Friday, 5 June 2015

ஹோ சி மின் 175

ஹோ சி மின் 175 
புரட்சிகர நல்லொழுக்கம்
ஆங்கிலத்தில்: பி.அருண்குமார்
தமிழில்: செ. நடேசன்


காதிபத்தியம், முதலாளித்துவம், தனிமனிதப்போக்கு ஆகியவை மக்களின் முக்கியமான எதிரிகள் என்றார் ஹோசி மின். அவரது 125ஆம் பிறந்த நாள் உலகெங்கும் 2015 மே 19ல் கடைப்பிடிக்கப்பட்டது. ஹோ மாமா(Uncle Ho) என்று மக்களால் மிகவும் நேசத்துடன் அழைக்கப்பட்ட அவர், ஜப்பானியர்களுக்கும், பிரெஞ்சுக்காலனியவாதிகளுக்கும், அமெரிக்கர்களுக்கும் எதிரான வெற்றிகரமான போர்களில் வியட்நாமியர்களின் போராட்டங்களுக்குத் தலைமையேற்று வழிநடத்தி னார். அவர் ஒருபுரட்சியாளராகத் தொடர்ந்து மக்களை அணிதிரட்டி அவர்களது வலிமையில், படைப்பாற்றலில், உள்ளார்ந்த செயல்திறனில் ஆழ்ந்த நம்பிக்கையை அவர்களுக்குள் உருவாக்கி அணிவகுக்கச்செய்தார்.
  ஹோ சி மின் மற்றும் வியட்நாமியர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் உலகெங்கிலும் உள்ள அன்றைய இளைஞர்களிடம் தூண்டுதல்களை ஏற்படுத்தி அவர்களை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆர்த்தெழவைத்த அடையாளங்களாக இன்றும் கருதப்படுகின்றன. லெனினின் ‘காலனியக் கருத்தாக்கங்களால்ஈர்க்கப்பட்ட ஹோ சி மின்னும் அதன் வழியில் மார்க்சிய-லெனினியத்தை தழுவினார். போராட்டக்களங்களில் படிப்படியாக மார்க்சியத்தையும்-லெனினியத்தையும் கற்றுக் கொண்டே அதைநடைமுறைப்படுத்துவதிலும் ஈடுபட்டு, சோசலிசமும், கம்யூனிசமும் மட்டும்தான், ஒடுக்கப்பட்ட நாடுகளையும், உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் வர்க்கத்தையும் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்பதை நான் மெல்ல மெல்ல புரிந்து கொண்டேன்என்றார் ஹோ.

  தத்துவத்தையும், நடைமுறையையும் ஒருங்கிணைத்து வியட்நாமில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கி, மக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஒடுக்குமுறை யாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் வெற்றிபெறச்செய்தார். பயிற்சிபெறும் அலுவலர்களையும், கட்சி உறுப்பினர்களையும் அவர்களது நல்லொழுக்கத்தின் மூலம் அடையாளம்கண்டு அதைப்பின்பற்றுமாறு அழுத்தம் தந்தார். புரட்சிகர நல்லொழுக் கத்தைப் பின்பற்றுமாறும், தங்கள் நாட்டின் பருண்மையான நிலைகளுக்கு ஏற்ப மார்க்சிய-லெனினியத்தை உள்வாங்கி அதைப் பிரயோகிக்குமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அவர் மிகஎளிமையான மொழியில் வள்மாகவும், வேடிக்கையாகவும், பழமொழிகளை யும், ஒப்பீடுகளையும் நன்குபயன்படுத்தியும் பேசினார்,எழுதினார். அவரது மொழியைப் போலவே அவரும் மிகஎளிமையான சிக்கனமான வாழ்வை மேற்கொண்டார். துன்பங்களைக்கண்டு ஒருபோதும் அஞ்சவோ, தனது இலட்சியங்களைக் காற்றில் விட்டுவிடவோ செய்யாமல் தனது செயல்பாடுகளின் மூலம் தாமேஒரு முன்னுதார ணமாக விளங்கினார்.

