Wednesday, 20 November 2013

                          தமிழ் நாடன் நினைவு அஞ்சலி
                              பரணி
                                             கவிதைகள்
                        மேகங்களின் மேதின வெளியீடு-1973
                                              ஊத்துக்குளி

                                         மாறுதலுக்காக
                                        அல்ல
                                        மாற்றத்திற்காகவே
                                        சிந்திக்கிறோம்.

                      நெருப்புப் பிஞ்சுகள்
---------------------------------------தமிழ்நாடன்-----------------

  இந்தக் குறுந்தொகுதியை- இளைய வட்டத்தின் சிகப்புச் சினத்தைக் கண்ணுறுகிறபலரும், இவர்கள் இப்படி ஏன் எழுதித் திரியவேண்டும்? வேறுவேலை எதுவும் கிடையாதோ? காசு கொழுத்துக் கிடக்கிறதோ? – அல்லது கவிதை எழுதுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை? என்று எண்ணுவார்கள்.
  இதற்கு விடை கூறிக்கொண்டிருப்பதுதான் வெட்டிவேலை. சமூகத்தைப் பார்ப்பதிலும், அதனில் காணும் அவலங்களைக் களைய முயல்வதிலும் வேறுவேலை அற்றவர் இவர். காசு கொழுத்த அட்டைகளின் எதிரே கூட்டுப் பெருமையை நிறுவ வந்தவர் இவர்.மனுஷராய்ப் பிறந்ததினால், சுத்த மனத்தினராய்ப் பிறந்ததினால் எவர் அருளும் இல்லாமலேயே கவிஞர் ஆனவர் இவர்.
  பகைத்திறம் அறிந்தே ‘பாத்திற வியூகம் எடுத்தவர் இவர். எதிரே ஐந்திலக்கணப் புலிகளும்,உள்ளூர்ப் பணமுதலைகளும், அதிகார வர்க்க யானைகளும், சிங்கங்களும் ஒரே அடியில் வீழ்த்தி இவர்களை இல்லாமல் ஆக்கும் நினைவோடு நின்றிருப்பதும் தெரியும்; தெரிந்தும் போர்க்களத்தில் அஞ்சாமல் நிற்கிற இவர்கள்,எண்ணமேகவிதை எனும் நவீன இலக்கியச் சிறப்பால் படைப்பிலக்கியமே உன்னத இலக்கியம், உண்மை இலக்கியம் என்னும் குறிக்கோளால், எதார்த்தங்களால் எதார்த்த இலக்கியக் கருவியைக் கையேந்த வலிவு தரும் மார்க்ஸீயச் சித்தாந்தத்துத் துணையால் எதிரிகளை நிர்மூலம் ஆக்குவார்கள்.
  ஆயுதப் புரட்சி நம் வர்க்கத்தின் புறநிலை மூலம் என்றாகுமானால் இலக்கியக் கலாச்சாரப் புரட்சி நம்மின் அகநிலை மூலம் ஆகும்: இந்தச் செழுமை இந்தக் கவிதைகளில் மின்னுகின்றன.
  சுடப்பட்டுச் சுடப்பட்டு வீழுகிறார்கள் சொந்தக்குருதியின் சோதரர், ‘அம்மா எனும் ஒருகுரலோடு: அவர்களின் மற்றைய ஆத்தும (அடிமன) கசிவுகள் இந்தக் கவிதைகள்.
  உழைக்கும் வர்க்கம் தன்னைத் திரஸ்கரிக்கும் எல்லாவற்றையும் நிராகரிக்கிறது. அவ்வர்க்கத்தின் குரலான இவ்விலக்கியக் கர்த்தாக்கள், மேல்எழுந்து மூடுண்ட மேகத்தின் உயரே இடியென கர்ஜிக்கிறார்கள்.
  என் நேசத்திற்கு இந்தப் பிரபஞ்சம் போதாது என்றான் என்தோழன் ஒருவன். மனிதன் மனம் அத்தனை விசாலமானதாய் இருக்க வேண்டும்! இங்கே கலையரசு அப்படித்தான். இந்தக்கவிஞன் வானமும், காற்றும் அனைவருக்கும் பொது என்னும் உண்மையோடு இன்னொரு பொது உண்மையையும் – உலகத்தையும் பொதுவாக எடுத்து நிறுவுகிறான்.
  இவர்கள் வாழ்க்கையின் உண்மைகளை அன்றாட நிகழ்வுகளை இலக்கியம் ஆக்கத் துடிக்கிற வாழும் மனிதர்கள். அதனால்தான் ஆளவந்தவர்களின் குற்றங்களினால் தத்தம் உதரங்களில் விழும் வடுக்கள் கண்டு முத்துப்பொருநன்போல் சினமுறுகிறார்கள். ( திருவிளையாடல்)
  மாறுதல் என்பதும், மாற்றம் என்பதும் ஆழப்பொருள் தருவன என்பதைச் சொல்லாராய்ச்சிப் பண்டிதனை விடவும் நயமாய்த் தெளிவு படுத்துகின்றன இவர்களின் வெளிப்பாடுகள். தனிநபர் மாறுதல், பூரணமாற்றம் இரண்டும் நன்கு புரிந்த இவர்கள் ஏழைவர்க்கத்தின் சதையைக் கொத்திக் குதறும் கழுகுகளை முதலில் சுடவருமாறு நீலவண்ணன் போல் அழைப்பு விடுகிறார்கள்.
  இத்தனைக்கும் மேலே இந்தத் தோழன்களிடத்தில் ஒரு இயல்பான உண்மையும், ஆவேசமும் தெளிவுபடுகிறது. இந்த ஒருகருவியே சகல மனுஷருக்கும் சகல சம்பத்துகளையும் கொண்டுவந்து கூட்டும் என்னும் விழிமூட்டமும் இவர்களுக்கு இல்லை.
  இலக்கிய வனிதை ஒரு நிம்போமேனியா. இவர்களிடம் இருந்து இன்னும் அதிகமாய், வேகமானதாய் பேராசையுறுகிறாள்.
  அந்தப் புதிய பலம், புதிதாய் இன்னொருதரம் நிரூபிக்கப்படும்வரை, இந்தக் குட்டிப் ‘பரணியின் எண்ணலங்காரம் நமது தோக்குகள் உள்ளே நிரப்பப் படலாம்: இந்த ரவைகளாலும் நாம் வெற்றியை ஈட்டலாம் – குறியைச் சரியாய் நேர்ப்படுத்தும்போது.
                    சகோதரர்களே –
                    இதனைப் படியுங்கள்:
                    இந்த நெருப்புப் பிஞ்சுகள்
                    உங்கள் உதடுகளைச்
                    சுட்டுவிடாது.                                                                தமிழ்நாடன்

                                                                                                      சேலம்   நாள்:25,4.1973

No comments:

Post a Comment