நான் சந்தோஷ்
பெங்களூருவிலிருந்து
ஒருகுழந்தையின் குரல்
ஆங்கிலத்தில்:
ஜி.மமதா
தமிழில்: செ.நடேசன்
என்பேரு சந்தோஷ். எனக்கு எட்டு வயசு
ஆகுது .நான் பெங்களூருவில் ஜெயநகர்ல இருக்கிறேன். நான் எங்கே இருக்கிறேன்னு
சொன்னப்போ அவரு ஏன் என்னை அடிச்சாருன்னு எனக்குத் தெரியல. இன்னிக்கு நீங்க
எல்லாருமே ஏன் எங்கிட்ட வர்றீங்கன்னும் எனக்குப் புரியல. இதெல்லாம் நான் எந்த
எடத்துல இருக்கிறேங்கறதோட சம்பந்தப்பட்டதா? இது என்னன்னு எனக்குச் சொல்லுங்க.
என்னால எதையுமே புரிஞ்சுக்க முடியல.
கோயிலுக்குப் பக்கத்துல நான் விளையாடப்போன
அந்த ஞாயித்துகெழ்மை அன்னிக்குத் தான் இதெல்லாம் ஆரம்பிச்சுது. பக்கத்துல இருந்த
கோயில்ல பூசாரி எல்லாருக்கும் பிரசாதம் தந்துகிட்டிருந்ததை என்சினேகிதங்க்ளோட
சந்தோஷமா விளையாடிட்டிருந்த நாங்க பாத்தோம். நாங்க எல்லாரும் குழந்தைங்க. அதிகமா
விளையாடுனதால பசிச்சுது. அதனால், நாங்க எல்லாரும் பூசாரிகிட்டப்போயி
பிரசாதத்துக்காக நின்னோம். விளையாடிட்டு வந்ததால எங்க துணியெல்லாம் அழுக்கா
இருந்துது. இல்லாட்டியும்கூட, எங்க துணியொண்ணும் சுத்தமா இருக்காது. ஏன்னா,
எங்கஅப்பா போனஒருவருசமா எனக்குப் புதுத்துணியே வாங்கல. இந்த தசராவுக்குக்கூட அவர்
புதுத்துணி வாங்கல.
நாங்க அழுக்கா இருக்கறதைப்பாத்து பூசாரி
எங்கிருந்து வர்றீங்க?னு கேட்டாரு. நாங்க பக்கத்துல இருக்குற ஜெயநகர்
காலனியிலிருந்து வர்றோம்னு சொன்னோம். உடனே அவரு எங்களத் திட்டிட்டு வெளியேபோக
ஆரம்பிச்சாரு. அவரு ஏன் எங்களப்பாத்துச் சத்தம் போட்டாருன்னு எனக்குத் தெரியல.
அதனால, நான் எனக்குப் பசியா இருந்ததால பிரசாதம் கேட்டு அவருபின்னால போனேன். அவரு
திடீர்னு அடிக்கஆரம்பிச்சாரு. அவரு என்தலையைப் புடிச்சுக் கோயில் தூண்ல வேகமா
இடிச்சாரு. என்தலையில ரொம்ப வலிச்சுது. என்னால கொஞ்சநேரம் எதையும் பாக்கமுடியல.
நான் அழஆரம்பிச்சேன். நான் அடிபடுறதப் பாத்ததும் எங்கவீட்டுக்குப்போயிப்
பெரியவங்களைக் கூட்டிட்டு வந்ததாக என்சினேகிதங்க சொன்னாங்க. நான் எவ்வளவு நேரம் தூங்கினேன்னு
எனக்குத் தெரியல. ஆனா, நான் முழிச்சப்போ ஆஸ்பத்திரியில இருந்தேன். என் அம்மா
அழுதங்க. என் அப்பா கோபமா இருந்தாரு. அவரும் என்னை அடிப்பாருன்னு நெனச்சேன். ஆனா,
அவரு அன்னைக்கு அடிக்கல. கோபமா இருந்தாரு.