புரட்சிகர நல்லொழுக்கம்

ஹோ சி மின் கடும் உழைப்பு, சிக்கனம், நேர்மை, தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து தனது தோழர்களையும் அவ்வாறே வாழுமாறு கற்பித்தார். கட்சி, மக்களோடு மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதும், அவர்களது கருத்துக்களை மதிப்பதும்,கூட்டுமுடிவுகளுக்கு க்ட்டுப்படுவதும், தனிநபர் போக்குகளை நிராகரிப்பதும் தேவை என அவர் விரும்பினார்.

      நம் ஒவ்வொருவருக்குள்ளும் இன்றும் எஞ்சியிருக்கின்ற குட்டிமுதலாளித்துவ மனோபாவம் “மூன்றாவதுஎதிரிஎன்ற அவர் ஏகாதிபத்தியத்தையும், முதலாளித்து வத்தையும் முதல் இரண்டுஎதிரிகள் என்றார். எதிரிகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் அவர் தனதுசகாக்களிடம் புரட்சிகர நல்லொழுக்கத்தை நடைமுறைப் படுத்தும்வகையில் ‘ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்; போருக்குத்தயார் நிலையில் இருக்கவேண்டும்; சரணடையவோ ஒருவருக்குத் தலைவணங்கவோ உறுதியாக மறுக்க வேண்டும்என்று வலியுறுத்தினார்.

     எந்தஒரு புரட்சியாளனுக்கும் புரட்சிகர ந்ல்லொழுக்கம் இன்றியமையாதது; அந்த புரட்சியாளன். தனது மகத்தான கடமையைச் செய்து முடிக்க புரட்சிகர ந்ல்லொழுக்கத்தை உறுதியான அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். புரட்சிகர ந்ல்லொழுக்கம் என்பது அவரைப் பொறுத்தவரையில், ‘கட்சியின் விருப்பங்கள், புரட்சி, வர்க்கம், தேசம் மற்றும் மானுடத்திற்காக தடுமாற்றமோ, பின்னடைவோ இல்லாமல் எந்தவகையான சிரமங்களுக்கும், தொல்லை தரும் கொடுமைகளுக்கும் அல்லது, தோல்விகளுக்கும் அஞ்சாமல் இருத்தல்‘ என்பதே.

   ‘எளிமையாகவும் தன்னடக்கத்தோடும் எத்தகைய கொடுமைகளையும் எதிர்க்கத் தயாராக இருப்பதில் க்ம்யூனிஸ்டுகள் ஒரு முன்னுதாரணமாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ‘கம்யூனிஸ்டுகள் மற்றவர்கள் தமக்குமுன் வேலை செய்வதற்காக்க் கவலைப்பட வேண்டும்; மற்றவர்களுக்குப் பின்னரே   மகிழ்ச்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும்’. புரட்சியாளர்கள் தங்களது கடந்தகாலச் சாதனைகளைப் பெரிதுபடுத்தி அதற்காகச் சிறப்பான மரியாதைகளை எதிர்பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்’. அதற்கு பதிலாக நமது கடமைகளை நிறைவேற்றுவதில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் எத்தகைய பரிசுகளையோ, மரியாதை களையோ எதிர்பார்க்காமல் சிந்தியுங்கள்என்றும் கேட்டுக்கொண்டார். குறிப்பாகக் கம்யூனிஸ்ட்கட்சியில் அதிகார மனோபாவம், தற்பெருமை, (பிறருக்குரியதைக்) கவர்ந்துகொள்ளல் போன்ற போக்குகள் இருப்பதற்கு கவலை தெரிவித்தார்.

   ஹோ சி மின் புரட்சிகர ந்ல்லொழுக்கம் என்பதை, “கட்சியின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தல், கட்சியின் நிலைப்பாட்டை நடைமுறைப் படுத்துதல், மக்களுக்காக முழுமனதுடன் பணிபுரிதல், ஒவ்வொரு விதத்திலும் தனித்த முன்மாதிரியாக விளங்குதல், மார்க்சிசம்-லெனினிசத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிப்பதல், அதைத் தொடர்ந்து சுயவிமர்சனத்தையும், விமர்சனத்தையும் செய்து ஒருவருடைய தத்துவார்த்தத்தரத்தை உயர்த்திக் கொள்ளுதல், தனிப்பட்ட ஒவ்வொரு பணியில் சகதோழர்களோடு இணைந்து பணியாற்றுவதில் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதல்” , என விளக்கினார்.

