Thursday, 22 November 2018

தூய்மை இந்தியா இயக்கம்


தூய்மை இந்தியா இயக்கம்
முழக்கங்களும், உண்மைகளும்
                                                                                                    செ. நடேசன்

’திறந்தவெளி மலம் கழிப்பு’- கேட்கும்போதே மனதில் ஓர் அசூயையை ஏற்படுத்தும் இந்தச்சொல்லடுக்கு, உலகின் மொத்த திறந்தவெளி மலம் கழிப்பில் 65% இன்றும் இந்தியாவில் நிகழ்கிறது என்ற உண்மையால் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவை அருவருப்பாக உணரவைக்கிறது. மலக்க்ழிவுகளிலிருந்து மனிதர்கள், பூச்சிகள், பறவைகள் மூலம் பரவும் கிருமிகள் வந்திபேதி முதலான கொள்ளை நோய்களை ஏற்படுத்துகின்றன . இதனால் இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 82பேரை அவர்களது முதல் பிறந்தநாளுக்கு முன்பே அவை கொன்று விடுகின்றன. இதில் தப்பிப்பிழைக்கும் குழந்தைகளோ குள்ளமானவர்களாக, நோஞ்சான்களாக,கல்வியறிவு பெறுவதில் பின்தங்கியவர்களாக பின்னர் அவர்கள் இளம்பருவத்தினராக வளரும்போது அந்த வயதுக்குரிய உழைப்புசக்தி குறைந்தவர்களாக, தங்கள் வாழ்விலும், தேசத்தின் பொருளாதாரத்திலும் வீழ்ச்சிக்குக் காரணமாகிறார்கள்.

  இந்தக்கொடூரத்தை நன்கு உணர்ந்தவர் மகாத்மா காந்தி. இந்திய நாட்டின் சுதந்திரத் துக்கு தலைமையேற்றுப் போராடிய அவர், ‘தூய்மையா? தேசத்தின் சுதந்திரமா? எது முதலில் என்றால், எனது முதல்தேர்வு தூய்மைதான்’ என்றார். நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் இந்தப்பிரச்சனைக்குத் தீர்வுகாண’ நிர்மல் பாரத் அபியான்’ போன்ற பல்வேறு  திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வந்தது. ஆனால் நிலைமைகளில் எந்த மாற்றமும்  வந்துவிடவில்லை.
   2014ல் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடி 15.ஆகஸ்ட் 2014 அன்று தமது முதல்சுதந்திரதின உரையில் அவருக்கே உரிய சொல்லாற் றலுடன்’ மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளுக்குமுன் ,ஐந்தே ஆண்டுகளுக்குள் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவேன்’ என்று சபதம் ஏற்றார்: அதற்காக, ‘தூய்மைஇந்தியாஇயக்கம்’(ஸ்வாட்ச்பாரத்மிஷன்) என்ற அமைப்பை பிரகடனம் செய்து அறிவித்தார். ஆண்டுக்கு 30,00,000 கழிப்பிடங்கள்வீதம் ஐந்து ஆண்டுகளுக்குள் 1,50,00,000 கழிப்பிடங்கள் கட்டப்படும் என்றும், அதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.30,000 கோடி வீதம் ஐந்து அண்டுகளுக்கு ரூ.15,00,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

  2018 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் 150ஆம் ஆண்டு பிறந்ததினக் கொண்டாட்டங்களைத் துவக்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, ‘தூய்மை இந்தியா இயக்கம்’ வெற்றிபற்றுவருகிறது: இந்த நான்கு ஆண்டுகளில்  இந்த இயக்கம் ‘மக்கள் இயக்கமாக’.மாறி, மக்களிடம் மனமாற்றத்தை உருவாக்கிவருகிறது,’ என்று பெருமையுடன் அறிவித்தார். அதை உறுதிப்படுத்தும்விதமாக(!) மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் பரமேஸ்வரன் அய்யர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘இந்த இயக்கம் நடத்தைப்பண்பு மாற்றத்தை, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை, சாதியத்தடைகளை உடைப்பதை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 24 மாநிலங்கள் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 8.6கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுவிட்டன. 2014ல் 39% ஆக இருந்த கழிப்பறைப்பயன்பாடு உலகவங்கியின் உதவித்திட்ட ஆதரவோடு இன்று 93% கழிப்பறைப்பயன்பாடாக உயர்ந்துள்ளது. இது தூய்மை இந்தியா இயக்கத்தின் இதயமாக சவால்கள் நிறைந்ததாக உள்ள குணமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதற்கு சான்றாக உள்ளது’ என உண்மையான களநிலவரத்துக்கு மாறாக ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்த, பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
   ஆனால், இந்த ஆரவார முழக்கங்களுக்கு மாறாக உண்மை நிலவரங்கள் இருப்பது கவலையளிக்கிறது. ‘தி இந்து’ நாளிதழ் 2018 அக்டோபர் 4 தலையங்கத்தில் சுட்டிக்காட்டி யதுபோல, ‘எந்த ஒரு துடைத்தெரியும் மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. தூய்மையை எது உருவாக்குகிறது என்ற விரிவடைந்த கண்ணோட்டம் தூய்மை இந்தியா இயக்கத்துக்கு தேவைப்படுகிறது. இதைத்தான் வள்ளுவர், நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச்செயல்’ என்றார்.