டாக்டருக என்தலையில ஒருகட்டுப்போட்டுட்டு
கொஞ்சம் டெஸ்ட்டு எடுத்திட்டுவரச் சொன்னாங்க. என்தலை கொஞ்சம் கனமா இருந்தது. அம்மா
ஏன் அழறாங்கன்னு எனக்குத் தெரியல. டாக்டருக என் தலையப் போட்டோ எடுக்கணுமின்னு
சொன்னதாகவும், அதுக்கு ரொம்பச்செலவு ஆகுமின்னும் அம்மா சொன்னாங்க. அவ்வளவுபணம்
அம்மாகிட்ட இல்ல. எங்க அப்பா போலீசுகிட்டப் பேசலாம்னு சொன்னாரு. என் தலையப் போட்டோ
எடுக்க போலீசு உதவுவாங்களான்னு எனக்குத் தெரியாது. நாங்க எல்லாரும் போலீஸ்டேசனுக்குப்
போனோம். என் தலையப்பத்தியும், அடிபட்டதைப்பத்தியும் போலீசுகிட்ட எங்க அப்பா
சொன்னாரு. போலீசு என்கிட்ட நெறையக் கேள்வி கேட்டாங்க. நான் ஏன் கோயிலுக்கிட்ட
விளையாடப்போனேன் னும், பிரசாதம் சாப்பிட ஏன் ஆசைப்பட்டேன்னும் கேட்டு அவங்க
என்னையும், அப்பாவையும் திட்டுனாங்க.
என்னை அடிச்சதால பூசாரியைக் கொண்டுவரச்சொல்லி எங்க அப்பா அவங்க கிட்டக்
கேட்டாரு. ஆனா, போலீசு அதைக்கேட்டுக்கவே இல்ல. அவங்க,‘நாங்க எல்லாம் பொய்
சொல்றவங்கன்னும், பூசாரி ரொம்பநல்லவருன்னும்’ சொன்னாங்க. போலீசுஏன் எங்களப் பொய் சொல்றவங்கன்னு சொல்லித் திட்டறாங்கன்னு
எனக்கு புரியல. நான் உண்மையப் பேசினேன்: என் தலையில கட்டுப்போட்டிருக்குது. ஆனா,
இதையெல்லாம் அவுங்க கவனிக்கல.
நாங்க வீட்டுக்குப் போனோம். என் தலையில போட்டோ
எடுக்க இன்னும் 3000 ரூபா வேணும்னு எங்க அம்மா அழுதிட்டே இருந்தாங்க. அவ்வளவு பணம்
எங்ககிட்ட இல்லைனு எனக்குத்தெரியும். எங்க காலனியிலிருந்து சில அண்ணன்களும்,
அக்காக்களும் எங்க வீட்டுக்கு வந்தாங்க. அவங்க பையன்களும் நானும் சினேகிதங்க.
அவங்க என்கிட்டயும், அப்பா அம்மா கிட்டயும்‘எல்லாரும் ஒன்னாச்சேர்ந்து
போலீஸ்டேஷனுக்குப்போயி அவங்ககிட்டப்பேசலாமா’னு
கேட்டாங்க. அவங்க எல்லாரும் போனாங்க. ஆனா,அவங்க சொன்னதப் போலீஸ் கேட்கல. சில
அண்ணன்க டி.வி.க்காரங்ககிட்ட சொன்னாங்க. கொஞ்சம்பேரு எங்க காலனிக்குக் கொடியோட
வந்தாங்க. கொடிபிடிச்சுட்டுவந்த அண்ணன்களும், அக்காக்களும் என்ன நடந்ததுன்னு
என்கிட்ட கேட்டாங்க. டி.வி.க்காரங்களும்வந்து என்கிட்டக் கேட்டாங்க. அப்பஇருந்து
ஒவ்வொருத்தரும் வந்துட்டும், என்ன நடந்ததுன்னு கேட்டுகிட்டும் இருந்தாங்க. பலபேரு
என்னைப் போட்டோ எடுத்தாங்க. எங்க அம்மாகிட்ட அந்தப்போட்டோ போதுமான்னு கேட்டேன்.