  புரட்சிகர நல்லொழுக்கத்தின் மிகமுக்கியமான அம்சம் மக்களுடன் பிரிக்க முடியாத் தொடர்புகளைக் கொண்டிருப்பது. புரட்சிகர ந்ல்லொழுக்கம் மக்களை ஒரே அணியில் இணைப்பதை, அவர்கள்மீது நம்பிக்கை கொள்வதை, அவர்களின் கருத்துக்களைக் கவனித்துக் கேட்பதை உள்ளடக்கியுள்ளது. கட்சியும் அதில் பணியாற்றும் இளம் உறுப்பினர்களும், தோழர்களும் தங்கள் சொல்லாலும் செயலாலும் மக்களின் நம்பிக்கையை வென்று, மரியாதையையையும் அன்பையும் வென்று அவர்களைக் கட்சிக்கு நெருக்கமாகக் கொண்டுவந்து அமைப்பாக்கி, அவர்களைக் கல்விபெறச் செய்து அணிதிரட்ட வேண்டும். இதன்மூலம் அவர்கள் உற்சாகத்துடன் கட்சியின் கொள்கைகளையும், முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவார்கள்.

   மக்களைச் சிறுமைப்படுத்துபவர்களை அவர் மிகக்கடுமையாக எச்சரித்தார். ‘ஒவ்வொரு விஷயத்திலும் தன்னைப் புத்திசாலி என்று கருதிக்கொள்வதன் மூலம் அவர்கள் மக்களிடமிருந்து விலகிச்செல்கிறார்கள். மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பவர்களாக மட்டுமே இருக்க விரும்புகிறார்கள். இத்தகையவர்கள் அதிகாரத்துவம், கட்டளை பிறப்பிக்கும் தலைமை என்ற நோயால் பீடிக்கப்பட்டவர்கள். மக்களின்முன் நமதுநெற்றியில் ‘கம்யூனிஸ்ட்என்ற சொல்லை வெறுமனே ஒட்டிக் கொள்வதன் மூலம் மட்டுமே மக்களின் அன்பையும், நம்பிக்கையையும் வென்றுவிட முடியாது. மக்கள் நல்ல நடத்தையும், நல்லொழுக்கத்தையும் உடையவர்களிடம் மட்டுமே அன்பு செலுத்தி மதிப்பார்கள்.

தனிநபர் போக்கை எதிர்த்த போராட்டத்தில்...

