வாளர் தர்மகுமார் ஒருமுறை
சுட்டிக்காட்டியதுபோல இந்த ‘இந்துதான் முதலில்’, ‘இந்துவாக இருப்பதுதான் இந்தநாட்டின் குடிமகனாக இருப்பதற்கு
முக்கியம்’
என்பது மத்தியகால இஸ்லாமிய அரசியல் சித்தாந்தத்தைப்போல்க்
கேலிக்குரியது. அப்போது அவர்கள் ‘முஸ்லீம்கள் மட்டுமே முழு ரத்தம் பாயும்
குடிமக்களாவார்கள்”
என்றார்கள்.’யூதர்களும்,
கிறிஸ்தவர்களும் ‘திம்மு’ என
மக்கள்தொகைக்கணக்கில் பெயர் கொண்டவர்கள் மட்டுமே. அவர்கள் அரசியலிலும்,
பொதுவிஷயங்களிலும் கலந்துகொள்ளாதவரையிலும் வேலைசெய்ய, பிரார்த்தனை செய்ய, சொத்துக்களை
வாங்க அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார்கள்.
மேற்கத்திய காலனி ஆதிக்கத்தின் தாக்கத்தால்
19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தோன்றிய நவீனகால இந்து பழமைவாதம், பிரிட்டிஷாருக்கு
முந்தைய, இஸ்லாமியர் காலத்திற்கு முந்தைய பழங்காலத்தை நோக்கித்திரும்பிவிட்ட்து.
குறிப்பாக 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் இந்தியப்பழமைவாதிகள்
‘இந்தியத் தன்மைப்பன்மை’ என்ற
பெயரில் முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் ‘தீண்டத்தகாதவர்கள்’
என விலக்கி வைத்துவிட்டனர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை
அவரது வாழ்நாளில் கடுமையாக விமர்சித்தவர்கள் இந்துவலதுசாரிகள் என்பது இப்போது
மறக்கப்பட்டுவிட்ட்து. செல்வாக்கு மிகுந்த இந்து பூசாரிகளில் பலர் ’’மாற்றியமைக்க முடியாத, எழுதிவைக்கப்பட்ட விதி’
என்று நம்புகிற தீண்டாமையை எதிர்த்து காந்தியும் அவரைப்
பின்பற்றியவர்களும் சவால்விடுத்துப் போராடியதற்காக அவர்களை ‘இந்துக்கள் அல்ல’
என்று பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்’ என்று கூட்டாக
விண்ணப்பத்தில் கையெழுத்திட்டாரகள்
தீண்டாமைக்கு எதிராக விடாப்பிடியாக காந்தி
மேற்கொண்ட பிரச்சாரமும், சாதியத்தை மேலும் தீவிரமாக விமர்சித்து எழுந்த
பி.ஆர்.அம்பேத்கர் போன்றவர்களும் உருவானபிறகு இந்துத்துவா ப்ழமைவாதிகளின் தத்துவங்களும்,கருத்துக்களும்
பிரச்சாரங்களும் தவிடுபொடி ஆக்கப்பட்டன. இந்தியாவில் இன்னும் பலபகுதிகளில்
தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டாலும்கூட எந்த ஒரு இந்து சிந்தனையாளரோ, அல்லது
அரசியல்வாதியோ இப்பொழுது அதைப்பாதுகாக்க முன்வருவதில்லை.
இருந்தபோதிலும், முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும்
‘தன்மைப்பன்மை’யில் சேர்த்துக் கொள்வதற்கான விருப்பமின்மை தொடர்கிறது.
மிகவும் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ள பழமைவாதிகள் ‘இந்த இரண்டு மதங்களைச்
சார்ந்தவர்கள்மீது நம்பிக்கை வைக்க முடியாது’ என நம்புகிறார்கள். எனவேதான் அங்குமிங்குமாக முஸ்லீம்களையும்,
கிறிஸ்தவர்களையும் இந்துமத்த்திற்கு மாற்றம் செய்திடும் - பிரச்சாரகர்கள் சொல்வதுபோல் ‘மீள்மதமாற்றம்’
செய்திடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. எங்கே
மதநம்பிக்கையில் மாற்றம் செய்யமுடியாதோ அங்கெல்லாம் முஸ்லீம்களும்,
கிறிஸ்தவர்களும் ‘இந்துக்களின் பூமிக்குத் தங்கள் முதன்மையான கடப்பாட்டை அறிவிக்க,
அவர்கள் தங்களை இந்திய முஸ்லீம்கள், இந்தியக் கிறிஸ்தவர்கள் என்று மறுபெயரிடுமாறு
வலியுறுத்தப்படுகிறார்கள்.