ஆனா, இல்லைனு அம்மா சொன்னாங்க.
என்ன நடக்குது? ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு
நான் யோசிச்சுப்பாக்கிறேன். முதல்ல பூசாரி எனக்கு ஏன் பிரசாதம் கொடுக்கல?
அதைகேட்டது என் தப்பா? ஆனா, எல்லாருக்கும் கொடுக்கிற அவரு எனக்கு ஏன் கொடுக்கல?
நான் எங்கிருந்து வர்றேன்னு அவரு கேட்டது
ஞாபகம் வருது. ஆமா. நான் எங்கிருந்து வர்றேன்னு சொன்னதும் அவருக்குக் கோபம்
வந்தது. அப்படீன்னா என்னோட காலனியில என்ன தப்பு? நாங்களும்கூட மனுசங்க தானே?
உங்களப் போலவே மனுசங்க. எங்களுக்கும் ரெண்டுகைகள், ரெண்டுகால்கள், ஒருதலையும்
இருக்குதே. நாங்க ஏழைக: அழுக்கா இருக்கிறோம். ஆனா, எங்க அப்பா காலையில நேரத்துல
வேலைக்குப் போயி, ராத்திரியில நேரங்கழிச்சு வர்றாரு. அவரு வேலைசெஞ்சபிறகு
ரொம்பக்களைப்பா ஆயிடறாரு. அவரு கடுமையா வேலை செய்யறது எனக்குத் தெரியும். எங்க
அம்மாகூட நெறையவேலை செய்யறாங்க. சமைக்கிறாங்க: துணிதுவைக்கிறாங்க: என்னைத்
தயார்பண்ணி பள்ளிக்கூடத்துக்கு அழைச்சிட்டுப் போறாங்க. அதோட பலவீடுகளுக்குப்போயி
வேலைசெஞ்சு சாயந்திரம் வர்றாங்க. இருந்தாலும் நாங்க ஏழையாவே இருக்கிறோம். ஏன்னு
எனக்குப் புரியல. நாங்க அழுக்கா இருக்கிறோம்: ஏன்னா, நாங்க ஏழைங்க. நான் என்ன
செய்யமுடியும்?
எங்க பள்ளிக்கூடத்துல ஒவ்வொருநாள் காலையிலும்
நாங்க, “இந்தியா எனது தாய்நாடு: இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள்...”னு உறுதுமொழி எடுத்துக்கொள்கிறோம். என்னோட புத்தகங்கள், ‘எல்லா
இந்தியர்களும் சமம்’னு சொல்லுது. ஆனா, இது தப்புன்னு எனக்குத் தெரியும். இங்கே
பணக்காரங்களும், ஏழைங்களும் இருக்கறாங்க- சுத்தமாவும், அழுக்காகவும். நான்
குளிச்சாலும், புதுத்துணி போட்டுக்கிட்டாலும் நான் அழுக்காகவே தெரிகிறேன். நான்
எப்பவுமே அழுக்காகவே இருப்பேன்னு தோணுது. என்னை அடிக்கும்போது பூசாரி இப்படித்தான்
சத்தம் போட்டாரு. என்ன இந்த அழுக்கு?
என்னன்னு புரிஞ்சுக்கவே முடியல.
எனக்குக் கொஞ்சம் பெரிய சினேகிதர்களும்
இருக்காங்க. அவங்க பிறகு சொன்னாங்க:” நாம எல்லாரும்
அழுக்கானவங்க. ஏன்னா, நாம தாழ்த்தப்பட்டவங்கங்கறதால”. நான் அவங்களக் கேட்டேன்,” இந்தப் பூசாரி
என்ன?”ன்னு அவங்க சொன்னாங்க,”அவரு பிராமணர்”னு. ‘அவரு நம்ம எல்லாத்துக்கும் மேலே”ன்னு. “நாம கீழே”ன்னு. இந்த “மேலே’ன்னா என்ன? ‘கீழே’ன்னா என்ன?