 தனிநபர்போக்குக்கு எதிரான போராட்ட்த்தில் ஹோ சி மின் மிகஉறுதியாக இருந்தார். அதை ஊழலுக்கு வழிவகுக்கும் மிகமுக்கியமான செல்வாக்குமிக்க ஒன்றுஎன இனம்கண்டார். ‘தனிநபர்போக்கு புரட்சிகர நல்லொழுக்கத்திற்கு எதிராகச் செயல்படக்கூடியது.. அதன் எஞ்சியுள்ள சிறுஅடையாளம்கூட அதற்குக் கிடைக்கும் முதல்வாய்ப்பிலேயே வளர்ச்சிபெற்றுப் புரட்சிகர நல்லொழுக்கத்தை மென்மைப்  படுத்திப் புரட்சிகர இலட்சியத்துக்காக நாம் முழுமனதோடு போராடுவதைத் தடுத்துவிடும்.  தனிநபர் போக்கு என்பது மிகவும் வஞ்சகத்தன்மையும், துரோகமும் கொண்ட ஒன்று. அது மிகுந்த ஆற்றலோடு ஒருவரின் முதுகில்ஏறிக்கொண்டு விடக்கூடிய ஒன்று. 
  தங்களது தனிநபர்போக்கால், சிரமங்களிலிருந்தும், கஷ்டங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொண்டு ஊழலிலும், ஊதாரித்தனத்திலும், படாடோபவாழ்க்கையிலும் மூழ்கிவிடுவார்கள்.அவர்கள் புகழுக்கும், இலாபங்களுக்கும், பதவிகளுக்கும், அதிகாரங் களுக்கும் ஆசைப்படுவார்கள்.அவர்கள் தற்பெருமைக்காரர்களாகவும்,அகந்தைகொண்ட வர்களாகவும் கூட்டுமுயற்சிகளைத் தரக்குறைவாகவும் கருதுவார்கள். மக்களை அவமதிப்பவர்களாகவும், தன்னிச்சையாகவும், கொடூரமாகவும் நடந்துகொள்பவர்களாக ஆகிவிடுவார்கள். அவர்கள் மக்கள்திரளிலிருந்தும், உண்மைநடப்புகளிலிருந்தும் துண்டித்துக்கொண்டு, அதிகாரவர்க்கமாகத்தன்மை மற்றும், ஆணைபிறப்பிக்கும் தன்மைகளால் பீடிக்கப்படுபவர்களாகிறார்கள்.தங்களை வளர்த்துக்கொள்ள எந்த முயற்சிகளையும் செய்யமாட்டர்கள் .தங்கள் ஆற்றலைக் கல்வியின்மூலம்       மேம்படுத்திக்கொள்ள எந்தமுயற்சியும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கொண்டாட் டங்களையும், ஓய்வையும் வேண்டுவார்கள். தங்கள் அமைப்பினால் தங்களுக்கு அளிகப்படும் கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாகத் தங்கள் சொந்த வேலைகளை எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் உயர்ந்த பதவிகளை விரும்புவார்கள். ஆனால், தங்கள் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கொள்வார்கள். அவர்களது போராட்ட உணர்வும், ஆற்றலும் மெல்ல மெல்லப் பலவீனப்பட்டுவிடும். அதுபோலவே அவர்களது புரட்சிகர மனஉறுதியும், மேன்மையான நற்பண்புகளும் பலவீனமடைந்துவிடும்.
  “இந்த்த் தனிநபர்போக்குகளிலிருந்து தங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ளாமல் சில கட்சிஉறுப்பினர்கள் ‘தாங்கள்கட்சிக்குச்செய்த சேவைகளைப்பெரிதுபடுத்தி அதற்காகக் கட்சி தங்களிடம் நன்றியுடன் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பார்க்ள். அவர்கள் தங்களுக்கான ஆதரவை, பெருமையை, தனிப்பட்ட சலுகைகளை விரும்புவார்கள். அவர்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் கட்சிக்கு எதிராகக் கடும்கோபம்கொண்டு, தங்களுக்கும், தங்கள் தியாகத்துக்கும் கட்சியில் எதிர்காலம் இல்லை என்று குறைகூறுவார்கள். மெல்லமெல்லக் கட்சியிலிருந்து விலகிச் செல்வார்கள். இதைவிட மோசமாக அவர்கள் கட்சியின் கொள்கைகளையும், ஒழுங்கு-கட்டுப்பாட்டையும் சீர்குலைக்க முயல்வார்கள்.
  ஹோ சி மின் தனிநபர்போக்கைக் கண்ணின்மணிபோலப் பாதுகாக்கப்பட வேண்டிய  கட்சியின் ஒற்றுமைக்கு எதிரான அச்சுறுத்தலாகப் பார்த்தார். அவர்களுடைய தனி நபர்போக்கால் அவர்கள் ஒற்றுமையின்மையைத் தூண்டுகிறார்கள். கட்சி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவை பற்றிய புரிதலிலும் பின்தங்கி விடுகிறார்கள். அவர்கள் கட்சியின் கொள்கைகளையும், நிலைபாடுகளையும் சரியாக முன்னெடுத்துச் செல்வதில்லை. புரட்சியின் தேவைகளுக்கும், மக்களுக்கும் இடையூறு விளைவிக் கிறார்கள்.
