Saturday, 20 August 2016

தமிழ்மொழிவழிக்கல்வியையும், அரசுப்பள்ளிகளையும் பாதுகாப்பதில் இயக்கங்களின் பங்கு

தமிழ்மொழிவழிக்கல்வியையும்,
 அரசுப்பள்ளிகளையும் பாதுகாப்பதில்
 இயக்கங்களின் பங்கு

  செ. நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்,
  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி



தமிழகத்தில் இந்திமொழித் திணிப்பை எதிர்த்து எழுந்த ஆவேசம் 1965ல் அதன் உச்சமட்டத்தை எட்டியது. ’எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி? அதுஎத்தனை பட்டாளம் கூட்டிவரும்?’ எனத் தமிழகம் உணர்ச்சிப் பிழம்பானது. அதன் எதிரொலியாக 1967ல் தமிழகம் ஓர் ஆட்சிமாற்றத்தையே நிகழ்த்திக்காட்டியது. ‘எங்கும் தமிழ்: எதிலும் தமிழ்’ என்ற எதிர்பார்ப்புக்களோடு பேரறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க.வை ஆட்சிபீடம் ஏற்றியது.

  காங்கிரசு கட்சி ஆட்சிக்காலத்திலும் 1967 முதல் 2016 வரையான 49 ஆண்டுகாலதிராவிட இயக்கக்கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் தமிழ்மொழிக் கொள்கை. தமிழ்வழிக்கல்வி ஆகியவை பற்றிய வரலாற்றை இன்று மீள்பார்வை கொள்வது இன்றியமையாதது.

   தமிழ் நாட்டில் தமிழ்மொழியை ஆட்சிபீடமேற்றும் ஒரு மசோதா 1956 டிசம்பர் 27ல் சட்ட மன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆம். மும்மொழிக்கொள்கையை ஆதரித்த காங்கிரசு ஆட்சிக்காலத்தில்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. அன்று சட்டமன்றத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பி.இராமமூர்த்தி ‘இந்த நாள், தமிழ்நாட்டின் திருநாள்: நமது தாய்மொழி ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்ற தமிழ்மக்களின் நீண்டகாலஆசை இன்று நிறைவேறுகிறது. திருச்சி ஜில்லாவில் செயல்பட்டுவரும் பரீட்சார்த்த திட்டத்தை விரிவுபடுத்தித் தொடர்வதை முதலில் தாலூகா அளவில் அதைக் கொண்டுவந்து பிறகு ஜில்லா அளவில் அது கொண்டுவரப்படும் என்று மசோதாவில் கண்டுள்ளது.  அவ்வாறில்லா மல், சகல இடங்களிலும் உடனடியாக தமிழ் பயன்படுத்தப்படும் என்று பிரகடனப்படுத்தவேண்டும்’, என வலியுறுத்தினார்.

   காங்கிரசு ஆட்சிக்காலத்தில்தான் தாய்மொழிக்கல்வியை வலியுறுத்தி அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் ‘தமிழால் முடியும்’ என்ற ஒரு நூலையே எழுதினார். பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோதுதான் தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தில் பலதுறை நூல்கள் தமிழில் வெளியிடப்பட்டன. கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வி துவங்கியது.

   இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சிக்குவந்த தி.மு.க. ’மும்மொழித்திட்டம்’ என்பதை ’இருமொழித்திட்ட’மாக ஆக்க  ஆட்சிமொழி சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. 1968 ஜனவரி 23 அன்று நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்கள் ஏ.பால சுப்பிரமணியம், என்.சங்கரய்யா, தமிழரசுக்கழகத்தலைவர் ம.பொ.சிவஞானம் ஆகியோர் ‘நிதி, நிர்வாகம், கல்வி ஆகிய மூன்றுநிலைகளிலும் தமிழைத்தவிர வேறு எந்தமொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்திவிட்டால், தமிழ்மக்களுக்கு பீதி இருக்காது: பயம் இருக்காது’ என மிகத்தெளிவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