எனக்குத் தெரியல. ஆனா, அவங்க சொன்னாங்க, “நாம பூசாரியத் தொடக்கூடாது. ஏன்னா அவரு
பிராமணரு. நாம கோயிலுக்குப் போகக்கூடாது. மேலே இருக்கிற யாராவது வந்தா நாம எழுந்து
நிக்கணும்: நாம தனியாத்தான் உக்காரணும்’னு. இதப்போல
என்னென்னவோ சொன்னாங்க. நான் அவங்களக் கேட்டேன்,”ஏன்?”னு. அவங்க சொன்னாங்க, ‘இது இப்படியே பல வருசங்களா இருக்குது’னு. அவங்க அப்பாக்களும், அவங்க அப்பாக்கள் காலத்திலிருந்தே
இப்படிமட்டும்தான் இருக்குதுன்னு சொன்னாங்களாம். இது ஏன் இப்படி இருக்குதுன்னு
நான் நெனச்சுப்பாக்குறேன். ‘இது ஏன் இப்படி இருக்குது? கடவுள் இதை விரும்பறாரா?” கொஞ்சம்பேரு சுத்தமானவங்க: கொஞ்சம்பேரு அழுக்கானவங்க.
கொஞ்சம்பேரு பணக்காரங்க: கொஞ்சம்பேரு ஏழைங்க. கொஞ்சம்பேரு ‘மேலே’: கொஞ்சம்பேரு ‘கீழே’ன்னு. இப்படிச்
சொன்னா அவரு கடவுளா இருக்கமுடியாதுன்னு நான் நெனைக்கிறேன்
இதுக்குநடுவில எங்க அப்பா மூணுநாளா
போலீஸ்டேசனுக்குப்போயி பூசாரியக் கொண்டு வரச்சொல்லி அவங்களக்கேட்டாரு. ஆனா, டி.வி.க்காரங்களும்,
கொடிபிடிச்ச அண்ணன்களும் வந்ததுக்கப்பறம், ஒரு பெரிய போலீஸ் அதிகாரி வெள்ளைக்காருல
எங்க வீட்டுக்கு வந்தாரு. என்ன நடந்ததுன்னு அவரு கேட்டாரு. நான் அவருகிட்டச் சொன்னேன். அவரு சொன்னாரு, “நான்
பூசாரியக் கொண்டுவருவேன்”ன்னு. வெளியே
நெறைய டி.வி.க்காரங்க இந்தப்போலீஸ்காரர்கிட்ட பல கேள்விகளக் கேட்டாங்க. அவரு,
அவங்ககிட்ட,”பூசாரியக் கொண்டுவந்து ஜெயில்ல போடுவேன்”ன்னு சொன்னாரு. அதுமட்டுமில்ல: இதுவரைக்கும் பூசாரியக்
கொண்டுவராத போலீஸ்காரங்ககிட்டயும் பேசுவேன்னாரு. என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோயி
போட்டோ எடுக்கறதாவும் சொன்னாரு. அவரு இன்னும் என்னென்ன வெல்லாமோ செஞ்சு, இனிமே
யாரும் என்னைப்போலக் குழந்தைகள அடிக்கறதை அனுமதிக்க மாட்டேன்னும் சொன்னாரு.
என்கிட்டச் சிலபேரு சொன்னாங்க, ‘நான்தான்
தப்பு’ன்னு. சிலபேரு ‘பூசாரிதான் தப்பு’ன்னு. இன்னும் சிலபேரு, ‘பூசாரியும், போலீஸ்காரங்களும்தான் தப்பு’ன்னு. இன்னும் கொஞ்சம்பேரு, ‘பூசாரியும், போலீஸ்காரங்களும்,
‘மேலே’ இருக்குற பலமனுசங்களும், பணக்காரங்களும்தான் தப்பு’ன்னு சொன்னாங்க. நான் நெனச்சுப்பாக்குறேன்: ‘போலீஸ்காரங்க
எங்க வீட்டுக்கு வந்தப்பறம் பூசாரி ஓடிப்போயிட்டாருன்னு என்சினேகிதங்க சொன்னாங்க.