இந்தவகையில் இந்தியப்பழமைவாதிகள் தங்களுக்கு
இணையானவர்களாக –பிரிட்டிஷாரோடு அல்ல – அமெரிக்கர்களோடு நெருக்கம்
கொண்டிருக்கிறார்கள். அரசியல் விஞ்ஞானி சாமுவேல் ஹட்டிங்டன் தனது 2004ல் எழுதிய
நூலான ‘ நாங்கள் யார்?’-Who
are We?-யில் அமெரிக்கர்களின் மதக்கோட்பாடு (American
Creed)பற்றிய
விளக்கத்தை அளிக்கிறார். அதில் உள்ளடங்கிய கூறுகளாக உள்ளவை : ‘கிறிஸ்தவ மதம்,
புரோட்டஸ்டண்ட் மதிப்பியல்கள், ஒழுக்கநெறி, தொழில்அறம், ஆங்கிலமொழி, பிரிட்டிஷ்
சட்ட மரபுகள், நீதி, அரசு அதிகாரத்தின் எல்லைகள், ஐரோப்பியக் கலை இலக்கியங்களின்
தொடர்ச்சி, தத்துவம் மற்றும் இசை ஆகியன. (அமெரிக்க ஐக்கிய நாடுகள் சில
காரணங்களுக்காக) பாகிஸ்தான் முஸ்லீம் சமுதாயமாகவும், இஸ்ரேல் யூத சமுதாயமாகவும் உருவாக்கப்பட்டதுபோல்
அமெரிக்கா ‘புரோட்டஸ்டண்ட் சமுதாயமாக உருவாக்கப்பட்டது.
ஹட்டிங்டனைப் பொருத்தவரை அமெரிக்க ஐக்கிய
நாடுகள் ’ஒற்றை தேசியக் கலாச்சார எண்ணப்பரவலைக் கொண்டநாடு’ என விளக்குகிறார். அமெரிக்காவின் இந்த மதக்கோட்பாடு போர்
மற்றும் சமாதான காலங்களில் நாட்டை ஒன்றுபடுத்தியிருக்கிறது. தனது குடிமக்களுக்கு
ஒருங்கிணைந்த நோக்கங்களுக்கான அடையாளத்தைத் தந்திருக்கிறது. ஹட்டிங்டன்
கூற்றுப்படி ’தெள்ளத்தெளிவாக புரோட்டஸ்டண்டியத்தின் அடிப்படையில் அமையாமல்
இந்த மதக்கோட்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் வரலாறு நெடுகிலும்
வாழ்ந்த மக்கள் வெள்ளையர்கள் அல்ல. பிரிட்டிஷ் ஆங்கிலோ சாக்சன் புரோட்டஸ்டண்ட்கள்,
அமெரிக்காவின் ஆங்கிலோ சாக்சன் புரோட்டஸ்டண்ட்களின் கலாச்சாரத்தையும், மதிப்பியல்
களையும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கர்கள் ஆனார்கள்.