   அதற்கு பதிலளித்த முதல்வர் பேரறிஞர் அண்ணா,’ மழைபெய்கிறபோது குடை கிடைக்கா விட்டால் மேல்துணியைத் தலையில் வைத்துக்கொள்வதுபோல் உடனடியாக இந்தி வந்துவிடாமல் தடுக்க ஆங்கிலத்தை வைத்து தடுக்கிறோம்’ என்று சாதுரியமாக கூறினார். அந்த குடை தமிழ்க்குடையாக இல்லாமல் போனது ஏன்? ’உலகத்தொடர்புக்கும், விஞ்ஞான அறிவு பெறவும் ஆங்கிலம் இன்றியமையாதது’, என்று திராவிட இயக்கத்தினர் மனங்களில் ஊறிக்கிடந்த கொள்கைதான் காரணம். இந்த ஆங்கில மனோபாவம்தான், “தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!!” என்று  முழக்கமிட்டாலும், இந்தியின் இடத்தில் தமிழை வைக்காமல் ஆங்கிலத்தை உயர்த்திப்பிடித்தது. ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ என்பதற்குப் பதிலாக தமிழ்மக்களின் மனங்களை ஆங்கிலத்துக்கேற்ப தகவமைக்கும் பணிக்கே திராவிடக்கட்சி களின் 49 ஆண்டுகால ஆட்சியில் கவனம் செலுத்தப்பட்டது.

  இதன்விளைவாகத்தான் சென்னைப்பல்கலைக்கழகத்தின்கீழ் இருந்த ஆங்கிலோ இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட 30 ‘மெட்ரிகுலேசன் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் கொண்டுவரப்பட்டு இன்று 4,000க்கும் மேற்பட்ட  கல்விக்கடைகளாக அவை உருவாயின. கழக அரசுகள் இதற்கு சேவகம் செய்தன. 1952ல் ஏ.இலட்சுமணசாமி முதலியார் ஆணையமும், 1964ல் கோத்தாரி ஆணையமும் வலியுறுத்திய தாய்மொழிவழைக்கல்வியை கழகஅரசுகள் நீர்த்துப்போகச்செய்தன. அதுமட்டுமா? அரசுப்பள்ளிகளின் தரத்தைக் குறைத்தால்தான் ஆங்கிலவழிக் கல்விக்கடைகளுக்கு மாணவர்கள் சேர்வார்கள் என்ற கோரிக்கையை ஏற்று அரசுப்பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என 1964ல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதத்தை ஜெயலலிதா அரசு 1:50 என உயர்த்தியதும், பின்னர் அது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததால் கலைஞர் ஆட்சியில் 1:40 என மாற்றப்பட்டதும். அரசுப்பள்ளிகளை இயற்கைமரணம் அடையச் செய்யும்பணி இதன்மூலம் அரங்கேறியது. இதன்மூலம் தமிழகப்பள்ளிகளில்க 96 மாணவர் வருகைக்கு 5 ஆசிரியர்கள் பணியாற்றிய நிலைமாறி 1:40 விகிதத்தின் அடிபடையில் அவை 2 ஆசிரியர்பள்ளிகளாகத் தரம் குறைக்கப்பட்டன.

   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே ஏழைஎளியமக்களுக்கான அரசுப்பள்ளிகளின் கல்வியைச் சீர்குலைக்கும் விந்தையும், தமிழ்வழிகல்வியை வேரறுக்கும் விந்தையும் தமிழ்நாட்டில் கழக அரசுகளால் நடைமுறையாகியது. இதை எதிர்த்து கல்வியாளர்களும், ஆசிரியர்-மாணவர் இயக்கங்களும், தமிழ் நாட்டுக்கல்விப்பாதுகாப்பு இயக்கங்களும்  நடத்திவரும் போராட்டங்கள் தொடர்கின்றன.

   இந்தநேரத்தில்தான் மத்திய அரசின் ’தேசியக்கல்விக்கொள்கை2016’ உருவாக்கம் என்ற பெயரில் நரேந்திரமோடியின் பா.ஜ.க. அரசு மிகமோசமான உள்ளீடுகளைப் புதிய  கல்விக்கொள்கையில் புகுத்தியுள்ளது., மாநிலமொழிகளை, கலாச்சாரங்களை, பண்பாட்டைச் சீர்குலைத்து நாடுமுழுவதும் ஒரேமொழி, ஒரேகலாச்சாரம் என முழக்கி வருகிறது. வழக்கொழிந்துபோன சமசுக்கிருதமொழிக்கு உயிரூட்டவும், இந்தியைத் திணிக்கவும், மாநிலமொழிகளை அழிக்கவும் முயன்றுவருகிறது.

   தாய்மொழிக்கல்வியையும், அரசுப்பள்ளிகளையும் பாதுகாக்கும் மாபெரும் பொறுப்பு மக்களிடம்தான் உள்ளது. மொழியைப் படைத்த மக்கள்தான் தமதுமொழியைக் காக்கும் மகத்தான போரை நடத்தியாகவேண்டும். அந்த திசைவழியில் மக்களை ஆயத்தப்படுத்தும் பணி இன்று தாய்மொழி வழிக்கல்விப் பாதுகாப்பு மற்றும் அரசுப்பள்ளிகள் பாதுகாப்பு இயக்கங்கள் முன் உள்ளது.