அதனால போலீஸ் அவரைக் கொண்டுவரமுடியாது. அவரு பயந்து ஓடிட்டாரு. அவரு தப்பு
செய்யலைன்னா அவரு ஏன் ஓடிப்போகணும்? நான் ஓடிப்போகலே. எனக்குப் பசியா இருந்துது:
அதனால பிரசாதம் கேட்டேன். நான் தப்புப்
பண்ணலை. ‘தப்பு’ன்னா என்ன? ‘சரி’ன்னா என்ன? என்ன
பண்ணறது?
காந்திஜியைப்பத்தி ஒருபாடப்புத்தகத்தில
இருந்து என்னோட ஆசிரியர் சொல்லுற கதைய நெனச்சுப்பாக்குறேன். காந்திஜியை எனக்கு
நல்லாத்தெரியும். ஏன்னா, அவரு ரோட்டு நடுவுல ஒருமேடையில கையில ஒருகுச்சியைப்
பிடிச்சுகிட்டு நிக்கிறாரு. அவரை சுத்தி நாங்க விளையாடுவோம். அவரு பளுப்பு நிறமா
இருந்ததால ரயில்ல இருந்து தள்ளிவிடப் பட்டாருன்னும், அதனால அவரு கோபப்பட்டு அவங்கள
எதுத்துச் சண்டைபோட எல்லா மக்களையும் கூப்பிட்டாருன்னும் எங்க ஆசிரியர் சொன்னாரு.
அதுக்குப் பின்னால வெள்ளக்காரங்க நம்ம நாட்டைவிட்டுப் போயிட்டாங்க. ஏன்னா,
காந்திஜி எல்லா ஜனங்களையும் இந்தப் போராட்டத்துல ஒண்ணுசேத்தாரு. நான் இதை
நெனைச்சுப்பாத்தேன். காந்திஜி பளுப்பு நிறமா இருந்தாரு. அதனால வெளியே
தள்ளப்பட்டாரு. அது வெள்ளைக்காரங்களால. நான் அழுக்கானவன்: நான் தாழ்த்தப்பட்டவன்:
நான் அடிக்கப்பட்டேன்: இது இந்தியர்களால. ஆனா, ரெண்டும் தப்பு. காந்திஜியால்
சண்டைபோட முடியும்னா, நானும் சண்டை போடுவேன்.
கோட்டுப்போட்ட, கையில புத்தகத்தோட, ஒருவிரலை
எங்க வீடுகளப் பாத்து நீட்டீட்டு இருக்கற
ஒருத்தரை என்சினேகிதங்க எனக்குக் காட்டுனாங்க. அவரும்கூட எங்களப்போல அழுக்கா இருந்தமாதிரி
தெரிஞ்சுது. அவரு தன்னோட கையில இருந்த புத்தகத்துல எழுதினாரு: அதை நாடுமுழுக்கக்
கொண்டாடுது. அவருகூட அடிக்கப்பட்டாரு. ஆனா, நெறைய மக்களைச் சேத்துகிட்டுச் சண்டை
போட்டாரு: பெரிய மனுசரா ஆனாரு.
கொடிபிடிக்கிற அண்ணன்களும், அக்காக்களும்
இதுமாதிரிப் போராடற பலபேர் படங்கள வச்சிருக்கிறாங்க. அவங்க சொன்னாங்க, ‘ரொம்ப
மோசமான கெட்டவங்களோட சண்டை போட்டு ஒருபள்ளிக்கூடம் ஒருபெரிய பரிசை
வாங்கியிருக்குதுன்னு. அதுக்குப்பின்னால ஒவ்வொருத்தரும் சொன்னாங்களாம், “நான்
மலாலா, நான் மலாலா”ன்னு. அவங்க சொன்னாங்க, அவங்களைப்போல நீயும் வாழணுமின்னா
நீயும் போராடணும்னு. நான் யோசிச்சுப்பாக்குறேன்: “நான் சந்தோஷ், நான் சந்தோஷ்”னு சொல்லிகிட்டே மக்கள் வெளியே வருவாங்களா?
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி – அக்டோபர் 27, 2014

No comments:
Post a Comment