   கிராமப்புற இந்தியாவில், குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற பல வடமாநிலங்களில் திறந்தவெளி மலம் கழிப்பு இன்றும் தொடர்ந்து அதேஅளவில் நீடித்துவருவதற்கான காரணங்களைக் கண்டறிவதும், அவற்றுக்கு தீர்வு காண்பதும் தான் தூய்மை இந்தியா இயக்கத்துக்கு தேவைப்படும் விரிவடைந்த கண்ணோட்டம். திறந்தவெளி மலம் கழிப்பு தொடர்ந்து நீடித்துவருவதற்கான காரணங்கள் எவை?  கிராமப்புற மக்கள் சொந்தமாக ஒருகழிப்பிடத்தைக் கட்டமுடியாத அளவுக்கு ஏழைகள் என்பதாலா? அங்கு கழிப்பிடங்களுக்கு தேவையான தண்ணீர்வசதி இல்லாததாலா? அவர்கல் கல்வியறிவு பெறாதவர்கள் என்பதாலா?  இவை எதுவுமே அல்ல என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கிறது ஆராய்ச்சியாளர்கள் டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் ஆகியோர் உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம், தமிழ்நாடு முதலான பல்வேறு இந்திய மாநிலங்களில் மக்களை நேரடியாக சந்தித்துப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படியில் எழுதியுள்ள ‘எங்கே செல்கிறது இந்தியா? –கைவிடப்பட்ட கழிப்பிடங்கள், தடைபட்ட வளர்ச்சிகள் மற்றும் சாதியத்தின் விலைகள்’’ (Whers India Goes – Abandoned Toilets, Stunted Development and the Cost of Caste)  என்ற நூல்.

  மோடியின் அரசு உறுதியளித்த நிதி ஒதுக்கீட்டை முழுமையாகஅளிக்காதபோதிலும், அந்தக்குறைந்த நிதியில்கூட உள்ளூர் அரசியல்வாதிகள் ஊழல்செய்துகட்டித்தந்த அரைகுறைக்கழிப்பிடங்களைப் பயன்படுத்தாமல்,கிராமப்புற மக்கள், உயர்சாதியினர் உட்பட,தொடர்ந்து திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கானஅடிப்படைக் காரணம், இந்த உலகத்தில் எந்த நாடுகளிலும் இல்லாதவகையில் இந்துத்துவாவும், பிராமணியமும் இன்றும் விடாப்பிடியாக நடைமுறைப்படுத்திவரும் மக்களைப்பிளவுபடுத்தும் சாதிய அமைப்புமுறையும், புனிதம், தீட்டு, தீண்டாமை என்ற கொடூரமான கற்பிதங்களும் தான். மனுநீதி வகுத்த வர்ணாசிரமதர்மத்தின்படி உயார்சாதியினர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டபிரிவு மக்களான ஆண்களையும், பெண்களையும், (பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டபிரிவு மக்களில்கூட ஆண்கள் பெண்களையும்), தங்களுக்கு சேவகம் செய்யும் அடிமைகளாக  நடத்திவரும் மனப்பான்மைகளாலும் தான் எங்கே திறந்தவெளி மலம் கழிப்பு ஒரு பொதுவழக்கமாக உள்ளதோ அந்த இந்திய சமூகத்தில் , குறிப்பாக வட இந்திய கிராமங்களில் சமூக புரோகிதர்களின், பிராமணர்களின் ஆட்சி ஊடுருவிப்பரந்துள்ளது அவர்களால் பலநூறு ஆண்டுகளாக மக்கள் மனங்களில் நஞ்சாக விதக்கப்பட்ட  பிராமணீய, மனுதர்ம ,இந்துத்துவா கோட்பாடுகளிலிருந்து மக்களை மீட்காமல், சமூக சமத்துவத்தை நிலை நாட்டாமல், அவர்களது மனப்பான் மையை மாற்றாமல், இந்தியாவை திறந்தவெளி மலம் கழிப்பில்லாத நாடாக மாற்றுவதுசாத்தியமில்லை.
   டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ‘சாதிஒழிப்பு’ என்ற தமது நூலில் வலியுறுத்தியது போல ,ஏ.டெல்டும்ப்டே அழுத்தமாக குறிப்பிடுவதுபோலசாதியை ஒழிக்காமல், சாதிய மனப்பான்மைகளை அழித்தொழிக்காமல் தூய்மை இந்தியா ஒருபோதும் உருவாகாது: உருவாகப்போவதும் இல்லை’

 டியானே காஃபே, டீன் ஸ்பியர்ஸ் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘Where India Goes’ நூல் ‘எங்கே செல்கிறது இந்தியா’ என தமிழில் வெளிவருகிறது இந்த நூல் சாதி ஒழிப்பு, சமூக சமத்துவம், சமூக மாற்றம் ஆகியவற்றை தங்கள் இதயங்களில் வரித்துக்கொண்டு செயல்பட்டுவரும் சமூகப் போராளிகள்அனைவரின் கரங்களிலும் சாதியத்துக்கு எதிரான ஒரு போர்வாளாகசுழலட்டும்.  இந்த நூலை எனது தமிழாக்கத்தில் வழக்கம்போல் அழகுற வெளியிடும் தோழர் அனுஷ் அவர்களுக்கும், ’எதிர்வெளியீடு’க்கும்  அன்புகலந்த தோழமை வாழ்த்துக்கள்.
                                                                                                                                                            தோழமையுடன்,

ஊத்துக்குளி.ஆர்,எஸ்.                                                                                                                    செ, நடேசன்
22.11.2018



No comments:

Post a Comment