   ஹோ சி மின்-ஐப் பொறுத்தவரை தனிநபர் குணாம்சம் என்பது, “அவர்கள் விமர்சனத்திற்குள்ளாக விரும்புவதில்லை. அவர்கள் சுயவிமர்சனத்தையும் தவிர்க்கிறார்கள். அல்லது தங்கள் நடைமுறையை உண்மைத்தன்மையும், தீவிரமுமின்றி மேற்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் முகத்தையும், கௌரவத்தையும் இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறார்கள். அவர்கள் மக்களின் கருத்துக்களில் எவ்விதஅக்கறையும் கொள்ளாமல் கட்சிசாராத தோழர்களிடம் இணக்கம் கொள்கிறார்கள். தங்களது வேலைகளை எந்தத்தவறும் இல்லாமல் செய்வது கடினம்என்று உணரமறுக்கிறார்கள். நாம் நேர்ந்துவிடும் தவறுகளுக்கு அஞ்சுபவர்கள்அல்ல. ஆனால், அந்தத்தவறுகளைச் சரிப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். நமது குறைகளை அகற்ற நாம் மக்களின் விமர்சனங்களைக் கவனிக்க வேண்டும். சுயவிமர்சனங்கள நேர்மையோடு செய்யும் நடைமுறைகளைக் கையாள வேண்டும். இல்லாவிட்டால் நாம் பின்தங்கிப் போய்விடுவோம். அது நம்மை மக்களிடமிருந்து விலக்கிவைத்துவிடும். இது தனி நபர்போக்கின் தவிர்க்கவியலாத அம்சமாகும்.
  ஹோ சி மின் ‘கம்யூனிஸ்ட்கள் வெற்றிபெற வேண்டுமானால், ஒருவர் தன்னைத் தானே முற்றுமுதலாக மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்என்பதற்கு அழுத்தம் தந்தார். “புரட்சியைச் செய்யவேண்டுமென்றால் ஒருவர் தன்னை முற்றிலும் மறுவார்ப்புச் செய்துகொள்ளவேண்டும். நாம் நமது வேலைமுறைகளைச் சரிசெய்துகொள்ளவேண்டும். அவற்றை எப்போதும், என்றும் அறிவுபூர்வமானதாகவும் தற்காலச்சூழல்களுக்குப் பொருத்தமுடையதாகவும் ஆக்கவேண்டும். சம்பிராயதமான, இயந்திரகதியானவற்றைத் தவிர்க்கவேண்டும்.
   ஹோ சி மின் மார்க்சிஸம் லெனினிஸம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதை, “ஓர் உணர்வாக– ஒருவர் மற்றபொருள்களோடும், மற்றபொதுமக்களோடும், தன்னோடும் கூட- பிரச்சனைகளைக் கையாள்கிற உணர்வாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இதன்பொருள் உலகுதழுவிய மார்க்சிஸ லெனினிஸ உண்மைகளைக் கற்றுக் கொண்டு அவற்றை நமது நாட்டின்  எதார்த்தமான நிலைகளுக்கேற்பப் படைப்பாற்ற லுடன் செயல்படுத்த வேண்டும். நாம் செயலுக்கான பார்வையுடன் கற்கவேண்டும். த்த்துவம் நடைமுறையுடன் இணைந்து செல்லவேண்டும்.எனக்கூறினார்.
   ஹோ சி மின் தனது நாட்டின் பருண்மையான நிலைகள்பற்றிய முழுமையான ஞானத்தைப் பெற்றிருந்தார். தத்துவத்தையும், அமைப்பையும் பற்றிய தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். மக்களின்மீது மிகுந்த நம்பிக்கையைக் கொண்டிருந் தார். தன்னுடைய பணிகள்மூலம் “புரட்சி என்பது ஓர் அறிவியல்: அதுபோலவே, அது ஒருகலை என்று அவர் மிகத்தெளிவாகக் காட்டினார். இவ்வாறு அவர் ஒருமுன்னோடியான போராளியாகவும், பிரச்சாரகராகவும், அமைப்பாளராகவும் விளங்கினார். தான் என்ன கற்பித்தாரோ அதைத் தாமும் பின்பற்றிய மாமனிதர் ஹோ சி மின். அவர் வாழ்ந்த வாழ்வைப் பின்பற்றி வாழ்வதே ஹோ மாமாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

                                    நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரஸி  மே 11-17, 2015  

No comments:

Post a Comment