அமெரிக்காவின் –அல்லது
புரோட்டஸ்டண்ட் மதத்தின் பல பிரிவுகளையும்விட, நவீன இந்தியாவின் பழமைவாதம் மதத்திற்கு
மிகுந்த மேலாதிக்கம் தருகிறது. இவர்களுக்கு ‘இந்து தேசியத்தன்மை’என்பது இந்து மதத்தை மையமாகக் கொண்டிருக்கிறது
இந்துத்துவாவின் மதிப்பியல்கள் பகவத் கீதையிலும், சமஸ்கிருத்த்தை மீட்டெடுத்துப்
பரப்புவதிலும் உள்ளது: இதில்தான் இந்துகாவியங்களும், சமய நூல்களும்
எழுதப்பட்டுள்ளன எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஐரோப்பாவில் அல்லது அமெரிக்கப்பழமைவாதிகளுக்கு
நாட்டின்மீதானபற்று என்பதைக்காட்ட – வேறு நாடுகளிலிருந்தும்,
வேறுகண்டங்களிலிருந்தும் குடிபெயர்ந்து வந்தவர்கள்கூட தங்கள் கலாச்சாரப்
பாரம்பரியங்களிலிருந்து விலகி நிற்கவேண்டும் என்ற தேவை இல்லை. இந்து பழமைவாதம்
அதற்கு மாறாக அன்னிய நாடுகளின்மீதான வெறுப்பு, தனதே உயர்ந்தது என்று
போற்றிக்கொண்டாடும் போக்கு என்ற இரண்டின் கலவையாக உள்ளது. ஒருபக்கத்தில் அது
வெளியாரையும், வெளிப்புறச் செல்வாக்குகளையும் வெளியே நிறுத்த
விரும்புகிறது.அதற்காக வெளிநாட்டு
அறிவாளிகளின்மீது அவதூறுகளைப் பரப்பித் தூஷிகிறது. ‘மெக்காலே, மில், மார்க்ஸ்’
எனப்பட்டியலிட்டு நிந்திக்கிறது. மறுபக்கம் இந்துக்கள் மற்ற நாகரிகங்களைவிட, மற்ற
நாடுகளைவிடக் கலாச்சாரத்திலும், அறிவாற்றலிலும் மிக உயர்ந்தவர்கள்: நாங்கள் அதன்
வாரிசுகள் எனத்தற்பெருமை கொண்டாடுகிறது. இதன்படி வேதங்கள்தான் உலகின் பழமையான
புனித நூல்கள்; உபநிஷத்துகளும், கீதையும் மிகவும் ஆழமான கருத்துக்களைக்கொண்ட
தத்துவங்கள் என்று கூறுகிறார்கள். வேறு யாருமில்லை: பிரதமர் மோடியே கூட
யானைத்தலையை உடைய கணேச்ர் (விநாயகர்) இருப்பது இந்துக்கள் ப்ழங்காலத்திலேயே
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் விற்பன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு
எடுத்துகாட்டு என்கிறார்.
இந்தப்பழமைவாதிகள் தங்கள் நாடு வலிமையும்,
செல்வமும் பெற்றதற்குப் பிறகு இந்த உலகத்தையே இந்தியாவைப்போல ஆக்குவதற்குத்
தாங்கள் விதிக்கப்பட்டவர்கள் என மிக நீண்டகாலமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
ஜனசங் கட்சியைத் தோற்றுவித்தவரான ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பார்வை அதற்கான
சாட்சியமாக உள்ளது. 1944 டிசம்பரில் பிலாஸ்பூரில் ஒருகூட்ட்த்தில் பேசிய அவர்
அழுத்தமாகக் கூறினார்; இந்துயிசத்தின் மீட்சி இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான
மக்களின் துன்பங்களைப் போக்குவது மட்டுமல்ல: எஞ்சியுள்ள இந்த உலகத்தையும் அவ்வாறே
ஆக்கும்’ மேற்கத்திய
பொருள்முதல்வாதிகளைப் போல அல்லாமல் இந்துயிசம் மனிதனின் ஆன்மீக இயல்பின்மீது
அழுத்தம் கொண்டிருக்கிறது. இந்தியாவைத்தவிர வேறு எந்த நாடும் ஒருபுதிய மானுட
நாகரிகத்தை உருவாக்க மிகச்சரியான சித்தாந்த்த்தைத் தரமுடியாது’
என்றார்.
இந்துபழமைவாதம் பழமையை மீட்க முயல்கிறது.
வெளிச்செல்வாக்குகளாலோ, வேற்று நாகரிகங்களாலோ மாசுபடாத தூய்மையான கடந்த காலத்தைக்
கொண்டுவரப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அதேநேரத்தில் இந்துதேசியம்
மற்றவர்களைவிட்த் தன்னை மிகஉயர்வாகக் கொண்டாடிக்கொள்கிறது. பிறநாடுகளையும்,
கலாச்சாரங்களையும் தன்னைப்போலவே படைக்கப்போவதாகவும் சொல்லிக்கொள்கிறது. இந்த
இரண்டுபோக்குகளும் ஒன்றுக்கொன்று எதிரான, சுயபரிசோதனை செய்துகொள்ளப்பட வேண்டியவை.
இவை அறிவாற்றலைக் கட்டமைக்கும் வேலைகளில் தவிர்க்க முடியாதவை.
-----------------------------------------------------------------------------------------பகுதி 3 தொடர்கிறது-----------------------
No comments:
Post a Comment