  கடந்த 49 ஆண்டுகளாக ஆங்கிலமோகத்தில் மக்களிடம் தவறான சிந்தனைகளைப் பதிய வைத்து ஆங்கிலமொழிக்கு ஆதரவாக தகவமைக்கப்பட்ட தமிழ்மக்களின் மனங்களை வெல்லாமல் அது சாத்தியமல்ல. நமது தமிழ்மக்களின் மனங்களைவெல்ல சில அடைப்படையான அறிவியல் உண்மைகளை அவர்களிடம் நாம் கொண்டுசெல்ல வேண்டும்.

·   *  உலகத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஆங்கிலம் அல்ல. அது
  வெறும் 8% பேரால் மட்டுமே, இங்கிலாந்து, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே பேசப்படும் மொழிதான். உலகில் இந்த நாடுகளில் தவிர வேறு எந்த நாட்டிலும் ஆங்கிலத்துக்கு மரியாதை இல்லை.

·* ஆங்கிலத்தில் படித்தால் உலகமெங்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது உண்மை அல்ல. அதுஒரு மயக்கமே! நமது மெட்ரிகுலேசன் பள்ளிகளில் கற்றுத்தரப்படும் ஆங்கிலத்தை இந்த நாடுகள் அங்கீகரிப்பதில்லை.
* தாய்மொழிவழிக்கல்வியில்தான் குழந்தைகள் மிகவிரைவாக கற்கிறார்கள்.

·* தாய்மொழிவழிக்கல்வியின்மூலம் பெறும் சொந்தப் பண்பாட்டு அறிவு, பாரம்பரிய அறிவு, சொந்த அடையாளம் பற்றிய வலுவான புரிதல் பள்ளியில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதனைபடைபவர்களாக மாணவர்களை ஆக்குகிறது.

· * உலகத்தொடர்புக்கும், அறிவியல் அறிவுக்கும் ஆங்கிலம் அவசியம் என்று பலர் கருதுகிறார்கள். தாய்மொழிவழி கற்பவர்களே ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் பெறுகிறார்கள்.

*  தாய்மொழிவழிக்கல்வி மாணவர்களின் திறன்களை வளர்த்தெடுக்கும் ஆற்ற்ல் கொண்டது.

·*  தாய்மொழி அல்லாத பிறமொழொயில் கற்கும்போது மாணவனின் மூளை எப்போதும் மொழிபெயர்த்துக்கொண்டே இருக்கிறது. மூளையின் இந்த இரட்டை வேலையால் புதியன கண்டுபிடிக்கும் ஆற்றலோ, படைப்பாக்கத்திறனோ அடிபட்டுப்போகிறது. மாணவன் வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாகிப் போகிறான்.

*   உலக அறிவுபெற ஆங்கிலத்தை ஒருமொழியாகக் கற்பதே போதுமானது. அனைத்துப்பாடங்களையும் ஆங்கிலமொழிவழியில் படிக்கவேண்டும் என்பது தேவை இல்லை.



     - அறிவியல்பூர்வமான இந்த உண்மைகளை மக்களின் மனங்களில் பதியவைக்கவேண்டும்.  இதற்காக கலை, இலக்கியங்கள் வடிவில் இந்தக் கருத்துக்கள் மக்களிடம் செல்லவேண்டும். தாய்மொழிவழிக்கல்விக்கான போராட்டங்களில் கலையும், இலக்கியமும் நமது ஆயுதங்களாக்கப் படவேண்டும்.

 மக்களின் சிந்தனைகளை தாய்மொழிவழிக்கல்விப் பாதுகாப்புக்கும், அரசுப்பள்ளிகள் பாதுக்காப்புக்கும் ஆதரவாகத் திரட்டும்பணி தமிழ் நாட்டுக்கல்வி இயக்கங்களின் தலையாய பணியாகும்.  மக்களின் மனங்களை வென்றெடுப்போம்! தமிழ்வழிக்கல்விக்குத் தகவமைப்போம்! இந்த மகத்தான பணியில்

அனைத்து இயக்கங்களும்

ஒன்றுபடுவோம்!

தமிழ்மக்களை அணிதிரட்டுவோம்!!

போராடுவோம்!!

இறுதி வெற்றி நமதே!!!!    

No comments:

Post a Comment